அவனிடம் நிமிர்ந்து பதில் சொல்லிவிட்டாள் தான். ஆனால், பயத்தில் நெஞ்சு உலர்ந்தே போயிற்று! இந்தளவு தூரத்துக்குப் போவான் என்று நினைக்கவே இல்லை. இனி என்ன நடக்கும்? பல பயங்கரங்கள் கண்முன்னால் வந்துநின்று நடுங்க வைத்தன. கண்ணீரோடு வீட்டுக்குச் சென்றதும் மாமாவுக்கு அழைத்தாள்.
“என்னம்மா?”
“இப்ப ஃபிரீயா மாமா நீங்க?”
“செமினார் ஒண்டுல இருக்கிறன். இன்னும் இருபது நிமிசத்துல முடிஞ்சிடும். ஏன்?” தான் எப்போதுமே வேலையாக இருப்போம் என்று இலேசில் அழைக்கமாட்டாள் அவள். எதுவாயினும் இரவு வீட்டுக்கு வருகிறவரிடம் தான் கேட்பாள். அப்படியானவள் அழைத்ததே ஏதோ சரியில்லை என்று உணர்த்தியது. அலுவல்கள் தொடர்ந்து இருந்தும் அப்படிச் சொன்னார்.
“உங்களோட கதைக்கோணும் மாமா.” எனும்போதே குரல் உடைய, ஒருகணம் யோசனையில் அவர் புருவங்கள் சுருங்கிற்று!
“அரை மணித்தியாலத்தில வந்திடுவன். அங்க என்ர ஆபீஸ் ரூம்ல போயிரு.” என்றவர், செமினார் முடிந்ததும் அதன் பிறகு இருந்த மீட்டிங்கை அடுத்தநாளுக்கு தள்ளிப்போட்டுவிட்டு உடனேயே வீட்டுக்கு விரைந்தார்.
அங்கே அவரின் அறையில் மேசையின் மீது ஓய்ந்துபோய் படுத்திருந்தாள் கவின்நிலா. அவர் உள்ளே நுழையவும் அழுதழுது வீங்கிப்போன முகத்துடன் நிமிர்ந்தவளைக் கண்டதும் துணுக்குற்றுப்போனார்.
அதை வேகமாக மறைத்துக்கொண்டு, “என்னம்மா?” என்று பாசமாக, அவளின் தலையை வருடிக் கேட்டவரின் கனிவில் உடைந்துபோனாள் அவள்.
நடந்ததைச் சொல்லி, அவன் சொன்னதையும் அழுகையோடு அவள் சொன்னபோது, ஒருகணம் அவரும் திகைத்துத்தான் போனார்.
“கதிரின் பேட்ச் துஷ்யந்தன் தானே?” உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டார்.
அவள் தலையாட்ட அவரால் நம்ப முடியவில்லை. அவனும் அவரின் மாணவன்தான். நல்ல படிப்பாளியும் கூட! வைத்தியன் வேறு. அவனா?
“நீ ஏஎல் படிக்க ஆரம்பிச்ச காலத்தில இருந்து என்டா.. ஏன் இவ்வளவு நாளும் சொல்லேல்ல?”
“இந்தளவு தூரத்துக்கு வரும் எண்டு நினைக்கேல்ல மாமா. அவர் கேக்க எனக்கு விருப்பமில்லை எண்டு நான் அழுத்தமா சொல்லிப்போட்டன். பிறகு ஏன் சும்மா பிரச்னையைப் பெருசாக்குவான் எண்டுதான் சொல்லேல்ல.”
நாற்காலியில் கண்மூடிச் சாய்ந்துகொண்டவரின் புருவங்கள் சற்று நேரத்துக்கு யோசனையில் சுருங்கிற்று. அப்படியும் இப்படியுமாகச் சுழன்றார்.
அவரின் முகத்தையே பார்த்திருந்தாள் கவின்நிலா. ஒரு முடிவோடு விழிகளைத் திறந்து, “என்ன எண்டு நான் பாக்கிறன். நீ ஒன்றுக்கும் கவலைப்படாத! மனதைக் குழப்பமா போய் படி.” என்றார் தெளிவாக.
அவரிடம் விஷயத்தைச் சேர்ப்பித்ததுமே அவள் பாரம் இறங்கிப்போயிற்று. கூடுதலாக அவர் சொன்னது இதம் சேர்த்தது.
“சரி மாமா!” தலையை ஆட்டிவிட்டு அவள் எழுந்துகொள்ள, “இனி என்ன நடந்தாலும்.. அது சின்ன விஷயமா இருந்தாலும் வந்து சொல்லோணும். முதலே நீ சொல்லியிருந்தா இவ்வளவு தூரத்துக்கு இது வந்திருக்காது.” என்று புத்திமதியும் சொல்லி அனுப்பி வைத்தார்.
கவின்நிலாவை நன்றாக மிரட்டி அழ வைத்துவிட்டோம் என்கிற மிதப்பில், நண்பர்களோடு ஊரைச் சுற்றிவிட்டு வந்த துஷ்யந்தன், தன் வீட்டு ஹாலில், அமர்ந்திருந்த டீனைக் கண்டதும் நடுங்கிப்போனான். அவரைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அவன். கை கால்கள் எல்லாம் உதறத் தொடங்க அதிர்ந்துபோய் வாசலிலேயே நின்றுவிட்டான்.
அவனுடைய சூட்சுமம் மிகுந்த திட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டதாய் இருந்தது அவரின் வரவு!
அவள் இந்த விஷயத்தை அவரிடம் கொண்டுபோவாள் என்றே நினைக்கவில்லை. வீட்டில் சொன்னால் திட்டுவார்கள், அடி விழும், உன்னில்தான் பிழை என்று சொல்லிவிடுவார்கள், இனி வெளியே விடமாட்டார்கள் என்று கண்டதையும் எண்ணிப் பயந்து, இளம் பெண்கள் இப்படியான மிரட்டல்களுக்கு அடிபணிந்து போவதைத்தான் அறிந்துவைத்திருந்தான். அவர்களின் அந்தப் பயம் தான் இவனைப் போனறவர்களுக்கான துருப்புச்சீட்டே. அது அறியாமலேயே மாட்டிக்கொள்வார்கள் இளம் பெண்கள்.
அந்தத் துணிச்சல்தான் மிரட்டவும் வைத்தது. மிஞ்சிப்போனால் இன்னும் எவனையாவது வைத்து மிரட்டப் பார்ப்பாள்; வரட்டும் வருகிறவனுக்கு காட்டுகிறேன் அந்த போட்டோவை என்று கருவிக்கொண்டிருந்தான்.
ஆனால், கவின்நிலா அவன் கணக்குகளுக்கு அப்பாற்பட்டவளாக இருந்தாள். டீன் இன்றே அதுவும் அவன் வீட்டுக்கே நேராக வருவார் என்பது.. அவனின் எண்ணப்போக்குகளுக்கு அப்பாட்பட்டதாய் இருந்தது.
ஆனால், டீனிடம் ஒரு விஷயம் சென்றால் அது மற்றவர்களின் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டதாய் தான் இருக்கும்! அது அவனுக்குத் தெரியும்! என்ன.. அவரிடம் போகும் என்று நினைக்கவில்லை. அதனால் மாட்டிக்கொண்டான்.
பெற்றவர்கள், கூடப்பிறந்தவள் முன்னிலையில் என்ன கேட்பாரோ? அப்போதே அவமானத்தில் கருத்துப்போயிற்று அவன் முகம். இதில், அவர் நினைத்தால் அவனின் எதிர்காலத்தையே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட முடியும் என்பதும் அவனுக்குள் பெரும் கிலியைப் பரப்பியது.
அம்மாவும் அப்பாவும் பதட்டத்தோடு நிற்க, குழப்பத்தோடு நின்ற தங்கையையும் தயக்கத்தோடு நோக்கிவிட்டு கேபியின் முகம் பார்க்கமுடியாமல் தலை குனிந்து நின்றான்.
அவர் கடுமை காட்டியதை அதுநாள் வரை யாருமே அறிந்ததில்லை. ஆனாலும் அறிவுச்சுடர் மின்னும் அந்த விழிகளால் முன் நிற்பவரை நேராக நோக்கி, ஆளுமை நிறைந்த வார்த்தைகளைக் கொண்டு நிதானமாக உரையாடும் அவரைக் காண்கையில் எதிரில் நிற்பவருக்கு குளிர் பிறக்கும். நெஞ்சுக்குள் இருப்பதெல்லாம் தன்பாட்டுக்கு வெளியே வந்துவிடும். அவனுக்கும் அப்படித்தான். அன்றுமட்டுமல்ல இன்றும்!
சாதாரணமாய் பார்ப்பதுபோல் பார்த்தவரின் விழிகள் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ஊசிகள் கொண்டு குத்துவது போலிருக்க, ஏனடா இந்த வேலையைப் பார்த்தோம் என்று அப்போதே நினைக்கத் தொடங்கியிருந்தான் அவன்.
“உனக்கும் ஒரு தங்கச்சி இருக்குதானே துஷ்யந்தன்?” அழுத்தம் நிறைந்த அமைதியான அவரின் குரல் காற்றை கிழித்துக்கொண்டு வந்து அவனைத் தாக்கியபோது, உடல் நடுங்க தங்கையைத் திரும்பிப் பார்த்தான்.
அவள் முகத்திலும் அதீத கலவரம். ‘இது என்ன? எதுக்காக என்னைச் சொல்றார்?’ என்று அவனிடமே கண்ணால் கேட்டாள்.
என்ன சொல்லுவான்?
அவனின் பெற்றவர்களும் துணுக்குற்றனர். ‘உங்கட மகனைப் பார்த்திட்டுப் போக வந்தனான்.’ என்று மட்டுமே சொல்லிவிட்டு அவர் காத்திருக்க, நேரம் என்பதே இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் மனிதர் சும்மா வருவாரா என்கிற குழப்பம் அவர்களுக்குள். அவரோ மகனிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார். அவனும் குறுகிப்போய் நிற்கிறான். கலவரத்தோடு அவரைப் பார்க்க, அவரோ அவனிடமிருந்து விழிகளை அகற்றவேயில்லை.
“உன்னட்ட.. அதுவும் என்ர ஸ்டூடன்ட் ஒருத்தனிட்ட இருந்து இத நான் எதிர்பாக்கேல்ல.” என்று அவர் சொன்னபோது, உண்மையிலேயே அவரின் நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்று உடைந்துபோனான் துஷ்யந்தன்.