ஒரு வாரமாய் பொறுத்துப் பார்த்தும் எந்த மாற்றமும் இல்லை என்றதும் துஷ்யந்தனுக்கு சினம்தான் பொங்கியது. சரியான நேரகாலம் பார்த்து போட்டுக்கொடுத்தும் பலனில்லாமல் போவதென்றால் என்ன இது?
அன்று படித்துவிட்டு வந்த தங்கையிடம், “நான் கேள்விப்பட்ட விஷயம் உண்மையா?” என்றான் எதுவுமே தெரியாதவன் போன்று.
“என்னண்ணா? என்ன கேள்விப்பட்ட?”
“உன்ர பிரெண்ட்.. அந்த கவின்நிலா செந்தூரனை லவ் பண்றாளாமே.”
“சும்மா எதையாவது அவளைப் பற்றிக் கதைக்காத அண்ணா.”
மறுபடியும் எதையாவதை ஆரம்பித்து பிரச்னையை உருவாக்கிவிடப் போகிறானோ என்கிற கோபத்தில் படபடத்தாள் அவள்.
“சும்மா கதைக்க எனக்கென்ன விசரா? டீனுக்கே இந்த விஷயம் தெரிஞ்சுபோச்சு. டாக்டர் என்னையே தூக்கி எறிஞ்சவர் அவனையெல்லாம் கிட்டக்கூட எடுக்கமாட்டார். கோபத்தில செந்தூரனை ஏதும் செய்திட்டார் என்றால் அந்தக் குடும்பம் என்னாகிறது? அவே பெரிய மனுஷர். செய்றதை எல்லாம் ரகசியமா செய்துபோட்டு நல்லமனுசர் மாதிரி இருப்பீனம். அதாலதான் உன்னட்ட சொல்லுறன், நீ சசியிட்ட மெதுவா அவளின்ர அண்ணாவ கவனமா இருக்கட்டாம் எண்டு சொல்லிவிடு.”
அதிர்ந்துபோனாள் துஷாந்தினி. அன்று இதே வீட்டில் வைத்து, இருந்த இடத்தைவிட்டு அசையாமலேயே அவர்களின் குலையையே நடுங்கவைத்த அந்த மனிதர், அண்ணா சொன்னதுபோல செந்தூரன் அண்ணாவை ஏதும் செய்தாலும் செய்யக்கூடியவர்தான். கவின்நிலா என்று வந்தால் அவருக்கு அவளைத்தாண்டிய அனைத்துமே இரண்டாம் பட்சமே! அதை அவளும் அறிவாள்.
ஆனால்.. அவன் சொல்வது உண்மைதானா என்று கேட்க வாயெடுக்க, “உண்மையை சொல்லு! அவே லவ் பண்றது உனக்கு தெரியவே தெரியாதா? நீங்க மூண்டுபேரும்தானே பெஸ்ட் பிரெண்ட்ஸ்?” என்று கேட்டான் அவன், அவளைக் கூர்ந்தபடி.
சட்டென்று கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டது அவளுக்கு. “எனக்கு உண்மையாவே ஒண்டும் தெரியாண்ணா.” உள்ளே போன குரலில் சொல்லிவிட்டு அறைக்குள் அடைந்துகொண்டாள்.
அடுத்தநாள் படிக்க வந்த துஷாந்தினியின் முகம் வாடியிருக்கக்கண்டு, மற்ற இருவரும், “என்னடி?” என்று எவ்வளவோ கேட்டும் சொல்லவில்லை அவள். அவர்களின் முகம் பார்க்க மறுத்தாள். முகம் கொடுத்துப்பேச மறுத்தாள்.
“ஏய் மாடு! இப்ப என்ன எண்டு சொல்லப்போறியா இல்லையா?” பொறுமையிழந்து சசி அதட்டவும் வார்த்தைகளுக்கு முதல் கண்ணீர் கன்னங்களில் இறங்கியது.
“என்ர அண்ணா செய்தது பிழைதான். ஆனா, அவன் செய்ததுக்கும் எனக்கும் என்னடி சம்மந்தம்? என்ன இப்படி ஒதுக்கி வச்சிட்டிங்களேடி.” என்றாள் கண்ணீரோடு.
“லூசு! உன்னை யாரடி ஒதுக்கி வச்சது? முதல் என்ன நடந்தது எண்டு சொல்லு!” கவின்நிலாவும் அதட்டினாள்.
“பிறகு ஏனடி செந்தூரன் அண்ணாவை நீ லவ் பண்றத ரெண்டுபேரும் என்னட்ட சொல்லவே இல்ல. நீங்க ரெண்டுபேரும் சொந்தக்காரர் ஆகப்போறீங்க எண்டதும் என்ன தள்ளி வச்சிட்டீங்க தானே?”
உயிர்தோழிகள் என்று பழகிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க, அந்தத் தோழிகளோ அவளிடம் முக்கியமான விஷயம் ஒன்றை மறைத்துவிட்டார்கள். துஷ்யந்தன் அதனைச் சொன்ன நிமிடத்திலிருந்து, அந்த வேதனையில் இருந்து வெளியே வரவே முடியவில்லை அவளால். தமையன் செய்த காரியத்தினால்தான் அவர்கள் தன்னை ஒதுக்கிவிட்டார்களோ என்று நினைக்க நினைக்க கழிவிரக்கமும் கண்ணீரும் அவளை விடாமல் துரத்தின.
கவின்நிலாவுக்குத் திக் என்றது. அதிர்ந்துபோய் சசிரூபாவைப் பார்க்க, அவளும் இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்; அதிர்ந்துபோன முகத்தோடு.
சசிக்கு சிறு பொறி தட்டியதுதானே. அதை சிந்தித்து ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாமல் பரீட்சையின் பதட்டம் அவளைப் பிடித்திருந்தது. இப்போது யோசிக்கையில், பொய்யாக இருக்குமோ என்று நினைக்க முடியாமல் அவ்வப்போது அவளுக்குள் தோன்றிய பொறிகள் அத்தனையும் ஒன்றாகச் சேர்ந்துவந்து ‘இது பொய்யல்ல உண்மைதான்’ என்று உணர்த்தவும், சற்று நேரம் கவின்நிலா மீது அதிர்வோடு பதிந்துவிட்ட விழிகளை அவளால் அகற்றவே முடியவில்லை.
கவின்நிலா இந்தச் சங்கடமான சூழ்நிலையைக் கையாளத் தெரியாமல் திணறினாள். தடுமாற்றத்தோடு சசியையே பார்த்தபடி நிற்க, வினாடிக்கு வினாடி கோபத்திலும் அழுகையிலும் சசியின் முகம் சிவந்துபோயிற்று!
“ச..சி!”
விருட்டென்று எழுந்து விறுவிறு என்று வெளியே வந்து கைகளைக் கட்டிக்கொண்டு நின்றவளுக்கு கண்மண் தெரியாத ஆத்திரம் பொங்கிற்று. கண்களில் கண்ணீர். அண்ணா கூடச் சொல்லவே இல்லையே! அழுகையும் ஆத்திரமும் ஏன் என்றே தெரியாமல் ஆக்கிரமிக்க, வேக மூச்சுக்கள் வேகவேகமாய் வெளியேறிக்கொண்டிருந்தன.
பின்னால் ஓடிவந்தாள் கவின்நிலா. அவளுக்குப் பின்னால் துஷாந்தினி. நடப்பது எதுவும் விளங்காதபோதும் தான் ஏதோ உளறிக்கொட்டிவிட்டோம் என்று மட்டும் புரிந்துபோயிற்று!
“சசி.. ப்ளீஸ்டி. ஒருத்தருக்கும் தெரியாது. அதுதான்..”
“பிறகு எதுக்கடி பிரெண்ட் எண்டு பழகிறாய்? உன்னட்ட நான் ஏதாவது மறச்சு இருக்கிறனா? அவன் கூட ஒரு வார்த்த சொல்லேல்ல.” ஆத்திரத்திலும் அழுகையிலும் அவளின் குரல் உயர்ந்துவிட, “ஐயோ.. மெல்லக் கதையடி. யாருக்காவது கேட்டுடப்போகுது.” என்று பதறினாள் கவின்நிலா.
“இனிக் கதைச்சு என்ன கதைக்காட்டி என்ன? நான் வீட்டை போறன்..” என்று அவள் புறப்பட, ஓடிப்போய் அவள் கையைப் பிடித்துத் தடுத்தாள் கவின்நிலா.
“கோபிக்காதையடி ப்ளீஸ் ப்ளீஸ். படிச்சு முடிக்கிற வரைக்கும் ஒருத்தருக்கும் தெரியவேண்டாம் எண்டு நினைச்சம். அதுதான்டி. எண்டாலும் சொல்லாதது பிழைதான். உன்ர அண்ணாவைத்தான் விரும்புறன் எண்டு எப்படியடி உன்னட்டையே சொல்லுறது?” அதைச் சொல்லும்போது கவின்நிலாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
‘சசி சசி நான் உன்ர அண்ணாவை லவ்வுறன்’ தலையை குனிந்துகொண்டு கையை பிசைந்துகொண்டு கால் பெருவிரலால் நிலத்தில் கோலம் போட்டபடி சொல்லும் கவியை கற்பனையில் கண்டுவிட்ட சசிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“என்ர அண்ணாவை சைட் அடிப்பியாம். லவ் பண்ணுவியாம். ஆனா என்னட்ட சொல்லமாட்டியாம். உன்னையெல்லாம்..” கேட்டுக்கேட்டு அவள் மொத்தத் தொடங்க,
“சசி விடடி! அவள் உன்ர அண்ணியடி!” என்றாள் துஷாந்தினி சிரித்துக்கொண்டு.
“அண்ணி?” அஷ்டகோணலாக மாறியது சசியின் முகம். நாயே பேயே என்று கதைத்துச் சிரித்தவளை அண்ணி என்பதா?
“நோ! நான் இதுக்கு சம்மதிக்கவே மாட்டன்! உன்னையெல்லாம் அண்ணி எண்டு கூப்பிட ஏலாது. இன்றைல இருந்து நீங்க ரெண்டுபேரும் பிரியிறீங்க. உனக்கும் அண்ணாக்கும் எந்த சம்மந்தமும் இல்லை! காதலும் இல்லை! கத்தரிக்காயும் இல்ல!” முடிவாகச் சொன்னவளை ஒருகணம் அதிர்ந்துபோய்ப் பார்த்தாள் கவின்நிலா.
அடுத்த நிமிடம், “உன்னை யாரடி அண்ணி எண்டு கூப்பிடச் சொன்னது. எனக்கே நீ அண்ணி எண்டு சொன்னா கன்றாவியாத்தான் இருக்கும். என்றைக்கும் நான் உனக்கு கவிதான். இதுக்காக எங்களைப் பிரிச்சுடாதடி!” என்றாள் கெஞ்சலாக.
மிதப்பாகப் பார்த்தாள் சசிரூபா. ‘அண்ணா எண்டு ஒருத்தனை வச்சிருக்கிறதும் கெத்துதான் போல’
“ப்ளீஸ்டி! உன்ர அண்ணாக்கு வாழ்க்கை பிச்சை போடடி. அவருக்கு என்ன விட்டா வேற யாரும் இல்ல.”
அவளை மேலும் கீழுமாக அளந்துவிட்டு, உதட்டைப் பிதுக்கினாள் சசி. “என்ன இருந்தாலும் அவனுக்கெல்லாம் நீ எல்லாம் அதிகம்டி. சூப்பர் ஃபிகர் நீ, போயும் போயும் அவனைப்போய்.. ப்ச் என்னடி? நீயும் உன்ர ரசனையும்..” என்றவளை இப்போது மொத்தத் தொடங்கியிருந்தாள் கவின்நிலா.
“அவருக்கு என்னடி குறை எரும? அவரை மாதிரி ஒருத்தர் கிடைக்க நான்தான் குடுத்து வச்சிருக்கவேணும்!”
“ஏய் துஷி கேட்டியா கதைய? ‘அவரா’மடி. அந்த குட்டிச் சுவரப்பற்றி எனக்கெல்லோ தெரியும்..” சொல்லிவிட்டு ஓடியவளை துரத்தத் துவங்கியிருந்தாள் கவின்நிலா.
“இனி அவரைப்பற்றி ஒருவார்த்தை குறையா கதைச்சியோ உன்ன என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது!”
துஷாந்தினிக்கும் மிகுந்த சந்தோசம். பரீட்சையையே மறந்தவர்களாக கேலியும் கிண்டலுமாக, சீண்டலும் சிரிப்புமாக அன்றைய பொழுதைக் கழிக்க, செந்தூரன் சசியை அழைத்துச் செல்ல வருவதாக மெசேஜ் அனுப்பினான்.
“இவனும் என்னட்ட ஒருவார்த்தை சொல்லேல்ல தானே.” அவனுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று தோன்றிவிட, “இண்டைக்கு நீ வெளில வரவே கூடாது! வந்தியோ உன்னைக் கொன்டே போடுவன்!” என்றாள் உத்தரவாக.
“பாவமடி..” என்று கவி எவ்வளவு சொல்லியும் அசையமறுத்தாள் சசி.
தனியே வந்த தங்கையைக் கண்டு அவன் விழிகள் அந்த இடம் முழுவதும் சுழன்று கவின்நிலாவைத் தேட, “எடு அண்ணா.” என்றபடி அவன் பின்னால் ஏறிக்கொண்டாள் சசி.
“என்ன.. இண்டைக்கு ஒரே அமைதியா இருக்கு..”
“இருந்தா இருக்கட்டும். நீ எடு!”
அசையவில்லை அவன்.