அதற்காகவே காத்திருந்தவன் சட்டென்று கண்ணடிக்க, “போடா! டேய்!” என்று எப்போதும்போல வாயசைத்துவிட்டுப் போனவளுக்கு அவனுக்கு முதுகில் இரண்டு போடவேண்டும் போலிருந்தது.
‘அவனுக்கு நான் சிஸ்ஸா?’
‘கள்ளன்! வேணுமெண்டு எல்லாம் செய்றது. இவன திரும்பியே பாக்கக் கூடாது.’ அவனிடம் பாய்ந்த விழிகளை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
ஒருநிமிடம் கூட ஆகியிருக்காது. சும்மா அப்படியே விழிகளைச் சுழற்றுவது போலச் சுழற்றி அவனைப் பார்க்க, வேறுபுறம் திரும்பிச் சிரித்தபடி பீட்ஸாவினைக் கடித்தான். வம்புச் சிரிப்பு. அவளைக் கண்டுகொண்டு சீண்டும் சிரிப்பு!
படக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டவளாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“தேங்ஸ்டி செல்லு!”
மெசேஜ் வந்த சத்தத்தில் எடுத்துப்பார்க்க, அவன்தான். “ நீ மெசேஜ் அனுப்பாட்டி பீட்ஸா வாங்கிற ஐடியா எனக்கு வந்தே இருக்காது.” என்று அனுப்பியிருந்தான்.
அவன் முகத்தில் தெரிந்த மலர்ச்சி அவளுக்கும் இதமாயிருந்தது.
நிமிர்ந்து அவனை முறைத்துவிட்டு அங்கும் கடும் கோபத்தோடு முறைக்கும் சிவப்பு ஸ்மைலிகளை அனுப்பி வைத்தாள்.
“நன்றி சொன்னா வெல்கம் சொல்லோணும். இதுகூடத் தெரியாம நீயெல்லாம் என்ன ‘படிப்ஸ்’ ஓ..” என்று அன்பினான் அவன்.
மீண்டும் அவள் அதையே அனுப்ப, “என்னடி செல்லக்குட்டி.. இந்த மாமாவோட என்ன கோபம்?” என்று மீண்டும் அவன் அனுப்ப,
“ஒழுங்கா பெயரைச் சொல்லுங்க! செல்லக்குட்டி, மாமா, மண்ணாங்கட்டி.. என்ன இதெல்லாம்? கேக்க நல்லாவா இருக்கு? கண்ராவி.” கடுகடுத்தாள் அவள்.
“என்னதான் வேணும் உனக்கு? கொஞ்சினாலும் பிடிக்காது கோபப்பட்டாலும் பிடிக்காது. என்ன கேசுடி நீ?”
“நான் கேசா உங்களுக்கு!” ஸ்மைலி வடிவில் அவள் முறைக்க,
“கேஸுதான்டி. அதுவும் நான் மட்டுமே ஹாண்டில் பண்ணவேண்டிய கேஸ்!” என்று அனுப்பிவைத்தான் அவன்.
கன்னங்கள் கதகதக்கும் போலிருக்க, நிமிர்ந்து முறைத்தாள். ‘கொஞ்சம் இடம் குடுத்தா போதும். இருக்கிற ஓட்டை உடைசல் எல்லாத்துக்கையும் புகுந்துடுவான்.’
அவனோ கண்ணடித்து கள்ளச் சிரிப்புச் சிரித்தான். அதை அருகிலிருந்து ரசிக்க ஆசை எழுந்ததும், “ஒரு.. தேத்தண்ணி வித் செந்தூரன்?” என்று கேட்டு அனுப்பினாள்.
சட்டென்று நிமிர்ந்து பார்க்க, விழிகளிலும் அந்தக் கேள்வியைத் தேக்கிக்கொண்டிருந்தாள் அவள்.
அவனுடனான ஒரு பொழுதினை அவள் மனம் எதிர்பார்க்கிறதா? கனிந்துபோன மனதுடன், “என்னம்மா?” என்று உருகினான் அவன்.
“உங்கட ஒரு பத்து நிமிஷம்.. எனக்கே எனக்கெண்டு வேணும். ப்ளீஸ்.”
“வாடா எண்டா வரப்போறன். அதுக்குப்போய் ப்ளீஸ்ஸா? எப்ப?”
“நாளைக்கு. பின்னேரம்.?”
“டீல்!”
“டேய் அண்ணா! தேங்க்ஸ் டா..!” ஓடிவந்து சந்தோசமாய்ச் சொன்னாள் சசிரூபா. அவளே எதிர்பார்க்கவில்லை, அவளின் இந்தப் பிறந்தநாள் இத்தனை அழகாய் கழியும் என்று.
“உன்ர தேங்க்ஸ்ஸ வச்சு நான் என்ன செய்ய? மரியாதையா காச வெட்டு!” ஃபோனை அணைத்து, ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு சொன்னான் செந்தூரன்.
“ஏன்? கொழும்பில இருக்கிற உன்ர மனுசிக்கு கொண்டுபோய்க் குடுக்கவோ?”
அவள் அப்படிக் கேட்டதும் செந்தூரனின் விழிகளும் அப்போது அவர்களிடம் வந்த கவின்நிலாவின் விழிகளும் சந்தித்துக்கொண்டன.
“அங்க இருக்கிறவளுக்கு இல்ல இங்க இருந்தவளுக்கு.” என்றான் கண்களில் சிரிப்போடு.
“ஓ..! அதுக்கிடைல அங்க இருக்கிறவள கழட்டிட்டு இங்க ஒருத்திய பிடிச்சிட்டியா? யாருடா அது உன்னைப்பற்றி தெரியாம உன்னட்ட மாட்டினவள்? அவளுக்கு என்ன மண்டைக்க ஒன்றுமே இல்லையாமோ? போயும் போயும் உன்னட்ட விழுந்திருக்கிறாள்?”
அதுவரை நேரமும் அவனது குறும்பை ரசித்துக்கொண்டிருந்த நிலா அவனை முறைக்க செந்தூரனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
“ஹேஹே குடும்பத்துக்க கும்மியடிக்காம சும்மாயிரு!” வேகமாகச் சொன்னான் அவன்.
“என்னடா அண்ணா? சீரியஸா பயப்படுற?” சந்தேகமாய் அவனைப் பார்த்து அவள் கேட்க சட்டென்று உஷாரானான் அவன்.
“எனக்குப் பயம்? அதுவும் உன்ர அண்ணியை பாத்து?” கவின்நிலாவிடம் ஓடப்பார்த்த கண்களை அடக்கிக்கொண்டு அவன் சொல்ல,
“டேய்! எவளையாவது அண்ணி கிண்ணி எண்டு கூட்டிக்கொண்டு வந்தியோ உன்ர குரல்வளையை பிடிச்சு நசுக்கி விட்டுடுவன். ஓடிப்போயிடு!” விரல் நீட்டி எச்சரித்தவளிடம் இருந்து ஒருவழியாக அவன் கழன்றுகொள்ள, விடைபெற்றுச் சென்றவனையே பாசத்தோடு பின் தொடர்ந்தன இரு பெண்களின் விழிகளும்!
செந்தூரனின் கடையின் உள் அறையின் ஜன்னலோரம் சாய்ந்து நின்றிருந்தாள் கவின்நிலா. காற்று வந்து கிச்சுக்கிச்சு மூட்டியதில் தோளிலிருந்து வழுக்கி வழுக்கி விழுந்த ஷாலை தூக்கி தூக்கி தோளில் போட்டபடி தேநீர் ஊற்றிக்கொண்டிருந்த அவனையே பார்த்திருந்தாள்.
நேசத்தை சொல்லிக்கொண்ட பிறகு பேசிக்கொண்டதில்லை. ஆனால், விலகி இருக்க இருக்கத்தான் உள்ளத்தில் நேசமும் பாசமும் பொங்கியது. அவனோடு எதையும் கதைக்கவோ சிரிக்கவோ வேண்டும் என்பதை விட அவனோடான ஒரு கப்புத் தேநீர் பொழுது மிக அற்புதமானதாய் உணர்ந்தாள் அவள்.
அந்தத் தேநீரைப் பருகும் பொழுதினில் அவர்கள் பேசிக்கொள்ளும் சின்னச்சின்ன வார்த்தைகள் பெறுமதி மிக்கவையாகத் தோன்றின. பரிமாறிக்கொள்ளும் பார்வைகள் அதைவிட அழகான சொந்தத்தை உருவாக்கின.
“என்ன பலமான யோசனை?” கேட்டுக்கொண்டே கப்பை நீட்டினான்.
“நீங்க இருக்கேக்க எனக்கு என்ன யோசனை?” என்றபடி கப்பை வாங்கிப் பருகினாள் அவள்.
அந்தப் பதில் அவனுக்குள் இனிமையான இதம் சேர்த்தது. அந்த இதத்தோடு அவளை நோக்கினான்.
சாதாரணமாய் டியூஷனுக்கு போவதற்காக அணிந்துகொண்ட சுடிதார் செட். மாம்பழ வண்ணத்தில் சட்டையும் நீலநிறத்தில் கால்சட்டையும் அணிந்து, அதே நீலத்தில் மாம்பழவண்ணக் கரையிட்ட ஷால் போட்டிருந்தாள். அது வழுக்கிக்கொண்டிருக்க, இயல்பாகவே தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு தேநீரைப் பருகிக் கொண்டிருந்தாள்.
அவன் கண்களில் தெரிந்த ரசனையை கண்டு மனம் குளிர்ந்தாள்.
‘அழகாயிருக்கிறாள்’ என்று அவளுக்கே உணர்த்தும் பார்வை.
மீண்டும் ஷால் வலுக்க, அவள் தூக்க முதலில் அவன் ஏந்திக்கொண்டான்.
“இதுக்கு ஒரு பின்னை குத்த வேண்டியதுதானே.”
“உங்களைப் பாக்க வரப்போறன் என்ற அவசரத்துல தூக்கி போட்டுக்கொண்டு ஓடிவந்திட்டன்.” என்றவள் ஷாலை வாங்கக் கையை நீட்ட, கொடுக்காமல் அதனைச் சுருக்கி சரி நடுவில் பிடித்து அவளின் ஒருபக்கத் தோளில் போட்டு அதன் இரு பக்கங்களையும் மறுபக்க இடுப்பருகில் முடிந்துவிட்டான்.
அவன் செயலில் உள்ளே சிலிர்த்தது தேகம். காட்டிக்கொள்ளாமல், “இதெல்லாம் முதல் மனுசிக்கு செய்து பழக்கம் போல..” என்று அவள் கேட்கவும், சத்தமாகச் சிரித்தான் அவன்.
“அதெல்லாம் சும்மா. இதையெல்லாம் சசிக்கு கூட செய்தது இல்ல. உனக்கு மட்டும் தான். செய்ததும் செய்ய ஆசை பட்டதும்.” என்றவன் அவளருகிலேயே அந்த ஜன்னலில் சாய்ந்துகொண்டான்.