இது இன்று நேற்றல்ல, அவள் ஏஎல் தொடங்கிய காலத்திலிருந்து நடப்பது. வாரத்தில் இரண்டு நாட்களாவது பின்னால் வருவான்.
சினப்பார்வை ஒன்றை வீசிவிட்டு அவள் வேகமாக சைக்கிளை மிதிக்க, தன் மோட்டார் வண்டியை அவளருகே கொண்டுவந்தான் அவன்.
“ரெண்டுவருஷமா வாறன். ஒரு நல்ல பதிலா சொல்லு கவி.”
காதிலே விழுத்தாமல் அவள் செல்ல, “என்னட்ட என்ன குறை எண்டு சம்மதிக்கிறாய் இல்ல?” என்று விடாமல் கேட்டான்.
கதிர்நிலவனின் பேட்ச்மேட் இவன். அண்ணாவின் நண்பன் என்று காண்கிற நேரங்களில் சின்னப் புன்னகையை அவள் உதிர்ப்பது வழக்கம். ஆனால் அவனது எண்ணம் வேறு என்று உணரத் தொடங்கியதும் அதையும் நிறுத்திவிட்டாள். மூன்று மாதங்களாக பின்தொடர்ந்து, எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என்பதை உணர்த்திவிட்டு ஒருநாள் அவன் காதலை சொன்னபோது, “இல்லை! எனக்கு இதில விருப்பமில்லை.” என்று அவன் கண்களைப் பார்த்து நேராகச் சொல்லிவிட்டாள்.
பிறகு பிறகும் அவன் அவளையே சுற்றிக் கொண்டிருக்க, “இப்படிச் செய்து கேவலப் படுத்தாதீங்கோ. நீங்க என்ர அண்ணாவோட பிரெண்ட். அவ்வளவுதான் எனக்கு.” என்று தன்மையாகச் சொல்லியும் அவன் நிறுத்தவில்லை.
அதன்பிறகு அவனிடம் எதுவுமே அவள் கதைத்ததில்லை. செயலில் உணர்த்தியாயிற்று. வாய் வார்த்தையாலும் சொல்லியாயிற்று. இதற்கு மேலே நான் என் முடிவில் உறுதியாக இருந்தால் முயற்சி செய்து பார்த்துவிட்டு பின்வாங்கி விடுவான் என்று எண்ணிக்கொண்டுதான் இன்றுவரை பொறுமையோடு நடக்கிறாள்.
எத்தனையோ தடவை அண்ணாவிடம் சொல்லுவோமா என்று நினைத்தாலும், சொல்லியதில்லை. அவனது நெருங்கிய நண்பன் இவன். இப்படி என்று தெரிந்தால் எவ்வளவு கவலைப்படுவான்? அங்கிருப்பவனிடம் சொல்லி அவனுக்கும் கவலையை ஏன் கொடுப்பான்? நான் சரியாக இருந்தால் சரிதானே? என்று விட்டுவிட்டாள்.
மாமாவிடம் சொல்ல விருப்பமில்லை. அவருக்குப் பிடித்த பழைய மாணவர்களில் அவனும் ஒருவன். மருத்துவனாக இருக்கிறான். தன் மாணவர்கள் எதிலும் தவறுவதை அவரால் தாங்க முடிவதில்லை. அவனும் நான் காத்திருக்கிறேன் என்று அவளுக்கு உணர்த்துவானே தவிர அதைத்தாண்டிப் போவதில்லை என்பதால், மறுப்பை மட்டும் உறுதியாகக் காட்டுவதோடு நிறுத்திக்கொண்டாள்.
இன்றும் அப்படியே அவள் மறுப்பை மௌனத்தில் காட்டிக்கொண்டு போக, “பதில் சொல்லு கவி!” என்றான் சற்றே அழுத்தி.
என்றுமில்லாத அன்றைய அழுத்தத்தில் அதிர்ந்து அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் கண்களில் சின்ன வெற்றிக்குறி. உடனேயே அதை வளரவிடக்கூடாது என்று முடிவுகட்டி, “என்ன கதைக்கிறதா இருந்தாலும் மாமாவோட கதைங்கோ. அவரோட முடிவுதான் என்ர பதில்!” என்று அவள் சொல்ல, இப்போது அதிர்ந்துபோய் நின்றுவிட்டான் அவன்.
கே.பியிடம் போய் இதைக் கதைப்பதா? நினைவே படு பயங்கரமாய் தோன்றியது.
மாலை டியூஷனுக்கு தன் ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்தாள் கவின்நிலா. செந்தூரனின் கடையை நெருங்கும்போது என்றுமில்லாது அன்று அவளது கடைக்கண் பார்வை அவன் கடை வாசலை அலசியது. எப்போதும் அரட்டையடித்தபடி நிற்பவர்கள் நிற்கிறார்களா என்று கவனித்தாள்.
அவர்களும் நின்றிருந்தார்கள். என்னவோ சொன்ன நண்பனின் முதுகில் ஒரு அடியைப் போட்டுவிட்டு அவன் தோளைச் சுற்றிக் கையை போட்டுச் சிரித்தபடி திரும்பியவனின் முகம் இவளைக் கண்டதும் ஒருநொடி சிரிப்பைத் தொலைத்தது. அதைக் கண்டுவிட்டவளின் நெஞ்சு படபடவென்று அடித்துக்கொள்ளத் தொடங்கியது.
நேற்றுப்போலவே இன்றும் எதையாவது செய்துவிடுவானோ? தன் நடுக்கத்தைக் காட்டிவிடக்கூடாது என்று ஸ்கூட்டியை இறுகப்பற்றியபடி அவர்களைக் கடக்க முனைய, அவள் அவர்களைக் கடக்கப்போகும் அந்த நொடியில், “டேய் மச்சி! முதல் போய் லைசென்ஸ் எடுடா!” என்றான் சத்தமாக.
அந்தப்பக்கம் திரும்பிவிடக்கூடாது என்கிற கவனமெல்லாம் மறக்க, சட்டென்று திரும்பிப்பார்த்து முறைத்தாள் கவின்நிலா. ‘மானத்த வாங்கிட்டானே! எளியவன்!’ அடக்கப்பட்ட சிரிப்பில் அவள் உதடுகள் துடித்தன!
அவனோ கண்ணால் சிரித்துச் சீண்டினான்.
‘போடா!’ உதட்டசைவில் திட்டிவிட்டுக் கடந்தவளால் இதழ்களில் பூத்துவிட்ட சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
‘மானமே போச்சு! நேற்று நான் தடுமாறினத கவனிச்சிருக்கிறான். எவ்வளவு வெட்கக்கேடு!’
‘அவ்வளவு கோபத்திலையும் அத கவனிச்சிருக்கிறான்!’
இங்கே செந்தூரனின் உதடுகளிலும் புன்சிரிப்பு உறைந்துபோயிற்று! ‘போடா!’ என்று அவள் திட்டியதை அவன் உணராமலில்லை. ஆனாலும் சிரித்துக்கொண்டிருந்தான்.
“என்ன மச்சி? சிட்டுக்குருவி இந்தப்பக்கம் பாக்குது! நீயும் ஜாடையா என்னவோ சொல்லுறாய்? என்னடா நடக்குது? சம்திங் சம்திங்?” என்ற நண்பனிடம்,
“யாரு, நான்? அவளை? போடா டேய்!” என்றவனின் உதடுகளில் சிரிப்பு மட்டும் அடங்கவே இல்லை.
டியூஷனால் வந்து, படிக்கவேண்டும் என்று குறித்து வைத்தவைகளோடு ஸ்டடி ஹாலுக்குச் சென்றாள் கவின்நிலா.
ஹால் வாசலில் அவளைக் கண்டதும், கையசைத்து ஹாய் சொன்ன சுரேந்தர், அங்கேயே நில் என்று சைகையில் காட்டிவிட்டு எழுந்து வெளியே வந்தான்.
தானாகப் படிக்க ஆர்வம் கொண்டவர்களே அங்கே வருவதுண்டு. ஏதும் சந்தேகம் கேட்பதோ, கதைப்பதோ, சின்னதாக இடைவேளை எடுத்துக்கொள்வதோ எதுவாயினும் ஹாலுக்கு வெளியேதான். விரும்பி ஊக்கமெடுத்துப் படிப்பவர்கள் என்பதால் உள்ளே, சின்னச்சின்ன சில்மிஷம், விளையாட்டு, தேவையில்லாத அசைவுகள் என்று எதுவுமே இராது. அந்தச் சட்டத்தை யாருமே உருவாக்காதபோதும் தானாக உருவாகிப் போனது.
அவளும் வெளியேயே நிற்க, “நேற்றுத் தலைவலியாம் எண்டு டீன் சொன்னவர், இப்ப எப்படி இருக்கு?” என்று விசாரித்தான் சுரேந்தர்.
“இப்ப சுகம்.” என்றவள், “மாமா எங்க?” என்று கேட்டாள் விரிவுரை நடக்கும் ஹாலை எட்டிப் பார்த்தபடி. அங்கே மாணவர்களுக்கு ப்ராஜெக்ட்டரில் எதையோ விளக்கிக்கொண்டிருந்தார் அவர்.
“பெர்ஸ்ட் இயர் ஸ்டுடென்ட்ஸ்க்கு கிளாஸ் எடுக்கிறார்” என்று சொல்லிவிட்டு, “ஏதாவது டெஸ்ட் இருக்கா? ஹெல்ப் வேணுமெண்டா கேளுங்கோ. அன்றைக்கு பிஸிக்ஸ்ல ஒரு தியரி விளங்கேல்ல எண்டு சொன்னீங்க தானே. கிளியர் ஆகிட்டுதா?” என்று நினைவு வைத்துக் கேட்டான் அவன்.
கனகரட்ணத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய மாணவர்களில் சுரேந்தரும் ஒருவன். அதுவும் இன்றைய காலகட்டத்தில் அவரின் அரைவாசிக்கும் மேலான பொறுப்புக்களை ஏற்று நடத்துபவன்.
“இல்ல. எனக்கு இன்னும் டவுட்ஸ் இருக்கு. கிளியர் பண்ணி விடுறீங்களா?” என்று அவளும் கேட்க, “வாங்கோ.” என்று அங்கே மரத்துக்கு கீழே இருந்த பெஞ்சில் இருவரும் இடைவெளி விட்டு அமர்ந்துகொள்ள அவளின் நோட்ஸ் வாங்கி விளங்கப்படுத்தத் தொடங்கினான் சுரேந்தர்.
சின்னச் சின்ன குறிப்புக்களோடு அவன் கொடுத்த விளக்கம் மிகவுமே உதவியாக இருந்தது அவளுக்கு.
“பிறகு? படிப்பெல்லாம் எப்படி போகுது?” விளங்கப்படுத்தி முடித்ததும் கேட்டான்.
“நல்லா போகுது.” என்றாள் அவள் புன்னகையோடு.
“வடிவா படிக்கோணும். நாங்க எல்லாரும் உங்களைத்தான் நம்பிக்கொண்டு இருக்கிறோம். எங்கட டீன்ர மருமகள் சும்மா இல்ல எண்டு நாங்க சொல்ற மாதிரி இருக்கோணும்.” எதிர்பார்ப்போடு சொன்னான் சுரேந்தர்.
கல்வியில் சிறந்துவிளங்கும் யாழ்ப்பாணம், கனகரட்ணம் பரந்தாமனைப் போன்ற மிகச் சிறந்த கல்வியாளர்களை தன்னகத்தே கொண்ட யாழ்ப்பாணம் கடந்த ஆறு வருடங்களாக விஞ்ஞானப்பிரிவில் தன் முதலிடத்தை மீண்டும் பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. கதிர்நிலவன் முதலில் விட்டான். அதன் பிறகான இரண்டு வருட மாணவர்களும் இரண்டு, மூன்று என்றுதான் வந்தார்களே தவிர முதலிடத்தைப் பிடிக்கவே இல்லை. அதன்பிறகு எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட, ஏன் கே. பியால் கூட மிகவுமே நம்பிக்கையாக எதிர்பார்க்கப்பட்ட சுரேந்தர் கூட மூன்றாம் இடத்தத்தைத்தான் பெற்றிருந்தான். அதன் பிறகான இரண்டு வருடங்களும் கூட அப்படியேதான் ஆனது. இந்த வருடமோ அத்தனைபேரின் நம்பிக்கையின் நட்சத்திரமாக அவள் விளங்கினாள்.
“உங்களிட்ட ஒரு விஷயம் சொல்லோணும் எண்டு நிறைய நாளா காத்திருக்கிறன், அதுக்கு முதல் நீங்க பெர்ஸ்ட் ரேங்க் எடுக்கவேணும்.” என்று அவன் கண்களில் சிரிப்போடு சொல்ல,
“என்ன விஷயம் எண்டு சொல்லுங்கோ நான் பெர்ஸ்ட் ரேங்க் எடுத்துக் காட்டுறன்.” என்று அவள் எவ்வளவோ ஆர்வமாகக் கேட்டும் கண்ணால் சிரித்தானே தவிர சொல்லவேயில்லை.
“நானே கண்டுபிடிக்கிறன்!” என்று சவால் விட்டுவிட்டு படிக்கப் போனாள் அவள்.