படிக்கிற வயதில் படிக்காமல், எப்போது பார்த்தாலும் ரோட்டில் நின்று போகிற வருகிற பெண்களைப் பார்த்தபடி அரட்டை அடிக்கும் இவனெல்லாம் என்ன மனிதன் என்றுதான் அவளது சிந்தனை ஓடும். அதுகூட சசியின் அண்ணா என்று அறிந்திருந்ததால் மட்டுமே!
அப்படி எந்தவிதத்திலும் தொடர்பில்லாதவன் தன்னையே பார்க்கவும் அசௌவ்கர்யமாக உணர்ந்தவள், கண்களால் பார்க்கிங்கை அலசினாள். பூஜை நேரமாதலால் எல்லா இடமும் நிரம்பியிருக்க, அவன் வண்டிக்கு அருகில் மட்டுமே இடம் இருந்தது.
அங்கே விடலாம் என்றால் வண்டியில் அமர்ந்திருந்து தன் நீண்ட கால்களை சாவகாசமாக நன்றாகவே நீட்டிக்கொண்டிருந்தான். சற்றே உள்ளுக்கு இழுத்தான் என்றால் இலகுவாக ஸ்கூட்டியை நிறுத்திவிட முடியும். அருகே சென்றதும் எடுப்பானாக்கும் என்று எண்ணியபடி அவள் செல்ல, அவனோ அசைந்தானில்லை.
‘எளியவன்! அசையிறானா பார்! இண்டைக்கு கால்ல ஏத்திவிடுறன்!’ கருவிக்கொண்டே அருகில் சென்றவளால், அவள் மீதே பார்வையை நிலைக்க விட்டிருந்தவனின் செயலால் ஸ்கூட்டியை அதற்குமேல் கொண்டுபோக முடியவில்லை. தடுமாறி அப்படியே நிறுத்திவிட்டு அவனை முறைத்தாள்..
அப்பவும் அசையவே இல்லை அவன். அவனது உதடுகள் இன்னுமே கீழ்நோக்கி வளைந்து இவளின் சீற்றத்தை அதிகரிக்கச் செய்தது! முகம் கடுக்க, ஸ்கூட்டியை மெல்ல கால்களால் நகர்த்தி நிறுத்தினாள்.
‘இந்த கிராதகன பாத்துச் சிரிக்கிறதா வேணாமா. சசின்ர அண்ணா எல்லோ.’ யோசித்துக்கொண்டே விழிகளை மெல்ல உயர்த்தினாள். இன்னும் அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததில் ஒருவித பதட்டம் அவளுக்குள்.
தன்னிச்சையாய் முகத்தைச் சுளித்துவிட செந்தூரனுக்கு குதூகலமாகிப்போனது.
‘பிடிக்கேல்லையா மேடம்? அப்ப அதைத்தானே நாங்க செய்வம்!’ வேண்டுமென்றே பார்த்தான்.
‘எளியவன்! பிடிக்கேல்ல எண்டு குறிப்புக் காட்டுறன்! அப்பவும் பாக்கிறான்!’
நீ பாத்தா எனக்கென்ன? மனதில் கடுகடுத்தபடி முகத்தைத் திருப்பிக்கொண்டு ஹெல்மெட்டை கழற்றி சீட்டைத் தூக்கி அதற்குள் வைத்தாள். இடுப்பைச் சுற்றி முந்தானையை குற்றியிருந்த பின்னைக் கழற்றிவிட்டாள்.
கைகள் வேலை பாத்தாலும் ‘இவன் ஏன் இங்க நிக்கிறான். சசியோடு வந்திருப்பானோ? வந்தா அவள விட்டுட்டுப் போய்டுவானே..’ என்று சிந்தனை ஓடியது.
அப்போதுதான் தான் தேவையில்லாமல் அவனைப் பற்றி சிந்திக்கிறோம் என்பது உரைக்க, ‘யார் எங்க நிண்டா எனக்கென்ன?’ என்று எண்ணி அவள் ஒரு எட்டு எடுத்து வைக்கவும், அவளுக்கு முன்னால் அவன் கை நீண்டது.
உள்ளே திடுக்கிட்டுப்போனாள். புருவங்களை சுளித்துக்கொண்டு திரும்பிப் பார்க்க, “சசி உன்னட்ட குடுக்கச் சொன்னவள்” என்றான் அவன்.
‘என்னத்த?’ அவள் சொல்லிவிட்ட மல்லிகைச்சரம் என்று அவன் கையைப் பார்த்ததுமே விளங்கியது.
ஆனால், அதை அவன் தந்து அவள் வாங்குவதா? ஓர் ஆணின் கையிலிருந்து பூ வாங்கி சூடிக்கொள்ள முடியுமா என்ன? இந்தச் செய்கை பிடிக்கவில்லை என்று முகத்தை சுளித்தாள்.
இதற்கு முதலும் முகத்தை சுளித்தாள் தான். அப்போது சிரிக்க முடிந்தவனுக்கு இப்போது முடியவில்லை. சட்டென்று கோபம் மூண்டது. ஒரு பெண்ணுக்கு பூ கொடுப்பதற்காகக் காத்திருக்கிறோம் என்பதே அவனுடைய தன்மானத்துக்கு மிகப்பெரிய இழுக்கு. அதைப் பொறுத்துக்கொண்டு நின்று கொடுக்க, என்னவோ அவன் வழிந்துகொண்டு கொடுப்பதுபோன்ற பார்வையை வீசவும் சினம் பொங்கியது.
“சசிதான் உன்னட்ட குடுத்துவிடச் சொன்னவள்.” என்றான் முறைத்த குரலில்.
அவளோ அப்போதும் வாங்கவில்லை. அவனும் நீட்டிய கையை இறக்கவில்லை. அவளின் மறுப்பு அவனது கொதிநிலையின் சூட்டை ஏற்றிக்கொண்டு போனது. ‘உன்ன வாங்கவைக்காம விடமாட்டன்’ என்கிற எண்ணமும் மேலோங்கத் துவங்கிற்று!
கவின்நிலாவுக்கோ இவனிடமிருந்து எப்படிக் கழன்று கொள்வது என்றே தெரியவில்லை. அவள்தான் எனக்கும் மாலை கட்டிக்கொண்டு வாடி என்று சொன்னாள். அதற்காக..? யாரவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்? அந்த இடத்தில் தான் நின்று மெனக்கெடுவது கூட நல்லதில்லை என்றெண்ணி கவனியாததுபோல் கவின்நிலா ஓர் எட்டு எடுத்து வைத்தாள். ஒரேயொரு எட்டுத்தான்! அந்த ஒரு எட்டிலேயே அவனது தன்மானம் மிக ஆழமாக சீண்டப்பட்டுவிட கொதித்துப்போனான் செந்தூரன்.
பையை சுழற்றி எறிந்துவிட்டு, வண்டியின் மீதேறி அவன் உதைத்த உதையில் இவளுக்கு கைகால் எல்லாம் நடுங்கியது. என்னவோ அவளுக்கே அவன் எட்டி உதைத்தது போலிருந்ததில் ஆடிப்போனாள். அவமானக் கன்றலில் முகமெல்லாம் சிவந்துபோனது. இதில் அவன் எறிந்த பை வேறு அவளின் ஸ்கூட்டியில் மோதி கீழே விழப் போகவும் அனிச்சையாகக் கைகளால் ஏந்திக்கொண்டாள்.
அவனோ, திரும்பியும் பாராமல் சென்றுவிட, உடலில் ஓடிய நடுக்கம் தீராமல் அப்படியே நின்றுவிட்டாள் கவின்நிலா.
வண்டியில் சென்று கொண்டிருந்தவனுக்கு ஆத்திரம் அடங்குவேனா என்றது. என்னவோ ஆசைப்பட்டு அவனாக அவளுக்கு பூ வாங்கிக்கொடுத்த மாதிரி அல்லவா நடந்துகொள்கிறாள். அந்தக்காலத்து நாயகிகள் மாதிரி வாயை புறங்கையால் மூடி, வீறிட்டு ஊரைக் கூட்டாதது ஒன்றுதான் குறை. ‘எல்லாம் படிச்ச குடும்பத்துல பிறந்து வளர்ந்த திமிர்.’
அவளைத் திட்டித் தீர்த்துக்கொண்டே கடைக்குப் போனான். அன்று விளையாடும் எண்ணமே போய்விட்டது.
அது ஒரு மொபைல் ஷாப். அவனுக்கு ஏனோ சிறுவயதில் இருந்தே படிப்பில் பெரிதாக நாட்டமில்லை. உயர்தரத்தை பெரும்பாடு பட்டுத்தான் தாண்டியிருந்தான். ஆனால் சின்ன வயதில் இருந்தே அவனுடைய தாத்தாவின் மிகப்பழைய ரேடியோவை கூட அவன்தான் திருத்திக் கொடுப்பான். ரேடியோ டிவி என்று எலக்ட்ரிக் பொருட்கள் எதுவாக இருந்தாலும் கழட்டிப் பூட்டி விடுவான். அதேபோல் ஃபோன், கம்பியூட்டர் என்று எதையும் விட்டு வைத்ததில்லை. அதற்கென்று பிரத்தியோகமாக படிக்காத போதிலும் அதெல்லாம் தெரியும் அவனுக்கு. தெரியும் என்பதைவிட கைவந்த கலை. எப்படி என்று கேட்டால் அவனுக்கே தெரியாது. கண் பார்க்க கை செய்யும். எப்போதும் எதையாவது நோண்டிக்கொண்டே இருப்பான். தானாக தேடி தேடிக் கற்றதுதான் எல்லாமே.
உயர்தரம் முடிந்ததும் மேலே என்ன செய்யப்போகிறாய் என்று அப்பா கேட்க, “ஒரு கடை போடக் காசு தங்கப்பா.” என்றுவிட்டான் செந்தூரன்.
“சும்மா ஊருக்குள்ள உதவியா செய்து குடுக்கிறத நம்பி எப்படிப்பா கடை வைக்கிறது. அதுக்கெண்டு முறையா நீ எதுவும் படிக்கேல்லையே. வேணும் எண்டா எலக்ட்ரிக் பொருட்கள் சம்மந்தமா எதையாவது எடுத்துப் படிச்சிட்டு வாவன். பிறகு கடை போடலாம்.” என்றார் மயில்வாகனம்.
“இல்லப்பா. படிப்பு எனக்கு வராது. ஆனா, கடை நான் செய்வன். நீங்க போட்டுத் தாங்க.” என்று நம்பிக்கையோடு தன் பிடியில் நின்றான் அவன்.
இதென்ன இப்படிக் கேட்கிறானே என்று மனதில் கலக்கம் எட்டிப் பார்த்தாலும், அவனுக்கு அதில் எவ்வளவு ஆர்வம் என்பதையும் அறிவார் அவர்.
அடுத்தநாள் பரீட்சை இருந்தாலும் முதல்நாள் யாராவது ஃபோனை கொண்டுவந்து கொடுத்தால் அதை சரியாக்கிவிட்டுத்தான் படிக்கவே அமர்வான். அவர் கடுமையாகக் கண்டித்தாலும், “அத திருத்தி முடிக்காட்டி படிக்கிற எதுவும் எனக்கு மண்டைக்குள்ள போகாதுப்பா. உங்க பார்வைக்கு மட்டும் நான் புத்தகத்தோட இருப்பன். இருக்கவா?” என்று அவன் கேட்டதில் இருந்து அவர் ஒன்றும் சொல்வதில்லை.