“உன்ர ஃபோன் எங்க?” கேட்டு முடிக்க முதலே கன்றிவிட்ட முகத்தோடு அதை அவரிடம் நீட்டிவிட்டான்.
“என்ன சேர் நடந்தது?” அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் கேட்டார் அவனின் அப்பா.
அவர்கள் வீட்டின் தலைமகன் அவன். நன்றாகப் படித்தவன், தங்கைக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவன். வைத்தியனாகி சொந்த பந்தங்களுக்கிடையே அவர்களுக்கென்று ஒரு மரியாதையை தேடித் தந்தவன். அதுநாள் வரையில் என் மகன் என்று அவர்களை தலைநிமிர்ந்து நடக்கவைத்தவன். இன்று ‘என் ஆசான்’ என்று போற்றும் அவரின் முன்னாலேயே கூனிக் குறுகிப்போய் நிற்பதை அவர்களால் காணவே முடியவில்லை.
“நடந்ததச் சொல்லு துஷ்யந்தன்.” என்றார் கனகரட்ணம்.
அப்படிச் சொல்கிற காரியத்தை அவன் செய்யவில்லை என்று அவர் சொன்ன தொனி பதறவைக்க, “அப்படி என்னதான் செய்தாய்?” என்று கலவரத்தோடு கேட்டார் அம்மா.
ஃபோனில் கேலரியில் இருந்த போட்டோவைக் கண்டதும் அவரின் கட்டுப்பாட்டையும் மீறி விழுக்கென்று நிமிர்ந்தவரின் விழிகள் அவனை எரித்தது. ஒரு நொடிதான் அந்தப் பார்வை தாக்கியது. ஆனாலும், உடலின் மொத்தமும் ஆடியது அவனுக்கு.
உடனேயே அதை அவனது ஃபோனிலிருந்து முற்றிலுமாக அகற்றினார். “வேற யாருக்கும்.. எங்கயும் அனுப்பி இருக்கிறியா இத?” அவர் கேட்ட விதத்தில் அவனுக்குள் நடுங்கியது.
“இல்ல சேர்! இல்ல.” அவர் கண்களைப் பாராமல் சொன்னான்.
ஃபோனை மேசையில் போட்டுவிட்டு எழுந்தார். “கடைசி முறையா உன்ன நம்புறன். உனக்கும் ஒரு தங்கச்சி, குடும்பம், மானம், மரியாதை எல்லாம் இருக்கு. மறந்திடாத!” என்றவர் அங்கிருந்த எல்லோரையும் தன் பார்வையாலேயே அச்சுறுத்திவிட்டு வெளியேறினார்.
மொத்த வீடுமே சிலையாகிப்போனது. சகலதும் ஒடுங்க நின்றிருந்தான் துஷ்யந்தன். அந்த இடத்திலேயே எரிந்து சாம்பலாகிவிட மாட்டோமா என்றிருந்தது. பெற்றோரின் கேள்விக் கணைகளில் இருந்து தப்பமுடியாமல் விழுங்கி விழுங்கி விஷயத்தைச் சொன்னபோது, அவன் கன்னத்தை பதம் பார்த்தது தகப்பனின் கரம். “என்ன மனுஷனட நீ!” உமிழ் நீரை காறித்துப்பாத குறையாகத் திட்டினார் தகப்பன்.
அன்னையோ உன்னையா இந்த வயிற்றில் பத்துமாதம் சுமந்து பெற்றேன் என்று திட்டித் தீர்த்தார். தங்கையோ நீயா இதையெல்லாம் செய்தது? அதுவும் என் தோழியை! உன்னையா என் வழிகாட்டலாய் நினைத்தேன் என்று இழிவாய்ப் பார்த்தாள்.
கேவலமாய் அவர்கள் பார்த்த பார்வையில் அற்ப புழுவாகிப்போயிருந்தான். அந்த வீட்டின் தலைமகனாய், நம்பிக்கைக்கு உரியவனாய் இருந்தவனின் நிலை ஒரே நாளில் தலைகீழாக மாறியே போனது. அந்த அவமானத்தை தாங்கமுடியாமல் அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டான்.
மனம் புழுங்கிச் செத்தது. ஏன்தான் அதைச் செய்தோம்? ஏதோ ஒரு ஆவேசம்; அதுவும் ஒன்றுக்கு இரண்டாக ஆண்கள் அவளுக்காக அவன் சட்டையைப் பிடித்ததில் வந்த ஆவேசம்! நண்பர்கள் முன்னால் அவமானப் பட்டோமே என்கிற ஆத்திரம். வலயக் கல்வி பணிப்பாளரில் இருந்து கல்லூரியின் அதிபர் வரைக்கும் அவளைத் தூக்கிக் கொண்டாடுவதைப் பார்த்ததில் உண்டான பொறாமை. இது எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விரட்டியதில் அவன் செய்த ஒன்று இன்று அவனது குருவின் முன்னால் பெற்றவர்களின் முன்னால் கூடப் பிறந்தவள் முன்னால் கூனிக்குறுக வைத்துவிட்டதே. இனி என்ன செய்தும் அதை மாற்ற முடியாதே. மானமும் மரியாதையும் போய்விட்டதே!
ஆத்திரத்தோடு ஃபோனை எடுத்துப் பார்த்தான். அந்த போட்டோவை முற்றிலுமாக அழித்திருந்தார் அவர். டஸ்ட் பின்னைக்கூட வெறுமையாக்கி விட்டிருந்தார். இதேபோல இன்றைய நாளையும் அவன் வாழ்விலிருந்து அகற்ற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அவளை..! என்னவாவது செய்ய வேண்டும் போல்தான் ஆத்திரம் வந்தது. ஆனால், இந்த ஆத்திரமும் அவசரமும் தானே அவனை இத்தனை தூரத்துக்கு கீழே இறக்கியது.
அவளைக்கூட கேவலப்படுத்தும் எண்ணம் அவனுக்கு இருக்கவில்லையே! பதறவைக்க மட்டுமே நினைத்தான். அவளின் மன அமைதியை குலைக்க மட்டுமே நினைத்தான். கிட்டத்தட்ட இரண்டு வருடமாய் தீட்டியிருந்த திட்டத்தை நடத்த மட்டுமே நினைத்தான். ஆனால் நடந்தது? ச்சே!
வீட்டில் யாரின் முகமும் பார்க்கமுடியாமல் அவன் இங்கு தவிக்க, அங்கோ துஷாந்தினி கவின்நிலாவிடம் அழுகையோடு மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தாள். இத்தனை நாட்களில் உன் அண்ணா என்னை பின்தொடர்ந்து தொல்லை தருகிறான் என்று ஒருவார்த்தை சொல்லாமல் சிறுவயதில் பழகியது போலவே நட்போடு பழகியவளிடம் ஃபோனில் கூட பேசமுடியாமல் படாதபாடு பட்டாள் துஷாந்தினி.
மாமா இத்தனை வேகமாகச் செயல்படுவார் என்று கவின்நிலாவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்த ஃபோட்டோ ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டதை தோழியின் மூலமாக அறிந்தவளின் மனப்பாரம் இறங்கியே போயிற்று. எனவே அவளைத் தேற்றிவிட்டு வைத்தாள். அவளின் மனக்கவலை, பயம், நடுக்கம் எல்லாம் மறைந்தே போயிற்று!
அடுத்தநாள் மாலை, “அவள் லைப்ரரிக்கு போறாள் அண்ணா.” என்று தயங்கித்தயங்கி தகவல் சொல்லிக்கொண்டிருந்தாள் துஷாந்தினி.
“சரி, வை!”
“பொறு அண்ணா.” என்று அவசரமாகத் தடுத்தாள் அவள்.
“கடைசியா உன்ன நம்பி இந்த வேலை பாத்திருக்கிறன். அவள் என்ர பெஸ்ட் பிரெண்ட். மன்னிப்பு கேட்டுட்டு இதோட அவள் இருக்கிற பக்கம் கூட நீ போகக் கூடாது. தயவு செய்து என்னையும் உன்ன மாதிரி நம்பிக்கைத் துரோகம் செய்ய வச்சுடாத.” என்றுவிட்டு ஃபோனை வைக்கவும், சற்றுநேரம் அப்படியே நின்றுவிட்டான் துஷ்யந்தன்.
தங்கையே இப்படிச் சொல்லும் நிலைக்கு ஆளாகிப்போனானே! நெஞ்சு முழுவதும் வெறுப்பு மண்டிக்கிடந்தாலும், எடுத்த முடிவை செயலாற்ற லைப்ரரிக்கு அவனும் கிளம்பினான்.
தன் நிம்மதியைத் தொலைத்துவிட்டு பைத்தியம் பிடிக்காத குறையாக அலைந்துகொண்டிருந்தான் செந்தூரன். அதற்குக் காரணம், அவன் கண்ணிலேயே படாமல் மறைந்துநின்று விளையாட்டுக் காட்டும் கவின்நிலா.
அவளின் ஒற்றைப் பார்வை தந்த சுகத்தில் என்னென்னவோ ஆசைகள் நெஞ்சில் முட்டி மோதிக்கொண்டிருக்க, அந்த ஆசைகளை உருவாக்கியவாளோ அதன்பிறகு அவன் இருந்த திசைக்கே வரவில்லை. அமைதியில்லாத மனதில் அலைப்புறுதலோடு நடமாடிக்கொண்டிருந்தான்.
அன்று, சுரேந்தரோடு போயிருக்கமாட்டாள் என்று நன்றாகத் தெரிந்தும் பதிலே போடாமலிருந்து பொய்க்கோபம் காட்டியபோது அவள் சமாதானம் செய்யவேண்டும் என்றுதான் அவன் மனம் பெரிதும் எதிர்பார்த்தது. அவள் அவனிடம் கெஞ்சிக் கொஞ்ச வேண்டும். சமாதானம் செய்யவேண்டும். காதல் கொண்ட நெஞ்சம் ஆசையோடு எதிர்பார்க்க, அவளோ அதன்பிறகு சத்தமே போடவில்லை. அன்று எத்தனை முறை ஃபோனை எடுத்துக் பார்த்திருப்பான். இரவு முழுக்க உறக்கமே இல்லையே! அவள் ஒன்றுமே சொல்லாமல் இருக்க இருக்கத்தான் மெய்யாகவே கோபம் வந்திருந்தது அவனுக்கு.
அவனுக்குத் தெரியும்; அவள் படிக்கிறாள்; அதனைக் குழப்பக் கூடாது என்று. அவளின் முன்னேற்றத்துக்குத் தான் தடையாக இருக்கக் கூடாது என்பது அவன் எப்போதோ எடுத்த முடிவு. ஆனால், ஒரு வார்த்தை.. ஆசையாக, அன்பாக அனுசரணையாக பேசவும் கூடாதா என்ன?
‘நீயா கதைக்காம நானா கதைக்கமாட்டன்! போடி!” என்று செல்லக்கோபம் கொண்டிருந்தான்.
ஆனால், அடுத்தடுத்த நாட்களும் அவளைக் காணவே இல்லை என்றபோது, இது வேறு என்னவோ என்று மூளை சொல்லிற்று!
என்னவாக இருக்கும் என்று சிந்தித்தபோது எதுவுமே பிடிபடவில்லை. படிப்புதான் காரணம் என்றால் சொல்லிவிட்டுச் செய்யலாமே! அவன் படிக்காதது காரணமா? அது முதலே தெரிந்த ஒன்றுதானே.