இத்தனை நாட்களாய் தன் மனதைச் சற்றேனும் காட்டிக்கொள்ளாதவள் இன்று இத்தனை ஆணித்தரமாய் வாதாடும்போது, வியப்போடு பார்த்திருந்தனர் அவளது குடும்பத்தினர். அவர்களைக் கவனிக்கும் மனநிலையில் அவள் இல்லை. தன்னவனுக்காகப் போராடிக்கொண்டிருந்தாள்.
“அண்டைக்கு நீங்க சொன்னதுல ஒரு நியாயம் இருந்தது. நான் சின்னப்பிள்ளைதான். படிக்காம காதல் எண்டு சொல்லுறது பிழைதான். ஆனா இண்டைக்கு? இண்டைக்குமா எனக்கு ஆட்களை எடைபோடத் தெரியாது எண்டு சொல்லுறீங்க? அண்டைக்கு இனக்கவர்ச்சி, வயசுக்கோளாறு, நஞ்சு எண்டு என்னென்னவோ சொன்னீங்க. அந்த வயசில மனம் அப்படித்தான் தடுமாறும் எண்டு சொன்னீங்க. இல்லை எண்டு ஏழு வருசத்துக்குப் பிறகு நிரூபிச்சிருக்கிறன் மாமா. இப்பவும் விருப்பமில்லை எண்டு சொன்னா என்ன அர்த்தம்? இன்னும் என்ன செய்யோணும் உங்களுக்கு? நியாயம் இல்லாத மறுப்பை என்னால ஏற்றுக்கொள்ள முடியாது மாமா. இத உங்களிட்ட எதிர்பார்க்கவும் இல்ல.” என்றாள் ஏமாற்றமாக.
அவனை இன்னமும் ஏற்க முடியவில்லை என்றால் எப்படி? அந்தளவுக்கு அவள் என்ன உலகத்திலேயே இல்லாத பெண்ணா? படித்து முடித்து வந்துவிட்டாள் என்று எப்படியும் அறிந்திருப்பான். போதாக்குறைக்கு அவள் செய்த சத்திர சிகிச்சை பற்றி முழு இலங்கையுமே பேசிக்கொண்டிருக்கிறது. ‘நானாக கூப்பிடுகிறேன்’ என்றவள் இன்னும் அழைக்கவில்லையே என்று அவன் மனம் ஏங்கிப் போய்விடாதா?
இத்தனை நாட்களைக் கூட எப்படியோ கடந்தாயிற்று. எல்லாவற்றையும் தாண்டி வந்துவிட்டோம் என்றானபிறகு கடக்கும் ஒவ்வொரு வினாடியும் மிகக் கொடுமையாய்க் கடந்துகொண்டிருந்தது.
ஆற்றாமை மிகவுற, “அவரில்லாத ஒரு வாழ்க்கை எனக்கில்லை மாமா. இன்னும் எவ்வளவு காலத்துக்கு எங்களை பிரிச்சு வச்சு சந்தோசப்படப்போறீங்க எண்டு பாப்போம்!” என்றவள் எழுந்து அறைக்குள் போகமுயல, தடுத்தார் கனகரட்ணம்.
‘இன்னும் என்ன மாமா சொல்லப்போறீங்க?’ கலங்கிவிட்ட விழிகளால் அவள் ஏறிட, இதமாகப் புன்னகைத்தார். “நீ இதைப்பற்றிக் கதைச்சு ஏழு வருசமாச்சு நிலா. உன்ர மனதில என்ன இருக்கு எண்டு இதுவரைக்கும் சின்னதா கூட காட்டிக்கொள்ளேல்ல. இப்பவும் எவ்வளவு ஆழத்துக்கு உன்ர மனசில அந்தத் தம்பி இருக்கிறார் எண்டு தெரியாது. அது தெரியாம உன்ர கல்யாணம் பற்றி நாங்க முடிவு எடுக்கேலாது. அதனாலதான் அப்படி ஒரு கேள்வி கேட்டனான். மற்றும்படி, அந்தத் தம்பி நல்ல பிள்ளைதான். அவருக்கு நீதான். உனக்கு அவர்தான். இத நாங்க கொஞ்சக் காலத்துக்கு முதலே முடிவு செய்திட்டம்.” என்று அவர் சொல்ல சொல்ல ஆனந்த அதிர்ச்சியில் விரிந்த அவள் விழிகள், ‘உண்மையாவா?’ என்று பெற்றோர்களிடம் கேட்க, அவர்களும் சந்தோஷமாகத் தலையசைத்து ஆமாம் என்று சொன்னபோது அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரியத் துவங்கிற்று!
“தேங்க்ஸ் மாமா!” துள்ளலோடு சொன்னவளுக்கு உடனேயே அவனை அழைக்கக் கையும் காலும் பரபரத்தது.
“முதலே சொல்லியிருந்தா அவரையும் கூப்பிட்டு இருப்பேனே மாமா..” ஆனந்தமாய் உரைத்தவள், “தேங்க்ஸ் பா!” என்று சலுகையோடு தகப்பனிடமும் சந்தோசம் கொண்டாடினாள்.
“இவ்வளவு காலமும் இதைப்பற்றி நீயா ஒருவார்த்தை கேக்கேல்லையே, ஏன் நிலா?” உள்ளே ஓடப்பார்த்தவளைப் பிடித்துவைத்துக் கேட்டார் கனகரட்ணம்.
பட்டப்படிப்பை முடித்ததும் கேட்பாள் என்றுதான் நினைத்தார். ரஷ்யாவிலிருந்து வந்தபிறகாவது கேட்பாள் என்று நிச்சயமாக எதிர்பார்த்தார். அதன்பிறகான ஒருமாதமும் அவள் கண்டியில் இருந்தபோதிலும் தான் செய்யப்போகும் சத்திர சிகிச்சையைப் பற்றித் தினமும் அவரோடு மணிக்கணக்கில் கலந்தாலோசித்தவள் இதைப்பற்றிக் கதைக்கவேயில்லை. உண்மையிலேயே எதிர்பார்த்து ஏமாந்துபோனார் என்றுதான் சொல்லவேண்டும். இன்றும் அவராகத்தானே ஆரம்பித்தார்.
இப்போது அவள் விழிகளில் ஒரு தீவிரம் வந்தமர்ந்தது. “நானா கேக்கிறதை விட நீங்களா தரவேணும் மாமா. நீங்களாத்தான் பிரிச்சீங்க. நீங்களாத்தான் சேர்த்தும் வைக்கோணும்! அதுதான் எங்கட அன்புக்குக் கிடைக்கிற சரியான அங்கீகாரமா இருக்கும் எண்டு நினைச்சன்.” என்றவளைப் பார்த்துப் புன்னகைத்தார் கனகரட்ணம் பரந்தாமன்.
அவருக்கே சவால் விட்டிருக்கிறாள். எதிர்த்துப் பேசாமல், அடம் பிடிக்காமல், அத்துமீறாமல், அவருக்கே தெரியாமல் அவரிடமே சவால் விட்டிருக்கிறாள். விட்டது மட்டுமில்லாமல் வென்றும் காட்டியிருக்கிறாள்! தோற்ற உணர்வு சற்றுமில்லை அவருக்கு.
“அவரை வர சொல்லட்டா மாமா. பாவம், எப்ப கூப்பிடுவன் எண்டு எதிர்பார்த்துக்கொண்டு இருப்பார்.” அந்தக்கணமே அவனைக் கண்டுவிடத் துடித்தவள், அவன் நினைவில் விழிகள் கலங்கச் சொன்னாள்.
“கூப்பிடம்மா. என்றைக்குமே எங்க எல்லோரின்ர ஆசையும் நீ சந்தோசமா வாழவேணும் என்றது மட்டும் தான். உன்ர சந்தோசம் அந்தத் தம்பி எண்டு தெரிஞ்சபிறகும் மறுப்பமா நாங்க?” அவரின் கேள்வியில் சந்தோஷக்கண்ணீர் பொங்கிற்று.
“தேங்க்ஸ் மாமா!” என்று துள்ளிக்கொண்டு உள்ளே ஓடியவளை பார்த்திருந்தவர்களின் கண்களும் கலங்கிப்போயிற்று. இந்த உற்சாகம், துள்ளல், துடிப்பு எல்லாமே காணாமலே போயிருந்ததே. அந்த வீட்டின் சந்தோசமே அவள்தான். அவளின் சந்தோஷமோ அவன் மட்டும் தான்! அவளின் சந்தோசத்தை அவளிடமே கொடுத்துவிட்டார்கள்.
ஃபோனைக் கையிலெடுத்தவளுக்கு ‘அவனோடு கதைக்கப்போகிறோம்’ என்கிற எண்ணமே பரவசமாய் நெஞ்சுக்குள் இறங்கி, ஒரு சொட்டுக் கண்ணீரை விழியோரம் சேர்த்து, இதயத்தைப் படபடக்க வைத்தது. தேகமெல்லாம் சிலிர்க்க ஒருகணம் அந்த சந்தோசத்தை அனுபவித்தவளுக்கு, கடைசியாய் அவள் கண்ட அவனது கோபம் முகம் நினைவில் வந்தது.
‘சமாதானப்படுத்துவம்..’ ஏழு வருடங்கள் கழித்து வெகு சீக்கிரமாக எடுத்த முடிவில் உதட்டைக் கடித்துக்கொண்டாள்.
“ஒரு தேத்தண்ணி வித் செந்தூரன்..?” அவனுக்குப் பறந்தது அவளிடமிருந்து ஒரு மெசேஜ். என்னவோ அவளே ஓடிப்போய் அவன் முன்னே நின்றுவிட்டது போன்று ரெயிலின் தடதடப்பு நெஞ்சுக்குள். ஏனோ இத்தனை நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவனை நேரில் பார்த்து அவன் குரலை நேரிலேயே கேட்கவேண்டும் போலிருந்தது.
அடுத்த நொடியே பார்த்துவிட்டான் என்று காட்டியது. உள்ளமெங்கும் சிலிர்க்க அவனது பதிலுக்காகக் காத்திருக்க பதில் வரவேயில்லை.
‘கள்ளன்! கோபத்தில இருக்கிறான்!’
“ஹல்லோ மிஸ்டர் படிக்காதவன்! உங்களைப் பாக்கவேணுமே?” அவனது கோபம் மீது அவளுக்குள் காதல் கிளர்ந்து.
அதையும் பார்த்துவிட்டான். இப்போதும் பதிலில்லை.
“டேய் ரவுடி! என்ன திமிரா? பாத்தும் பதிலில்லை.” ஆசையாய்த் தட்டிவிட்டாள்.
“உங்கள பாக்கோணும். ஓடி வாங்கோவன்.” மனதின் ஏக்கம் மொத்தத்தையும் அந்த ஒற்றை வரியில் எழுதி அனுப்பினாள்.
எப்போதுமே அவன் அனுப்பி அவளை வெட்கத்தில் உதடு கடிக்க வைக்கும் முத்தமிடும் சிவந்த உதடுகளை அவளாக அனுப்பியும் பதிலில்லை. அனுப்புவதையெல்லாம் அடுத்த நொடியே பார்க்கிறான் என்று மட்டும் தெரிந்ததில் காதலைச் சொல்லும் அத்தனை ஸ்மைலிகளையும் வெட்கமே இல்லாமல் தட்டிவிட்டுக்கொண்டேயிருந்தாள்.
“என்னம்மா கதச்சனியா தம்பியோட?” பொறுமையில்லாமல் தேடிவந்து கேட்டார் கனகரட்ணம்.
மொத்தக் குடும்பமும் ஆவலோடு அவர் பின்னே நின்றது.
“இல்ல மாமா. மெசேஜ் அனுப்பீட்டன்.” முகமெல்லாம் பூவாய் மலர்ந்திருக்க சிரித்துக்கொண்டு சொன்னவளைப் பார்த்தபோது, தாங்கள் எடுத்த முடிவு எத்தனை சரியானது என்பதை உணர்ந்துகொண்டார்கள்.
“ஏதும் கோபமோ?” மகள் இந்தளவுக்கு ஏங்குகிறாள், ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகு சம்மதம் கிடைத்தும் கதைத்துக்கொள்ளவில்லை என்றால்..? அவன் மறந்துவிட்டானோ என்கிற மெல்லிய பயம் மேகலாவுக்கு. அன்று அவன் கண்கள் காட்டிய வலி இருக்காது என்று சொன்னாலும் அம்மாவாகப் பயந்தார்.