நிலவே நீயென் சொந்தமடி 18 – 1

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அந்த வருடத்துக்கான புது மாணவர்களால் கலை கட்டியிருந்தது. பல கனவுகளுடன் காலடி எடுத்துவைத்த மாணவர்கள் முகமெல்லாம் பூரிப்பாகப் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தனர் என்றால், அங்கே ஏற்கனவே மாணவர்களாக இருப்பவர்கள் அவர்களைக் கிண்டல் கேலியில் ஒருவழியாக்கிக் கொண்டிருந்தனர். எங்கும் சந்தோசம் எதிலும் சந்தோசம். உற்சாகம், துள்ளல் என்று இளமை ஊஞ்சலாடியது.

சிரிப்பும் சந்தோசமாய் பொழுது கரைந்துகொண்டிருக்க, அதில் எதிலுமே கலக்காமல் தன் வகுப்பை நோக்கி ஒரு வேகத்துடன் நடந்துகொண்டிருந்தாள் மருத்துவ பீடத்து மாணவி கவின்நிலா.

அவளுக்கு ஒரு முகத்தைக் காண வேண்டும்! கண்டே ஆக வேண்டும்! கண்டு தாகம் தீர்க்க வேண்டும்! உள்ளத்தின் உந்துதலில் உள்ளே விரைந்துகொண்டிருந்தாள். அவளை இனங்கண்டவர்கள் அப்போதும் ஓடிவந்து கைகொடுத்து வாழ்த்தினர்.

செயற்கையான புன்னகை ஒன்றை அவர்களுக்குப் பரிசளித்துவிட்டு தன் இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தாள்.

அந்த வருடம் நடாத்தப்பட்ட உயர்தரப்பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் ரேங்க் எடுத்து, யாழ்பாணத்துக்கே பெருமையைப் பரிசாக்கியவள் அவள். மீண்டும் தலை நிமிர்ந்தது யாழ்ப்பாணம். ஊரே கொண்டாடியது. பெருமையில் பூரித்தனர் மக்கள்.

அவள் இதயமோ ஒரே ஒருவனின் வாழ்த்துக்காய் காத்துக் கிடந்தது. அவன் வாழ்த்தவேயில்லை. கண்ணோரம் கண்ணீர் துளிகள் கசிய மனதில் பாரத்தோடு அமைதியாகிப்போனாள். அவன் அருகில் இருந்திருந்தால் இந்த நாள் எத்தனை ஆனந்தமாய் கழிந்திருக்கும்?

ஒரு காலத்தில் அவளது இலட்சியம் அது. கனவு அது! ஆனால், அது நடந்தேறியபோதோ அந்தச் சந்தோசம் அவளை எட்டவே இல்லை. எல்லோரினதும் வாழ்த்துகளையும் ஒற்றைப் புன்னகையோடு கடந்தாள்.

துஷாந்தினியும் சசிரூபாவும் மருத்துவ பீடத்துக்கு தெரிவாகும் அளவுக்கு நல்ல பெறுபேறுகளைப் பெற்று சித்தி அடைந்திருந்தனர். சசிரூபா வீட்டினருக்கும் அவளுக்கும் பெரும் சந்தோசம். துஷாந்தினிக்கும் மருத்துவபீடம் கிடைக்கும் என்பதே சந்தோஷமாயிருந்தது. துஷ்யந்தனுக்கு அது மிகப்பெரிய அடிதான்.

துஷாந்தினி வரவில்லை என்பதைவிட முதல் மாணவியாக வந்து காட்டிய கவின்நிலாவின் திடமனது அவனை அசைத்துத்தான் பார்த்தது. தான் அத்தனை இடையூறுகளைக் கொடுத்தும் அவள் தடுமாறவில்லை என்பது அவனைக் குற்ற உணர்வில் தள்ளியது.

மெல்ல சத்தமே இல்லாமல் அப்படியே ஒதுங்கிக்கொண்டான். இனி போட்டியிடுவதற்கு என்ன இருக்கிறது? என்னோடு போட்டியிடும் இடத்தில் கூட நீயில்லை என்று காட்டிவிட்டாளே!

பயத்தோடு பார்த்த தங்கையைப் பாசத்தோடு அணைத்துக்கொண்டான். “கம்பஸ் கிடைச்சிருக்கு தானே? பிறகென்ன. அழுறதை விட்டுட்டு சந்தோசமா இரு.” என்ற தமையனின் மாற்றம் அவள் விழிகளைவிரிய வைத்தது. அதே நேரம் இந்த அண்ணாவை மிக மிகப் பிடித்தது.

இதெல்லாம் நடந்து முடிந்து ஒருசில மாதங்கள் கடந்திருந்தது. இதோ இன்றிலிருந்து யாழ் பல்கலையின் மருத்துவ பீடத்து மாணவி கவின்நிலா. ஆனாலும் மக்கள் அவளை மறக்கவில்லை. அடுத்தடுத்து பரீட்சை எழுதக் காத்திருந்தவர்களுக்கெல்லாம் அவள் பெயரே முன்னுதாரணமாகப் பரிந்துரை செய்யப்பட்டது. அவளிடம் எப்படிக் கற்றீர்கள் என்று தெரிந்துகொள்ள, சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள என்று மாணவர்கள் வரிசை கட்டினர். அவளோ அவர்கள் எல்லோரிடமிருந்தும் தள்ளி நின்றுகொண்டாள்.

இப்போதும் கண்டு கதைத்தவர்களிடமிருந்து கழன்றுகொண்டு வகுப்பை நோக்கி விரைந்தது அவள் கால்கள். வாசலுக்கு வந்ததுமே நடை நின்றுவிட கண்கள் வேகமாய்ச் சுழன்றன. யாரைத் தேடி வந்தாளோ அவள், அங்கே மூன்றாவது வரிசையில் சற்றே உள்ளாக துஷாந்தினியுடன் அமர்ந்திருந்தாள். ஓடிப்போய் கையிலிருந்த பொருட்களை அப்படியே மேசையில் வைத்துவிட்டு அவளை நெருக்கி அடித்துக்கொண்டு அமர்ந்தாள். அவள் கரத்தோடு தன் கரத்தை வெகு இறுக்கமாகப் பிணைத்துக்கொண்டாள். பிணைத்துக்கொண்டதுமே விழிகள் நீரால் நிறைந்தன. இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.

கோர்த்திருந்த கரத்தின்வழியே அவளின் அவனை உணரத் துடித்தது அவளிதயம். அந்தக் கரத்தினூடு அவளுக்குள் பாய்ந்த கதகதப்பில் அவனின் அருகாமையை உள்வாங்கிட முயன்றாள். அவள் அவளின் உயிரானவனின் தங்கை. ஆமாம்! இத்தனை நாட்களாய் தோழியாய் தெரிந்தவள் இப்போது அவனது தங்கையாகத்தான் தெரிந்தாள். அவனின் பிரிவை அவளின் அருகாமையில் ஆற்ற முயன்றாள். அவள் அவனோடு கூடப் பிறந்தவள். அவனின் இரத்தம். அவள் கண்கள் அவனைப் பார்த்திருக்கும் அல்லவா. அவள் விழிகளுக்குள் அவன் பிம்பத்தைத் தேடினாள். அவளின் சிரிப்பில் தன்னவனின் குறும்பைத் தேடினாள். எண்ணங்கள் அவனைத் தேடி ஓட, விழிகளோ கண்ணீரைக் காணிக்கையாக்கின.

இதனை எதிர்பார்க்கவில்லை சசிரூபா. சற்றுநேரம் அவளுக்கும் அதிர்ச்சிதான். அது விலக விலக உள்ளத்தில் ஆத்திரம் பொங்கத் துவங்க, அவளிடமிருந்து கரத்தினை விடுவித்துக்கொள்ள முயன்றாள். அவள் விட மறுக்க, இவளின் விடுவிப்புப் போராட்டம் வலுப்பெற்றது.

“ப்ளீஸ்டி!” உதடுகள் நடுங்கச் சொன்னவளின் கலங்கி ரெத்தமென சிவந்திருந்த விழிகளைக் கண்டு இவள் போராட்டமும் முற்றுப் பெற்றது.

‘அண்ணாவை யாழ்ப்பாணத்தில இருந்தே துரத்திப்போட்டு எதுக்கு அழுகிறாள்?’ கோபம் கொழுந்துவிட்டு எரிந்தாலும் காட்ட முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டவளின் கண்களிலும் கண்ணீர்!

“என்னோட ஏனடி கதைக்கிறாய் இல்ல? நான் என்ன பிழை செய்தனான்? அவரும் இல்லாம நீயும் கதைக்காம..” கண்ணீர் உகுத்தபடி கேட்டவளின் வார்த்தைகளில் இவள் கண்களில் இருந்தும் கண்ணீர் வடிந்தது. கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக்கொண்டாலும் பதில் சொல்லவில்லை அவள்.

இத்தனை நாட்களாய் அவளோடு சசி கதைக்கவேயில்லை. படிக்கவும் ஸ்டடி ஹாலுக்கு வரவில்லை. டியூஷனில் சிலபஸ் எப்போதோ முடிந்தும் விட்டதால் வீட்டிலிருந்தே படித்தாள். பள்ளிகள் வேறுவேறு என்பதால் இருவரும் சந்தித்தே மாதக்கணக்காயிருந்தன.

என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஒருநாள் அவளின் அண்ணா, “இனி கொழும்பிலேயே தொழில் செய்யப்போறன்!” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். அஜந்தன் இங்கிருந்த கடையை பொறுப்பெடுத்துக்கொண்டான். கொழும்பிலிருந்தே தொலைபேசி வழியே, “தொழில் துவங்கக் காசு வேணுமப்பா.” என்று கேட்டு, வீட்டின் பெயரில் பழையபடி கடன் வாங்கியபோது, எதற்கும் தூணாய் நின்று அந்தக் குடும்பத்தையே காக்கும் மாயில்வாகணமே கலங்கிப்போனார் என்கையில் அவளின் நிலை? அவள் அம்மாவின் நிலை?

ஏன் எதற்கு என்று எவ்வளவோ கேட்டும் அசையவில்லை அவன். “இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாத தம்பி. எங்களுக்கு இதே போதும்.” என்று சொல்லியும் கேட்டானில்லை. அம்மா அழுது கரைந்தபோதும் ஒரு வார்த்தை சொல்லவில்லை. கடைசியாக, சசி தனியாக அழைத்து, “என்ன எண்டு சொல்லு. அம்மா அப்பாக்கு சொல்லமாட்டன். இல்லையோ கவிட்டையே நேராப்போய் கேப்பன்!” என்று மிரட்டவும் தான் விஷயத்தை மேலோட்டமாகச் சொன்னான்.

“அவர் நினைக்கிறதும் சரிதானே. அவளின்ர கெட்டித்தனத்துக்கு எங்கேயோ போவாள் நிலா. அப்ப நானும் கொஞ்சமாவது நல்ல இடத்தில இருந்தாத்தானே அவளுக்கும் மரியாதை.”

“ஏன் இப்ப உனக்கு என்ன குறையாம்? உன்ன மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க அவே குடுத்து வச்சிருக்கோணும் அண்ணா.” அவனின் விளக்கத்தை அவள் ஏற்றுக்கொள்வதாகவே இல்லை.

“அதுக்காக அப்படியே இருக்கவும் ஏலாது தானே. நாங்களும் முன்னேறத்தானே வேணும். அவள் படிக்கிற காலத்தில நான் கொஞ்சம் முன்னேறப் பாக்கிறது தானே புத்திசாலித்தனம்.” என்றான் தமையன்.

எல்லாம் சரிதான். அதற்காக கொழும்புக்கே ஓடுவானா? பெரிதாக என்னவோ நடந்திருக்கிறது. ஓரளவுக்கு ஊகிக்கவும் முடிந்தது அவளால். அவளின் தமையனிடம் யாராவது குறை என்று ஒன்றைச் சொல்வதானால் அது அவன் கல்வி பற்றியதாக மட்டுமே இருக்க முடியும்.

அதைச் சொல்லித்தான் அண்ணாவை துரத்தினார்களா? அழுகையே வந்துவிட்டது அவளுக்கு.

கொழும்பில் ஒரு இரவு கூடத் தங்க மறுப்பவன். ‘மனுஷன் நிப்பானா அங்க!’ கொழும்பு போய்வரும் ஒவ்வொரு முறையும் அவன் உதிர்க்கும் வார்த்தைகள் இவை. அப்படியானவன் கொழும்பிலேயே தங்கிவிட்டான் என்றால்.. நடந்தவையின் ஆழம் புரியாமல் போகாதே.

“என்னட்ட இருக்கிற நகை நட்டெல்லாம் வித்து எண்டாலும் தொழிலை துவங்கு அண்ணா. அவையளவுக்கு இல்லைதான் எண்டாலும் நாங்க ஒண்டும் யாருக்கும் குறைஞ்ச மனுஷர் இல்ல. நீ முன்னுக்கு வந்து அவளைத்தான் கட்டவேணும். என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறார் டீன்?” அழுதழுது படபடத்தாள் சசிரூபா.

“அதெல்லாம் தேவையில்லை. சும்மா தொட்டத்துக்கும் அழாத எண்டு எத்தனை தரம் சொல்லுறது?” என்று அதட்டினான் செந்தூரன்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock