நிலவே நீயென் சொந்தமடி 18 – 2

“நான் ஒண்டும் அழ இல்ல!”

தங்கையின் கோபத்தை ரசித்தான் அவன்.

“உன்ர டீன் அப்படி இப்படி எண்டு நீதானே தலைல தூக்கி வச்சுக் கொண்டாடுவ. இப்ப அவரையே திட்டுறாய்?” என்றான் கேலிக்குரலில்.

“இனியும் கொண்டாடுவன்தான். யாழ்பாணத்துக்கே கிடைச்ச சொத்து அவர். எப்படா அவரின்ர ஸ்டுடென்ட்டா போவன் எண்டுதான் இப்பவும் பாத்துக்கொண்டு இருக்கிறன். அதுக்காக என்ர அண்ணாவை எப்படியும் கதைக்கலாமா அவர்?” அவனிடமே நியாயம் கேட்டாள் அவள்.

“ஆனா அண்ணா, அவரின்ர ஸ்டூடன்ட்டா வந்து, டாக்டராகி, படிக்காத செந்தூரன்ர தங்கச்சி நான் எண்டு அவருக்கே காட்டுறன் பார்!” என்று சவால் விட்டாள் அவள்.

“கட்டாயம் செய். அது எனக்கும் சந்தோசம். அதுக்கு நல்லா படி. யாரோடையும் கோபம் பாராட்டாத. எல்லாரோடையும் எப்பவும் போல பழகு.” என்று அவன் சொல்ல,

“எங்களுக்கு அதெல்லாம் தெரியும். நீ உன்ர வேலைய பார்!” என்றுவிட்டு பட்டென்று வைத்துவிட்டாள் அவள்.

பெரும் கோபம் வந்தது. தமையன் எதற்காக அல்லது யாருக்காகச் சொன்னான் என்று தெரியாதா? ஆனாலும், அண்ணாவை யாழில் இருந்தே விரட்டக் காரணமாணவளின் மீது கோபம் பொங்கியது. அவளாவது போகவிடாமல் மறித்து இருக்க வேண்டாமா? ‘என்ர அண்ணா உன்ர மாமாக்கு வேண்டாம் எண்டா நீ எனக்கு வேண்டாம்!’

இது எதுவும் அறியாத கவின்நிலா சசியையும் காணவில்லை என்றதும் தவித்துப்போனாள். அவளைப் பார்த்தாலாவது சற்று ஆறுதலாய் இருக்கும் என்றெண்ணி அழைக்க, எடுத்ததுமே, “என்ன?” என்று எரிந்து விழுந்தாள் அவள்.

சட்டென்று பொங்கிக்கொண்டு வந்தது அழுகை. “ஏனடி படிக்க வரேல்ல?” தழுதழுத்த குரலில் கேட்டாள்.

“நான் என்ர வீட்டுல இருந்தே படிக்கிறன். நீயும் உன்ர மாமாட்டை கேட்டு நல்லா படி. அதுதான் அண்ணாவை யாழ்ப்பாணத்திலே இருந்தே துரத்தி விட்டாச்சே! இனி நிம்மதியா சந்தோசமா படி!” ஆத்திரத்தில் படபடத்தாள் சசி.

“கொழும்புக்கா? என்னடி சொல்லுறாய்?” அவள் வாழும் இந்த ஊரில்தான் இருப்பான். எப்போதாவது எதேர்ச்சையாகத்தன்னும் காண்பேனே என்கிற ஆறுதலைக்கூட அடித்து நொறுக்கியது சசியின் வார்த்தைகள்.

“போதுமடி நீயும் உன்ர நடிப்பும்! வை ஃபோனை!” என்றவள் அடித்து வைத்துவிட்டிருந்தாள்.

துடித்துப்போனாள் கவின்நிலா. அவளின் மென்மையான மனதுக்கு அடிமேல் அடி விழுந்தது. அத்தனை அடிகளிலும் அவள் உடைந்துமட்டும் போகவில்லை. இறுகிப்போனாள். தன்னை இன்னும் உறுதியாக்கிக்கொண்டாள். அவன் தன் போராட்டத்தை துவங்கிவிட்டான். சொன்னதை செயலாக்கத் தொடங்கிவிட்டான். அவளும் செயலாக்கவேண்டும்! கண்களை மூடிக் கண்ணீரை அடக்கிவிட்டு படிக்கத் துவங்கினாள்.

நடந்த விஷயங்கள் சுரேந்தரின் காதுக்கும் வந்து சேர்ந்திருந்தது. அதிர்ந்தே போனான். அவளுக்கும் அவன் மீது ஈர்ப்பு உருவாகியிருக்கும் என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தான். எப்படி இன்னொருவரிடம் அவள் மனம் சாய்ந்தது? இழவு காத்த கிளியாகிப்போன தன் நிலை அவனுக்கே பரிதாபமாய் போயிற்று. மனதளவில் புண்பட்டுப் போயிருப்பாள் என்றறிந்து இதமாக நடக்க முயன்றான். ஆறுதலாய் கதைதான். தன்னாலான உதவிகளைப் படிப்பில் செய்ய முயன்றான். அப்போதாவது தன் மனம் அவளுக்குப் புரியாதா என்கிற ஆவல். அப்படியே காதல் என்றாலும் அதைத்தான் டீன் பிரித்துவிட்டாரே.

தன் வேதனையிலேயே உழன்றுகொண்டிருந்த கவின்நிலாவுக்கு இதெல்லாம் மெல்ல மெல்லத்தான் விளங்கியது. சினம்தான் வந்தது.

ஒற்றை நிமிடத்தில் இந்தத் துன்பத்தை அவளால் களைய முடியும். இங்கேயே வாருங்கள் என்று அவள் சொல்லும் ஒற்றை வார்த்தை போதும் அவன் ஓடி வந்திடுவான். தூரத்திலிருந்தாவது பார்த்துக்கொள்வாள். அதைச் செய்யாமல் ஒரு விரதம் போன்று அவர்கள் இருவரும் பிரிந்திருந்து போராட, அவளை ஒருவன் பரிதாபத் கண்கொண்டு நோக்குவதா?

செந்தூரனுக்குத் தெரிந்ததோ அடுத்த துஷ்யந்தனாய் சுரேந்தரை போட்டுத் தாக்கிவிடுவான்.

அன்றும் அவளிடம் வந்து கதைத்த சுரேந்தரிடம், “சுரேந்தர், தயவுசெய்து எப்பவும் போல இருங்கோ. பரிதாபமா பாக்கிறது, அனுசரணையா நடக்கிறது, பாசம் காட்டுறது எல்லாம் வேண்டாம். அப்படி நீங்க நடக்கிற அளவுக்கு எனக்கு என்ன நடந்திட்டுது எண்டு நினைக்கிறீங்க?” சற்றுக் கோபமாகவே கேட்டுவிட்டாள்.

இப்படி நேரடியாகக் கேட்பவளிடம் என்ன சொல்வான்? உன்னை பிடித்திருக்கிறது என்றா? உன் காதலை உன் மாமா உடைத்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அதுதான் துணையாக நிற்கப் பார்க்கிறேன் என்றா?

“இல்லையே.. எப்பவும் போலதான்.”

“பொய் வேண்டாம் சுரேந்தர். எப்பவும் போல கதைக்கிறதா இருந்தா மட்டும் கதைங்க. இல்லாட்டி கதைக்காதீங்க. இனியும் உங்கட கண்ணில வேற எதையாவது பாத்தன், அதுதான் கடைசியா இருக்கும் நீங்களும் நானும் கதைக்கிறது.” உறுதியாகச் சொல்லிவிட்டுப் போனவளை சற்றே வியப்போடு பார்த்தான்.

அவனைவிடச் சின்னப்பெண். ஆனால், எவ்வளவு தெளிவாக ஒரு விஷயத்தைக் கையாள்கிறாள். அவன் மனதுக்கு இன்னுமே பிடித்த பெண்ணாக மாறினாள் அவள். அவளின் மனமாற்றத்துக்காக நம்பிக்கையோடு காத்திருக்கத் துவங்கினான். காயம்பட்டவளின் கோபத்தைப் பெரிதாக எடுக்கவில்லை. அவனுக்கும் அது கடைசி வருடம் என்பதால் நேரமும் இல்லாமல் போயிற்று. மனதில் மட்டும் மங்காத ஒரு ஆசை, எதிர்பார்ப்பு.

ஆனால், என்றுமே அவள் மனம் எதிலும் சலனப்பட்டதில்லை. பீடாதிபதிக்கு கூட அவள் மனதில் என்ன இருக்கிறது என்று இனங்காண முடியவில்லை. விழிகளால் அவளை ஆராய்ந்துகொண்டே இருந்தார். கல்வியில் எந்தப் பின்னடைவும் இல்லை என்பதில் ஆறுதல் கொண்டார்.

அவளுக்கு இரவுகளில் அவன் நினைவுகள் துணையாயின. அவனோடானா ஒரு தேநீர் கோப்பை அவளின் சந்தோசத்தை மீட்டுத் தந்துவிடாதா? தலையணைகள் கண்ணீரில் நனைந்தன. பகல்களை படிப்புக்கு பலிகொடுத்தாள். இன்றைய இந்த நாளுக்காக, சசிரூபாவை காணப்போகும் அந்தப் பொழுதுக்காக அவள் காத்திருந்த காத்திருப்பு மிகப்பெரியது. சசிரூபாதான் திண்டாடிப்போனாள்.

இவளும் வருவாள் என்று தெரியும். முகமே கொடுக்கக்கூடாது என்று எண்ணியிருக்க, கண்டவுடன் ஓடிவந்து கையை பற்றிக்கொண்டு இப்படி அழுவாள் என்று அவளே எதிர்பார்க்கவில்லை. அதோடு, கோபமிருந்தாலுமே நீண்ட நாட்களுக்குப் பிறகு கவின்நிலாவைக் கண்டதும் அவள் கண்களும் கலங்கிப் போயிற்று!

ஆனாலும், அவளோடு கதைக்கவே இல்லை சரூபா. அதனைப் பொருட் படுத்தவே இல்லை கவின்நிலா. என்னவோ அவள் முகத்தைப் பார்ப்பதே பாக்கியம் என்பதுபோல் பார்த்தாள். அவளை ஓட்டிக்கொண்டே தினமும் அமர்ந்தாள். அப்படி அமர்கையில், அவளைத் தொட்டுக்கொண்டு இருக்கையில் மனதில் ஒரு நிறைவு. ஒரு பாதுகாப்புணர்வு. அவன் அவளை விட்டு தூரப்போகவில்லை என்பது போன்றதொரு மாயை. தினமும் கோவில் திருநீறு கொண்டுவந்து அவள் நெற்றியில் இட்டுவிட்டாள். அதனை இடுகையில் அவள் விழிகளில் தென்படும் பாசத்தில் அசந்துபோவாள் சசிரூபா. என்னவிதமான நேசமிது?

ஆனால், இன்றுவரை, “ஒருக்கா வாண்ணா. வந்திட்டு போண்ணா” என்று எத்தனையோ முறை அழைத்து, கெஞ்சி, அழுதும் வராத தமையனின் கோபம் இவள் மீதே குவிந்ததால் முகத்தை திரும்புவதை நிறுத்தவில்லை அவளும்.

ஒருநாள் எழுந்து அடுத்த வரிசையில் சசி அமர்ந்துகொள்ள, இவளும் தன் பொருட்களை அள்ளிக்கொண்டு அவளருகில் சென்று அமர்ந்துகொண்டாள். சசி முறைக்க, “நீ எவ்வளவுதான் கோபப்பட்டாலும் உனக்கு பக்கத்துலதான் இருப்பன். நீ எங்கபோனாலும் பின்னால வருவன்.” என்றவளிடம் முறைத்துவிட்டு முகத்தை திருப்ப மட்டுமே முடிந்தது அவளால்.

நாட்கள் நகர்ந்தன. சசியிடம் எந்த மாற்றமும் இல்லை. உள்ளூர மட்டும், ‘அண்ணாவைப் பற்றி மட்டும் விசாரிக்கட்டும். குடுக்கிறன் கிழி.’ என்று காத்திருந்தாள். அவளோ அவன் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை. அது சசிக்குள் கோபத்தை மூட்டிவிட்டுக்கொண்டே இருந்தது.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock