பல்கலை முடிந்து வந்து, குட்டியாய் ஒரு உறக்கமும் கொண்டெழுந்து மாமாவின் லைப்ரரிக்கு வந்திருந்தாள் கவின்நிலா. அன்று, இதய சத்திர சிகிச்சை பற்றிய விசேஷ விரிவுரையில் கலந்துகொண்டிருந்தாள்.
துடிக்கின்ற இதயங்களைப் பார்க்கையில் அவளுக்காகத் துடித்திருக்கும் இதயத்தின் நினைவு வந்துவிடும். இந்த இதயம் எந்த இதயத்துக்காகத் துடிக்கிறதாம்? அது தன் துணையோடு இணைவதற்காய் துடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற பேராவல் எழும் அவளுக்குள்.
அதனாலேயே அதனை ஆட்கொண்டிருக்கும் நோய்நொடிகளை அகற்றிவிட பேரார்வம் கொள்வாள். இதயம் பற்றிய எந்த ஆராய்தலுமே அவளுக்கு மிகவுமே பிடித்த விஷயம்.
அப்படித்தான் இன்றும் அதுபற்றிய ஒரு விளக்கத்துக்காக லைப்ரரிக்குள் அதற்கான ஆய்வுகள் அடங்கிய புத்தகத்தினை தேடிக்கொண்டிருக்க அங்கு வந்தான் சுரேந்தர். அவனைக் கண்டதும் புன்னகைத்தாள்.
“குட்டீவினிங் சுரேந்தர்!”
பக்குவப்பட்ட பெண்ணாக மாறியிருந்தவளின் மலர்ச்சியான ஆரம்பம் தெம்பைக் கொடுத்தது சுரேந்தருக்கு.
“குட்டீவினிங் மேடம்! என்ன தேடுறீங்க?”.
“இங்க ‘Cardiac Surgery’ பற்றி ஒரு புக் இருந்தது எல்லோ, அதைத்தான் தேடுறன்.”
“இதயத்தை வெட்டுறது பற்றி மட்டும்தான் யோசிப்பீங்களா? இங்க ஒரு இதயம் உங்களுக்காகக் காத்திருக்கிறதை மறந்திட்டீங்களா?” இலகுவாக ஆரம்பித்தான்.
புருவங்கள் சுருங்கக் கேள்வியோடு அவனைப் பார்த்தாள் கவின்நிலா. “என்ன சொல்லுறீங்க சுரேந்தர்?”
“நீங்க எனக்கு இன்னும் பதில் சொல்லேல்ல.”
“எந்தக் கேள்வியுமே நீங்க என்னைக் கேக்கவே இல்லையே? இதுல பதிலைக் கேட்டா?” அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
சட்டென்று அவன் முகம் மலர்ந்து போயிற்று. அதனால் தான் ஒன்றுமே சொல்லவில்லையா அவள்.
“உனக்காகத்தான் இவ்வளவு நாளும் வெய்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறன் நிலா. இனியும்.” சட்டென்று கைநீட்டித் தடுத்தாள் கவின்நிலா.
நீயாம்! நிலாவாம்! சுருசுரு என்று உள்ளே கொதித்தாலும் நிதானமிழக்கவில்லை.
“கவி எண்டு மட்டும் சொல்லுங்கோ!” அமைதியாக ஆணையிட்டாள்.
இலகுவாக்க கதைத்தவளிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை சுரேந்தர்.
“வெளில வாங்கோ கதைப்பம்.” சொல்லிவிட்டு நடந்தவளை முகம் சுருங்கப் பின்தொடர்ந்தான். இப்போதுதானே சந்தோஷப்பட்டான். அதன் ஆயுள் இவ்வளவுதானா?
“சொல்லுங்கோ.” அவன் விழிகளை பார்த்துக் கேட்டாள்.
“பட்டம் வாங்கின பிறகும் திருகோணமலைக்கு போகாம இங்கயே வேலையை வாங்கிக்கொண்டு இவ்வளவு நாளும் இருந்தது நீங்க மனம் மாறுவீங்க, நல்ல பதிலா சொல்லுவீங்க எண்டுதான் கவி. ஆனா இத்தனை வருஷம் கழிச்சும் இப்படிச் சொன்னா எப்படி கவி?” மனத்தாங்களோடு கேட்டான் சுரேந்தர்.
எதற்கு என்ன பதில் அவள் சொல்வாள் என்று காத்திருந்தானாம். சினம் பொங்கிற்று அவளுக்கு. அன்றொருநாள் அவன் கண்களில் அனுசரணையை உணர்ந்தபோதே, இத்தோடு நிறுத்திக்கொள் என்று தெளிவாகச் சொன்னபிறகும் இப்படி வந்து கேட்டால்?
கண்களை ஒருமுறை இறுக்கி மூடித்திறந்து தன்னை நிதானித்துக்கொண்டு அவனிடம் திரும்பினாள். “முதலாவது விஷயம், உங்களை இப்படி ஒரு கோணத்தில நான் சிந்திக்கவே இல்ல. ரெண்டாவது, உங்களை வெய்ட் பண்ணச்சொல்லி நான் சொல்லேல்ல சுரேந்தர். எப்பயாவது உங்கட மனதில நம்பிக்கையை வளக்கிற விதமா நான் நடந்து இருக்கிறேனா? இல்ல நீங்க என்னட்ட உங்கட விருப்பத்தை சொல்லி இருக்கிறீங்களா?”
அவன் விழிகளைப் பார்த்து அவள் கேட்டபோது கசப்போடு இல்லை என்று தலையசைத்தான் அவன்.
“பிறகு என்ன? நீங்க வீணா வெய்ட் பண்ணினத்துக்கு என்னைக் காரணம் சாட்டாதீங்க. இத நீங்க அண்டைக்கே வெளிப்படையா கேட்டிருந்தா இதே பதிலை நானும் சொல்லியே இருப்பன்.”
அத்தனையும் வீணா? அதிந்துபோய் நின்றான் அவன். மாறுவாள் என்று எண்ணினானே!
அவளுக்கு சினம் அடங்குவதாயில்லை.
“என்ன சுரேந்தர் இது? எந்த ஆம்பிளையோடையும் தெரிஞ்சவர், நல்லவர் எண்டு சிரிச்சு கதைக்கவே கூடாதா? உடனேயே காதல் எண்டு சொல்லிக்கொண்டு வருவீங்களா?” வெறுத்த குரலில் கேட்க கன்றிப்போனான் அவன்.
“உங்கட மாமாக்கும் இதுதான் விருப்பம்.”
இதுவும் புதிய செய்தி அவளுக்கு. இதற்குத்தானா அன்று செந்தூரன், ‘உன்ர மாமா வேற என்னவோ ப்ளான் பண்ணுறார்.’ என்று சொன்னான். அதைக் கேட்டு எவ்வளவு துடித்திருப்பான். அவன் உள்ளம் என்ன பாடு பட்டிருக்கும்?
“என்ர விருப்பம் என்ன எண்டுற விஷயமும் இருக்கே சுரேந்தர்.” அழுத்தமாகச் சொன்னாள் கவின்நிலா.
“அதாலதான் உங்கட முடிவை கேக்கிறன். இன்னும் கொஞ்ச நாள்ல படிப்பும் முடியப்போகுது. பிறகும் தனியாவே இருப்பீங்களா? அவன்தான் விட்டுட்டு போயிட்டானே. கிட்டத்தட்ட அஞ்சு வருசமாச்சு. இந்தப்பக்கம் திரும்பியே பாக்கேல்ல. உங்கள மறந்துகூட போயிருப்பான். சந்தோசமா இன்னொரு வாழ்க்கையை தேடாம அவனையே நினைச்சுக்கொண்டு இருக்கப்போறீங்களா?” அவளைத் தவறவிட மனமில்லை அவனுக்கு.
‘அவனாவது என்ன இன்னொருத்தனிட்ட குடுக்கிறதாவது! என்னை என்னிடமே விட்டு வைக்காதவன்.’ இதழோரம் சின்னதாய் வளைந்தது அவளுக்கு.
“அவரா என்ன மறப்பார்?” என்றவளுக்கு அவனைப் பற்றியும், அவனது அவள் மீதான ஆக்கிரமிப்பான காதல் பற்றியும் இவனிடம் விளக்கம் சொல்ல விருப்பமே இல்லை.
காதல் உணர்வது. மனதால் பேசுவது. நினைவுகளால் ஒருவரோடு மற்றவர் வாழ்வதல்லவா.
அவர்கள் பிரிந்திருக்கிறார்கள் என்று யார் சொன்னது? மனதால் தினமும் பேசிக்கொண்டும், நினைவுகளால் வாழ்ந்துகொண்டும்தானே இருக்கிறார்கள்.
எங்கோ இருக்கிற அவனோடுதான் அவள் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். இங்கே இருக்கிற அவளோடுதான் அவன் நினைவுகள் கலந்து கிடக்கிறது.
காலையில் குட் மார்னிங் சொல்லிக்கொள்கிறார்கள். மாலையில் மற்றவர்களின் நினைவுகள்தான் தாலாட்டாக மாறி உறங்க வைக்கின்றன. அவர்களின் ஒவ்வொரு வெற்றியையும் பகிர்வது மற்றவரிடம் தான்.
அப்படி நெஞ்சில் நிறைந்தவனைப் பற்றி, அவன் அவள்மீது கொண்டிருக்கும் நேசம் பற்றி கதைப்பதற்கு இவனுக்கு என்ன தகுதி இருக்கிறதாம். ஆவேசம் பொங்கிற்று அவளுக்கு.
“அவரை என்ன பத்தோட பதினொண்டு எண்டு நினச்சீங்களா? வா எண்டதும் வாரதுக்கும் போ எண்டதும் ஓடிப் போறதுக்கும். போய்ட்டார் தான். நான் போகச் சொன்னதால போய்ட்டார். எத்தனை வருசமானாலும் வா எண்டு நான் கூப்பிடுவன் என்ற நம்பிக்கைல தான் இன்னும் வராம இருக்கிறார். எதுக்கும் அடங்காத அவரை என்னோட ஒரு வார்த்தை பெட்டிப்பாம்பா அடக்கி வச்சிருக்கு எண்டா.. அதுல இருந்தே யோசிங்க அவருக்கு நான் எவ்வளவு முக்கியம் எண்டு.” உணர்ச்சிவேகத்தில் படபடத்தாள் கவின்நிலா.
அத்தனை நேரமாய் அமைதி இழக்காது பேசிக்கொண்டிருந்தவள் அவனைப் பற்றிச் சொல்லும்போது மட்டும் இத்தனை உணர்ச்சிவசப்படுகிறாள் என்றால், எவ்வளவு ஆழத்துக்கு அவள் மனதில் அவன் வேரோடிப்போய் இருக்கிறான் என்று விளங்கிற்று அவனுக்கு. உள்ளே பிரமித்தும் போனான்.
அவனுக்கும் அவளைப் பிடிக்கும்தான். அவள் தன் வாழ்வில் வந்தால் மிகுந்த சந்தோசம் தான். அவனும் காத்திருந்தான்தான். அதற்காக அவள் மட்டுமே அவனுடைய வாழ்க்கை என்று அவனால் எண்ண முடியாது.
பெற்றவர்கள், கூடப்பிறந்த சகோதரர்கள், நண்பர் கூட்டம், அவன் படித்த படிப்பு, அதன் மூலம் கிட்டும் வளமான வாழ்வு, அதன் அடுத்த படியாக, அவனுக்கு ஏற்ற மனதுக்குப் பிடித்த பெண்ணோடான திருமண வாழ்க்கை என்று எல்லாம் நிறைந்த வாழ்க்கையைத்தான் அவன் விரும்புவது.
முக்கியமாக அவனுக்கு இணையான ஒரு துணை வேண்டும்! வாழ்வின் அடிமட்டத்திலிருந்து வந்ததனாலோ என்னவோ, அந்தஸ்து மிக முக்கியமான ஒன்றாகப் பட்டது.
அதோடு, இத்தனை வருடங்கள் கழிந்தபிறகும், அவளால் அவனை மறக்கவும் முடியவில்லை, தன்னைத் திருமணம் செய்யவும் முடியாது எனும்போது இனியும் அவளுக்காக அங்கேயே தேங்குவது எல்லோருக்குமே நல்லதல்ல என்றுணர்ந்தான். நெஞ்சில் வலித்தாலும் நிதர்சனம் இதுதானே!