“நிறையக் கனவெல்லாம் வந்தது எண்டு சொன்னாய்; அதுல என்ன நடந்தது எண்டும் சொல்லலாமே?” மெல்லக் கேட்ட அந்தக் கள்ளனின் கண்களில் தெறித்த விஷமத்தில் முறைக்க முயன்று தோற்றாள்.
பற்றியிருந்த கரத்தை அவன் அழுத்திக்கொடுக்க, அவன் தேகத்தின் கதகதப்பு அவளுக்குள் பரவி நடுங்கச் செய்ய, அவளுக்கு அவளைக் குறித்தே அச்சம் மேலோங்கியது. “நேரமாச்சு.” என்று முணுமுணுத்துக்கொண்டு வேகமாய் எழுந்துகொண்டாள்.
அவளைவிட வேகமாய் அவள்முன்னால் வந்து நின்றிருந்தான் அவன்.
“கொஞ்ச நேரம் இரேன்.” கெஞ்சலாய் ஒலித்தது அவன் குரல்.
“நான் போகோணும்.”
“ப்ளீஸ். இன்னும் கொஞ்ச நேரம்.” என்று கேட்கும்போதே அவளை நெருங்கி இருந்தான் அவன்.
“என்ர படிப்பை குழப்பமாட்டன் எண்டு சொல்லி இருக்கிறீங்க..” உணர்வுகளின் மேலீட்டில் அவளுக்கு குரல் நடுங்கியது.
“நான்தான் ஒண்டும் செய்யேல்லையே..” பற்றுக்கோளுக்கு மேசையை பற்றியபடி நின்றவள் நிலையை அப்போதுதான் முற்றிலுமாக உணர்ந்தான் அவன்.
அவள் போகிறேன் என்றதும் மனதின் ஏக்கம், உணர்வுகளின் உந்துதலில் நெருங்கிவிட்டான். அது அவளுக்குள் இவ்வளவு பாதிப்பை உருவாக்கும் என்று யோசிக்கவில்லை அவன். சட்டென விலகி நின்றான். அவளின் தடுமாற்றம் அவனுக்குள் அவஸ்தைகளை உருவாக்கின. கேசத்தைக் கோதிக்கொடுத்தான். மூச்சுக்காற்றை இழுத்து ஊப்ஸ் என்று வெளியேற்றினான். அவள் எப்படித் தன்னைப் பாதிக்கிறாளோ அப்படித் தானும் அவளைப் பாதிக்கிறோம் என்று உணர்ந்தபோது.. அவள் கரத்தினைப் பற்றி, உயர்த்தி தளிர் விரல்களின் மீது உதடுகளைப் பதித்தான்.
கூச்சத்தோடு அவள் பட்டென்று இழுக்க, அவனோ இன்னும் அழுத்தமாய் பற்றினான்.
முகமெல்லாம் ரத்தமாய் சிவந்துவிட, அவனைப் பார்க்காமல் திரும்பிக்கொண்டவளின் தாடையைப் பற்றித் தன் புறமாகத் திருப்பினான். “வாக்குத் தந்திட்டு மீறமாட்டான் இந்தச் செந்தூரன். ஆனா, நானும் பாவம் தானே. எல்லாமே புதுசு.. அதால வந்த ஆர்வக்கோளாறு வேற..” எனும்போதே அவளால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
எதைச் சொல்லியாவது கோபப்பட முடியாமல் சிரிக்க வைத்துவிடுகிறான், கள்ளன்!
“இண்டைக்கு மட்டும் நீயும் படிப்புக்கு லீவெடு. உன்னாலையும் இண்டைக்கு படிக்க முடியாது. இனி நான் உன்னைத் தொந்தரவு செய்யவே மாட்டன். ஆனா, எக்ஸாம் எல்லாம் முடிஞ்ச அந்த உன்ர அந்த நாள் எனக்குத்தான் சொந்தம்.” என்றவன், சந்தோசமாய் அவளை அனுப்பிவைத்தான்.
ஒரு மயக்கத்தோடுதான் வீடு சென்று சேர்ந்தாள் கவின்நிலா. கையில் கிடந்த செயின் வேறு என்னவோ அவனே பற்றியிருப்பது போல குறுகுறுப்பை மூட்டிக்கொண்டே கிடந்தது. அப்படியே கட்டிலில் விழுந்து கண்களை மூடிக்கொண்டவள் அவனைத் தாண்டிய அத்தனை நினைவுகளையும் மறந்தாள். ‘ஆர்வக்கோளாறுல கையப் பிடிச்சானாமா? கள்ளன்! எல்லாம் புதுசாம். அவளுக்கு மட்டுமென்ன பழசா?’ அந்தப் பொல்லாத கண்ணனின் லீலைகளை எண்ணிச் சிரித்தபடியே உறங்கிப்போனாள்.
துஷ்யந்தன் வீட்டு வாசலை மிதித்ததுமே, சலசலத்துக்கொண்டிருந்த வீடு சட்டென நிசப்தமானது. வீட்டிலிருந்த மூவருமே மாயமாகிப் போயினர். சுர்ர் என்று கடும்கோபம் சுழற்றி அடித்தது அவனை.
“அம்மாஆ!” நட்டநடு ஹாலில் ஓங்கி ஒலித்த கர்ஜனையில் மூவரும் மின்னலென அவன் முன்னே ஆஜராகினர்.
எல்லோரும் ஒருவித பதட்டத்தோடு நிற்க, “என்னைப் பாத்தா எப்படித் தெரியுது உங்க எல்லோருக்கும்? வில்லன் மாதிரியா? நான் செய்தது பிழைதான். அதுக்காக கேவலாமானவன் இல்ல. அவளைப் பயப்படுத்தத்தான் அந்த ஃபோட்டோவை எடுத்தனான். அதைவிட வேற ஒன்றுமே செய்திருக்க மாட்டன். அது கே.பி சேர் அண்டைக்கு வந்ததோடு முடிஞ்சுது. இனி என்ன கண்டதும் என்னவோ அற்ப புழுவை பாக்கிற மாதிரி பாக்கிறது, கேவலமா பாக்கிறது, சத்தமே இல்லாம ஆளாளுக்கு மூலைக்கு மூலை ஒதுங்கிறது எல்லாம் இண்டையோட நிக்கோணும். இந்த வீடு எப்பவும் மாதிரி இருக்கோணும். அத விட்டுட்டு திரும்பவும் இதேமாதிரி செய்தீங்களோ, இந்த வீட்டுப் பக்கமே வரமாட்டன்!” என்று உறுமிவிட்டு விறுவிறு என்று படியேறிப்போனான்.
அவனால் அவர்களின் ஒதுக்கத்தை, யாரோவாக தள்ளி நிறுத்திப் பார்க்கும் பார்வையைத் தாங்கவே முடியவில்லை. நம்பிக்கையோடும் பாசத்தோடும் கரிசனையோடும் கொண்டாடப்பட்டவன் திடீரென்று சொந்த வீட்டிலேயே அந்நியனாக உணர்ந்தபோது அதை மாற்றியே ஆகவேண்டும் என்றுதான் கத்திவிட்டு வந்தான்.
அதைவிட யோசிக்காமல் கோபத்தில் செய்த செயலின் வீரியத்தை புரிந்துகொண்டான். மீண்டும் முட்டாளாகக் கூடாது. அவர்கள் இருவர் மீதும் வன்மம் உண்டுதான். அதைக் கையாளவேண்டிய முறையையும் உணர்ந்துகொண்டான்.
அவளின் படிப்பைக் குழப்ப எண்ணித்தான் காதல் என்று சொல்லிக்கொண்டு பின்னால் அலைந்தான். அப்படி அலைந்த நாட்களில் மனதில் இருந்த அழுக்கில் எதையுமே உணர்ந்ததில்லை. இன்று யாரோ ஒருவன் அவளுக்காக வந்து நின்றதும், அவனுக்கும் அவளுக்குமிடையில் மௌனமாய் அரங்கேறிய நேசமும் இருவருக்குமான உறவு என்ன என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட, அவனுக்குள் சின்னதாய் வலி. மனதில் அழுக்கு மட்டுமே குவிந்து கிடந்ததால் அவள் மனதுக்குள் வந்த செய்தியை உணராமலேயே போயிருந்தான். உணர்ந்த கணமோ அவள் அவனுக்கில்லை. கசந்துகொண்டு இறங்கியது உண்மை.
எப்படி இருந்தாலுமே அந்தக் காதல் நிறைவேறப் போவதில்லை.
காரணம் கே.பி!
‘என்னையே மாப்பிள்ளையாக்க யோசிப்பார். அப்ப அவனை?’ அவன் உதட்டோரம் ஏளனத்தில் மடிந்தது.
‘உன் விரலை வைத்தே உன் கண்ணை குத்துறன்.’ முடிவை எடுத்துக்கொண்டு அவனும் போட்டியிடத் தயாரானான்.
அறையை விட்டு வெளியே வந்து, “துஷி!” என்று அழைக்க ஓடிவந்தாள் துஷாந்தினி.
“மன்னிப்பு கேட்டியா அண்ணா?”
“அதெல்லாம் முடிஞ்ச கதை. இனி நீ அதைப்பற்றிக் கதைக்கவே கூடாது. என்னட்ட மட்டுமில்ல அவளிட்டையும். விளங்கினதா?”
சரி என்று அவள் தலையாட்ட, “இந்த முறை நீதான் பெர்ட்ஸ் ரேங்க் வரோணும். அதுக்கு இன்றிலிருந்து டைம் டேபிள் போட்டு படிக்கிற. நான் ஹெல்ப் பண்றன்.” என்றான் அவன்.
“அண்ணா..!” நம்ப முடியாமல் அவள் கூவ,
“ஏன் முடியாதா?” என்று அவளையே பார்த்துக் கேட்டான்.
“நீ ஹெல்ப் பண்ணினா கட்டாயம் என்னால முடியும் அண்ணா.”
“அப்ப வா!” என்று அப்போதே அவள் அறைக்கு அழைத்துச் சென்று, பள்ளிக்கூடம் டியூஷன் என்று அத்தனை நேரங்களையும் ஒதுக்கி அவள் படிக்க, ஓய்வு எடுக்க படுக்க என்று டைம் டேபிளை கிறுகிறு என்று அவளிடம் கேட்டுக் கேட்டு ஒழுங்கு செய்தான்.
“இன்றைக்கு இருந்தே தொடங்கிறம்!” உறுதியோடு சொன்னான்.
துஷாந்தினிக்கு சந்தோசம் தாங்கவில்லை. “தேங்க்ஸ் அண்ணா!” என்றுவிட்டு தாயிடம் சொல்ல ஓடினாள்.
ஒரு சின்னச் செயலில் தங்கையின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை கண்டவனுக்கு இப்படி எத்தனை சின்னச்சின்ன விஷயங்களைச் செய்யாமல் விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சியும் ஓடியது. ‘இனி என் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு அவனுக்குத் திருப்பி அடிக்கிறன்!’