“ஓ..! அப்ப நீ படிச்சு கெட்டிக்காரி ஆகேல்ல. அவள்தான் நீ எழுதாத பேப்பருக்கு மார்க்ஸ் போட்டிருக்கிறாள்.”
“இதுல இருந்தே தெரியுது, நீங்க எப்படி உங்கட பிள்ளைகளுக்கு மார்க்ஸ் போடுறீங்க எண்டு. ஆனா, என்ர மிஸ் அப்படி இல்ல.” என்று அவள் சொல்ல,
“அப்ப போ! போய் உன்ர மிஸ்ஸையே கட்டிப்பிடி!” என்றபடி அவர் எழும்பினார்.
“அச்சச்சோ என்ர அம்மாக்கு கோபம் எல்லாம் வருதடாப்பா! சரிசரி விடுங்க! என்ன இருந்தாலும் என்ர அம்மா மாதிரி வராது! நீங்க வாங்கம்மா!” என்று அவரை இழுத்து இன்னுமே அவர் மடியில் வாகாகத் தலைவைத்துக் கொண்டாள்.
அவள் முகம் சற்றே தெளிந்திருக்க, “இப்ப பரவாயில்லையா?” என்று கேட்டார் மேகலா.
“ம்ம், பரவாயில்ல.” என்றவளுக்கு மெய்யாகவே பரவாயில்லாமல் தான் இருந்தது.
“சரி படு!” மகளுக்கு போர்த்திவிட்டுவிட்டுப் போனார் மேகலா.
அவர் கதவைச் சாத்தியதும் மெல்லக் கண்களை மூடிக்கொண்டாள்.
மீண்டும் அவன்தான் வந்தான். இந்தமுறை அவள் மிரளவில்லை. எதற்காக இத்தனை கோபம்? என்று யோசித்தாள்.
‘அவன் தந்த பூவை நான் வாங்கேல்ல என்றா?’
‘கோபம் வரும்தானே. அவனே விருப்பம் இல்லாம நிண்டிருப்பான். அதுதான் சசி சொன்னாளே, அவள் சரம் கட்டினதுக்கே கத்தினவன் எண்டு. இதுல ஒரு பொம்பிளை பிள்ளைக்கு கோயிலுக்கு வெளில காத்து நிண்டு பூவை குடு என்றால்.. எவ்வளவு கோவம் வரும். நான் வேற வாங்காம நிக்கவும்..’
இப்போது அவள் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.
அவள் வாங்காத போது அவனுக்கு எப்படி இருந்திருக்கும்?
‘எண்டாலும் இவ்வளவு கோபமா? அம்மாடி! நல்லகாலம் இவன் எல்லாம் எனக்கு அண்ணாவா பிறக்கேல்ல.’
அவளைத் தன் சொந்தமாக்குவதற்கு என்றே ஆண்மகனாய் பிறப்பெடுத்தவன் அவன் என்பதை அறியாமல் இப்படி எண்ணியபடி உறங்கிப்போனாள் அவள்.
மகள் உண்ணாத உணவுகளை பார்க்கையில் மேகலாவுக்கு கவலையாகத்தான் இருந்தது. ‘இந்த கௌரி விரதம் கெதியா முடிஞ்சா நல்லாருக்கும். சும்மாவே மெல்லிய உடம்பு. இந்த விரதத்தோட காத்து மாதிரி ஆகப்போறா.’ அவளை எண்ணி வருந்தியபடி உணவுப் பாத்திரங்களை எடுத்து வைத்து ஒதுக்கினார்.
ஹாலுக்கு வந்து நேரத்தை பார்க்கவும் அப்போதுதான் ஏழரை என்று காட்டியது. ‘அண்ணா வர நேரமிருக்கு!’ என்று எண்ணியவர் தன்னுடைய அலுவலக அறைக்குள் சென்று, அன்று மாணவர்களுக்கு வைத்த பரீட்சைப் பேப்பர்களை எடுத்துக்கொண்டு மேசையில் அமர்ந்தார்.
மகள் சொன்ன ‘சிரிப்பு மிஸ்’ நினைவலைகளில் மிதந்து வந்து சிரிப்பூட்டியது. உண்மையிலேயே அவர் அப்படித்தான். அவர் கண்டிப்புக் காட்டும் ஒருத்தி என்றால் அது கவின்நிலாதான். அவளும் அவர் பேச்சைக் கேட்கமாட்டாள். ஆக, அவர் ‘சிரிப்பு மிஸ்’ தான். அதன்பிறகான நேரம் அந்தப் பேப்பர்களிலேயே கழிந்தது அவருக்கு.
கார் வரும் சத்தம் கேட்கவும் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு அவர் வெளியே வர, அவரின் தமையன் கனகரட்ணம் உள்ளே வரவும் சரியாக இருந்தது. ஐம்பதுகளை நெருங்கிக்கொண்டிருந்தாலும் கல்விச்செல்வம் கொடுத்த மிடுக்குடன் அசாத்தியமான உயரத்தில் இருந்தார். கட்டுக்குழையாத கம்பீரம்! விழிகளில் தெளிவும் தீர்க்கமும்! அதனோடு கூடவே கனிவும்! அந்த விழிகளை அலங்கரித்திருந்த பிரேம் அற்ற கண்ணாடி கூட அவரை இன்னுமே கம்பீரமாய் காட்டிற்று!
வந்ததும் வராததுமாக “எங்கயம்மா நிலா? இண்டைக்கு படிக்க வரேல்லையாம் எண்டு சுரேந்தர் சொன்னான்.” என்று கேட்டார்.
“தலைவலிக்குது எண்டு சாப்பிட்டு படுத்திட்டாள் அண்ணா. உங்களிட்ட சொல்லிவிடச் சொன்னவள்.”
“என்ன திடீர் எண்டு? இப்ப எல்லாருக்கும் வைரஸ் காய்ச்சல் பரவுதாம்.” என்றபடி உடனேயே மருமகளின் அறைக்குச் சென்று அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தார்.
பார்த்திருந்த மேகலாவின் இதழ்களில் புன்னகை. மருமகளுக்கு ஒன்று என்றதும் ஓடிப்போய் பார்க்கும் அவர் ஒன்றும் அத்தனை சாதாரணமானவர் அல்ல.
கனகரட்ணம் பரந்தாமன்!
யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடாதிபதி! பேராசிரியர்! வைத்தியர்!
யாழுக்கும் யாழ் பல்கலைக்கழகத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய சொத்து!
‘எதிர்கால வைத்தியன்’ ஆகவேண்டும் என்கிற கனவைச் சுமந்துவரும் எந்த மாணவனும் ஆசைப்படும் ஒரே விஷயம் ‘கே.பி’ சேரின் ஒரு விரிவுரையிலாவது இருந்துவிட வேண்டுமென்பது.
அவரின் மாணவன் என்று சொல்லிக்கொள்வதிலேயே அத்தனை பெருமை!
“கே.பியின் ஸ்டுடண்ட்டா?” என்று கேட்டதுமே கேட்டவரின் விழிகளில் ஒரு மரியாதையை தோற்றுவிக்கின்ற மனிதர்.
பல்கலையின் அத்தனை பெண்களின் கனவுநாயகனும் கூட!
கல்விக்கே தன்னை அர்ப்பணித்தவர். திருமணத்தை கல்விக்காகவே புறம்தள்ளியவர். எப்போதும் விரிவுரை, கருத்தரங்கு, மீட்டிங் என்று சுற்றிக்கொண்டே இருப்பார். யாழில் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் கல்விமானாய் சிறந்துவிளங்க வேண்டும் என்கிற பெரும் ஆசையை கொண்டவர். அப்படியானவரின் வாரிசு கவின்நிலா. தான் எட்டாத உயரங்களைக் கூட அவள் எட்டவேண்டும் என்பதுதான் அவரின் கனவு! லட்ச்சியம்! அதை இன்றுவரை அவளும் நிறைவேற்றிக்கொண்டுதான் வருகிறாள்.
எங்கு என்ன வேலையில் இருந்தாலும் அவரின் நினைவுகள் அனைத்தும் அவளின் கல்வியிலும், எதிர்கால வாழ்விலும், நலனிலும் மட்டுமே சுற்றிச் சுழலும்.
உள்ளதைச் சொல்லப்போனால், மேகலாவும் அவரின் கணவர் தயாபரனும் அவளைப் பெற்றது மட்டுமே! வளர்த்தது எல்லாம் அவர்தான்!
உடல் சுடவில்லை என்றதும் வெளியே வந்து, “விக்ஸ் பூச விட்டிருக்கிறாள் எண்டேக்க ஆளுக்கு நல்ல தலையிடி போலத்தான் கிடக்கு.” என்றார் கனகரட்ணம் சிரிப்போடு.
“அவள் எங்க விட்டது. நான்தான் விடாப்பிடியா நிண்டு பூசிவிட்டனான்.” என்று சிரித்துவிட்டு, “சாப்பாடு போடவாண்ணா? இல்ல தேத்தண்ணி ஏதும் குடிக்கப் போறீங்களா?” என்று விசாரித்தார்.
‘சாப்பாட்டைப் போடு’ என்றால் அவர் இனி வெளியே செல்லமாட்டார் என்று அர்த்தம். தேநீர் என்றால் வெளிவேலை இருக்கிறது என்று அர்த்தம்.
“அங்க ஸ்டடி ஹாலுக்கு ஒருக்கா போகோணும். தேத்தண்ணியே கொண்டுவா. கடிக்க எதுவுமிருந்தா அதையும் கொண்டுவா.” என்றவர், தொலைக்காட்ச்சியில் நியூஸ் சானலுக்குள் தன்னை நுழைத்துக்கொண்டார்.
சமையலறைக்கு சென்ற மேகலாவுக்கு தமையனை எண்ணி மனம் கனிந்தது. பக்கத்து வீடுதான் அவரின் வீடு. ஆனால், அவரின் வசிப்பிடம் இருப்பிடம் எல்லாமே தங்கை வீடுதான்.
அவர் வீடு இயங்குவதோ ‘ஸ்டடி ஹால்’ மற்றும் அவரின் அலுவலகமாக மட்டுமே. அங்கு ஏதாவது மீட்டிங், யாராவது கல்வித் பொறுப்பாளர்கள் வந்தால் தங்குவது இப்படி கல்வி சம்மந்தமாக ஏதாவது நடந்துகொண்டிருக்கும். அவர் படித்தகாலத்து புத்தகங்களில் இருந்து இன்றைய நவீன புத்தகங்கள் வரை அற்புதமான ‘லைப்ரரி’ ஒன்றைக்கூட அந்த வீட்டில் நிறுவி வைத்திருக்கிறார். விஞ்ஞான ஆய்வுகூடம் ஒன்றையும் நிறுவி இருந்தார்.
கவின்நிலாவின் அப்பா தயாபரன் இலங்கை வங்கியில் உயர்ந்த பதவியில் இருப்பவர். கொழும்பில் வேலை. வார இறுதிகளில் வந்து போவார். படித்த குடும்பம். செல்வாக்கான மனிதர்கள். காலம் காலமாய் கல்விச் செல்வத்தால் மட்டுமே புகழ் பெற்ற குடும்பம். அவர்களுக்கு என்று மதிப்பும் மரியாதையும் தனியாக உண்டு! அந்த வீட்டின் ஆணிவேர் கனகரட்ணம்.
அடுத்தநாள் காலையில் கண் விழிக்கையில் வழமைக்குத் திரும்பியிருந்தாள் கவின்நிலா. நிதானமாக எதையும் யோசித்துச் செயலாற்றும் பெண் அவள். எதிர்பாராமல் அவனது கோபத்துக்கு ஆளானதில் அதிர்ந்து போயிருந்தாலும் நிதானத்துக்கு வந்ததும் அவனது கோபத்தில் இருந்த நியாயத்தை விளங்கிக்கொண்டாள்.
‘என்னிலும் பிழை இல்லை. அந்த இடத்தில அவனிட்ட இருந்து பூ வாங்கி இருந்தா பாக்கிற யாரும் என்னை மட்டுமா பிழையா கதைப்பீனம். அவனையும் தானே. ஆனா, அவனிலையும் பிழை இல்லை. இந்த சசியால.. அவளும் பாவம். எனக்காக தமையனை கெஞ்சி மறிச்சு வச்சிருப்பாள். ஆக ஒருவரிலும் பிழை இல்ல’ என்று எண்ணியபடி சந்தோஷமாகவே பள்ளிக்கூடம் புறப்பட்டாள்.
சற்று நேரத்திலேயே அவளைப் பின்தொடரத் தொடங்கியிருந்தான் துஷ்யந்தன். சினம்தான் வந்தது.