தன் முன்னே நின்றவனைக் கண்டு புருவங்களைச் சுருக்கினார் கனகரட்ணம். இங்கே எங்கே வந்தாய் என்று கேட்காமல் கேட்ட அவர் பார்வையிலேயே குன்றினான் துஷ்யந்தன். இதையெல்லாம் பார்த்தால் எண்ணியது ஈடேறாதே.
“அன்றைக்கு நடந்ததுக்கு சாரி சேர். ஆனா, அவளை..” என்றதும், அவர் விழிகளில் நொடியில் குடியேறிய உக்கிரத்தில் சடாரென்று அடங்கினான்.
“உங்கட மருமகளை வெருட்ட(மிரட்ட) மட்டும் தான் நினைச்சனான். மற்றும்படி வேற எந்த எண்ணமும் இல்லை. அதுகூட பிழைதான். ரியலி சாரி சேர். ஆனா அந்தக் கோபத்தில இதைச் சொல்ல வரேல்ல. நான் செய்த பிழைக்கு பிராயச்சித்தமா இருக்கட்டுமே எண்டுதான் சொல்லுறன். என்னை நம்பாட்டியும் பரவாயில்ல, பொய்யா உண்மையா எண்டு மட்டும் விசாரிச்சு தெரிஞ்சு கொண்டாலே போதும் எனக்கு.” என்று அவன் சொல்லவும் புருவங்களைச் சுருக்கி யோசனையாகப் பார்த்தார் அவர்.
அந்தப் பார்வை நாவினைக் கட்டிப்போட்டாலும், “கவின்நிலா அவாவோட பிரெண்ட் சசியோட அண்ணாவை லவ் பண்ணுறா சேர்.” தயக்கத்தோடு சொல்லிவிட்டு அவர் முகத்தை கவனித்துப் பார்த்தான்.
எந்த மாற்றமும் இல்லை. அப்படியே அமர்ந்திருந்தார். பெரும் பிரளயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவனுக்குச் சப் என்றானது.
உன்னிப்பாக அவனைத்தான் பார்த்திருந்தார். அவனுக்குத்தான் உதறியது. அவள் மீது அவருக்கு எவ்வளவு நம்பிக்கை, பாசம் என்பதை நன்கு அறிவான். அதேபோல மிகவுமே திடகாத்திரமான, மன உறுதி கொண்ட மகா மனிதன்தான் அவர். அந்த ஆலமரத்தையே வேரோடு சாய்க்க வல்லது கவின்நிலா பற்றிய கெடுதலான ஒரு செய்தி. அந்தளவு பாசம் கொண்டிருப்பவர் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சிங்கம்போல் தன் கம்பீரம் குலையாமல் அமர்ந்திருக்க, அவரின் நெஞ்சுரம் அவனுக்குள் நடுக்கத்தைத்தான் பரப்பியது..
“இது எனக்கு கொஞ்ச நாளுக்கு முதலே தெரியும். உங்களிட்ட சொல்லுறதா வேணாமா எண்டு யோசனையா இருந்தது. உங்கட முகம் பாக்கவே துணிவில்ல. பிறகு.. எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கு; நீங்க நம்பினாலும் சரி நம்பாட்டியும் சரி உங்கட காதில போட்டுவிடுவம் எண்டுதான் வந்தனான்.” என்றவன் அப்போதும் அவர் அசைவில்லாமல் இருக்க மெய்யாகவே உள்ளுக்குள் நொந்துதான் போனான்.
அவன் எதிர்பார்த்தது அவரின் கர்ஜனையை, கோபத்தை, ஆத்திரத்தை. அப்போதுதானே அந்த ஆத்திரம் அவர்கள் மீது வெடிக்கும். காதல் வீட்டுக்கு தெரிந்த பெண்ணின் மனம் அமைதியாகவா இருக்கும்? உலைக்களமாகும். மன அமைதி குலையும், கல்வியில் கோட்டை விடுவாள். அந்த இடுக்கில் அவன் தங்கை புகுந்துகொள்வாளே.
அவர்கள் காதலிக்கத் தொடங்கிய காலத்திலேயே சொன்னால், பிரிவு வந்தாலோ பிரச்சனைகள் வந்தாலோ பெரிதாகப் பாதிக்காது. நேசம் ஆழமாய் மனதுக்குள் ஊடுருவிய பின்னரே சொல்லவேண்டும். தங்கையை அனுப்பியது கூட அவளறியாமல் அவள் வாயால் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளத்தான். அதோடு, அவளை அங்கு விடவும் கூட்டவும் போகிறேன் என்கிற சாட்டில் அவர்களை அவனும் கண்காணிக்கலாமே. இன்னும் கொஞ்ச நாட்களில் பரீட்சை வேறு. இப்போது பிரச்சனை கிளம்பினால் கவின்நிலாவின் மனநிலை அப்படியே குழம்பிப்போகும். இப்படி சரியான தருணம் பார்த்து அவன் சொல்ல, அவரோ இடித்த புலியாக இருந்த இடம்விட்டு அசையவில்லை. மனிதன் முகத்திலாவது எதையாவது காட்டினாரா? ஒரு சீற்றம்? கோபம்? முகச் சிவப்பு? கண்ணில் கூட தேடித் பார்த்துவிட்டான். எதுவும் தெரியவில்லை.
அவனிடம் காட்டிக்கொள்ளா விட்டாலும் அவனை நம்பாவிட்டாலும் சும்மா இருக்கமாட்டார் என்று மட்டும் தெரியும். கவின்நிலா பற்றிய ஒரு விஷயம் அவரைச் சும்மா இருக்க விடாது. யாருக்கும் தெரியாமலேனும் விசாரிப்பார். அது போதுமே அவனுக்கு. அவன் ஒன்றும் பொய்யைச் சொல்லவில்லையே. அந்தவகையில் அவனுக்கு வெற்றிதான். சந்தோஷமாகவே அங்கிருந்து வெளியேறினான்.
அதோடு, என்னதான் சொன்னாலும் அவர் மனதில் அவன் மீதான நம்பிக்கை அறுந்துபோனது அவனுக்கு மிகுந்த வருத்தமே. கொஞ்சமேனும் இதன்மூலம் அவரின் நன்மதிப்பை மீண்டும் பெறுவானாக இருந்தால் அது போதும்!
அப்படியே கண்களை மூடிச் சாய்ந்துகொண்டார் கனகரட்ணம். அவனை நம்பவில்லை அவர். ஆனால், அன்று கண்ட காட்சி கண்முன்னே வந்து நின்று சிந்திக்க வைத்தது. அன்றைக்கே தட்டிய பொறிதான். இன்று யோசித்துப் பார்க்கையில் இயல்பாய் அறிந்த இருவர் விடைபெற்றுக்கொள்ளும் விடைபெறுதல் அல்ல அது என்று இன்னும் வலுவாக உணர்ந்தார்.
மனதின் எங்கோ ஒரு மூலையில் வலித்தது. காதலுக்கு அவர் எதிரியல்ல. மருமகளின் ஆசைகளை முதலாவது ஆளாக நின்று நிறைவேற்றிவிட்டு அவளின் சந்தோசத்தைக்கண்டு பெரும் நிறைவு கொள்பவரும் கூட. ஆனால் அந்த மருமகளின் தேர்வு பிழைத்துப் போனால்?
இந்த விஷயம் உண்மையானால் அவரின் மருமகளுக்கு அந்த பெடியன் சரியான இணையே அல்ல என்று அவர் மனம் இப்போதே அடித்துச் சொல்லியது. கல்வியை நேசிக்கும், நாளைய கல்வி உலகின் சிறந்த ஒருத்தியாக திகழப்போகும் அவளுக்கு படிப்பின் வாசனையே பிடிக்காத ஒருவன் எப்படிப் பொருந்துவான்? அவரால் சம்மதிக்கவே முடியாது. அவர் சம்மதிக்காமல் மருமகள் அவரை மீறிப் போகமாட்டாள். அதுவும் திண்ணம் அவருக்கு.
இதில் மாட்டித் தவிக்கப் போவது அவள்தான். நினைக்கையிலேயே நெஞ்சில் வலி எழுந்தது. சின்ன ரோஜாவாய் முதன் முதலில் கையில் ஏந்திய மருமகள் கண்ணுக்குள் வந்தாள். அன்று அவள் அழுதபோதே துடித்துப்போன மனிதன் அவர். அன்றிலிருந்து இன்றுவரை சீராட்டிப் பாராட்டி வளர்த்த மருமகள் கண்ணீரில் தவித்துவிட்டால் அவர் உள்ளம் உடைந்தே போகும். இது முள் மீது விழுந்துவிட்ட சேலை. கிழியாமல் அகற்றியே ஆகவேண்டும்.
இளம் பிராயத்துப் பிள்ளைகளோடுதான் அவரின் பெரும்பான்மையான நேரமும் பொழுதும் கழிவது. ஆக, அவர்களின் சின்னச் சின்ன சந்தோசங்கள், இந்தக் காதல், கண்ணீர், அழுகை எல்லாவற்றையும் அவரும் அறிவார். அதனைக் கையாளும் விதமும் தெரியும். ஆயினும் மருமகளுக்கு என்று வருகையில் என்ன செய்ய என்று தெரியாமல் அப்படியே சிலையாகிப்போனார்.
அதோடு, இன்னும் கொஞ்ச நாட்களில் பரீட்சையை வைத்துக்கொண்டு என்ன நடவடிக்கையை எடுப்பார்? எப்படி இதிலிருந்து பெண்ணைக் காப்பார்.
அவள் எழுதப்போகும் பரீட்சைதான் அவளின் எதிர்கால வாழ்வுக்கே திறவுகோல். இந்த விஷயத்தைப் பற்றி பேசி, அவளைக் குழப்பி பரீட்சையில் அவள் கோட்டை விடுவதை எண்ணிக்கூட பார்க்க முடியாது. கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு எதைச் செய்தாலும் பிழைத்துத்தான் போகும். இது சாமர்த்தியமாகக் கையாள வேண்டிய விஷயம்.
அங்கே ஜன்னல் வழியே கவின்நிலா ஸ்டடி ஹாலுக்கு செல்வது தெரிய, யோசனையுடன் அவளையே தொடர்ந்தது அவர் விழிகள்.
ஸ்டடி ஹாலில் படித்துக்கொண்டிருந்தாள் கவின்நிலா. திடீரென்று அங்கு வந்து ஒரு பேப்பரை நீட்டினார் டீன்.
“என்ன மாமா?” நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள்.
“இந்தப் பேப்பரை செய்துகாட்டு!”
வாங்கிப் பார்த்தவளின் புருவங்கள் உயர்ந்தது. காரணம், அது விஞ்ஞானப் பிரிவின் பல்கலை முதல்வருட மாணவர்களுக்கு என்று தயாரிக்கப்பட்டது. இந்தப் பேப்பர்களுக்கான கேள்விகளை அவள் கூடத் தெரிவு செய்து கொடுத்திருக்கிறாள். அதற்கெல்லாம் காரணம் அவர்தான். உயர்தரம் படித்தாலும், அந்தத் தரத்தையும் தாண்டியதாய் தான் இருக்கும் அவளின் கல்வித்தரம்.
ஆனால், உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் அவளுக்கு எதற்கு அந்தப் பேப்பர். அதைச் செய்யவேண்டிய நிலை ஏன் வந்தது?
“இது ‘பெர்ஸ்ட் இயர்’ பேப்பர் மாமா.” அவர் ஏதும் மாற்றித் தருகிறாரோ என்று நினைத்துச் சொன்னாள்.
“தெரியும். செய்து காட்டு.” அவளை செய்விக்க வைப்பதிலேயே நின்றார் அவர்.
“நான் டெஸ்ட்டுக்கு ரெடி ஆகேல்லையே மாமா.”
“ரெடியானா மட்டும் தான் உன்னால எழுத முடியுமா?” தீட்சண்யம் மிகுந்த விழிகளை அவள் முகத்தில் நிறுத்திக் கேட்டார். அந்த நிலையில்தான் உன் கல்வித்தரம் இருக்கிறதா என்று கேட்காமல் கேட்டவரின் கேள்வியில் புன்னகைத்தாள் அவள்.
“என்ன மாமா? என்னையும் திடீர் என்று டெஸ்ட் பண்றீங்களா, உங்கட ஸ்டுடென்ட்ஸ்க்கு மாதிரி.”
“அந்த நிலைமைக்கு வந்தாச்சே.” தன்னை மீறிச் சொல்லிவிட்டார் கனகரட்ணம்.
“மாமா?”
“ஒரு பேப்பர் செய்து காட்டுறதுக்கு இவ்வளவு கேள்வியா நிலா?”
அவரின் இறுக்கமான தோற்றம் கண்டு குழம்பிப்போனாள் அவள்.
“ஃபைனல் எக்ஸாமா இருந்தாக்கூடி இப்பவே எழுத நான் ரெடி மாமா. திடீரென்று ஏன் தந்தீங்க எண்டுதான் கேட்டனான். இப்ப என்ன இந்தப் பேப்பர செய்து காட்டவேணும். அவ்வளவுதானே. எழுதிட்டாப் போச்சு!” வெகு கூலாகச் சொல்லிவிட்டு அமர்ந்தவள் பேப்பரில் கவனமாகிவிட நெஞ்சுக்குள் சின்ன வலியொன்று தாக்கியது அவரை.