இலங்கை வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய அறுவைச் சிகிச்சை ஒன்று கண்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது! மூளைச் சாவடைந்த இளைஞனின் இதயத்தை ஒரு பெண்ணுக்கு இதய மாற்று சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பொருத்தியிருந்தார்கள். இலங்கையின் மருத்துவ உலகமே உன்னிப்பாகக் கவனித்த சத்திர சிகிச்சையை நடாத்தியது கவின்நிலா தலைமையிலான வைத்தியர் குழு. இலங்கைக்கே இது ஒரு மைல்கல். நாடெங்கும் அவளுக்கான பாராட்டுக்கள் குவிந்தன.
ரஷ்யாவிலிருந்து வந்தவளை வரவேற்றதே இந்த சவாலான சத்திர சிகிச்சைதான்! அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு கண்டியிலிருந்து வந்தவளை ஊர் மக்களே திரண்டு வந்து வரவேற்கத் தயாராகினர். கோயிலில் விசேட பூசை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பாராட்டு விழாவுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். மிகவுமே சிக்கலான, நுணுக்கமான இந்த சத்திர சிகிச்சையை மிகத் தைரியமாக, சிறப்பாகச் செய்து முடித்தவளை பலரும் வாழ்த்தினர். கனகரட்ணம் பரந்தாமன் பெருமையில் பூரித்துப்போயிருந்தார்.
“என்ர மருமகள்” வார்த்தைக்கு வார்த்தை சிறு குழந்தைபோல அவர் உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருந்தது. இத்தனை நாட்களாய் பெரிய மனிதராய் மட்டுமே பார்த்துப் பழகியவர் சிறு குழந்தை போல “என்ர மருமகள் அப்படிச் செய்தாள், இப்படிச் செய்தாள்” என்று சொல்லி சொல்லி பூரித்தபோது அத்தனை பேருமே வாயைப் பிளக்காத குறையாக அந்த மனிதரைப் பார்த்திருந்தனர்.
கோயிலில் பூசையை முடித்துக்கொண்டு எல்லோரினதும் பாராட்டுக்களையும், மாலை மரியாதைகளையும் பெற்றுக்கொண்டிருந்த மருமகளை, பார்த்து ரசித்திருந்தார் கேபி. அவரின் உள்ளம் சிறுகுழந்தையைப் போல பொங்கித் ததும்பிக்கொண்டிருந்தது. புன்னகை முகமாய் அவரைநோக்கி அவள் வந்தபோது கண்களை கண்ணீர் நிறைத்துவிட, ஆசையாய் உச்சி முகந்தார். எத்தனையோ உரைகளை, எத்தனையோ செமினார்களை, எத்தனையோ பேச்சுக்களை அனயாசமாகப் பேசிய மனிதர், ஒற்றை வார்த்தையின்றி கண்ணீரால் தன் சந்தோசத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார்.
“என்ன மாமா இது? எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான். நீங்களே இப்படி அழுதா?” குழந்தையாக மாறிப்போனவரை பாசத்தோடு அரவணைத்துக்கொண்டாள் கவின்நிலா.
உண்மைதானே! புடம்போட்ட தங்கமாய் அவளை மாற்றியவர் அவர்தானே! இந்தப் பெயரும் புகழும் அவரில்லாமல் அவளுக்குக் கிட்டியிராதே.
“போதும்! எனக்கிது போதும் செல்லம்! இன்னுமின்னும் புகழோடையும் பெயரோடையும் நீ நல்லா வாழவேணும்! நீ எப்படி வரவேணும் எண்டு கனவு கண்டனோ அப்படி வந்திட்டாய். இது போதும் எனக்கு!” நிறைந்த மனதோடு அவர் சொன்னபோது, அவள் விழிகள் சட்டெனக் கலங்கின.
‘எனக்கு இது போதாதே மாமா? என்ர சந்தோசம் எங்கயோ தனியா நிண்டு கவலைப்பட்டுக்கொண்டு இருப்பாரே..’
வித்தியாசமுணர்ந்து அவரின் பார்வை கூர்மையானபோது, சட்டென விழிகளை அகற்றி அங்கிருந்தவர்களைப் பார்த்துப் புன்னகைத்தாள். அதற்காகவே காத்திருந்தவர்கள் அவளைச் சூழ்ந்துகொள்ள, அதற்குள் அகப்பட்டுக்கொண்ட மருமகளையே பார்த்திருந்தார் கனகரட்ணம்.
அவள் விழிகள் அவரிடம் ஒரு நொடியில் எதைச் சொல்லிவிட்டு மறைத்தது? சிந்தனையின் வசமாயின அவரின் எண்ணங்கள்.
“இனி என்னம்மா செய்யப்போறாய்?” விசேஷம் எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து இளைப்பாறிய வேளையில் கேட்டார் கனகரட்ணம்.
எல்லோருமே வீட்டிலிருந்தனர். அதுவரை நேரம் நடந்த நிகழ்வுகளைப் பற்றி சந்தோசமாக அளவளாவிக்கொண்டிருந்தவர்களின் பார்வை சட்டென்று அவள் மீது குவிந்தது.
ஒருகணம் அமைதியானாலும் அதைக் கலைத்து, “அத நீங்கதான் சொல்லோணும் மாமா.” என்று அவர் முகம் பார்த்துச் சொன்னாள்.
கேள்வியாக ஏறிட்டவரிடம், “நீங்க கேட்டதை நான் செய்திட்டன். இனி என்ர விருப்பத்தை நீங்க நிறைவேற்றித் தரவேணும்.” என்றாள் தெளிவாக.
தந்த வாக்கினைக் காப்பாற்று என்கிறாள். பதிலிறுக்காமல் மேலே சொல் என்பதாகத் தலையசைத்தார் கனகரட்ணம்.
“கிட்டத்தட்ட ஏழு வருசத்துக்கு முதல், ‘பதினெட்டு வயசில எனக்கு ஒண்டும் தெரியாது, அப்ப எடுக்கிற முடிவெல்லாம் சின்னப்பிள்ளைத்தனமா இருக்கும், இருபத்தஞ்சு இருபத்தாறு வயசில படிச்சு முடிச்சு ஒரு தொழில் கைல இருக்ககேக்க எது சரி எது பிழை எண்டு விளங்கும், அப்பதான் மனுசரை எடைபோடத் தெரியும்.’ எண்டு சொன்னீங்க மாமா. நீங்க சொன்ன எல்லாமே, படிப்பு, வேலை, வயசு எல்லாமே இப்ப இருக்கு. இப்பவும் அவரைத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. இனி நீங்கதான் சொல்லோணும் மாமா.” என்று தெளிவாகச் சொல்லி, அன்று கொண்ட அவர்களது நேசம் வெறும் ‘இனக்கவர்ச்சி அல்ல!’ என்று நிரூபித்தாள்.
அதைவிட, அவரின் வார்த்தைகள் ஒன்றைக்கூட விட்டுவிடாமல் அத்தனையையும் சுட்டிக் காட்டினாள்.
அன்றைக்கு எதையெல்லாம் குறை என்று அவர் முன்வைத்தாரோ அத்தனையையும் நிறைவாக்கிவிட்டு, என் விருப்பம் இதுதான் என்று வலியுறுத்திச் சொன்னவளின் வார்த்தைகளில் அவரின் பார்வை ஒருமுறை அங்கிருந்த எல்லோரையும் தொட்டுவிட்டு வந்தது.
“எங்களுக்கு விருப்பமில்லை எண்டு சொன்னா?” அவர் தொடுத்த ஒற்றை வினாவில் கொந்தளிக்கத் துவங்கியது அவள் மனது.
“அதுக்கு நீங்க நியாயமான காரணம் சொல்லோணும் மாமா. சும்மா அவரை ஒதுக்கேலாது. அந்தளவுக்கு அவர் எதுலயும் குறைஞ்சவரும் இல்ல. என்னத்துக்காக விருப்பமில்லை எண்டு சொல்லுறீங்க?” அன்று வாய்மூடி நின்றவள் இன்று ஆணித்தரமாய்க் காரணம் கேட்டாள்.
வீட்டினரிடம் கேள்வி கேட்கும் நிமிர்வை இடைப்பட்ட காலத்தில் அவர்கள் வளர்த்துக்கொண்ட தகுதி உருவாக்கிக் கொடுத்திருந்தது!
அதேநேரம் ஒற்றைக் கேள்வியைத்தான் அவர் கேட்டார். அந்த ஒற்றைக் கேள்வியிலேயே அவளின் மனக்குமுறல் அத்தனையும் வெளிவரத் துவங்கியிருந்தது.
“அண்டைக்கு தகுதி இல்ல, தராதரம் இல்ல, படிக்கேல்ல எண்டு என்னென்னவோ அவரைப்பற்றிக் குறையாச் சொன்னீங்க. இண்டைக்கு, படிச்ச நீங்க செய்றதை விட கூடுதலா அவர் செய்றார் மாமா. உங்களுக்கு இருக்கிற அதே மாதிரியான மதிப்பும் மரியாதையும் அவருக்கும் இப்ப இருக்கு. உங்களுக்கு எந்த விதத்திலையும் அவர் குறைஞ்சு நிக்கேல்ல! தனக்கு வராத படிப்பை எத்தனை பிள்ளைகளுக்கு வர வைக்கிறார் தெரியுமா? எத்தனை பிள்ளைகளுக்கு அம்மாவும் அப்பாவுமா இருக்கிறார் தெரியுமா? பலர நல்ல இடத்தில தூக்கிவிட்டது அவரின்ர கை மாமா. அந்தக் கையைப் பிடிக்க எனக்குத்தான் தகுதி இருக்கா எண்டு தெரியேல்ல.” சொல்லிக்கொண்டு போனவள் தொண்டை அடைத்துக்கொண்டு வரவும் பேச்சை நிறுத்திவிட்டிருந்தாள்.
‘உன்ன பாக்காம உன்னோட கதைக்காம, உன்னோடான ஒரு கப்பு தேத்தண்ணி இல்லாம என்னால இருக்கேலாது நிலா’ என்றவனை அல்லவா என்னைப் பார்க்கவும் வராதே என்று தள்ளி நிறுத்தினாள். பிரிவைச் சொன்னபோது வலியை விழிகளில் காட்டி, நம்பமாட்டாமல் அவன் அவளைப் பார்த்த காட்சி கண்முன்னே வந்துநின்று வதைத்தது. எல்லையை தாண்டப் புறப்பட்ட கண்ணீரை இமைகளால் தடுத்து நிறுத்தி வைத்தாள்.
அழும் நேரமல்ல இது! அவனை நிரூபிக்கும் நேரம்!
“நான்தான் உங்களுக்கு வாக்குத் தந்தனான். அதை அவரும் கடைப்பிடிக்க வேணும் எண்டு கட்டாயமில்லை. ஆனாலும், நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக.. எனக்காக.. இத்தனை வருசமா தனியா இருந்து முன்னுக்கு வந்திருக்கிறார் மாமா. இண்டைக்கு இலங்கை முழுக்க ஃபேமஸ்சா இருக்கிற ‘நிலாஸ்’ இந்த நிலாவுக்காக வந்தது!” தன்னையே காட்டிச் சொல்லும்போது அவள் குரலில் அத்தனை பெருமிதம்.
“‘நிலாஸ்’ அவர் ஒருத்தரோட உழைப்பு. இலங்கை மட்டுமில்லை, ஆசியா முழுக்க ஏற்றுமதி செய்றார். எத்தனையோ பேருக்கு ஒரு முன்னுதாரணமா இருக்கிறார். இந்தளவு தூரத்துக்கு வளந்தாலும் ஒழுக்கத்திலேயோ பழக்கவழக்கத்திலேயோ அவர் மாறவேயில்லை. அண்டைக்கு நான் பாத்த என்ர செந்தூரனாத்தான் இண்டைக்கும் இருக்கிறார். எனக்காக என்னவும் செய்யத் துணியும் செந்தூரன். அவரை என்ன காரணத்துக்காக வேண்டாம் எண்டு சொல்லுறீங்க?” அன்று அவர் சொன்ன அத்தனை காரணங்களையும் ஒன்றுமில்லாமல் தவிடுபொடியாக்கிவிட்டு அசைக்க முடியாதபடிக்கு நிமிர்ந்து நிற்கிறவனிடம் என்ன குறை கண்டாராம் என்கிற கோபமெழுந்தது அவளுக்கு.