“அதுதானே? பிறகு என்ர மகளை நான் யாருக்கு கட்டிக்கொடுக்கிறது.” என்று தயாபரனிடம் சொல்லிவிட்டு, “என்னடா? உன்ர மருமகனை என்ர மகளுக்கு பேசுவமா?” என்று சந்தடி சாக்கில் தன் விருப்பத்தை நண்பனிடம் தெரிவித்தார் அவர்.
இதை எதிர்பாராத சந்தோசத்தோடு குடும்பத்தினர் தங்களுக்குள் பார்வையை பரிமாறிக்கொள்ள, “பிள்ளைகளுக்கு பிடிச்சிருந்தா செய்வம்.” என்றார் கேபி.
“என்ன தயா? நான் சொன்னது சரிதானே?” என்று மச்சானாரையும் கேட்க, “எங்களுக்கு எப்பவும் பிள்ளைகள் சந்தோசம் தான் முக்கியம்.” என்றார் அவரும்.
“கவி, அப்ப நீ அண்ணாட்ட சொல்லிவிடு; இங்க அண்ணிய நான் பாத்திட்டன். நீ படிச்சிட்டு மட்டும் ஓடிவா எண்டு.” வலயக் கல்வி பணிப்பாளர் சொல்லவும், “சரி சேர்!” என்று சந்தோசமாகத் தலையாட்டினாள் அவள்.
அவளுக்கும், யாழ் பல்கலையில் கலைப்பிரிவில் கடைசிவருடம் படித்துக்கொண்டிருக்கும் உஷாந்தியை மிகவுமே பிடிக்கும். எனவே அவர்களோடு சந்தோஷமாகவே நடந்து சென்றவளை, கிரவுண்டின் வெளியே நின்றிருந்த துஷ்யந்தன் வஞ்சினத்தோடு பார்த்திருந்தான்.
கல்வி வலயப் பணிப்பாளர் தொடங்கி, விஞ்ஞானப் பீடாதிபதியில் இருந்து, இலங்கை வங்கியின் கொழும்பு கிளையின் அதிகாரி வரை அவளோடு பாசம் கொட்டி வளர்க்கின்றனர். ‘இந்தத் திமிர் தானேடி நேரத்துக்கு ஒருத்தன செட் பண்ணி என்ன கேவலப் படுத்தினது. விடமாட்டன்டி. இண்டையோட உன்ன கண்ணீர் வடிக்க வைக்கேல்ல நான் துஷ்யந்தன் இல்ல!’ மனம் கருவ அவளையே எங்கே போகிறாள் என்ன செய்கிறாள் என்று குறிவைத்துப் பார்த்திருந்தான்.
அவர்கள் எல்லோரும் விடைபெற்றுக்கொள்ள, இவள் மீண்டும் கிரவுண்டுக்கு வந்து, தங்கள் இல்லத்தை கழட்டி ஒதுக்கி என்று மற்றவர்களோடு சேர்ந்து வேலைகளை முடித்தாள். நேரமும் ஆறுமணியை தொட, அங்கிங்கு என்று ஒருசில ஆசிரியர்களும் மாணவர்களும் மட்டுமே எஞ்சி இருந்த நிலையில், தலைமை ஆசிரியர் எல்லோரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
எல்லோரின் சைக்கிளும் அங்கே நிற்க, நேரத்துக்கே பாடசாலைக்கு வந்ததில் தன்னதை பள்ளிக்கூடத்திலேயே விட்டிருந்தாள் கவின்நிலா. எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு மூன்று நாட்கள் லீவு என்கிற சந்தோசம் கலந்த களைப்போடு சைக்கிளை எடுக்கச் சென்றாள். பளிச்சென்று வெறுமையாய் ஓங்கி வளர்ந்துநின்ற பாடசாலையைக் கண்டதும் அவளின் நடை நின்றது.
முதலாம் வகுப்பில் இருந்து அவள் பயின்ற பள்ளி. அவளுக்கு இன்னும் நினைவிருக்கிறது, ஆரம்ப நாட்களில் வகுப்பில் இருக்கமாட்டேன் என்று அவள் அழுததும், அண்ணா ஓடிவந்து சமாதானம் செய்ததும், அம்மா அவ்வப்போது ஓடி ஓடி வந்து அவளைப் பார்த்துக்கொண்டதும், அழாமல் பள்ளிக்கூடம் போய்வந்தால் சைக்கிள் வாங்கித் தருவேன் என்று மாமா சொன்னதும், அதற்காகவே அழாமல் வந்து போனதும், சொன்னது போலவே மாமா சைக்கிள் வாங்கித் தந்ததும், இது அறியாத, அப்போது திருகோணமலையில் வேலையில் இருந்த அப்பா தானும் வரும்போது சைக்கிளோடு வந்ததும், இரண்டு சைக்கிளையும் தமையனைத் தொடவும் விடாமல் அவள் மட்டுமே ஓடியதும் என்று எவ்வளவு பசுமையான நாட்கள் அவை. இந்தப் பள்ளிக்கூடமும் அவளின் சொந்தம் தான்! மனதுக்கு மிகவுமே நெருக்கமான சொந்தம்! இன்னும் கொஞ்ச நாட்களில் அந்தப் பள்ளிக்கு அவளும் ‘பழையமாணவி’. அவளின் கடைசி பள்ளிக்கூட இல்லவிளையாட்டுப் போட்டியை முடித்துவிட்டாள். மெல்லியதாய் இழையோடிய சோகத்தோடு சைக்கிளை மெல்ல உருட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.
வாசலுக்கு வந்து பெடலில் காலை வைத்து மிதிக்கத் தொடங்குகையில் யாரோ பின்னால் பிடித்து இழுக்க, அதுவும் நன்றாக இழுத்ததில், ஆளரவம் அற்ற வீதியில் இருள் கவியத் தொடங்கிய பொழுதில் யாரோ என்னவோ என்று நன்றாகப் பயந்து “ஐயோ!” என்கிற கூக்குரலோடு அந்தப் பக்கமாக இவள் சரிய, தன் முகத்தை அவளுக்கு அருகே கொண்டுவந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு செல்பியை கிளுக்கி இருந்தான் துஷ்யந்தன்.
என்ன நடக்கிறது என்று உணரும் முன்னே நடந்துவிட்டதில் அதிர்ந்து நின்றாள் அவள்.
“ஆட்களை வச்சாடி மிரட்டுற? இத வச்சு உன்னை நான் என்ன செய்றன் பார்!” என்று ஃபோட்டோவைக் காட்ட, திகைத்துப்போனாள்.
ஐயோ என்று கத்தியபடி அவள் திரும்புவது என்னவோ அவனுக்கு முத்தமிடப் போவது போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்க கண்கள் கலங்கிப் போயிற்று!
திகைப்போடு அவனைப் பார்த்தாள். பேச்சுக்கூட மறந்தநிலை.
“எவ்வளவு திமிர் உனக்கு. ஒருத்தன் வருஷக் கணக்கில பின்னால அலைஞ்சா அவனை நாய விடக் கேவலமா நடத்துவியா நீ. அதென்ன ஊருல இருக்கிறவன் எல்லாம் உனக்காக வாறான்.” என்று அவன் கேட்க, யாரது என்று தெரியாமல் திகைத்தாள் அவள்.
“நான் ஒருத்தரையும் அனுப்பேல்ல.” உடைந்த குரலில் சொன்னதை நம்ப அவன் தயாராயில்லை.
“இனி எவன் வாறான் எண்டு பாக்கிறன். அப்படி எவனாவது வந்தான் ஊரே காறித்துப்பும்! துப்ப வைப்பன்!” எள்ளலோடு அவன் சொன்னபோது, முற்றிலுமாகக் கலங்கிப்போனவளின் கண்ணீர் கன்னங்களை நனைத்தது.
“தேவையில்லாத வேலை பாக்காம முதல் அந்த ஃபோட்டோவை டிலீட் பண்ணுங்கோ!”
“டிலீட் பண்ணவா இன்றைக்கு முழுக்க நீ எப்ப தனியா மாட்டுவாய் எண்டு காத்திருந்து எடுத்தனான்?” எள்ளலோடு கேட்டான் அவன்.
‘கடவுளே.. இவ்வளவு வஞ்சம் வச்சு அவள் மானத்தையே வாங்கிற அளவுக்கு அவள் ஒன்றுமே செய்யேல்லையே..’ கண்ணீர் நிற்க மறுத்து வழிந்தது.
“நல்லா அழு! இவ்வளவு நாளும் என்னை உன்ர பின்னால அலைய வச்சனி எல்லோ, இனிக் காலம் முழுக்க கண்ணீர் தான்டி உனக்கு மிச்சம்!”
“ஊருல இருக்கிறவனுக்கு எல்லாம் பல்ல காட்டுவாய். என்னைக் கண்டா மட்டும் முறைப்பு?! இந்த ஊரே உன்னைப்பாத்து காறித்துப்ப வைக்கேல்ல, நான் துஷ்யந்தன் இல்லை!” என்று அவன் சவால் விட்டபோது, துடித்துப்போனாள்.
அவன் கண்களில் இனி நீ அடங்கித்தானே ஆகோணும் என்கிற கொக்கரிப்பை கண்டதும் அவளுக்குள் இருந்த ஒன்று நிமிர்ந்தது. ‘இவன்ர ஆட்டத்துக்கு நான் அடங்கவே கூடாது!’
கன்னங்களை நனைத்த கண்ணீரைத் துடைத்தாள். கலக்கமற்ற விழிகளால் நேராக அவனைப் பார்த்து, “என்னைப்பற்றி எனக்குத் தெரியும்! என்ர குடும்பத்துக்கு தெரியும். மற்றவர்களைப் பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்ல! நீ செய்றதை செய்!” என்றவள் அதற்குமேல் நிற்காமல் அங்கிருந்து புறப்பட்டிருந்தாள்.
இந்த மிரட்டலுக்கு கூட அசையாமல் நிமிர்ந்து நின்றவளைக் கண்டு பல்கலைக் கடித்தான் அவன். ‘பாப்பமடி, உன்ர வீராப்பு எந்தளவு தூரத்துக்கு எண்டு!’