கடுகதியில் நாட்கள் விரைந்திருக்க இறுதிப் பரீட்சையை எல்லோருமே முடித்திருந்தனர். அடுத்த நாளே செந்தூரனின் முன்னால் போய் நின்றான் அஜந்தன்.
“என்ன மச்சான், திடீர் பயணம்? அதுவும் சொல்லாம கொள்ளாம.” தனக்குள் சிரித்துக்கொண்டு கேட்டான் செந்தூரன்.
அஜந்தனின் மனம் அவனுக்கு எப்போதோ தெரியும். அதனாலேயே சசி அருகே செல்லும் சந்தர்ப்பங்களை அஜந்தனுக்கு வழங்கவே இல்லை. ஆனால், இது எவ்வளவு தூரத்துக்கு போகிறது என்று கவனித்திருந்தான். மாறாத நேசம்தான் என்று தெரிந்துகொண்ட பிறகுதான் இருவரையும் ஒரு இடத்தில் பொறுப்பைக்கொடுத்து அமர்த்தினான். சசியின் மனம் என்னவென்று தெரியவும் வேண்டுமாயிருந்தது அவனுக்கு. அதைச் சொல்வதுபோல வந்துநின்றான் அஜந்தன்.
“டேய் தெரியாதமாதிரி நடிக்காத! மரியாதையா உன்ர தங்கச்சிய எனக்குக் கட்டிவை. இதுக்கு மேலயும் பொறுக்க முடியாது!”
அவன் கேட்டவிதத்தில் வாய்விட்டுச் சிரித்தான் செந்தூரன்.
“உனக்கு என்னை பிடிச்சிருக்கு தானே?” அவசரமாக அடுத்த கேள்வியை கேட்டான் அஜந்தன்.
“என்னடா ஒரு மார்க்கமான கேள்வியெல்லாம் கேக்கிற?”
“வேற வழி? உன்ர தங்கச்சி எதைக் கேட்டாலும் அண்ணாவோட கதை, அண்ணாவோட கதை எண்டு கிளிப்பிள்ளைக்கு சொன்னமாதிரியே சொல்லுறாள்.” என்று சலித்துக்கொண்டான் அவன்.
“அது மச்சான்.. நாங்க படிச்ச மாப்பிள்ளையாத்தான் தேடுறோம்.” முகமெங்கும் பொங்கிய சிரிப்புடன் சொன்னான் செந்தூரன்.
“ஓ..! நீங்க அந்..த வீட்டு மாப்பிள்ளை எண்டு காட்டுறீங்க போல. படிச்ச மாப்பிள்ளை தேடுறதுக்கு அவளை உன்ர தங்கச்சியா விட்டு வச்சாத்தானே தேடுவ. அவள் என்ர மனுசி. என்ர மனுசிக்கு நீ படிச்ச மாப்பிள்ளை தேடுவியோ?” கடுப்புடன் சண்டைக்கு வந்துவிட்டான் அவன்.
“பிறகு என்னத்துக்கு பிடிச்சிருக்கா எண்டு கேட்டாய்?”
“அது.. சும்மா சம்பிரதாயத்துக்கு.”
“நீ கேட்ட விதம் சம்பிரதாயம்?” நக்கலாகக் கேட்டான் செந்தூரன்.
“விடுடா விடுடா! என்னைப்பற்றி உனக்குத் தெரியும். உன்னைப்பற்றி எனக்குத் தெரியும். பிறகும் எதுக்கடா நம்மை நாமே கேவலப்படுத்துவான்.”
“எப்ப கல்யாணம் வைப்பம்?” அண்ணனாகச் செந்தூரன் கேட்டான்.
“அவள் படிக்கோணுமாம். அத முடிக்கட்டும்.”
“கலியாணத்தை முடிச்சிட்டு படிக்கட்டுமேடா.” அவனுக்கு அவள்தான் என்றானபிறகு எதற்கு சும்மா நாட்களைக் கடத்துவான்? அதோடு இருவரும் ஒரே இடத்தில் காதலர்களாக பணிபுரிவதைக் காட்டிலும் கணவன் மனைவியாக பார்த்துக்கொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினான் செந்தூரன். தேவையில்லாத பேச்சுக்களுக்கு வழியில்லாமல் போகுமே என்று பொறுப்பான அண்ணனாக யோசித்தான்.
“மச்சி! நாளைக்கே எண்டாலும் தாலி கட்ட நான் ரெடி. உன்ர உடன்பிறப்போட கதைச்சு நீயே முடிவுசெய்!” வலு சந்தோசமாகப் பதில் சொன்னான் அஜந்தன்.
இருபக்க வீட்டிலும் எல்லோரும் சம்மதிக்க, “எனக்கு ஓகேதான் அண்ணா. ஆனா, பட்டம் வாங்கினபிறகுதான் கல்யாணம் வைக்கோணும். பிறகு நான் தொடர்ந்து படிக்கிறன்.” என்றுமட்டும் சசி சொன்னாள்.
அவளின் விருப்பம் போலவே நாளைக் குறித்துவிட்டு, கல்யாண வேலைகளை ஆரம்பிக்க பட்டமளிப்பு விழாவும் வந்திருந்தது. கோலாகலமாக நடந்தேறிய பட்டமளிப்பு விழாவில் கவின்நிலா முதன்மையாக அத்தனைபேரும் தங்களுக்கான பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
ஐந்து வருடக் கற்றல். எத்தனையோ மன அழுத்தங்கள், தொடர முடியாத சூழ்நிலைகள், கண்ணீர்கள், கவலைகள், கஷ்டமான காலங்கள் என்று அத்தனையையும் மனா உறுதி என்கிற ஒன்றினால் மட்டுமே கடந்து, இன்று கரையை தொட்டிருந்தனர் மாணவர்கள். அதற்கான மிகச்சிறந்த பெறுபேறு அவர்களுக்கான பட்டங்கள்! வாழ்வில் நாமும் சாதித்திருக்கிறோம் என்று எண்ண வைக்கவும், வருங்காலம் பற்றிய கனவுகளை நம்பிக்கையோடு முன்னெடுக்கவும் தூண்டும் நாளாகவும் அமைந்திருந்தது இந்த நாள்!
எல்லோர் முகத்திலும் சந்தோஷமும் மகிழ்ச்சியும்! கவின்நிலாவின் கண்கள் தன்னவனைத் தேடித் தேடி சோர்ந்துபோயிற்று!
சசியிடம் கேட்போமா வேண்டாமா என்று அவள் போராடிக்கொண்டிருந்த பொழுதினில், “இனி ஒரே கல்யாணக் கனவுதான் போல?” என்று சசியைக் கேலி செய்தாள் துஷாந்தினி.
“கல்யாணமா?” அதிர்ச்சியை மறைக்கமுடியாமல் கேட்டாள் கவின்நிலா. ஒருவார்த்தை சொல்லமுடியாத அளவுக்கா போய்விட்டாள்?
அவளின் அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்டு, ஒன்றுமே தெரியாதுபோல, “கட்டாயம் வாடி என்ன!” என்றாள் சசி துஷாந்தினியிடம்.
“எனக்கு ஒருவார்த்தை சொல்லேலையடி நீ? என்ன கூப்பிடவும் இல்ல.” சசியின் பாராமுகமும் சேர்ந்து தாக்க தொண்டை அடைக்கக் கேட்டாள் நிலா.
முகம் கோபத்தில் சிவக்கத் திரும்பினாள் சசி. “சொன்னா நீ வருவாய். நீ வந்தா அண்ணா வரமாட்டான்! என்ர அண்ணா தன்ர கையால எடுத்துத் தார தாலிதான் என்ர கழுத்தில ஏறவேணும். தயவுசெய்து நீ வந்து அத இல்லாம ஆக்கிப்போடாத. இத உனக்காகவும் தான் சொல்லுறன்.” பட்டமளிப்பு விழாவுக்கு வா அண்ணா என்று அவ்வளவு கெஞ்சியும் வராதவனின் மேலிருந்த கோபம், இவளால்தான் என்று கவின்நிலா மீது பாய்ந்திருக்க, விருட்டென்று அங்கிருந்து சென்றிருந்தாள் சசி.
அவள் வார்த்தைகளை ஜீரணித்துக்கொள்ள சற்றுநேரம் பிடித்தது கவின்நிலாவுக்கு. அருகிலிருந்த துஷாந்தினி அவள் கரத்தைப் பற்றி அழுத்திக்கொடுத்தாள்
“செந்தூரன் அண்ணா வவுனியாவுக்கு வரமாட்டன், கொழும்பில கலியாணத்தை வைப்பம் எண்டவராம். இவள் ஒற்றைக் காலில நிக்கிறாள் இங்கதான் நடக்கவேணும் எண்டு. அந்தக் கோபத்தில் கத்திப்போட்டு போறாள், நீ பெருசா எடுக்காத.” துஷாந்தினி மெல்லத் தேற்றவும், தலையை மட்டும் அசைத்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.
என்னதான் சசியின் கோபத்திலிருக்கும் நியாயம் புரிந்தாலும், திருமணம் பற்றி சொல்லாதது வேதனையளித்தது அவளுக்கு. தன்னவன் செய்ய இருக்கும் தவறைத் தடுத்தே ஆகவேண்டும் என்று மனம் உந்த ஃபோனை எடுத்தாள்.
அவனுக்கு மெசேஜ் அனுப்பப் போகிறோம் என்கிற எண்ணமே அவளுக்குள் சிலிர்ப்பையும் கண்ணீரையும் ஒருங்கே வரவழைத்தது.
“பிரிவு நமக்கு மட்டுமே சொந்தமானதா இருக்கட்டும். நம் குடும்பங்கள் என்ன பாவம் செய்தார்கள்? சசியின் கல்யாணத்துக்கு நான் வரமாட்டன். நீங்கள் வரவேணும். என்ர செந்தூரன் அவரின்ர தங்கச்சிட கலியாணத்தை எந்தக் குறையுமில்லாம தானே முன்னுக்கு நிண்டு நடத்தி வைக்கவேணும். அது உங்கட கடமை. அதை செய்றதுலதான் உங்கட கௌராவமும் இருக்கு. உங்களுக்கான சந்தர்ப்பங்களை தவற விடாதீங்கோ.” என்று அனுப்பிவிட்டாள்.
அவன் பார்க்கப்போகும் அந்த நொடிக்காக, இருவரின் பார்வையும், எண்ணமும், சிந்தனையும் ஒரே புள்ளியில் குவியும் அந்தக் கணத்துக்காக அவள் காத்திருக்க மென் சாம்பலில் இருந்த அந்த இரண்டு குட்டிச் சரிகளும் சட்டென்று நிலத்துக்கு மாறின. ‘பாக்கிறான்..’ உடலெங்கும் சிலிர்க்க, கண்ணோரங்கள் கண்ணீரால் நனைந்தன.
‘பதில் அனுப்புவானோ..?’ எதிர்பார்த்து ஏமாந்தவளின் உள்ளம், அவனோடானா ஒரு கோப்பைத் தேநீருக்காக பெரிதும் ஏங்கிப் போயிற்று!