“வீட்டை போய் சொல்லிக் குடுத்திட்டு வா. இல்ல சசியை இங்க வரச்சொல்லு!” அப்போதும் அதைத்தான் சொன்னார் அவர்.
சரி என்றுவிட்டு வந்தவளுக்குள் மெல்லிய ஏமாற்றம். வேண்டாம்; எதற்கு வீண் பிரச்சனைகள் என்று நினைத்தாலும், இந்தச் சாக்கினை வைத்து ஓடிப்போய் அவனை ஒருமுறை பார்த்து ஆசையாகக் கதைத்துவிட்டு வந்துவிடுவோம் என்றுதான் ஆசைப்பட்டாள்.
அவனுக்கு மெசேஜ் அனுப்ப நினைத்தால், போனில் நம்பர் இல்லை. அதற்காக மனதிலுமா இல்லாமல் போய்விடும்? இந்த முரடனுக்கு என்ன பெயர் வைக்கலாம்? சிரிப்போடு ‘மிஸ்டர் படிக்காதவன்’ என்று பெயர் கொடுத்து சேவ் செய்துகொண்டாள்.
வாட்ஸ்அப்புக்குப் போய், “நிறைய ஆட்கள் போகவர இருப்பீனமாம்; அங்க பொம்பிளைப் பிள்ளைகள் இருந்து படிக்கிறது நல்லதில்லை எண்டு அம்மா சொல்லுறா. வேணுமெண்டா உங்கட வீட்டை என்ன போகட்டாம் இல்ல சசியை இங்க கூப்பிடட்டாம் . எனக்கும் அதுதான் சரி எண்டு படுது. துஷ்யந்தன் எங்க எண்டு நிப்பான். சும்மா எதுக்கு நாங்க அவனுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை குடுக்க? நான் என்ன செய்ய எண்டு சொல்லுங்கோ?” என்று அவனிடம் கேட்டு அனுப்பினாள்.
மெசேஜ் வந்த சத்தத்தில் ஃபோனைப் பார்த்த செந்தூரனின் உதடுகளில் புன்னகை தொற்றிக்கொண்டது.
‘இவ்வளவு நாளும் ஒரு மெசேஜும் இல்ல. அண்டைக்கு கோபமா வச்சானே எண்டு ஒரு சமாதானம் இல்ல. இப்ப மட்டும் நல்லபிள்ளை மாதிரி கேக்கிறா. இருடி.. என்னட்ட வசமா மாட்டுவ தானே. அப்போ இருக்கு உனக்கு!’
“மாமி சொல்றதும் சரிதான். நான் சசியை கூட்டிக்கொண்டு வந்து விடுறன்.”
‘அதுக்கிடைல மாமியா? கள்ளன்! கண்ண மூடித் திறக்கமுதல் சொந்தம் கொண்டாடிடுவான்.’
“கோபமா?” என்று கேட்டு அனுப்பினாள்.
அப்படி எதுவும் அவனுக்கிருக்காது என்று தெரியும். அவளுக்கு அவனோடான பேச்சை வளர்க்க வேண்டும். எனவே சும்மா கேட்டு அனுப்பினாள்.
கோபத்தில் சிவந்த முகச் ஸ்மைலிகளை சிரிப்போடு அனுப்பிவைத்தான்.
அவளின் மாயக்கண்ணன் காட்டுவது பொய்க்கோபம் என்று தெரியாதா அவளுக்கு?
“ஸ்மைல் ப்ளீஸ்” என்று அவள் சிரிக்கும் இதழ்களை அனுப்பி வைக்க அவனோ முத்தமிடும் சிவந்த உதடுகளை அனுப்பி வைத்தான்.
‘அச்சோ..!’ சட்டென்று தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் கவின்நிலா.
‘கள்ளன்! எந்த நேரம் என்ன செய்வான் எண்டே தெரியாது!’
“உனக்கிது தேவையாடி விசரி?” தன்னையே குட்டிக்கொண்டவள் பதிலே அனுப்பவில்லை.
அவளிடமிருந்து பதில் வராமல் இருக்க இருக்க செந்தூரனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
“ஹல்லோ படிப்ஸ் மேடம்! என்ன சத்தத்தையே காணேல்ல?”
“நான் படிக்கிறன்.”
“ஓஓ……! பாக்கத் தெரியுது!”
“சசியை எப்ப கூட்டிக்கொண்டு வாறீங்க?” பேச்சை மாற்ற முனைந்தாள்.
“நான் கேட்டத முதல் தா!”
“நான் படிக்கோணும்.”
“இப்ப என்னடி செய்துகொண்டு இருக்கிறாய் கள்ளி?”
“நீங்க விட்டாத்தானே?”
“விடாம உன்ர கையப் பிடிச்சா இழுக்கிறன்?”
“போடா கள்ளா!” என்றுவிட்டு ஓடியே போய்விட்டாள் அவள்.
சிரித்துக்கொண்டு கண்மூடிச் சாய்ந்துகொண்டான் செந்தூரன். அவளோடு கொஞ்சமே கொஞ்சம் வம்பு வளர்த்ததில் மனதுக்கு மிகவுமே சுகமாய் உணர்ந்தான்.
‘அறிவு கெட்டவனே படிக்கிற பிள்ளையோட விளையாடுவீயாடா நீ?’ அறிவு எப்போதும்போல போர்க்கொடி தூக்க, ‘நானும் பாவம் தானே’ என்று கெஞ்சினான் அதனிடம்.
‘இந்த சந்தோசம் இப்ப எனக்கு மாதிரி அவளுக்கும் நிறைவைத்தான் தரும்!’ என்று எண்ணியபடி ஃபோனை எடுத்து, “நாலு மணிக்கு சசியை கூட்டிக்கொண்டு வாறன்!” என்று அனுப்பிவிட்டு வைத்தான்.
சசியை கூட்டிக்கொண்டுபோய் அவர்கள் வீட்டுக் கேட்டருகில் இவன் நிறுத்த வாசலுக்கே ஓடிவந்தாள் கவின்நிலா.
இலகுவான பாவாடை சட்டையில் ஒற்றைப்பின்னலோடு ஓடி வந்தவளை, அவன் விழிகள் ரசனையோடு வருடிச் செல்ல, அகமும் முகமும் மலர பார்வையால் அவனிடம் நலம் விசாரித்தாள்.
‘சுகமா இருக்கிறீங்களா?’
சின்னத் தலையசைப்பில் பதில் சொல்லிவிட்டு மென்னகை சிந்தினான் அவன்.
“கவனமா படிங்கோ ரெண்டுபேரும். சும்மா இருந்து அரட்டை அடிக்கிறேல்ல.”
‘போடா!’ உதட்டை மட்டும் அவள் அசைக்க, அவன் வேண்டுமென்று முறைத்தான்.
சசியை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு சட்டென்று கண்ணடித்தாள் அவள்.
‘அடிப்பாவி!’ அதிர்ச்சியாகிவிட்டான் செந்தூரன்.
‘வெளில படிப்ஸ் உள்ளுக்க மெகா ரவுடி. இதுல என்ன ரவுடி எண்டு சொல்லுறது.’ நம்பமாட்டாமால் புருவங்களை உச்சி மேட்டுக்கே உயர்த்திவிட்டான் அவன்.
வெடித்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, “நீ வாடி!” என்று தோழியை இழுத்துக்கொண்டு அவள் போக,
“முடிஞ்சதும் எனக்கு மெசேஜ் அனுப்பு; வாறன்!” என்றவன், சின்னத் தலையசைப்பால் அவளிடம் விடைபெற்றுக்கொண்டான்.
நிறையப் பேசிக்கொள்ளவே இல்லை அவர்கள்; ஆனாலும் மனதுக்கு மிகவுமே நெருக்கமாய் உணர்ந்தனர். அடுத்தநாள் துஷியும் இவர்களோடு சேர்ந்துகொண்டாள். சசி வந்துவிட்டுப் போனதும் கனகரட்ணம் மருமகளை விசாரித்தார்.
“குரூப் ஸ்டடி பிரயோசனமா இருக்காம்மா?”
“ஓம் மாமா! ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பார்ட் ஒவ்வொருத்தர் படிச்சுக்கொண்டு வந்து விளங்கப்படுத்தவேனும் எண்டு பிளான் பண்ணி இருக்கிறோம். மற்ற ரெண்டுபேரும் அதப் படிச்சு, இதுக்கு முதல் வந்த கேள்விப் பேப்பர்ஸ்ல இருந்து கேள்வி ரெடி பண்ணிக் கேப்போம். அவா ஆன்சர் சொல்லி விளங்கப்படுத்த வேணும். நாங்க அது சரியா எண்டு பாக்க வேணும். நல்லாருக்கு மாமா. தனியா இருந்து சப்பு சப்பு எண்டு சப்பிறதை விட இது இன்னும் ஈஸியா மனதில பதியுது. நல்லா விளங்குதும்.” என்று மலர்ந்த முகத்தோடு மருமகள் சொன்னபோது மகிழ்ந்துபோனார் கனகரட்ணம்.
அடுத்தநாள் தோழியர் மூவரும் வந்தபோது அவர்களை அழைத்தார் டீன். சசிக்கு கைகால்கள் எல்லாம் உதறத் தொடங்கியது. கவின்நிலாவின் வீட்டுக்கு வரும்போதெல்லாம் கண்டிருக்கிறாள் தான் என்றாலும் கதைத்ததில்லை. அவரைக் கண்டாலே உதறும் அவளுக்கு. ஆனாலும் ‘ஏஎல்’ பாஸாகி அவருக்கே மாணவியாகப் போகவேண்டும் என்பது எல்லோரைப் போலவும் அவளின் கனவும் அதுதான்.
“இனி இங்க இருந்து படிங்கோ..” என்று ஒரு அறையைக் காட்டினார். உள்ளே சென்ற மூவருமே ஆனந்தமாய் அதிர்ந்தனர். அவர்களுக்காகவே ஒரு கரும்பலகையுடன் ஷெல்புகள் அமைக்கப்பட்டு நடுவில் மேசையும் சூழல் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தது. அருகே ஷெல்பில் உயர்தர வகுப்புக்கான பாடப்புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், இதற்கு முந்தைய வருடங்களில் வந்த பரீட்சைப் பேப்பர்கள் என்று அவர்களுக்குத் தேவையான எல்லாமே அந்த அறையில் இருந்தது. என்ன சந்தேகம் என்றாலும் உடனேயே தெளிவு செய்துகொள்ளும் வகையில் இருந்ததைப் பார்க்க, தன்னிடம் ஏன் மாமா விசாரித்தார் என்று உணர்ந்துகொண்டாள் கவி.
“தேங்க்ஸ் மாமா.” என்று அவள் சொல்ல, “தேங்க்ஸ் சேர்” என்றனர் மற்ற இருவரும் பயபக்தியுடன்.
“மூன்றுபேரும் நல்லா படிக்கோணும். என்ன தேவை எண்டாலும் சொல்லுங்கோ!” எண்றுவிட்டுப் போனார் அவர்.
எவ்வளவு பெரிய மனிதர். அவரின் ஒவ்வொரு செயலிலும் தெறித்த ஊக்கத்தில் வாயடைத்து நின்றிருந்தாள் சசி.