மெல்ல அவளின் தலையைத் தடவிக்கொடுத்தார். எப்போதும் தடவுகையில் பாசமும் கனிவும் சொட்டும் அந்தத் தடவலில் இன்று மெல்லியதாய் ஒரு நடுக்கம்.
நிமிர்ந்து பார்த்தாள் கவின்நிலா. அவளின் பார்வையை சந்திக்காமல் அவளைத் தாண்டி நடந்துசென்றார் அவர். ஏதோ ஒன்று கிடந்து அவர் மனதை அறுப்பதை உணர்ந்துகொண்டாள் அவள். என்னவாக இருக்கும்? அவள் நன்றாகப் படிக்கிறாளா என்கிற கவலையாக மட்டும் தான் இருக்கும்.
இதழோரம் பாசப் புன்னகை ஒன்று அரும்ப, பேப்பரில் தன் கவனத்தைச் செலுத்தினாள். அதற்குப்பிறகு மாமாவைக்கூட மறந்து போனாள். ஆனால், அவளுக்கு முன்னால் இருந்த மேசையில் அமர்ந்திருந்த கனகரட்ணமோ தன் மருமகளையே பார்த்திருந்தார்.
ஓராயிரம் வேலைகள் வரிசைகட்டி நின்றன. அடுத்தநாள் ஒரு கருத்தரங்கு, அதற்குத் தயாராக வேண்டும். விஞ்ஞானப் பிரிவு மூன்றாம் வருட மாணவர்களுக்கு பரீட்சைப் பேப்பர் தயார் செய்யவேண்டும். திருத்துவதற்கு பேப்பர்கள் இருந்தன. அவருக்குத்தான் எப்போதுமே வேலைக்கு பஞ்சமில்லையே. ஆனாலும் எதையும் செய்யாது தன் மருமகளையே பார்த்திருந்தார்.
சரியாக ஒன்றேகால் மணித்தியாலத்தில் பேப்பரோடு எழுந்து வந்தாள் கவின்நிலா.
கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்துவிட்டு, “இன்னும் பதினைந்து நிமிஷம் இருக்கேம்மா.” என்றார்.
“அது தேவையில்லை மாமா.”
“எதுக்கும் இன்னொருக்கா திரும்பிப் பார். நேரம் இருக்கே. எதையும் கவனிக்காம விட்டிருக்கப் போறாய்.” என்றவரிடம் என்றுமே இல்லாத ஒரு பதட்டம் பரிதவிப்பு.
அவளிடமோ அது மருந்துக்கும் இல்லை. “நேரம் தேவையில்லை மாமா. நீங்க திருத்துங்க.” அவரின் முன்னால் பேப்பரை வைத்துவிட்டு வந்து தான் படித்துக்கொண்டிருந்ததை எடுத்து படிக்கத் தொடங்கினாள்.
சற்று நேரத்தில் அதே பேப்பருடன் அவளிடம் வந்தவரின் முகமெங்கும் சிரிப்பு. பூரித்துப் போயிருந்தார். எப்போதும் தன்னைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவரால் கூட அவரின் உணர்வுகளை அடக்க முடியவில்லை. எந்தப் பிழையும் இல்லாமல் செய்திருந்தாள். சரியானதை விட்டுவிட்டு பிழைகளைத்தான் தேடினார். கிடைக்கவே இல்லை. நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தாள் அவரின் மருமகள். உண்மையைச் சொல்லப்போனால் மேலதிக தரவுகளும் தந்து நூற்றுக்கு அதிகமாகத்தான் வாங்கி இருந்தாள்.
அதை ஒரு பார்வையால் அளந்துவிட்டு, அவரை நிமிர்ந்து பார்த்து, “என்ன மாமா நான் பாஸா?” என்றாள் சிரிப்போடு.
“பாஸ் தான். எனக்கு நிறைய சந்தோசம்.” என்று அவள் தலையை மீண்டும் தடவிக்கொடுத்தவரின் ககரங்களில் பழைய பாசமும் கனிவும் மட்டுமே அளவுக்கதிகமாக நிறைந்து கிடந்தது.
புத்தகத்தை மூடிவிட்டு எழுந்தவள் மாமாவைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டு குறும்புச் சிரிப்புடன் சொன்னாள். “மாமா நான் தயாபரன்ர மகள். அதுக்கும் மேல தி கிரேட் கிரேட் கிரேட் கனகரட்ணம் பரந்தாமனின் மருமகள். என்ன அந்த கனகரட்ணத்தால கூட தோற்கடிக்க ஏலாது. விளங்குதா? ஏன் எண்டால் நான் அவரின்ர வளப்பு!” என்றுவிட்டுச் சென்றவளை, முகம் முழுக்கப் பூத்துவிட்ட சந்தோசச் சிரிப்போடு பார்த்திருந்தார் அவர்.
அவருக்கும் வேறு என்னதான் வேண்டும்? அதுவரை நேரமும் அலைபாய்ந்துகொண்டிருந்த மனம் அப்போதுதான் ஒரு நிலைக்கு வந்து சேர்ந்தது.
மருமகள் படிப்பில் இன்னுமே நிலை தளம்பாமல் கெட்டியாகத்தான் இருக்கிறாள் என்கிற நினைவு அவரின் அத்தனை அலைப்புறுதல்களையும் ஒரு நிலைக்குக் கொண்டுவந்து விட, பழைய கம்பீரமான எதையும் எதிர்நோக்கும் வல்லமைகொண்ட ‘கேபி’ திரும்பியிருந்தார். இனி அவருக்குத் தெரியும் என்ன செய்யவேண்டும் என்று. இதனை எப்படிக் கையாள வேண்டும் என்று. எதையுமே நேரடியாகக் கையாண்டு பழகியவர் நேரடியாகவே இறங்கினார்.
மருமகள் எங்கு போகிறாள் வருகிறாள் என்று இரண்டு மூன்று நாட்களாய் கவனித்துப் பார்த்தார். பள்ளிக்கூடம் விட்டால் டியூஷன். டியூஷன் விட்டால் வீடுதான். எத்தனை மணிக்கு என்ன பாடம் எந்த ஆசிரியர் என்று அறிந்துகொள்வதெல்லாம் அவருக்கு ஒரு விஷயமே அல்லவே! சசி ஏதும் தூது போகிறாளோ என்றும் கவனித்துப் பார்த்தார். எதுவுமே இல்லை. மருமகளின் அத்தனை நடவடிக்கைகளும் அவருக்கு நம்பிக்கையை மட்டுமே விதைத்துக்கொண்டிருக்க, அவன் பொய் சொன்னான் என்று ஒதுக்க முடியாமல் அவர் கண்ட காட்சி கண்ணுக்குள்ளேயே நின்றது.
இதற்கு ஒரு தெளிவான முடிவு தெரியாமல் முடியாது என்று எண்ணியபடி தன் தேநீர் கப்பை ஏந்திக்கொண்டு ஜன்னல் அருகே வந்து, ஒரு வாய் அவர் பருகியபோது, அங்கே தங்கையின் வீட்டு வாசலில் சசி செந்தூரனோடு வந்து இறங்குவது கண்ணில் பட்டது.
“வாடி..!” என்றபடி வாசலுக்கு விரைந்து வந்தாள் கவின்நிலா. இவர் பார்வை கூர்மையாக, தோழியோடு சலசலத்தவளின் விழிகள் அவனிடம் கதை பேசுவதையும், சின்னத் தலையசைப்பை அவளுக்கு மட்டும் கொடுத்துவிட்டு அவன் விடைபெற்றதையும் கண்டுகொண்டபோது, வேதனையோடு கண்களை ஒருமுறை மூடிக்கொண்டார் அவர்.
மனதுக்கு ஒவ்வாத காட்சி. மனம் ஏற்க மறுத்த ஒன்று அவர் கண்முன்னே அரங்கேறியபோது அதை ஜீரணித்துக்கொள்ள வெகுவாகவே சிரமப்பட்டுப்போனார்.
அவர் விழிகளைத் திறந்தபோது, அந்தச் சம்பவம் சம்பவித்ததற்கான அடையாளமே இல்லாமல் அந்த இடம் வெறுமையாய் காட்சியளித்தாலும், விஷயம் உண்மைதான்.
அப்படி இருக்காது என்று ஏதோ ஒரு நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்த நம்பிக்கை அறுந்துவிட வேதனையில் தடுமாறியது நெஞ்சம். அவரின் மருமகளை இந்தச் சிக்கலில் இருந்து எப்படி மீட்கப்போகிறார்? எந்த நிலையில் இருக்கிறது அவர்களுக்குள்ளான உறவு? இலகுவில் விலக்கி விடலாமா இல்லையா என்று ஒன்றும் விளங்கவில்லை.
மூவருமாகச் சேர்ந்து படித்தபிறகு அவர்கள் சென்றபின்னும் கவின்நிலா என்னவோ எழுதிக்கொண்டிருந்தாள்.
“இன்னும் முடியேல்லையாமா?” அவளிடம் சென்று சும்மா விசாரித்தார்.
“முடிஞ்சுது மாமா. ஒரு ஆர்ட்டிக்கல் நெட்ல பாத்தனான். அதுதான் அதை ஷார்ட்டா குறிப்பெடுக்கிறன்.” என்றவள் ஃபோனில் அந்த ஆர்ட்டிக்கலை பார்க்கவும், தன்னறைக்கு மீண்டும் சென்று அமர்ந்தார்.
சற்று நேரத்தில் ஜன்னலால் அவளை அழைக்க, என்ன என்று எழுந்து வந்தாள் அவள்.
“வீட்டப்போய் தேத்தண்ணி வாங்கிக்கொண்டு வாறியாம்மா?”
மேசையில் ஏற்கனவே குடிக்கப்பட்டு கிடந்த வெறும் கப்பைப் கையில் எடுத்தபடி, “வரவர நிறைய குடிக்கிறீங்க மாமா. இதக் குறையுங்கோ.” என்றபடி சென்றாள் அவள்.
அவள் போகும்வரை காத்திருந்தவர் வேகமாகச் செயல்பட்டார்.
அவள் படித்துக்கொண்டிருந்த அறைக்குச் சென்று ஃபோனை எடுத்துப் பார்த்தார். அவர் முதலில் சென்றது காலரிக்கு. அவனுடைய போட்டோ அல்லது அவனுடனான போட்டோ எதுவுமே இல்லை. கான்டாக்ட்’டை ஆராய்ந்தார். “மிஸ்டர் படிக்காதவன்”னைக் கண்டதும் வாட்ஸ் அப்பில் அவர்கள் பேசிக்கொண்டது சிக்கியது.
அவர்களுக்குள் என்ன உறவு என்று அந்த ‘சாட்’ தெள்ளத்தெளிவாகச் சொல்லிற்று! கடைசியாக மருமகள் கேட்டு அவனைச் சந்தித்த அன்றுதான் அவன் கடை வாசலில் அவளைக் கண்டார். உடனேயே ஃபோனை வைத்துவிட்டார். அவள் அவனை நேசிக்கிறாள் என்று உறுதியாகும் ஒவ்வொரு முறையும் மனதால் மிகவும் நொந்துபோனார் அவர்.
அவனின் இலக்கத்தை தன் ஃபோனில் ஏற்றிக்கொண்டு வந்து, தன் இலக்கம் விழாதபடிக்கு அவனுக்கு அழைத்தார்.
“தம்பி, நீங்க சசி எலக்ட்ரானிக்ஸ் செந்தூரன் தானே?”
“ஓம், சொல்லுங்க என்ன விஷயம்?”
“என்ர ஃபோன் ஒருக்கா காட்டவேணும். அப்பப்ப தானாவே ஆப் ஆகுது. அதுதான் நீங்க எப்ப நிப்பீங்க?”
“பாட்டரி ஏதும் பிரச்சனையோ தெரியாது. பெரும்பாலும் கடைலதான் நிப்பன். எப்பவேணும் எண்டாலும் வாங்கோ.”
பொழுது இருட்டத் துவங்கிவிட்டதில், “நாளைக்குப் பின்னேரம்?” என்று கேட்டார்.
“ஓகே. வாங்கோ!”
அழைப்பை துண்டித்தவர், அவனை நேரடியாகச் சந்திக்கத் தயாரானார்.