அன்று அவர்களின் பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி. உற்சாகமாகவே கலந்துகொண்டாள் கவின்நிலா. அலைமகள் இல்லத் தலைவியாக அவளும்; கலைமகள் இல்லத் தலைவியாக துஷாந்தினியும், மலைமகள் இல்லத் தலைவியாக இன்னொரு மாணவியும் என்று விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பித்தன.
வலயக் கல்வி பணிப்பாளர் தலைமையில் ஆரம்பித்த விளையாட்டுப் போட்டியில் யாழ், பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி கனகரட்ணம் பரந்தாமன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். விசேட விருந்தினர்களின் ஒருவராக இலங்கை வங்கி கொழும்பின் தலைமை அதிகாரியான தயாபரனும், அந்தக் கல்லூரியின் ஆசிரியையாக அம்மா மேகலாவும் என்று அவளின் மொத்தக் குடும்பமும் இருந்தாலும் அதன் பிரக்ஞை சிறிதுமின்றி தன் இல்லத்தினரோடு கலந்திருந்தாள் கவின்நிலா. ஐந்தாம் வகுப்பு வரை ஆண்பிள்ளைகளும் அங்கே கற்பதால் கதிர்நிலவன் கூட பழைய மாணவன் தான். எப்போதும் பழையமானவனாக அவனும் கலந்துகொள்வான். இந்தமுறை ரஷ்யா சென்றுவிட்டதில் அவன் மட்டுமில்லை.
பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். Uc கிரவுண்ட் பொது கிரவுண்ட் என்பதனால் மாணவியரின் பெற்றவர்கள், உற்றவர்கள், சொந்தக்காரர்கள் என்பதையும் தாண்டி அந்த வீதியால் போவோர் வருவோர், வேடிக்கை பார்ப்போர், மாணவியரைக் கண்குளிரக் கண்டுகளிக்கும் இளவட்டம் என்று மனிதத்தலைகள் நிறைந்து கிடந்தது அந்த இடமெங்கும்.
மூன்று இல்லங்களும் சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களைத் தாங்கி ஒவ்வோர் மூலையிலும் தங்கள் இல்லங்களை அமைத்திருக்க, அந்தந்த இல்ல மாணவர்கள் அவரவர் நிறத்திலான பேட்ச்னை தாங்கி மைதானத்தில் நின்றிருக்க, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது விளையாட்டுப்போட்டி.
பேண்ட் வாத்திய இசையோடு மாணவியரின் உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடை நிகழ்ச்சி, பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றார் நிகழ்ச்சி, விருந்தினரின் உரை என்று ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, தன் இல்லத்தின் மாணவியர் யார் எங்கு போகவேண்டும் என்று அனுப்பிவைத்து, அடுத்த விளையாட்டு என்ன என்று கவனித்து அதற்கு அவர்களை தயார் செய்வது, களைத்துப் போனவர்களுக்கு ஓடி ஓடி தண்ணி விநியோகம் செய்வது தொடங்கி, குளுக்கோஸ் கொடுப்பது, அவர்கள் களைக்காமல் பார்த்துக் கொள்வது, தோற்றவர்களை சோர்ந்துபோய் விடாது தட்டிக்கொடுத்து அடுத்த போட்டிக்கு அனுப்பி வைப்பது என்று பம்பரமாக சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தாள் கவின்நிலா.
அவளைக் கவனித்துவிட்டு, “உன்ர மருமகள் உன்னைவிடக் கெட்டிக்காரியா வருவாள் போல இருக்கேடா.” என்று அருகிலிருந்த கேபியின் காதுக்குள் சொன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர். இருவருமே நெருங்கிய நண்பர்கள். தனிப்பட்ட முறையில் உரையாடுகையில் ஒருமைதான்.
பெருமையோடு புன்னகைத்தார் கேபி. ‘நான் என்ன நான்? என்னைவிட பலமடங்கு கெட்டிக்காரியா வருவாள்.’ மனதில் சொல்லிக்கொண்டார்.
“எனக்கு உன்னையே பாத்த மாதிரி இருக்கு. நல்லா படிக்கச் சொல்லு. இந்தமுறை எங்கட யாழ்ப்பாணம்தான் முதல் ரேங்க் வரோணும்; நான் இப்பவே சொல்லீட்டன். கதிர் ஒரு ரேங்க்ல பின்னுக்கு போய்ட்டான். அவன் விட்டதை இவள் பிடிக்கோணும்!” என்று அடித்துச் சொன்னார் அவர்.
கதிர் இரண்டாவதாய் போனது யாழ்ப்பாணத்தின் அத்தனை கல்விமான்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
“என்ர மருமகள் எடுப்பாளாடா!” அவளின் திறமை மீது மலையளவு நம்பிக்கை கொண்டு அசைக்க முடியாத உறுதியோடு சொன்னார் கேபி.
அதிபரிடம் எதையோ கேட்கவந்த கவின்நிலா அவர்களின் சம்பாஷணையை கேட்டு கண்கள் கசிய அப்படியே நின்றுவிட்டாள். அவள் எடுத்த முடிவு எத்தனை சரியானது. நேசம் கொண்டுவிட்ட நெஞ்சத்தின் வலியையும் மீறிக்கொண்டு ஒரு திருப்தி அவளுக்குள் பரவியது.
காலம் கைகூடுமாயின் எல்லாமே சுபமாக அமையும்! ஆசைகொண்ட நெஞ்சம் ஏங்கிப்போயிற்று! ஆனால், அவன் காத்திருப்பானா? எழுந்த பெருமூச்சை அடக்கிக்கொண்டு நடந்தாள்.
இதற்கிடையே குண்டெறிதல், ஈட்டி எறிதல், உயரம் பாய்தல், நீளம் பாய்தல், ஓட்டப்போட்டி என்று பலவிதமான போட்டிகள் நடைபெற கடைசியாக பரிசளிப்பு வைபவமும் நடந்துமுடிய அலைமகள் இல்லம் முதலாமிடத்தை தட்டிச் சென்றிருந்தது. அலைமகள் இல்ல மாணவியரின் கரகோசமும் சந்தோஷக் கூச்சலும் வானை எட்ட, துஷாந்தினியின் மலைமகள் இல்லம் இரண்டாமிடத்தையும் கலைமகள் இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றிருந்தது.
அன்று வியாழன் என்பதால் அடுத்தநாள் வெள்ளியன்று விடுமுறை என்றும் அறிவித்துவிடவே மாணவியரின் சந்தோஷத்துக்கு அளவே இல்லாமல் போயிற்று! எல்லோரும் கொண்டாடிக் குதூகலிக்க, கனகரட்ணம் மருமகளைத் தேடி அவளின் இல்லத்துக்கு வந்திருந்தார். அவரோடு வலயக் கல்வித் பணிப்பாளரும்.
அவர்களைக் கண்டுவிட்டு, “மாமா..!” என்று ஓடிவந்தாள் கவின்நிலா.
எல்லோருக்கும் அவளின் மாமா அவர் என்று தெரியும். என்றாலும் இத்தனை நெருக்கத்தில் காணும் சந்தர்ப்பம் கிடைத்ததே இல்லை. கையும் ஓடாமல் காலும் ஓடாமல் நின்றனர். ஒருவித பிரமிப்போடு அவரையே பார்த்திருந்தனர்.
“உள்ளுக்கு வாங்கோ சேர்!” அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் விழுந்தடித்துக்கொண்டு வரவேற்க, மாணவிகள் இருவர் வேகமாக இரண்டு கதிரைகளை எடுத்துப்போட்டனர்.
“வாங்க மாமா! வாங்கோ சேர்!” என்று அவளும் வரவேற்க,
“சும்மா, உன்ன பாத்திட்டு போவம் எண்டு வந்தனான்.” என்றார் அவர்.
மருமகளின் வெற்றியை, அவளின் கெட்டித்தனத்தை, கல்வியில் மட்டுமல்லாமல் அனைத்திலும் சிறந்து விளங்கும் அவளை எண்ணி அவருக்குள் பெருமிதம். வாய் வார்த்தையாகச் சொல்லாதபோதும், களைத்து, கருத்து, குரல் அடைத்து நின்றவள் தலையை தடவிக்கொடுத்து தன் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.
இன்னோர் ஆசிரியரின் தலைமையில் பிஸ்கட், ஜூஸ் கொடுத்து உபசரிக்கப்பட, “விளையாட்டுப்போட்டி எல்லாம் முடிஞ்சது. இனி நல்ல கவனமா படிக்கோணும். உன்னத்தான் எல்லாரும் நம்பி இருக்கிறம்.” என்றார் வலயக் கல்வி பணிப்பாளர்.
மாமாவை ஒருமுறை பார்த்துவிட்டு, “கட்டாயம் சேர். உங்கட நம்பிக்கையை காப்பாத்துவன்.” என்று பணிவுடன் சொன்னாள் கவின்நிலா.
“எல்லாரும் நல்லா களைச்சு போனீங்க போல இருக்கே.” என்று கொஞ்சநேரம் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு, விடைபெற்று இல்லத்தைவிட்டு வெளியே வந்தார்கள்.
“என்னத்திலயம்மா வீட்ட போவாய்?” தாயோடு வந்தாளோ தெரியாது என்று அவர் விசாரிக்க,
“சைக்கிள்ல வந்தனான் மாமா.” என்று அவர் சொல்லும்போதே, தயாபரனும் மேகலாவும் அங்கு வந்தனர்.
அங்கிருந்த எல்லோருமே பெரிய புள்ளிகள். சமூகத்தில் செல்வாக்கு மிகுந்தவர்கள். ஒருவித வியப்போடு எல்லோர் பார்வையும் அவர்கள் மீது குவிந்தது.
தன் விளையாட்டுப் போட்டியினை பார்ப்பதற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு கொழும்பிலிருந்து வந்த தகப்பனிடம் ஓடிப்போனாள் கவின்நிலா.
“இப்ப உனக்கு சந்தோசம் தானே?” என்றவரிடம், “ஓமப்பா..” என்று சந்தோசமாய் தலையாட்டினாள் அவள்.
“கதிர் என்னவாம் தயாபரன்?” என்று வலயக் கல்வித் பணிப்பாளர் விசாரித்தார்.
“முதல் ஆரம்பம் ஆளுக்கு வெளிநாடு ஒத்துவரேல்ல. இப்ப ஓகே. படிப்பும் நல்லா போகுதாம். வெள்ளைக்காரிய கூட்டிக்கொண்டு வந்திடாத எண்டு தங்கச்சியார் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்.” என்று மகளைப் பார்த்து சிரித்துக்கொண்டு சொன்னார் தயாபரன்.