நிலவே நீயென் சொந்தமடி 16 – 2

“இல்ல.. உன்ர பிரெண்ட்.. எங்க ஆளை காணேல்ல.”

“அவளைப்பற்றி என்னத்துக்கு விசாரிக்கிறாய்? உனக்குத்தான் அவளைப் பிடிக்காதே.” சூடாகக் கேட்ட தங்கையை திரும்பிப் பார்த்தான் அவன்.

“ரெண்டுபேருக்கும் சண்டையா?”

“டேய் அண்ணா இப்ப என்னடா உனக்கு பிரச்சனை?” பட்டென்று இறங்கி அவன் முன்னால் வந்துநின்று முறைத்துக்கொண்டு கேட்டாள்.

எப்படிக் கேட்பது என்று தெரியாமல் விழித்தான் செந்தூரன். அன்று காலையிலிருந்தே மனம் சரியில்லை. அவளை ஒருமுறை பார்த்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தால் காணவில்லை. அன்று வரும்போது கூட, ஸ்பெஷல் கிளாசுக்கு போய்விட்டு அப்படியே சசி இங்கு வந்துவிட்டதால் அவளை இறக்கிவிடவும் அவன் வரவில்லை.

தன்னைத் தேடித் தவிக்கும் அவன் மனதைக் கண்டு, உள்ளுக்கிருந்து கவனித்துக்கொண்டிருந்த அவனின் நிலாவின் நெஞ்சம் உருகிப்போனது. அவனிடம் ஓடிப்போய்விட உள்ளம் பரபரத்தாலும், சசியை மீண்டும் கோபப்படுத்த வேண்டாம் என்று எண்ணி அமர்ந்திருந்தாள்.

“இன்னும் எவ்வளவு நேரம் இங்கயே நிக்கப்போறாய்?”

“உன்ர பிரெண்ட்..” அவன் மெல்ல இழுக்க,

“அவள் ‘என்ர பிரெண்ட்’ மட்டும் தானா?” அவனைக் கதைக்கவிடாமல் இடையிட்டாள் அவள்.

சட்டெனப் புரிந்துபோயிற்று அவனுக்கு.

“நிலாவை எங்க மறைச்சு வச்சிருக்கிறாய்?”

“நிலா..! அவளுக்கு நீ ‘அவர்’ உனக்கு அவள் ‘நிலா’!” நக்கலாகக் கேட்டவள் திடீரென்று உக்கிரமாகி அவனை மொத்தத் துவங்கினாள்.

“நீயெல்லாம் ஒரு அண்ணாவாடா? இல்லவே இல்லாத மனுஷியை பற்றி சொல்லத் தெரியும். பிள்ளைகள் பள்ளிக்கூடம் எண்டு கதைவிடத் தெரியும். அவளை விரும்புறதை மட்டும் சொல்ல மாட்ட, என்ன? வாடா இண்டைக்கு அம்மாட்டையும் அப்பாட்டையும் உன்ன போட்டுக் குடுக்கிறன்.” வீதியில் நிற்பதையும் மறந்து அவள் அடிக்க,

“வலிக்குதடி. அடிக்காத..” என்று சிரித்துக்கொண்டு அவளிடம் அடி வாங்கிக்கொண்டிருந்தவன் இன்னும் அழகனாய் தெரிந்தான் கவின்நிலாவின் கண்களுக்கு.

“கவி.. எதுக்கும் செந்தூரன் அண்ணாவை கவனமா இருக்கச் சொல்லடி. டீன் ஏதும் செய்துபோடுவாரோ எண்டு பயமா இருக்கு.” மெல்ல கவின்நிலாவின் காதுக்குள் குண்டை இறக்கினாள் துஷாந்தினி.

தன் முன்னால் அமர்ந்திருந்த மனிதரை இவ்வளவு விரைவில் எதிர்பார்க்கவில்லை செந்தூரன். எதிர்பாராத அவரின் வரவு பெரும் அதிர்ச்சிதான். இந்தச் சந்திப்பு கொஞ்சக்காலம் கடந்து நடந்திருக்கலாம் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

ஆனால், உருவாகிவிட்ட சந்திப்பினை நல்லபடியாகவே நடத்திமுடித்துவிட எண்ணி, பிரிட்ஜ்ஜில் இருந்த ‘கூல்ட்ரிங்’கினை உடைத்து ஒரு கிளாசில் நிரப்பி அவர் முன்னே வைத்துவிட்டு வந்து அமர்ந்தான்.

அவனுடைய உபசரிப்பை பார்வையால் கூட அங்கீகரிக்காமல், “என்ர மருமகளை எப்படித் தெரியும்?” என்று நேரடியாகவே ஆரம்பித்தார் கேபி.

“சசியோட பார்த்துப் பழக்கம்.”

“அதாவது.. தங்கச்சிட பிரெண்ட். அப்படித்தானே? தங்கையோட பிரெண்டை தங்கையா நினைச்சுத்தான் பழகவேணும் எண்டு தெரியாதா?”

எந்த அசைவுமில்லாமல் அவன் மீது விழிகளை நிறுத்தி அவர் நிதானமாகக் கேட்டபோது அவன் முகம் கறுத்துப் போயிற்று. தங்கையாக நினைக்க வேண்டியவளைத் தாரமாக்கத் துணிந்தாயா என்று கேட்கிறார்.

“ரெண்டுபேருக்கும் பிடிச்சுப் போயிட்டுது. மனதுக்கு பிடிச்சவளை எப்படி தங்கையா பாக்கிறது?” தன்மையாகத் தன் மனதை எடுத்துரைத்தான்.

“முதலே தங்கையா நினைச்சிருந்தா இந்த விஷயமே நடந்திருக்காது!” என்றார் அவர் அழுத்தமாக.

“அதோட, மனதுக்கு பிடிச்ச எல்லாத்தையும் சொந்தமாக்க முடியாது தம்பி. சிலவிஷயங்களை பிடிச்சாலும் அதுல இருந்து தள்ளி நிக்கிறதுதான் எல்லாருக்கும் நல்லது!”

“உண்மைதான் அங்கிள். ஆனா சிலர் இல்லையெண்டா நாங்க வாழுற வாழ்க்கையிலேயே அர்த்தமில்லாம போய்டும். அப்படித்தான் நிலா எனக்கு.”

தன்னிடமே தைரியமாக ‘நிலாதான் என் வாழ்க்கை’ என்றவனின் துணிச்சல் அவரை எச்சரிக்கை செய்தது! இவனைச் சாதாரணமாக விழுத்த முடியாது! சட்டென்று அவனது பலவீனத்தில் கைவைத்தார்.

“ஆனா நிலாக்கு? அவளுக்கு நீ எந்த விதத்தில இணை எண்டு நினைக்கிறாய்? இந்த சொத்துப்பத்து, பணம், பகட்டு இதையெல்லாம் பெருசா நினைக்கிற ஆள் நானில்லை. ஆனா படிப்பு? ஒரு நல்ல உத்தியோகம்? குறைஞ்சது ஒரு அரசாங்க வேலை? என்ன இருக்கு உன்னட்ட?”

ஆயத்தமாக வந்தவர் போட்டுத் தாக்க, எந்தவித தயார்படுத்தலும் இல்லாதவன் திணறிப்போனான்.

ஆனால், கல்விச்செல்வம் இல்லாதுபோனால் என்ன? அவனிடம் தான் கடின உழைப்பு இருக்கிறதே! அவனது பலவீனத்தில் கைவைத்தவரிடம் தன் பலம் எதுவோ அதை எடுத்துரைத்தான் அவன்!

“நீங்க நல்ல உத்தியோகத்துல இருக்கிற ‘தொழிலாளி’ய தேடுறீங்க. ஆனா நான் இந்தக் கடைக்கு முதலாளி. இந்தக்கடை என்ர சொந்த உழைப்பில உருவானது அங்கிள். கையில ஒன்றுமே இல்லாம லோன் வாங்கி ஆரம்பிச்சாலும் இப்ப லோனையும் கட்டி முடிச்சிட்டன். கடனையும் கட்டி குடும்பத்தையும் பாக்கிறதுக்கு இவ்வளவு நாளும் இந்த வருமானம் போதுமா இருந்தது. ஆனா இனி நிலாவுக்காக.. அவளை நான் நல்லா வச்சிருக்க வேணும் என்றதுக்காக இந்தக்கடைய பெருசாக்கப்போறன். வருமானமும் கூடும். அவள் படிச்சு முடிக்க ஆறு இல்ல ஏழு வருஷமாவது ஆகும். அந்தநாள்.. அவள் படிப்பால உயர்ந்து நிண்டால் நான் உழைப்பாள உயர்ந்து அவளுக்குச் சமனா நிற்பன் அங்கிள்!” அசைக்க முடியாத உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் அவர் விழிகளைப் பார்த்துச் சொன்னான் அவன்.

இது பொய்ப் பேச்சல்ல. நிச்சயம் அவன் உயருவான். பகட்டான வார்த்தைகளும் அல்ல. சும்மாவும் அவன் சொல்லவில்லை. மனிதர்களைப் படிக்கத் தெரிந்த அவருக்கு அவனைப் படிக்க முடியாமல் போய்விடுமா என்ன? ஆனாலும், படிக்காத அவன் மருமகளுக்கு பொருத்தமானவன் இல்லை என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை அவருக்கு!

“எவ்வளவுதான் முன்னேறினாலும் நீ படிக்கேல்ல என்றது மாறப்போறேல்ல!” அவனுடைய அத்தனை வாதத்தையும் ஒற்றை வரியில் அடித்து நொறுக்கினார் கனகரட்ணம்.

வாயடைத்துப்போனான் செந்தூரன்.

“உன்ர தங்கச்சியும் நல்லா படிப்பாள் எண்டு தெரியும். நாளைக்கு டாக்டரா வந்தபிறகு அவளுக்கு உன்ன மாதிரி படிக்காத ஒருத்தனை கட்டி வைப்பியா?” என்று அவர் கேட்டபோது, அவன் இதழோரத்தில் புன்னகை அரும்பியது.

தங்கையை முன்னிறுத்தி தன்னை மடக்குபவரை எண்ணிச் சிரித்துக்கொண்டான்.

“கட்டாயம் கட்டிவைப்பன்! படிப்பை மட்டுமே தகுதியா பாக்கிற ஆள் நானில்லை. எனக்குத் தேவை அவன் நல்லவனா, நல்ல உழைப்பாளியா என்றது மட்டும் தான். ஏன் எண்டா கடின உழைப்பும் ஒருத்தன உயர்த்தும் எண்டு தெரிஞ்சவன் நான்.” உழைப்பும் ஒருவனை உயர்த்தும் என்று தெரியாமல் இருக்கிறார் என்று மறைமுகமாய் சின்னக் குட்டும் அவருக்கு வைத்துவிட்டதில் இதழோரம் சின்னப் புன்னகை அரும்பியது அவனிடத்தில்.

அவருக்கா அது விளங்காது. ஆனாலும் அசையவில்லை மனிதர்!

“ஆனா நான் அப்படியில்ல. எனக்கு என்ர மருமகளுக்கு படிச்ச ஒருத்தன் தான் வேணும். நாளைக்கு அவள் நாலுபேருக்கு முன்னால தலைநிமிந்து நடக்கவேணும். இன்னாரின் மனைவி என்று சொல்லுறமாதிரி இருக்கவேணும். அப்படி ஒருத்தன் என்ர கைல இருக்கிறானும் கூட. அந்தளவு நல்ல பெடியன் இருக்கேக்க எந்தத் தகுதியும் இல்லாத உனக்குத் தர விருப்பமில்ல. என்ர சம்மதம் இல்லாம அவளும் எதுவும் செய்ய மாட்டாள்.” இதுதான் முடிவு என்று அழுத்தம் திருத்தமாக அவர் சொல்லிமுடித்தபோது செந்தூரன் ஆழமாக அடிவாங்கினான்.

‘தகுதி’ என்கிற ஒற்றைச் சொல் அவனது தன்னம்பிக்கையையே ஆட்டிப்பார்த்தது. அவனைக்காட்டினால் அவள் தலைநிமிர்ந்து நடக்க முடியாதாம்! இதைவிட மோசமாய் அவன் சுயமரியாதையை ஒருவரால் தாங்கமுடியாது.

அதைவிட, தங்கள் விஷயம் எப்படியோ தெரிந்து, கதைக்க வந்திருக்கிறார் என்றுதான் அதுவரை எண்ணியிருந்தான். இப்போதானால் அவளுக்கான வரனையே முடிவுசெய்துவிட்டார் போலவே. என்ன சொல்வது என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்து நின்றுவிட்டான் செந்தூரன்.

அவர் சொன்னதுபோல அவரின் பேச்சை அவள் மீறமாட்டாள் என்பது எத்தனை உறுதியோ அத்தனை உறுதி தன்னையன்றி இன்னொருவனைத் துணையாக எண்ணாள் என்பதும்! அந்த உறுதி அவனுக்குள் ஆறுதலைத் தந்தது.

அதேபோல அவளுக்கு விருப்பமில்லாத எதையும் அவரும் செய்யமாட்டார். தைரியம் வரப்பெற்றவனாக அவன் நிமிர்ந்தபோது, “என்ர மருமகள் என்றைக்குமே சிறப்பா வாழவேணும். என்ர மனுஷன் இவர் என்று பெருமையா சொல்லுற இடத்திலதான் அவளின்ர துணை இருக்கவேணும். அந்த இடத்தில நீ இருக்கிறியா?” என்று அடுத்த கணையை ஏவினார் அவர்.

அவனிடமே கேள்வியைக் கேட்டு, அவன் வாயாலேயே அவனைத் தரமிறக்க முயல்வதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

படித்த மனிதரில்லையா! புத்திசாலித்தனத்துக்கு குறைவிருக்குமா என்ன? ஆத்திரச் சிரிப்பொன்று அவன் உதட்டினில் சீறிக்கொண்டு வந்தமர்ந்தது.

“அப்ப அவள் சந்தோசமா வாழவேணும் எண்டு நினைக்கேல்ல நீங்க. மனதுக்கு பிடிச்ச வாழ்க்கையையும் வாழத்தேவையில்ல. ஊர் உலகத்துக்கு பெருமையா சொல்லிக்கொள்ளுற மாதிரி ஒருத்தன் இருந்தா போதும். அப்படித்தானே? அப்படி ஒரு வாழ்க்கையை நிலா கடைசிவந்தாலும் வாழமாட்டாள். அதேமாதிரி, நீங்களே சொன்னாலும் என்னை விட்டு இன்னொருத்தனைக் கட்டவும் மாட்டாள்.” நல்லபடியாகத்தான் அவரோடு உரையாட நினைத்தான். முடியாமல் வார்த்தைகள் அழுத்தமாக வந்து விழுந்தன.

“அத நான் பாக்கிறன்!” அவனுக்கு நேர் எதிர்மாறாக அமர்த்தலாகச் சொன்னார் அவர்.

“இதெல்லாம் இனக்கவர்ச்சி தம்பி. இப்ப தெய்வீகமாத்தான் தெரியும். போகப்போக எல்லாமே அவளுக்கு விளங்கும்!”

அவர்களின் தூய்மையான நேசத்தை இனக்கவர்ச்சி என்கிற ஒற்றை வார்த்தையில் தூக்கிப்போட்டு மிதித்தார் அவர்.

தான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவனுக்குள் இடியாக இறங்கிக்கொண்டிருப்பதை உணராமல் சொல்லிக்கொண்டு போனார் அவர்.

“‘கேபி’ட மருமகள் என்ர வைஃப் எண்டோ.. இல்ல என்ர வைஃப் டாக்டர் எண்டோ பெருமையா சொல்ல நீ ஆசைப்படலாம். அதாலையே அவளைக் கட்டவும் நினைக்கலாம். ஆனா, எதிர்காலத்தில் தலைசிறந்த மருத்துவராய் வரப்போற அவள் உன்னைக் கட்டுறது ஒரு பெருமையான விஷயம் இல்ல. உள்ளதை சொல்லப்போனா தெரியாத்தனமா போய் படுகுழியில் விழுந்திட்டாள் எண்டுதான் ஊரே செல்லும். அதை அவளும் உணருவாள். அந்த நேரம் காலம் கடந்திருக்கும். அப்ப அவள் விடுற கண்ணீரை என்னால பாக்க ஏலாது. அதனாலதான் இப்பவே சொல்லுறன், இனிமேல் உனக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமும் இருக்கக்கூடாது!” கடைசி முடிவாகச் சொல்லிவிட்டு அவர் எழுந்தபோது அசையமுடியாமல் அப்படியே அமர்ந்துவிட்டான் அவன்.

எவ்வளவு கெட்டித்தனமாக அவனைப் ‘படுகுழி’ என்று சொல்லிவிட்டார்! இந்த வார்த்தைகளே அவனை வேகம் கொள்ள வைக்கப் போகிறது என்று உணரவில்லை அவர்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock