அதோடு, பழுது என்று எதையாவது கொண்டுவந்த யாரும் அவன் அதை உடைத்துவிட்டான் என்று சொன்னதே கிடையாது.
எனவே, அவனின் ஆர்வம் அதில்தான் எனும்போது ஒரு முயற்சி செய்து பார்ப்போமே என்றுதான் கடனை உடனை வாங்கி அந்தக் கடையை ஆரம்பித்துக் கொடுத்தார்.
அவரின் நம்பிக்கையை அவன் பொய்யாக்கவில்லை. இன்னும் இரு நண்பர்களையும் வேலைக்கு அமர்த்திக்கொண்டு லாபத்தில் நடத்திக்கொண்டிருந்தான். செல் வகைகள், லாப்டாப், டாப்லட்ஸ், ஐபோன், ஐ பாட் என்று எதுவும் அவனிடம் தப்பவில்லை. அவனைப் போன்றவர்கள் இன்றைய எலக்ட்ரானிக் உலகத்தில் மிகவுமே தேவை என்பதில் அவர்களுக்கும் அவன் பிரயோசனப்பட்டான். அவனும் அவர்கள் மூலம் உழைத்துக்கொண்டான்.
கடனையும் மாதா மாதம் கட்டி, வீட்டுக்கும் பணம் கொடுத்து, தன் நண்பர்கள், புட்பால் விளையாட்டு, வீடு என்று அவனுடைய வாழ்க்கை நம்மோடு வாழும் பல இளைஞர்களில் ஒருவனின் வாழ்க்கையாகச் சென்றுகொண்டிருந்தது.
விரும்பிச் செய்யும் தொழில் என்பதால், அதற்குள் சென்றதுமே அவன் மனம் சற்றே அமைதியானது. “அண்ணா, இந்த ஃபோன் லாக் ஆகிட்டுதாம். பாஸ்வேர்ட் மறந்திட்டாவாம் எண்டு ஒரு ஆச்சி கொண்டுவந்தவா.” என்று ஒரு சாம்சங் ஃபோனை கொண்டுவந்தான் அங்கு வேலைக்கிருக்கும் கதிர்.
“இங்க கொண்டுவா!” என்றவன் அதில் மூழ்கியே போனான். அங்கொருத்தி கண்ணீருடன் தன்னைத் திட்டிக் கொண்டிருப்பதை மறந்தே போனான். அவனது உலகம் அதுதானே!
ஆனால், அவனது மொத்த உலகமும் அவளாக மாறும் நாள் வெகுவேகமாக அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது!
இங்கே கோவிலுக்குள் சென்ற கவின்நிலாவின் மனம் ஆறவேயில்லை. இப்படி ஓர் கோபத்தை அதுநாள் வரை அவள் எதிர்கொண்டதில்லை. பொறுப்பான பிள்ளையாக எல்லோரிடமும் பாராட்டை மட்டுமே பெற்று வளர்ந்தவளின் கண்ணோரங்கள் கசிந்துகொண்டே இருந்தது. நன்றாகவே மிரண்டு போயிருந்ததால் தேகத்தின் நடுக்கம் இன்னுமே நிற்கவில்லை.
‘எவ்வளவு கோபம் வருது அவனுக்கு?’
ஒரு ஆண், திடீரென்று பூவை நீட்டினால் எப்படி வாங்குவதாம்? அதுவும் கோவிலில் வைத்து. அதுக்கு அதைத் தூக்கி எறிவதா? ஆசையாக பூ வைத்துக்கொள்ள இருந்தவளுக்கு அதை வைக்கவே கூடாது என்கிற எண்ணம்தான் வலுப்பெற்றது. பூவை எறிகிறோமே என்று தோன்றினாலும் மனதை அடக்கி அங்கிருந்த கூடைக்குள் எறிந்தாள்.
ஆனாலும், அவன் அதை அலட்சியமாக தூக்கி எறிந்ததும், வண்டியை உதைத்துக் கிளப்பிய முறையும் நெஞ்சுக்குள் நின்று வருத்திக்கொண்டு இருந்தது.
‘எருமைமாடு மாதிரி வளர்ந்திருக்கே தவிர அறிவு கொஞ்சமும் இல்ல. அவன்ர தங்கச்சிக்கு இப்படி யாராவது பூ குடுத்தா சும்மா விடுவானா..’ மனதில் அவனை திட்டித் தீர்த்தபடி கோவிலுக்குள் நுழைந்து தோழியர் நின்ற இடம் சென்று சேர்ந்தாள்.
இவளைக் கண்டதுமே, “எங்கயடி பூ?” என்று அவளின் கையையும் தலையையும் பார்த்துவிட்டுக் கேட்டாள் சசி.
“அது.. கீழ விழுந்திட்டுது.”
“என்னடி நீ! எவ்வளவு கஷ்டப்பட்டு அண்ணாட்ட திட்டு வாங்கி கட்டிக்கொண்டு வந்தனான். இதுல மறந்திட்டு வேற வந்திட்டன். அவனிட்ட கெஞ்சிக் கூத்தாடி உன்னட்ட குடுக்கச் சொல்லிச் சொன்னா நீ ஈசியா சொல்ற கீழ விழுந்திட்டுது என்று.”
“உன்ர கொண்ணா என்னத்துக்கு திட்டோணும்?” என்றுமே அவனைப்பற்றிக் கதைக்காதவள் அவன் மீதிருந்த கோபத்தில் கேட்டாள்.
“பின்ன..! கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போ எண்டு புட்போல் விளையாடப் போனவன மறிச்சு வச்சிட்டு பூ கட்டினா திட்டாம என்ன செய்வான். அத விடு! இப்ப நீ என்ன செய்யப் போறாய்?” என்றாள் சசி.
“இத வைக்கிறன் இண்டைக்கு.” என்றபடி, பூத்தட்டில் இருந்து எடுத்துவந்த மல்லிகைகளை தலையில் செருக்கொண்டாள்.
பூசை தொடங்கியபோதும், கோவிலை மூன்றுமுறை எல்லோருமாக வலம்வந்தபோதும், சுவாமிக்கு பூப்போட்டு அன்றைய விரதத்தை முடித்துக்கொண்டபோதும் என்றும் கிட்டும் நிறைவு அன்று கவின்நிலாவுக்கு கிட்டவே இல்லை.
“என்னடி ஒருமாதிரி இருக்கிறாய்?” துஷாந்தினி கவனித்துக் கேட்டபோது தலைவலி என்றுவிட்டாள்.
உண்மையிலேயே தலையும் வலித்ததுதான். அந்தளவுக்கு அவனின் செய்கைகள் ஒவ்வொன்றும் ஆழமாகப் பாதித்திருந்தது.
வாடிப்போன முகத்துடன் பூசை முடிந்ததும் தோழிகள் எல்லோருடனும் சேர்ந்து வெளியே வந்தாள். அங்கே சசிரூபாவுக்காக காத்திருந்தான் செந்தூரன். இந்த வேலை அவனுக்குப் பிடிக்காதுதான் என்றாலும் தங்கையின் பாதுகாப்புக்காக கட்டாயம் செய்வான்.
எப்போதும் தங்கையை மட்டுமே வருகிறாளா என்று பாக்கிறவனின் கண்கள் இன்று கவின்நிலாவிடமும் சென்றது. அவள் தலையில் பூ இல்லை என்றதுமே முகம் இறுகினான்.
அவளோ பக்கத்தில் நின்றவனைத் திரும்பியும் பாராது, ஏன் அவன் அங்கு நிற்கிறான் என்பதையே அறியாது தோழிகளிடம் விடைபெற்று தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.
“இதுக்குத்தான் என்னை நிண்டு பூவை குடுக்கச் சொன்னனியா?” வண்டியில் சசிரூபா ஏறியதுமே சிடுசிடுத்தான் அவன். அவளோ ஒன்றும் விளங்காது அவனைப் பார்த்து விழித்தாள்.
ஒருவழியாக அங்கிருந்த நெரிசலுக்குள் இருந்து வெளியே வந்து வீதியில் அவன் கலந்ததும், “என்ன அண்ணா? என்ன கேட்டாய்?” என்று விசாரித்தாள் அவள்.
ஆத்திரத்தில் பாய்ந்துவிட்டான் தான். இப்போது நான் கொடுத்த பூவை உன் தோழி ஏன் தலையில் வைத்துக்கொள்ளவில்லை என்றா கேட்க முடியும்.
“இனி பூவக் கொண்டுவா அதைக் கொண்டுவா எண்டு சொன்னா கூட்டிக்கொண்டே வரமாட்டன்! யாரும் பாத்தா என்ன நினைப்பீனம்?” என்று அவன் கடுகடுக்க,
“நீ இப்படி திட்டிக்கொண்டு நிண்டு குடுத்ததாலதான் அது நிலத்தில விழுந்திருக்கு. பாவம் அவள்! இண்டைக்கு பூ வைக்கேல்ல. இதுக்கு நீ அவளிட்ட குடுக்காமயே இருந்திருக்கலாம்.”
‘அவளே தூக்கி எறிஞ்சுபோட்டு பொய்யை சொல்லி இருக்கிறாள். இதுக்கு நானே எறிஞ்சு இருக்கலாம்.’
அவள் வைத்தாலோ வைக்காவிட்டாலோ அவனுக்கு ஒன்றுமில்லைதான். ஆனால், என்னவோ அவன் குடுத்ததாலேயே அவள் வைக்காதது போலிருக்க.. அவனுக்கு தேவையா இதெல்லாம்? சசியால் தானே இத்தனையும்!
போகும் வழி முழுக்க சசிரூபாவை வறுத்து எடுத்துவிட்டான் செந்தூரன்.