பூங்காவுக்கு நடந்து செல்பவளையே இவன் பார்த்திருக்க, துஷ்யந்தனும் அங்கு செல்வது தெரியப் பின்தொடர்ந்தான்.
துஷ்யந்தன் வேறு பாதையால் சென்று அவளின் எதிரில் வந்தான். தன்னைக் கண்டதும் பயந்து நின்றுவிடுவாள் என்று எதிர்பார்த்தான். அவளோ எந்தச் சலனமும் இல்லாது கடந்து சென்றாள். தன்னைக் கண்டும், தனக்கும் அவளுக்குமிடையில் அத்தனை பிரச்சனைகள் நடந்தும் எந்தச் சலனமும் இல்லாமல் பத்தோடு பதினொன்றாகக் கடந்து சென்றவளின் மனதின் திடம் அவனைச் சீண்டியது.
அவனைக் கண்டதும் அவள் விழிகளில் குறைந்தபட்சமாக ஒரு திடுக்கிடலையாவது உணர்ந்திருக்க திருப்திப் பட்டிருப்பான். இவ்வளவு செய்தும் அவள் நிமிர்வு குறையவில்லையே. ஒரு வேகத்தோடு அவள் முன்னால் இவன் சென்று நின்ற அந்தக் கணத்தில், அவனைக்கண்டு அவள் அஞ்ச முதலில், அஞ்ச விடாமல் அவளுக்கும் அவனுக்கும் நடுவில் வந்து நின்றிருந்தான் செந்தூரன்.
தன்னெதிரில் நிற்பது துஷ்யந்தன் என்று உணர்ந்த கணம் ஒரு திடுக்கிடலோடு நிமிர்ந்தவள், அதற்கிடையில் தன்னைப் பாதுகாப்பவன் போன்று செந்தூரன் வந்து நின்ற நொடியில் அமைதியானாள். அவனிருக்கையில் சிறு துன்பமும் அவளை அணுகாதே!
அவனைக் கண்ட கணம் நெஞ்சில் இனித்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு நிற்பதைப் பார்க்க அவளுக்கு பயம் பிடித்தது.
மன்னிப்புக் கேட்டு பிரச்னையை முடிக்கத்தான் வந்தான் துஷ்யந்தன். . ஆனால், செந்தூரனின் எதிர்பாராத வரவு அதைச் செய்யவிடாமல் சீண்டியது.
“எப்ப பாத்தாலும் எவனாவது ஒருத்தன் உனக்கு பின்னால திரிஞ்சுகொண்டே இருப்பானா?” செந்தூரனுக்கு பின்னால் நின்றவளிடம் எட்டி நக்கலாகக் கேட்டு முடிக்க முதலே பொறி பறந்தது அவனுக்கு. அத்தனை மோசமாய் அறைந்திருந்தான் செந்தூரன்.
அவன் ஆவேசம் கண்டு கலங்கிப்போனாள் கவின்நிலா. இதில் துஷ்யந்தனின் வார்த்தைகள் வேறு. மீண்டும் ஆரம்பிக்கிறானே என்றிருந்தது.
“கதைக்கிறத ஒழுங்கா கத எருமை! கதைக்கிறது என்ன இனிமேல் அவளை நீ பாத்த.. நடக்கிறதே வேற!” விரல் நீட்டி எச்சரித்தான் செந்தூரன்.
“என்னடா செய்வ? அவளோட நான் கதைச்சா நீ என்ன கேக்கிறது?”
ஆளுமையாய் வந்துநின்று செந்தூரன் அதட்டிப் பேசவும் பணிந்து போகமுடியவில்லை அவனால். அதுவும் தான் நேசிப்பதாய் சொன்ன பெண்ணின் முன்னால், இன்னொருவன் உயர்ந்து தெரிய தான் தாழ்ந்து போவதா என்று, அதுவேறு எரிந்தது.
“நான் கேக்காம? அவளுக்குப் பின்னால எவன் திரிஞ்சாலும் நான் கேப்பன்! கேக்கிறது என்ன கிழிச்சுத் தோரணமா தொங்க விட்டுடுவன்! ஏன் அண்டைக்கு வாங்கினது மறந்து போச்சா?” நக்கலாக அவன் கேட்டதில் முகம் கன்றிப்போனவனின் விழிகளில் கவின்நிலாவைக் குதறிவிடும் ஆவேசம்.
“ஃபோட்டோ எடுத்தியாமே.. எங்க இப்ப எடு! எடுடா!” அவளை இழுத்து முன்னே நிறுத்திவிட்டுச் சொன்னான். “எடுடா! தைரியம் இருந்தா எடு!” பல்கலைக் கடித்துக்கொண்டு உறும, அச்சம் படர்ந்த விழிகளால் செந்தூரனைத்தான் பார்த்தாள் கவின்நிலா.
அவளுக்கு ஒன்று என்றால் இவனுக்கு எவ்வளவு கோபம் வருகிறது?
“ஃபோட்டோ எடுத்த நானே ஒருத்தருக்கும் சொல்லேல்ல. நீ ஊருக்கே சொல்லி இருக்கிற போல..” செந்தூரனிடம் தன்னால் மோதமுடியாத கோழைத்தனத்தை அவளிடம் பழிதீர்க்க முயன்றான் அவன்.
ஆவேசம் கொண்டு மீண்டும் ஓங்கியவனின் கையை வேகமாகப் பற்றித் தடுத்தாள் கவின்நிலா. “செந்தூரன், ப்ளீஸ் சும்மா இருங்கோ.” என்றாள் கண்ணீரோடு.
அவளை மீறமுடியாமல் பல்லைக்கடித்தபடி அவன் நிற்க, உதடுகளை ஏளனமாக வளைத்து, “இதெல்லாம் உன்ர மாமாக்கு தெரியுமா? கதிருக்கு ஃபோனபோட்டு சொல்லவா?” என்று, செந்தூரனைப் பற்றியிருந்த அவள் கையைக் காட்டி நக்கலாகக் கேட்டான்.
கலங்கிப்போனாள் கவின்நிலா. ஒன்றுமே இல்லாததை ஏதேதோ இருப்பதாய் சித்தரித்தது துஷ்யந்தனின் பார்வையும் கேள்வியும்! இதை வைத்து என்னவெல்லாம் செய்வானோ?
செந்தூரனின் பொறுமை பறந்தே போனது.
“தைரியம் இருந்தா சொல்லுடா பாப்பம்? இப்பவே இந்த இடத்திலேயே சொல்லோணும்! எடு ஃபோன! எடு!” செந்தூரன் அவனை நெருங்க நெருங்க, அவன் கால்கள் பின்னால் நகர்ந்தது அதுபாட்டுக்கு.
“உன்ன பிடிக்கவே இல்ல எண்டு சொன்னவளுக்குப் பின்னால நீ சுத்துவ. அவளை ஃபோட்டோவும் எடுப்ப. ஏன் எண்டு கேட்டா மிரட்டுவியா? இப்ப நீ ஃபோன போடோணும் இல்ல நான் உனக்கு ரெண்டு போடுவன்.”
செந்தூரன் விடாமல் நிற்க துஷ்யந்தனின் முகம் அவமானத்தில் கருத்துக் போனது.
“டேய் நீ படிச்சவன் தானே? உனக்கும் தங்கச்சி இருக்கு தானே. அவளுக்கும் இதையேதான் செய்வியா? அறிவில்ல? எங்கட ஊர் பிள்ளை, ஒரு பொம்பிளை பிள்ளை அவள் படிச்சு முதல் ரேங்க் வந்தா எங்க எல்லாருக்கும் தானேடா பெருமை. அதுக்கு அவளை நிம்மதியா படிக்க விடமாட்டியா நீ? நமக்கெல்லாம் வராத படிப்பு அவளுக்கு வரமா அமைஞ்சிருக்கு. உதவி செய்யாட்டியும் பரவாயில்ல உபத்திரவம் இல்லாம இருக்க வேண்டாம்! உன்னையெல்லாம்..” அவனை ஒரு கை பார்த்துவிடும் வேகத்துடன் நெருங்கினான்.
அவனைத் தடுக்கக்கூட முடியாமல் நின்றிருந்தாள் கவின்நிலா. அவனின் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையாய் அவளுக்குள் இறங்கியது. எவ்வளவு தூரம் அவளுக்காக யோசித்திருக்கிறான். அவனா அவள் எதிர்காலத்துக்கு தடையாய் இருப்பான்? படிக்கல்லாக மட்டுமே இருக்க நினைப்பவனை விலக்கி வைத்தாளே! நெஞ்சு சுட்டது!
“இவளை படிக்க விடுறதா? அதுவும் முதல் ரேங்க் எப்படி எடுக்கிறாள் எண்டு நானும் பாக்கிறன்!” என்று ஆவேசத்தோடு அவன் வாயை விட்டதும் சட்டென்று நின்றான் செந்தூரன்.
புருவங்களைச் சுருக்கி அவனைப் பார்த்தான்.
“என்ன சொல்லுற?” விழிகளில் கூர்மையோடு கேட்டான்.
“அவளின்ர அண்ணாவால தான் என்ர ரேங்க் ஐந்துக்கு போனது. பள்ளிக்கூடத்தில இருந்து காம்பஸ் வரைக்கும் அவனாலதான் நான் எல்லாத்திலையும் பின்னுக்கு போயிட்டன். அதே மாதிரி அவன்ர தங்கச்சிய முதலிடம் வர விடமாட்டன். இந்தமுறை என்ர தங்கச்சிதான் பெர்ட்ஸ் ரேங்க்.” ஆத்திரம் தலைக்கேறியதில் அவனுடைய திட்டத்தையெல்லாம் சொன்னபோது, அவன் மனதிலிருந்த வன்மத்தை அறிந்து கவின்நிலாவுமே அதிர்ந்து போனாள்.
ஆனால், செந்தூரன் இப்படி ஏதோ ஒன்றை எதிர்பார்த்திருந்தான் தானே.
“உன்ர அண்ணா என்ன ரேங்க்?” என்று, அவளிடம் திரும்பாமலே கேட்டான்.
“செகண்ட்.”
“டேய்! ரெண்டுக்கும் ஐஞ்சுக்கும் இடைல மூன்றும் நாளும் இருக்கேடா. அதையேன் விட்ட?”
என்னவோ பஸ்ஸை தவற விட்டதுபோல் கேட்டான்.
“இவளின்ர அண்ணாவாலதான் நான் பின்னுக்கு போனான்.”
“அவனால இல்ல. உன்னாலதான். சரியில்லாத உன்ர குணத்தாலதான்.” என்றான் செந்தூரன்.