“எங்க இங்க இருந்த பிரிட்ஜ்?”
“ப்ளாக்ஹார்ஸ் இல்லையா?”
“அது குடிக்காம தாகம் அடங்காதே?”
இப்படியான பல கேள்விகள், ஏமாற்றத்தில் உருவான சலிப்புகள் அதிகரிக்காது துவங்கியது.
“மக்களுக்கு தேவையான சாமானை வாங்கி விக்காம என்ன கடை நடத்துறீங்க?” என்று ஒருசிலர் கேட்டும் விடவும் தான் ‘ப்ளாக் ஹார்ஸ்’ எந்தளவுக்கு மக்களிடம் ஊடுருவியிருக்கிறது என்பதை கடை முதலாளிகளே உணர்ந்தனர்.
அதோடு, அதன்மூலம் அவர்கள் எவ்வளவு லாபம் அடைந்தார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும் தானே. மெல்ல மெல்ல வழிக்கு வந்தனர். எல்லா கடைகளிலும் பிரதானமாய் மக்கள் கண்களுக்கு படும் விதத்தில் அவனது பிரிட்ஜ் காட்சிப்படுத்தப்பட்டது.
இலவச பிரிட்ஜ் மூலம் அவர்களும் உழைத்து, வியாபாரிகளையும் லாபம் காணவைக்கும் முயற்சி எல்லோருக்குமே பிடித்தது. ஒரு மாதம் கூடத் தவறவிடாமல் அத்தனை வாடிக்கையாளர் கடைகளுக்கும் அந்தந்த ஊருக்கு பொறுப்பானவர்கள் ஏறி இறங்கினர். சின்னக் கடையோ பெரிய கடையோ எல்லோரோடும் இன்முகமாய் பேசி வியாபாரம் செய்தனர். பிரிட்ஜ் பழுது என்றால் உடனேயே பழுது பார்க்கப் பட்டது. அத்தனையையும் தன் கட்டுப்பாட்டுக்குள் மொத்தமாய் வைத்திருந்தான் செந்தூரன்.
நியாயமான விலை, நல்ல தரம் என்று எண்ணி ஒரு வருடத்திலேயே நல்ல இலாபம் காணத் துவங்கியிருந்த செந்தூரன் மீண்டும் தான் சிறந்த வியாபாரி என்பதை நிரூபித்திருந்தான்.
அப்பப்போ விலைச் சலுகைகள் வழங்கினான். குறிப்பிட்ட தொகைக்கும் மேலே வாங்கினால் பரிசுகள் வழங்கினான். “பிளாஸ்ட்டிக்கை ஒழிப்போம்!” என்கிற தலைப்பின் கீழே பேப்பர் பாக்குகளை வழங்கினான்.
“பிளாஸ்டிக் பாக்குகளை பயன்படுத்தாதீர்!” என்று அதே நடிகை ஒரு கடைக்கு வந்து பேப்பர் பாக்கில் ‘ப்ளாக் ஹார்ஸ்’ குடிபானங்களை வாங்கிப்போனாள். அந்த பாக்குகள் எங்கும் “ப்ளாக்ஹோர்ஸ்” மின்னியது. அந்த பாக்கில் பொருட்கள் மக்கள் வாங்கிச் சென்றால், பார்ப்பவர் கண்ணிலெல்லாம் ப்ளாக்ஹார்ஸ் பட்டது. இலவச விளம்பரம் ஒருபக்கம் என்றால் மெய்யாகவுமே தன்னால் இயன்ற பிளாஸ்டிக் ஒழிப்பையும் செய்தான். தொலைக்காட்சிகளில் தினமும் விளம்பரங்கள் மின்னின. எங்கும் ப்ளாக்ஹார்ஸ் எதிலும் ப்ளாக்ஹார்ஸ். பெயருக்கு பெயர், புகலுக்கு புகழ், பணத்துக்கு பணம் என்று அடுத்தடுத்த வருடங்களில் அவன் வளர்ச்சி அபரிமிதமானதாய் மாறிற்று!
அதுவரை சாதாரண கம்பனியாய் இருந்த கம்பனி, “NilaS Pvt Ltd ” என்கிற பெயருடன் தனியார் நிறுவனமாக உயர்வு பெற்றது.
எங்கும் ‘நிலாஸ்’ எதிலும் ‘நிலாஸ்’
தொழிலார்கள் இடையே வளர்ந்துவரும் கெட்டிக்காரத் தொழிலதிபனாக மாறிக்கொண்டிருந்தான் செந்தூரன். அருகிலிருக்கும் கபிலனுக்கு அவன் வியப்புக்கு மேலே வியப்பை கொடுத்துக்கொண்டே இருந்தான். ஒரு மனிதனை காதல் என்கிற ஒற்றைச் சொல் இப்படி மாற்றுமா என்ன?
கபிலனின் அக்கா மகள் ஹாசினி வந்தவள், பிரிட்ஜ்ஜில் இருந்து ஒரு டின்னை எடுத்து பருகப் போகவும், “செல்லம்மா! இது நீ குடிக்கக் கூடாது. பதினாறு வயசுக்கு மேலதான்.” என்று செந்தூரன் சொல்ல,
“அப்ப நாங்க குடிக்கிற மாதிரி நீங்க எதுவும் செய்ய மாட்டீங்களா அங்கிள்?” என்று சிணுங்கவும் பளீரிட்டது அடுத்த பாதை.
அவனுக்குள் இருந்த வியாபாரி மீண்டும் துள்ளி எழுந்தான்.
“அடுத்த லீவுக்கு நீ வா செல்லம். உனக்கு பிடிச்ச மாதிரியே.. அதுவும் நம்ம ஹாசினிக்காகவே ஒரு ட்ரிங்க் மாமா உற்பத்தி செய்றன். டீல் ஓகே?”
“யெஸ்ஸ்ஸ்!!” துள்ளிக்குதித்தாள் சின்னப்பெண்.
“என்னடா?” என்ற கபிலனிடம், “எஸ் மச்சி! ஹாசினி அடுத்த ஐடியா தந்திருக்கிறாள்.” என்றான்.
அடுத்த ஆறுமாதத்தில் சிறுவர்களுக்கான பானங்கள் அறிமுகமாகின. இலங்கையில் கிடைக்கும் பெரும்பான்மையான பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அற்புத சுவையுடன் கூடிய பானங்கள் மீண்டும் விளம்பரப் படுத்தப்பட்டன.
இந்தமுறை, குட்டித் தவளையார் ஒருவர் ‘மனிதர்கள்’ என்கிற ஒருவகையான உயிர்கள் வாழும் நகரத்துக்குள் தொலைந்துபோனார். பார்க்குமிடமெங்கும் மிகப்பெரிய ராட்சசர்கள் நடமாடினர். கொஞ்சம் சின்னதாய் இருந்த ராட்சசன் ஒருவன் ஏதோ ஒரு உருண்டையான ஆயுதத்தை எடுத்து எறிய, பயந்துபோன குட்டித் தவளை தலைதெறிக்க ஓடிப்போய் ஒரு மரத்தின் பின்னே மறைந்துகொண்டது. அந்த ராட்சசனைக் காணவில்லை. ஆனால், குட்டித்தவளைக்கோ நாக்கு வறண்டு தொண்டை காய்ந்து போயிற்று! பயத்தில் மயக்கம் வந்தது. “தாகம்.. தாகம்..” முனகியது தவளை.
அப்போது, “தொம்” என்கிற சத்தத்துடன் ஏதோ வந்து விழ, திடுக்கிட்டு கண்ணை விழித்துப் பார்த்தது தவளை. குட்டிப் பெட்டி வடிவில் ஏதோ ஒன்று. அதில் என்னவோ எழுதி இருக்கே.. “ஸ்…ஸுவை..”
“சுவை?” எடுத்து மெதுவாக நாக்கை மட்டும் நீட்டி நக்கியது.
பழங்களின் மொத்த சுவையும் திகட்டிக்கொண்டு இறங்க, “வாவ்..” என்ற தவளை ஆசையாசையாகப் பருகவும் சொர்க்கசுகமாய் கண்கள் சொக்கிப் போனது தவளையாருக்கு. அப்படியே அதன் சுவையில் மயங்கியவரை ஏந்தி ஆடியது வானத்திலிருந்து தொங்கிய ஊஞ்சல் ஒன்று. சுவையை பருகினால் அப்படி இருக்குமாம் அதன் அனுபவம்.
அருந்தி முடித்ததும் மீண்டும் பழைய தெம்பும் தைரியமும் திரும்பிற்று தவளைக்கு.
“சுவை சுவை சுவை..!
அறுசுவை.. அருஞ்சுவை.. அற்புத சுவை.!
சுவை சுவை சுவை..!
லாலாலா லாலாலா லாலாலா..!” தலையை ஆட்டியாட்டி பாடிக்கொண்டே உற்சாகமாய் துள்ளிக்கொண்டு தாயிடம் ஓடிப்போனார் பச்சை நிறத் தவளையார்.
“அம்மா அம்மா! எனக்கு இனிமேல் சுவை மட்டும் தான் வேண்டும்!” அம்மாவிடம் கட்டளையிட்டது குட்டித்தவளை.
“சுவையா?” கேள்வியோடு பெட்டியை வாங்கி வாயில் கவிழ்த்தது அம்மா தவளை. ஒற்றைத் துளியொன்று நாக்கின் மீது விழுந்தது.
“ம்ம்ம்ம்..!” கண்களை மூடிச் சொக்கிப்போனார் அம்மா தவளை.
“என் கண்ணே! எங்கே கண்டுபிடித்தாய் இந்த அற்புதச் சுவையை? இனி என் மகனுக்கு சுவை மட்டும் தான்!” என்று அணைத்துக்கொண்டது அம்மா தவளை.
அவரின் கைகளுக்குள் இருந்தபடியே, “அப்போ உங்களுக்கு?” என்றுவிட்டு கண்ணடித்துச் சிரித்தது குட்டித்தவளை.
கொஞ்ச நாட்களில் சிறுவர் சிறுமியர் கைகளில் ‘சுவை’ குடியேற, அவர்களும் “சுவை சுவை சுவை..!
அறுசுவை அருஞ்சுவை அற்புத சுவை…!
லாலாலா லாலாலா லாலாலா!” என்று பாடிக்கொண்டே ஓடினர்.
அந்தளவில் எல்லா குழந்தைகளையும் சுண்டி இழுத்தது சுவையின் சுவை.
அதுவரை கொழும்பை மட்டுமே ஆதிக்கப்படுத்தியிருந்த அவன் தொழில், மெல்ல மெல்ல அதனைச் சுற்றியுள்ள நகரங்களுக்கும் பரவத் துவங்கியது. எண்ணி மூன்று வருடங்களில் முழு இலங்கையிலும் மிக அழுத்தமாய் கால் பதித்திருந்தான் செந்தூரன்.
“நிலாஸ்” இலங்கையில் அனைவரும் அறிந்த தரமான நிறுவனமாக உயர்ந்தது. அதே நேரத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் தன் மொபைல் ஷோ ரூமினை நிறுவியிருந்தான் செந்தூரன். ஆனாலும், யாழின் பக்கம் கூட எட்டிப்பார்க்கவில்லை. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகள் அஜந்தனின் கீழே இயங்க, வவுனியா, திருகோணமலை, அனுராதபுரம் வரை கபிலனின் கீழே இயங்கியது என்றால் மிகுதிப் பகுதி அத்தனையையும் செந்தூரன் பார்த்துக்கொண்டான்.
ஒவ்வொரு ஊர்களுக்கும் பொறுப்பானவர்கள் புதிதாக வாடிக்கையாளரை பிடித்துவந்தால் அவர்களின் சம்பளத்தோடு மேலதிக லாபப்பங்கும் வழங்கப்பட எல்லோருமே உற்சாகமாய் உழைத்தனர்.
அவனது தொழிற்சாலையின் வேலையாட்களுக்கு வருடா வருடம் சம்பள உயர்வும் கொடுக்கப்பட எல்லாமே நன்றாகச் செல்ல, அவனது செல்வநிலை வெகு வேகமாய் உயரத் துவங்கியிருந்தது.
இதற்குள் நான்கு வருடங்கள் ஓடியே போயிற்று சுரேந்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியராகப் பணிபுரிந்தான். இப்போது தனக்கென்றும் தனியாக ஒரு கிளினிக்கை தன் சொந்த ஊரான திருகோணமலையில் ஆரம்பித்தும் இருந்தான். வார இறுதிகளில் திருகோணமலையில் நேரடி மேற்பார்வையில் கிளினிக் இயங்க, வார நாட்களில் வேறு வைத்தியர்களை பணியில் அமர்த்தியிருந்தான். ஒவ்வொரு வாரமும் திருகோணமலை போய்வருவது பெரும் சிரமமாகவே இருந்தது.
அதோடு, இத்தனை வருடங்களாய் காத்திருந்தும் ஒரு பலனும் இல்லை என்பதை கசப்போடு உணரத் துவங்கியிருந்தான். பீடாதிபதிக்கும் அவளை தனக்குத் தருவதற்கே விருப்பம் என்பது மட்டுமே அவனை இன்னுமே யாழ்ப்பாணத்தில் பிடித்து வைத்திருந்தது.
கவின்நிலா மருத்துவ பீடத்து நான்காமாண்டின் இறுதியில் இருந்தாள். இன்னும் ஒரு வருடம். நாட்கள்தான் ஓடின. அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. சுரேந்தர் வீட்டில் பெண் பார்க்கத் துவங்கினர். அவனாலும் ஒரு அளவுக்குமேல் தள்ளிப்போட முடியவில்லை. படிப்பு முடிந்தபிறகும் அங்கேயே ஏன் இருக்கிறாய் என்கிற அம்மாவின் கேள்விக்கு கவின்நிலாவின் முடிவு தெரியாமல் என்ன சொல்லுவான்?
அன்றும் அம்மா சற்றே அதிகமாய் கத்திவிட, இன்றைக்கு ஒரு முடிவு தெரிந்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தவன் அவளோடு கதைப்பதற்குத் தயாரானான்.