வருகிற ஆத்திரத்துக்கு அவள் முன்னாலேயே போய்நின்று கேட்டுவிடுவான். வெகு அருகில் வந்துவிட்ட பரீட்சை தடுத்தது. ‘அவளை விட்டெல்லாம் குடுக்கேலாது. ஆனா எக்ஸாம் முடியிற வரைக்கும் பேசாம இருப்பம். எனக்கா விளையாட்டுக் காட்டுறாய்.. முதல் எக்ஸாம முடிடி. அதுக்கு பிறகு இருக்கு உனக்குக் கச்சேரி!’ என்று முடிவு செய்துகொண்டு அமைதியாக இருக்க முனைந்தவனால் முடியவே இல்லை.
அவன் விலகி இருக்க அவள் கல்வி காரணம் என்றால் அவள் விலக என்ன காரணம்? அந்தக் கோபம் கனன்றுகொண்டே இருந்தது. இதில் அவள் முகத்தைக்கூட பார்க்கமுடியவில்லை என்கிற சினத்தில் சிக்கித் தவித்திருந்தான்.
‘இப்படியே இருந்தா விசர்தான் பிடிக்கும்!’ தலையை உலுக்கிக்கொண்டு புட்பால் விளையாடப் புறப்பட்டான்.
வண்டியின் மீதேறி அமர, திறந்திருந்த கேட்டின் வழியே டியூஷன் முடிந்து சைக்கிளில் வந்தாள் சசி. இவன் புறப்படுவதைக் கண்டுவிட்டு, அவன் வண்டிக்கு முன்னே கொண்டுபோய் சைக்கிளை நிறுத்தி, “அண்ணா டேய்! உனக்கு விஷயம் தெரியுமா?” என்று கேட்டபடி இறங்கினாள்.
“எனக்கு ஒன்றுமே தெரியவேண்டாம். நீ உன்ர வேலைய பார்!”
அவனே யார் மீது கொட்டுவது என்று தெரியாத ஆத்திரத்தில் இருக்கிறான். இதில் ஒன்றுமே இல்லாத எதையாவது பெரிய இதுபோல் காவிக்கொண்டு வருவாள் இவள்!
அவளோ அவனைப் போகவிடாமல் தடுத்து, “அவன்.. அந்த துஷ்யந்தன் என்ன செய்திருக்கிறான் தெரியுமா?” என்று ஆரம்பிக்க, சட்டென்று விரைப்புற்று நிமிர்ந்தான்.
“என்ன செய்தவன்?” கேட்கும்போதே கவின்நிலாவுக்கு என்னவோ செய்துவிட்டான் என்று உள்மனம் அடித்துச் சொல்ல அந்தக் கேள்வியில் அத்தனை உஷ்ணம்.
“அவனடா..” என்று ஆரம்பித்தவள் நடந்ததை எல்லாம் சொன்னபோது, இப்போதே அவனை அடித்துத் துவைக்கும் ஆவேசம் எழுந்தது அவனுக்குள்.
இத்தனைக்கும் தன்னிடம் ஒருவார்த்தை அவள் சொல்லவில்லை என்பதை மனதில் குறித்துக்கொண்டான். ஆக, அவனிடமிருந்து அவள் விலகித்தான் இருக்கிறாள்!
அன்று கிரவுண்டில் வைத்து, அவன் ஏதாவது வம்பு வளர்த்தால் என்னிடம் சொல்லு என்று அவ்வளவு சொல்லியும் சொல்லவில்லை. ஒரு ஃபோன்? ஒரு மெசேஜ் எதுவுமில்லை. அந்தளவுக்கு என்ன நடந்தது?
“உனக்கு எப்படி தெரியும்?” மனதை மறைத்துக்கொண்டு விசாரித்தான்.
“டியூஷன்ல வச்சு துஷா கவிட்ட மன்னிப்புக் கேட்டவள்; அத பாத்திட்டு என்ன எண்டு கேக்கச் சொன்னவள் அண்ணா. ஒருத்தருக்கும் சொல்லாத எண்டு சொன்னவள்; நீயும் உன்ர பிரெண்ட்ஸ் யாருக்கும் சொல்லாத.” என்று அவள் சொன்னபோது, அந்த ஒருத்தரும் என்பதன் பொருள் அவனிடம் என்பதுதான் என்று தெரியாதா அவனுக்கு?
அவனிடம் மறைக்கிறாளாமா? ஆத்திரத்தில் பல்கலைக் கடித்தான்.
“நல்லகாலம் அண்ணா. பெருசா ஒண்டும் நடக்கேல்ல. இவள் டீனுட்ட சொன்னபடியா நல்லதாப் போச்சு. வீட்ட சொல்லப் பயந்து சொல்லாம இருந்தா எவ்வளவு ஆபத்து சொல்லு பாப்பம். டீனை கண்டதும் பம்மி இருப்பான். எளிய நாய்!” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்க, ‘இதுல வேற என்னவோ இருக்கு!’ என்று செந்தூரனின் மனம் அடித்துச் சொன்னது.
காதலிக்கும் பெண்ணை ஃபோட்டோ எடுத்து மிரட்டுகிறவன் நல்லவனாக இருக்கச் சந்தர்ப்பமே இல்லை. அவன் அவளைக் காதலிக்கவே இல்லை! அவனது நோக்கம் வேறு என்னவோ!
என்னவா இருக்கும்? பிடிபடாதபோதும் ஏதோ சரியில்லை என்று மட்டும் நன்கு தெரிய, “அவன் எங்க வேலை செய்றான்?” என்று விசாரித்தான்.
“உனக்கு என்னத்துக்கு அது? ஊருல இருக்கிற ஆம்பிளையல் எல்லாம் உனக்காக சண்டைக்கு வாராங்கள் எண்டு சொன்னவனாம். அது அண்டைக்கு நீ போனதால வந்தது. திரும்பவும் எதையாவது செய்து பிரச்னையை வளக்காத!”
அன்று கபிலனும் மிரட்டியதை இவனிடம் உடனேயே சொல்லியிருந்தான். ஆக அதுதான் அவனை இவ்வளவு ஆக்ரோஷம் கொள்ள வைத்ததா என்று யோசித்தவனுக்கு, தான் தான் பிரச்னையை பெருசாக்கினோமோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. எது எப்படியானாலும் துஷ்யந்தன் அடங்கிவிடுவான் என்று தோன்றவில்லை அவனுக்கு.
மனம் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க, “தேவையில்லாமக் கதைக்காம, சொல்லு!” என்று அதட்டினான்.
“அவன் டாக்டர் அண்ணா.”
‘ஓ..! டாக்டருக்கு நான் பாக்கிறன் வைத்தியம்!’ என்று எண்ணியவன் உடனேயே வீட்டிலிருந்து கிளம்பினான்.
மனமெங்கும் துஷ்யந்தனை முறித்துப்போடும் ஆத்திரம் என்றால், திடீரெனக் கண்ணிலும் படாமல் மறைந்துநின்று அவனை ஆட்டி வைக்கிறவளின் மீதும் கோபம் கிளம்பியது. பிடித்தவிதமாய் மட்டுமே வாழ்ந்து பழகியவன் தன் இயல்பைத் தொலைத்துவிட்டு அலைகிறான். எல்லாம் அவளால்! அவள் முன்னே சென்றுநின்று என்னடி செய்கிறாய்? என்று கேட்கமுடியாது கோழையாகி நிற்கிறான். உண்மைதான். எவ்வளவோ கோபம் அவள் மீது கிளம்பினாலும், படிப்பை எண்ணி அதைக் காட்டமுடியாத கோழையாகித்தான் போனான்.
இப்படித் தன் கோபம், ஆத்திரம், ஆசை, நேசம் எதுவும் அவளது கல்வியை இடையூறு செய்துவிடக் கூடாது என்று அவன் தள்ளி நிற்க, யாரோ ஒருவன் வந்து அவளை ஆட்டிப் பார்ப்பானா? துஷ்யந்தனின் நடவடிக்கைகள் என்ன என்று விளங்காதபோதும் அவனை அடக்கியே ஆகவேண்டும் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
அவளைப் பற்றின சிந்தனைகளோடு இவன் சென்றுகொண்டிருந்த அதே நேரம், இவனை முந்திக்கொண்டு மிக வேகமாய் போனது இன்னோர் பைக்.
‘யாரடா அது? என்னைவிட வேகமா போறவன்?’ என்று பார்த்தால் துஷ்யந்தன்.
இவனைக்கூட கவனிக்காமல் எங்க போறான்? அதுவும் இவ்வளவு வேகமா. அவனைப் பின்தொடர்ந்தான் இவன்.
லைப்ரரிக்குள் சென்று, பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றவனின் உடல்மொழி ஒருவித இறுக்கத்தைக் காட்ட, என்னவோ சரியில்லை என்று உணர்ந்தான் செந்தூரன். அவனெல்லாம் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்பவன்; எனவே அவனைப் பின் தொடர்ந்தான்.
அவனோ தன் அங்கத்தவர் அட்டையை பெயருக்குத் தூக்கிக் காட்டிவிட்டு விறுவிறு என்று உள்ளுக்குச் செல்லவும், இவன் முன்பின் இங்கே வந்தால் தானே அந்த கார்ட் இருக்க?
என்ன செய்யலாம்? அங்கே ஒரு பெடியன் நடந்துவர, அதுவும் கையில் புத்தகங்களோடு வரவும், அவனது கார்ட்டை வாங்கிவிட வேண்டியதுதான் என்று இவன் திரும்பிய வேளையில், லைப்ரரியில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தாள் கவின்நிலா.
பார்த்தவன் பார்த்தபடி நின்றுவிட்டான். பூவொன்று வாடிக்கிடந்தால் எப்படியிருக்கும்?
முகத்தில் ஒருவித சோகம் அப்பிக்கிடக்க, கையில் புத்தகங்களோடு நடந்துகொண்டிருந்தாள். நடையில் சோர்வு. கொஞ்சம் பார்வையை திருப்பினால் கூட அவனைக் கண்டுகொள்ளலாம். ஆயினும் சுற்றி யார் என்ன செய்கிறார்கள் என்று பராக்குப் பாராமல் காதோரமாய் முடியை ஒதுக்கி விட்டபடி நடந்து சென்றுகொண்டிருந்தாள். அந்தக் கண்களில் தெரிந்த சோகம் இவன் மனதை அசைத்துப்பார்த்தது. ‘ஏனடி இந்த வேதனை எல்லாம் உனக்கு?’
அவளை அவனுக்கு நெடு நாட்களாகத் தெரியும். பிடிக்காத காலத்தில் கூட அவளைக் கவனித்திருக்கிறான். நிர்ச்சலமான முகத்தில் தெளிவிருக்கும். ஒளிர்விருக்கும். நான் இன்னார் வீட்டுப் பெண், இன்னாரின் மருமகள் என்கிற திமிர் இருக்காது; நிமிர்வு இருக்கும். கல்விச் செல்வம் ஒளிவீசும் பிரகாசமான முகம். அந்த முகத்தில் கவிந்துகிடந்த துன்பத்தின் சாயலில் துஷ்யந்தன் மீது பெரும் ஆத்திரமே கிளம்பிற்று.