தொடுதிரையில் மின்னிக்கொண்டிருந்த தொலைபேசியை தொட்டால் போதும். அவன் குரலைக் கேட்டு உயிருக்குள் நிரப்பிக்கொள்ளலாம் தான்.
ஆனால்..
ஒரு தேநீர் கோப்பையின் படத்தை மட்டும் அனுப்பிவிட்டு, அதற்குமேல் முடியாமல் ஃபோனை தூக்கிப் போட்டுவிட்டு தலையணையில் முகம் புதைத்து கண்ணீர் உகுத்தாள் கவின்நிலா.
அந்தக் கோப்பையின் மீதே நீண்ட நேரமாய் நிலைத்திருந்தது செந்தூரனின் விழிகள்.
அஜந்தன் குடும்பத்தினர், செந்தூரன் குடும்பத்தினர் என்று எல்லோருமே கொழும்புக்கு வந்திருந்தனர். கல்யாண உடைகள், நகைகள் என்று திருமணத்துக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டார்கள். அஜந்தன் வேறு தனியாக சசியை கடத்திக்கொண்டுபோய் தனக்குப் பிடித்தவைகளை வாங்கிக் கொடுத்தான். அப்படியே ஹோட்டலில் உணவையும் முடித்துக்கொண்டு வீடு வந்து சேர இரவாகியிருந்தது.
கேலி, சிரிப்பு, சந்தோசம் என்று எல்லோர் மனமும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. பெண்கள் வாங்கிவந்த ஆடைகளை உடுத்திப்பார்க்க, ஆண்கள் இலகுவாக அமர்ந்திருந்து அவர்களைக் கேலியில் ஒருவழியாக்கிக் கொண்டிருக்க அதையெல்லாம் ரசித்துக்கொண்டிருந்தான் செந்தூரன்.
அதுவும் அம்மா மீதான அப்பாவின் கேலி, அம்மாவின் முறைப்பு, “பாரடா தம்பி, கொப்பருக்கு இளமை திரும்புதாம்.” என்கிற அவரின் பதிலடியில் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருந்தான் செந்தூரன்.
இதுநாள் வரை அந்த வீட்டின் தலைவனாயிருந்த அப்பா, “என்ன தம்பி இப்படிச் செய்தா சரிதானே?” என்று அவனிடம் கேட்டுச் செய்யும்போதும், “தம்பி, மாப்பிள்ளை வீட்டுக்காரர் இப்படிச் சொல்லீனம் அப்பு. என்ன சொல்ல?” என்று அவனிடம் கலந்தாலோசிக்கையிலும் புதுவிதமான சந்தோசத்தை உணர்ந்தான். பொறுப்பான அண்ணனாய் நின்று அனைத்தையும் கவனமாகச் செய்கையில் அதனால் உண்டாகும் நிறைவே தனிதானே. புதுமனிதனாய் அவனே அவனுக்குத் தெரிந்தான்.
மகன் பக்குவப்பட்ட மனிதனாய் மாறுகையில், அப்பா தானாக பொறுப்புக்களை மெல்ல மெல்ல மகனிடம் கையளிப்பதென்பது நம் குடும்பங்களின் மிகப்பெரிய அழகியல் அல்லவா! அதையெல்லாம் மிக மிக திருப்தியாய் அனுபவித்தவன் மெல்ல எழுந்துகொண்டான்.
“என்னப்பு? ஏதாவது குடிக்கத் தரவா?” சம்மந்தியாருடன் சேலைகளைப் பற்றிய முக்கிய கலந்தாலோசனையில் இருந்தாலும் இந்திராணி மகனின் அசைவைக் கவனித்துவிட்டார்.
“ஒண்டும் வேண்டாம்மா. குளிக்கப்போறன்.”
“சரியப்பு. சாப்பாடு போடுறன், குளிச்சிட்டு வந்து சாப்பிட்டுப் போய்ப்படு. வேல வேல எண்டு உன்னை நீயே கெடுக்காத. வாழத்தான் உழைக்கிறது!” இரண்டு வரிகளிலேயே வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லி அனுப்பினார் இந்திராணி.
ஆனால், அவனது வாழ்க்கை எங்கோ தூரத்திலேயே இருந்துகொண்டு அவனை அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறாளே! அவள் அவனது கை சேரும்வரை அவனது ஓட்டம் ஓயாதே!
இந்த எண்ணமே மனதில் வெம்மையை பூசிக் சென்றது. அப்படியே பூத்தூறல்களாய் கொட்டிய நீரின் கீழே சென்று நின்றுவிட்டு வந்து காற்றாட பால்கனியில் நின்றான். குளிர் நீரில் நனைந்துவிட்டு வந்த தேகத்துக்கு இன்னுமே காற்று வந்து சுகம் சேர்த்தாலும் மனதில் அமைதியில்லை. வெறுமையாய் தெரிந்த வானில் நிலாவைத் தேடி அலைந்தது அவன் விழிகள்.
தங்கைக்கு திருமணம். அவன் வீட்டில் முதன் முதலாக அவன் பொறுப்பேற்று நடக்கும் மங்களகரமான விஷயம். எத்தனை மகிழ்வான தருணம் இது. அவளில்லாமல் முழுமையடைய மாட்டேன் என்றது.
‘ஓடிப்போய் அவளுக்கே தெரியாம பாத்துட்டு வந்துடுவோமா. ஒரு தங்கைக்கு என்ன பத்து தங்கைக்கே கல்யாணம் கட்டி வச்சுடுவன்..’
‘ப்ச்! அவளுக்கும் இப்படித்தானே இருக்கும்.’
‘இருக்கட்டும்! என்னைப் பாத்து அப்படிச் சொன்னவள் எல்லோ!’ மனம் கேளாமல் அவள் அனுப்பிய மெசேஜ்ஜை எடுத்துப் பார்த்தான். எல்லாவற்றையும் விட ‘என்ர செந்தூரன்’னிலேயே விழிகள் நிலைத்திருந்தது. அவனைச் சொந்தம் கொண்டாடுவதில் அவளைக் கேட்டுத்தான்! உரிமை தொனிக்கும் அந்த அழைப்பிலேயே மனம் கட்டுண்டு நின்றது!
ஆனால், அவள் சொன்ன வார்த்தைகள் மீது மிகுந்த கோபம் இன்னுமே கொண்டிருந்தான்.
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
நீ இல்லா உலகத்தில்
நான் வாழ மாட்டேனே
என்னோடு… நீ இருந்தால்…
கைகளை பால்கனி மதிலின் மேலே ஊன்றி கண்களை மூடிக்கொண்டவனின் உயிரைத் தொட்டது கைபேசியின் இசை! அவன் உள்ளத்து உணர்வுகளை இதைவிட அழகாக வேறெப்படியும் சொல்ல முடியாது என்றே எண்ணினான்.
ஆனால், அவனுடைய நிலாப்பெண் அவனைவிடக் கெட்டிக்காரி. அன்றைக்கே இரண்டே வரிகளில் தன் மனதைச் சொல்லி அனுப்பி இருந்தாளே.
ஒருமுறை ஓய்ந்து மீண்டும் பாடியது செல்பேசி. அது முடியும்வரை கண்களை மூடி அந்த உலகத்துக்குள்ளேயே பயணித்து, செல் ஓயமுதல் எடுத்துக் காதுக்கு கொடுத்தான்.
அந்தப்புறத்தில் பேசியவர்களின் வேண்டுதலுக்குச் சம்மதித்தவனின் உதடுகளில் திருப்தியான புன்னகை ஒன்று வந்து ஒட்டிக்கொண்டது.
சுப நாளொன்றின் சுப முகூர்த்தத்தில் அஜந்தனின் திருமதி ஆகியிருந்தாள் சசிரூபா. அவள் ஆசைப்பட்டபடியே, செந்தூரன் தாலி எடுத்துக்கொடுக்க, அதனை அணிவித்து அவளைத் தன்னவளாய் ஏற்றிருந்தான் அஜந்தன்.
அப்பா அம்மாவை ஓய்வாக அமர்த்திவிட்டு, வீட்டின் தலைமகனாய் வேட்டி சட்டையில் கம்பீரமாய் ஓடியோடி அத்தனை வேலைகளையும் கவனித்த தமையனைக் கண்டு பெருமையில் பூரித்துப்போனாள் சசிரூபா.
“ஏய் பெண்டாட்டி! தாலிய கட்டினவன் இங்க இருக்கிறன் என்னை பாக்காம எங்க பாக்கிறாய்?” அவள் காதோரம் கிசுகிசுத்தான் அஜந்தன்.
செவிமடலைத் தீண்டிய மூச்சுக்காற்றில் தேகம் சிலிர்த்தாலும், “அண்ணா பாவம் என்ன..” என்றாள் கணவனிடம்.
“கவியும் வந்திருந்தா இன்னும் சந்தோசமா இருந்திருப்பான். அவளும் அங்க சரியா கவலைப்பட்டுக்கொண்டுதான் இருப்பாள். எனக்குத் தெரியும்.. நானே வராத எண்டு சொல்லிப்போட்டன்!” சொல்லும்போதே குரல் உடைந்துபோயிற்று அவளுக்கு.
“டேய்! கண்ணம்மா! என்னடா இது? எல்லாம் சரியாப்போகும் நீ அழாத.” காதல் மனைவியின் கண்ணீரை மென்மையாகத் துடைத்துவிட்டான் கணவன். அதைக் கண்டுவிட்டு வேகமாக அங்குவந்தான் செந்தூரன்.
“தாலி கட்டி ஒரு நாள் கூட ஆகேல்ல. அதுக்குள்ளே அவளை அழவச்சிட்டியாடா? இதுக்குத்தான் படிச்ச மாப்பிள்ளையா பாக்கோணும் எண்டுறது..”
கொலைவெறியோடு தமையனை முறைத்த கணவனைக் கண்டு பக்கென்று சிரித்துவிட்டாள் சசி.
“படிக்காட்டியும் என்ர புருஷன் தங்கம் அண்ணா. சும்மா படிக்காதவன் படிக்காதவன் எண்டு சொல்லாத. படிக்காட்டியும் பட்டிக்காட்டான் இல்ல அவர்.”