நிலவே நீயென் சொந்தமடி 19 – 2

“நானே வாங்குறன் மச்சான்.”

“அப்ப நீ..” என்று ஆரம்பித்தவனை கைநீட்டித் தடுத்தான். “நீ சொன்ன தொகையை நான் தாறன். ஆனா, நீயும் பாட்னரா இரு.” என்று அவன் சொன்னபோது, கண்கள் கலங்க நண்பனை இறுக்கி அணைத்துக்கொண்டான் கபிலன்.

“தேங்க்ஸ் மச்சி!”

நாசூக்கான வார்த்தைகளோ நாகரிக மறுப்புக்களோ அங்கே தேவையாக இருக்கவேயில்லை.

“இந்த முடிவை அவ்வளவு இலகுவா எடுக்கேல்ல மச்சான். என்ர உயிரையே குடுக்கிற மாதிரித்தான் இருந்தது. ஆனா, அக்கா வீட்டுல இருந்து கஷ்டப்பட நான் எந்த உயரத்துக்கு போயும் அதுல பிரயோசனம் இல்ல மச்சான். அதுதான்.. விக்கலாம் எண்டு முடிவெடுத்தன். ஆனா பார்ட்னரா சேர சொன்ன பாரு.. இப்பதான் உயிர் திரும்ப வந்திருக்கு. உனக்கே தெரியும், அப்பாட தொழில் மச்சான். அவர் போத்தில்ல(பாட்டில்) போட்டு வித்ததை நான் கொஞ்சம் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி டின்ல போட்டனான். நல்ல வருமானம்டா. நீ நல்லா வருவாய் பாரேன்.” நிறைந்த மனதோடு சொன்னான் கபிலன்.

“நான் இல்ல நாங்க எண்டு சொல்லு.” என்று திருத்தினான் செந்தூரன்.

தாய், தங்கையின் நகைகள் கபிலனுக்கு காசாக மாறியது. கபிலனின் தமக்கையின் திருமண நாளும் வந்து சேர்ந்தது.

“அக்காட கலியாணத்துக்கு வா மச்சி” அழைப்பிதழ் வைத்து கபிலன் அழைத்தபோது, “வீட்டில அம்மாவே வருவீனமடா. நீ சந்தோசமா முன்னுக்கு நிண்டு எல்லாம் செய். என்ன தேவை எண்டாலும் ஒரு ஃபோன் போடு. அக்காக்கு என் வாழ்த்தை சொல்லிவிடு.” என்றான்.

“ஏன்டா யாழுக்கே வரக்கூடாது எண்டு அப்படி என்னடா பிடிவாதம்?”

“இது பிடிவாதம் இல்ல மச்சி. ஒரு கோபம். அவளா கூப்பிடுர வரைக்கும் தன்னை பாக்கக்கூடாது எண்டு சொன்னவள். அவள் இருக்கிற ஊர்ல அவளை பாக்காம என்னால இருக்க ஏலாது மச்சி.”

“அந்த பிள்ளையும் ஏதோ யோசிக்காம சொல்லியிருக்கும். நீ அத தூக்கிப்பிடிச்சுக்கொண்டு இருப்பியா? என்னடா இது?”

இருக்கலாம். அப்படித்தான் இருக்கும். அவளால் அவனைப் பாராமல் இருக்க முடியாதுதான். ஆனால், பிரிந்திருப்போம் என்று சொன்னாளே. அது மட்டுமா கடைசியில் இன்னோர் வார்த்தையையும் உச்சரிக்க முனைந்தாளே. அந்தக் கோபம் அவனுக்குள் இன்னுமே இருந்தது.

“இல்ல மச்சி. யாழுக்கு இப்போதைக்கு வரமாட்டன். நீ சந்தோசமா போயிட்டு வா. எனக்கும் நீ இல்லாம தனியா இந்த தொழிலை பழக இது நல்ல சந்தர்ப்பம்.” என்று அவனை சந்தோசமாக அனுப்பி வைத்தான்.

கபிலனின் கம்பெனியும் இவன் பெயருக்கு மாறியது. அதுவரை ஒரே வகையில் “ப்ளாக்ஹார்ஸ்” என்று உருவான பானத்தில், ‘ஸீரோ ஸுகர்’ என்று சீனி இல்லாத பானத்தையும் உருவாக்கினான். அப்படியே, அதே எனெர்ஜி ட்ரிங்கினை அண்ணாசியின் சுவை, ரம்புட்டானின் சுவை, மாம்பழச் சுவை, ஆரஞ்சு சுவை என்று விதம் விதமான சுவையில் உருவாக்கினான். கபிலனே அவனுடைய திட்டங்களில் அசந்துபோனான். அதுவரை டின்னில் மட்டுமே வந்த எனெர்ஜி ட்ரிங்க் அதன்பிறகு ஒரு லீட்டர், ஒன்றரை லீட்டர், இரண்டு லீட்டர் போத்தில் என்று பெரியளவுக்கும் மாறின.

கொள்வனவாளர்களிடம் அதனைக் கொண்டு சேர்த்தபோது, “பிரிட்ஜ்க்க இதையெல்லாம் வச்சா உங்கட ட்ரிங்க் மட்டும்தான் வைக்கலாம். சனம் கோலா கேக்கும், ஃபன்டா கேக்கும். தண்ணி கேக்கும். அதால இதையெல்லாம் வாங்குறது கஷ்டம் தம்பி. டின்னை மட்டும் தாங்கோ.” என்று பின்வாங்க, கபிலன் கலங்கிப்போனான்.

நாட்டில் எரிக்கும் வெயிலுக்கு சும்மா வெளியில் வைத்தால் தொட்டும் பார்க்க மாட்டார்களே மக்கள்.

அதுவரை கிடைத்த லாபம் அத்தனையையும் அதற்குள் போட்டிருந்தார்கள். இப்போது கடைக்காரர்கள் இப்படிச் சொன்னால்? சொல்வதிலும் தவறில்லையே. கிட்டத்தட்ட ஆறு வகையில் அவர்களது எனெர்ஜி ட்ரிங்க் இருந்தது. இதில் டின், ஒரு லீட்டர், ஒன்றரை லீட்டர், இரண்டு லீட்டர் என்று எல்லாவற்றிலுமே ஆறு வகை. இதை எல்லோராலும் பிரிட்ஜ்ஜில் வைக்க முடியாதே.

“தேவையில்லாத வேலை பாத்திட்டமோ?” கவலையோடு செந்தூரனிடம் கேட்டான்.

மறுத்துத் தலையசைத்தான் செந்தூரன்.

“இதை எதிர்பாத்தனான்டா.” என்றவனை முறைத்தான்.

“எனக்குத்தான் மண்டைக்க ஒண்டும் வரேல்ல. நீ தெரிஞ்சுகொண்டும் எதுக்கடா இவ்வளவு காசை இதுக்க போட்டாய்? ப்ச்! என்ன மச்சான்.. இனி என்ன செய்யப்போறம்?” கவலையோடு கேட்டான்.

“நாங்களே பிரிட்ஜ்ஜூம் குடுத்தா?” சிரித்துக்கொண்டு கேட்டான்.

“உனக்கு விசர் முத்திப்போச்சு! செலவுக்கு மேல செலவு செய்து நட்டப்படாம, போனது போகட்டும் எண்டு பழையபடி டின்னை மட்டுமே போடுறதுதான் புத்திசாலித்தனம்.” என்றான் கபிலன்.

“நோ! எனக்கு இந்த லாபம் காணாது! இன்னும் வேணும்!” அதைச் சொல்கையில் அவன் கண்களில் ஒரு தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

‘சொல்லுறதை கேக்கிறான் இல்லையே..’ என்று கவலையோடு பார்த்தான் கபிலன்.

கண்களை மூடிக்கொண்டு சூழல் நாற்காலியில் சாய்ந்துகொண்டான் செந்தூரன். நாற்காலி அங்குமிங்குமாய் அசைந்தது. முடிச்சிட்டிருந்த புருவங்கள் அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை உணர்த்தியது. கபிலனும் காத்திருந்தான். எவ்வளவு யோசித்தும் இது உசிதமான முடிவாகத் தோன்றவில்லை அவனுக்கு.

“பிரிட்ஜ் குடுக்கிறம்!” முடிவாகச் சொன்னான் நிமிர்ந்து அமர்ந்த செந்தூரன்.

மளமளவென்று அவன் திட்டங்கள் செயல் வடிவம் பெற்றன. முதலாவதாக நம்பிக்கையான மற்ற நண்பர்களையும் கொழும்புக்கு வரவைத்தான். ஒவ்வொருவர் கைக்கும் அவன் கடையிலிருந்து டாப்லெட் கொடுக்கப்பட்டது. கொழும்பின் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொருவரையும் அனுப்பினான். அந்தந்த ஊர்களில் அதுவரை அவர்களின் பொருட்களை விற்கும் கடைகளின் விலாசங்கள் பக்காவாக டாப்லெட்டில் பதிவாகின. அது இங்கே அலுவலகத்து கம்பியூட்டரில் பதிவேற்றமும் செய்யப்பட்டது. அவர்களுக்கு நம் பொருட்கள் எல்லாவற்றையும் போட்டு விற்றால் பிரிட்ஜ் இலவசம் என்று அறிவிப்புக்கு கொடுத்தார்கள்.

இலவச பிரிட்ஜ் என்கிற ஒற்றைச் சொல் மந்திரவாளாய் சுழன்று வேலை செய்தது. எல்லோருமே முகமெல்லாம் பல்லாக வாங்கிக்கொண்டனர். அதனை எல்லா தொலைக்காட்சிகளிலும் விளம்பரமும் கொடுத்தான்.

முன்பக்கம் முழுவதும் கண்ணாடியால் ஆன, மேலே “Blackhorse” என்று பெரிதாக எழுதி, கறுப்புப் புரவி ஒன்று முன்னங்கால்களை உயர்த்திக்கொண்டு பாயத் தயாராகும் படத்தோடு அட்டகாசமான பிரிட்ஜ் விளம்பரக் காட்சிகளில் வந்தது. பிரபலமான நடிகை, ஒரு காட்சியை நடித்து முடித்துவிட்டு வெகுவாக களைத்துப்போய் வந்து, அந்த பிரிட்ஜை திறந்து ‘ப்ளாக்ஹார்ஸ்’ எடுத்துப் பருகினாள். “என் உற்சாகத்தின் ரகசியம்!” என்று கட்டைவிரலால் தன் பின்னால் இருந்த பிரிட்ஜ்ஜை காட்டினாள். சிவப்பில் பளீரிட்ட அவள் உதட்டிலிருந்து உதிர்ந்து வழிந்த ஒற்றை துளியை கூட சிந்தவிடாது, அந்தத் துளியையும் பருகினாள். “என் சொத்தை தந்தாலும் இந்த ஒற்றைத் துளியை தரமாட்டேன்!” என்றாள். அத்தனை ருசியாம்.

அந்த விளம்பரம் மாயம் செய்தது. மக்களைச் சுண்டி இழுத்தது. அதுவும் இளையவர்கள் கடைகளில் கேட்க, கடை முதலாளிகள் இவனிடம் வந்தனர். இவர்களாக ஒவ்வொரு கடையாக ஏறி ஏறி அவர்களின் பொருளின் தரத்தை தொண்டை கிழிய விளக்கி, பருக இலவசமாக டின்களை கொடுத்த நிலை மாறிப்போயிற்று.

“பிரிட்ஜ் வேண்டுமானால் எங்களின் தயாரிப்புகள் அத்தனையும் உங்கள் கடையில் இருக்கவேண்டும்!” என்கிற கட்டாயத்தோடு கடைகளுக்கு பிரிட்ஜ்கள் வழங்கப்பட்டது.

சரி என்று தலையாட்டி வாங்கி கொண்டவர்கள், ‘வந்து செக் பண்ணவா போகிறார்கள்’ என்கிற எண்ணத்தில் அவர்கள் விற்கும் வேறு பானங்களையும் அதற்குள் வைத்து விற்றனர்.

ஆனால், செந்தூரன் சிறந்த வியாபாரி. ஒவ்வொருவரின் விலாசமும் அவனிடம் இருந்ததே. ஒவ்வொரு மாதமும் அந்ததந்த ஊருக்குப் பொறுப்பானவர்கள் அவர்களின் பொருட்கள் விற்கும் எல்லாக் கடைகளையும் சுற்றி வந்தனர். பெரும்பாலான கடைகள் இவர்களின் பிரிட்ஜ்ஜில் மற்றைய குளிர்பானங்களையும் நிரப்பி இருந்தனர்.

அது கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்ட்டபோதும் கண்டுகொள்ளவில்லை. ‘என்ன செய்துவிடுவார்கள்’ என்கிற அசட்டை.

ஆனால், செந்தூரனோ செய்தான். சொல்லியும் கேட்காதவர்கள் கடையில் இருந்த பிரிட்ஜுகள் மீண்டும் ஏற்றப்பட்டபோது உண்மையிலேயே திண்டாடிப்போயினர் முதலாளிகள்.

இவன் சும்மா சொல்லவில்லை என்பது மண்டையில் உறைத்தது. ஆனாலும் வீம்பு விடவில்லை. ‘உன் பொருளை நான் விற்காவிட்டால் உனக்கும்தான் நட்டம்.’ என்று இருந்தனர்.

ஆனால், தரமான பானம் என்பதோடு தகுந்த விலையிலும் விற்கப்பட்ட அவனது ‘எனெர்ஜி ட்ரிங்க்’ வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்கத் தொடங்கவும் தான் முழித்தனர்.

அதைப் பருகினால் மட்டுமே தாகம் அடங்கும் என்று வந்தவர்களுக்கு அதைக் காணவில்லை என்றதும் சினம் பொங்கியது.

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock