நிலவே நீயென் சொந்தமடி 23 – 3

“என்னிலையா? அவ்வளவு தைரியம் இருக்காமா அவருக்கு?” அதைப்பற்றிய கவலையே இல்லாமல் கேட்டாள் அவள்.

அவளைப்போல் மெசேஜ் அனுப்பவோ, நடப்பதைக் காண்போம் என்றிருக்கவோ இல்லாமல் தன் ஃபோனை எடுத்து செந்தூரனுக்கு அழைத்தார் கனகரட்ணம்.

அந்தப்பக்கம் அழைப்பை ஏற்றதும், ‘டேய் கள்ளா! எனக்கு ஒரு பதில் இல்ல. மாமா எடுத்ததும் கதைக்கிறாய் என்ன?’ என்று மனதில் அவனோடு சண்டையிட்டாள்.

“தம்பி, நான் நிலாவோட மாமா கதைக்கிறேன். யாழ்ப்பாணத்துக்கு ஒருக்கா வாறீங்களா?”

“இரவுக்கு அங்க நிப்பன் அங்கிள்!” மேலே எந்தக் கேள்விகளுக்கும் அவசியமில்லாத அவனது பதிலில், அவன் ஏற்கனவே புறப்பட்டுவிட்டான் என்பதை உணர்த்த அவர் உதடுகளிலும் புன்னகை மலர்ந்துபோயிற்று.

“சரி தம்பி. கவனமா வாங்கோ, நேர்ல கதைப்பம்!” என்றுவிட்டு வைத்தவருக்கும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. “இரவே வந்திடுவாராம்!” தகவல் சொன்னார் வீட்டினரிடம். அவர்கள் முகத்திலும் புன்னகை அரும்பிற்று.

“ரெண்டுபேருக்கும் ஏதாவது சண்டையா?” இருவரும் கதைத்துக்கொள்ளவில்லை. ஆனால், இவள் மெசேஜ் அனுப்பிய அடுத்த நிமிடமே அங்கு அவன் புறப்பட்டுவிட்டான் என்று தெரிந்ததால் முகம் முழுவதும் தொற்றிக்கொண்ட சிரிப்புடன் கேட்டார்.

“நாங்க எப்பவுமே பிடிக்கிறது சண்டை மட்டும் தான் மாமா!” என்று துள்ளலாய் உரைத்தவள். “இரவுக்கே போய் அவரை பாக்கட்டா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

பொழுதினைச் சுட்டிக்காட்டி மறுக்க மனமில்லை. இத்தனை வருடங்கள் பிரித்து வைத்தது போதாதா? பொறுப்பான பிள்ளைகளுக்குத் தெரியாதா அவர்களின் எல்லை என்னவென்று. சரி என்று சம்மதிக்க, அப்போதே தயாராக ஓடினாள் அவள்.

அந்த வீட்டின் முன்னே காரைக் கொண்டுபோய் நிறுத்தினார் கனகரட்ணம். அவள் புறப்பட்டபோது, தனியாக அனுப்ப மனமில்லை. தான் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு கோபம் கொண்டு தவறான பாதையைத் தேர்ந்தெடுக்காமல் நல்லவழியில் சென்று முன்னேறிய அவனிடம் முறையாக அவளைக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்று நியாயமான மனம் சொல்ல அவளை அழைத்துக்கொண்டு அவரே வந்துவிட்டார்.

அந்த வீட்டைப் பார்த்த கவின்நிலா உணர்வுகளின் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருந்தாள். அதுவரை அவளைப் பற்றியிருந்த துள்ளல், சந்தோசம், உற்சாகம், துடிப்பு அத்தனையும் மெல்ல அடங்க, கண்ணீர் ஏன் என்றே இல்லாமல் பொங்கிக்கொண்டு வந்தது. இதே இடத்தில் வைத்து முதன் முதலாய் ஆட்டோவில் இருந்தவள் காரத்தைப் பற்றியவனின் கதகதப்புக்காய் உள்ளம் மொத்தமும் ஏங்கிப் பரிதவித்துப் போனது. ஏ…ழு வருடங்கள். ஓடிப்போய் விட்டதுதான். ஆனால், அந்த ஒவ்வொரு நாட்களும் அவள் பட்ட பாடுகள் ஒன்றும் சாதாரணமானவை அல்லவே.

“என்னம்மா இது?” அவளின் உணர்வுகளை அவராலும் உணர்ந்துகொள்ள முடிந்தது. தன்னால் தான் என்று தெரிந்தாலும், அதனால்தானே ஒளிமயமான எதிர்காலம் இருவருக்கும் கிட்டியும் இருக்கிறது.

“இனிக் காலம் முழுக்க ரெண்டுபேரும் சந்தோசமா இருப்பீங்க நிலாம்மா. அதால அழுறதை விட்டுட்டு இறங்கி வா!” என்று அவளைத் தேற்றி அழைத்துக்கொண்டு இறங்கினார்.

வீட்டின் முன்னே நின்ற, அன்று கண்ட அதே கறுப்பு நிற ‘பி எம் டபிள்யு’ கார் அவன் வந்துவிட்டான் என்று உணர்த்த, அதன்மீது அதிகமாய்ப் படிந்திருந்த புழுதி எவ்வளவு வேகமாய் வந்திருக்கிறான் என்பதையும் உணர்த்த, அவனின் மன உணர்வுகளை, ஏக்கங்களை மிகத் துல்லியமாய் உணர்ந்து கொண்டவளுக்கு மீண்டும் கண்கள் கலங்கிற்று! வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த கணத்தில் அவள் அவளாய் இல்லை. உணர்வுகளின் பிழம்பாய் தள்ளாடிக் கொண்டிருந்தாள். அவன் மார்பில் சாய்ந்து ஒருமுறை கதறித் தீர்த்துவிட வேண்டும் போலிருந்தது. அவனைக் காணப்போகிறாள்.. கண்ணாரக் கண்டுவிடப்போகிறாள்.. உள்ளமெங்கும் வியாபித்த பரவசத்தில் மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. நிலைகொள்ள முடியாமல் விழிகள் அலைபாய நின்றிருந்தாள்.

“வாங்கோ அண்ணா. வாம்மா வாவா!” இவர்களின் வரவுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த கல்யாணி பரபரப்பாய் ஓடிவந்தார். அவர் குரலைக்கேட்டு மயில்வாகனமும் வாசலுக்கே விரைந்து வந்து இன்முகமாய் வரவேற்றார்.

ஆர்வமாய் ஓடிவந்த சசி ஒருகணம் உறைந்துநின்றாள். தோழிகள் இருவர் கண்களிலும் கண்ணீர். பட்டமளிப்பு விழாவன்றுக்குப் பிறகு இன்றுதான் காண்கிறார்கள். ஓடிவந்து அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டு விம்மினாள் சசி.

“சாரிடி. அண்ணாவை கொழும்புக்கு துறத்திப்போட்டாய் என்ற கோபத்துல கதைக்காம விட்டுட்டன். ஆனா, நீ இவ்வளவு வருசத்துக்குப் பிறகும் டீனை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாய். இதைவிட என்ர அண்ணாக்கு வேற மரியாதை கிடைக்காதடி!” என்று அவள் அழவும்,

“லூசு! நீ சொல்லித்தான் உன்ர மனம் எனக்குத் தெரியோணுமா?” அவளைச் சமாதானம் செய்தாலும் உள்ளம் தன்னவனைத் தேடிக்கொண்டிருந்தது.

சம்பிரதாயத்தைத் தாண்டி மேலே பேச இயலாமல் பெரியவர்களையும் கலங்கும் விழிகளால் அவனைத் தேடிக்கொண்டிருந்த கவின்நிலா தடுத்துக்கொண்டிருந்தாள். மரியாதைக்கேனும் அவர்களோடு ஒருவார்த்தை பேசமுடியாமல் மாடியையே சுற்றிக்கொண்டிருந்தது அவள் விழிகள்.

“தம்பி!” அவள் படும்பாட்டைக் காண இயலாமல் சத்தமாக அழைத்தார் கல்யாணி.

“இப்பதான் வந்து, குளிக்க எண்டு மேல போனவன்.” என்று அவர் சொல்லும்போதே, அறையை விட்டு வெளியே வந்து படிகளில் இறங்கத் துவங்கியிருந்தான் செந்தூரன்.

கண்களை நிறைத்த கண்ணீரோடு, நடுங்கும் இதழ்களை இறுகப் பற்றியபடி அவனையே பார்த்துக்கொண்டு நின்றவளைக் கண்டதும் அவன் நடை நின்றுபோயிற்று!

விழிகள் அவள்மீதே நின்றுவிட, அவனுக்கும் தொண்டை அடைத்துப்போயிற்று!

அன்று அவன் வாங்கிப் பரிசளித்திருந்த அதே சாரி நளினமாய் மெல்லிய மேனியைத் தழுவியிருக்க, கல்வி கொடுத்த களையோடு நிமிர்வாய் கம்பீரமாய் அழகிய மங்கையாய் நெஞ்சை நிறைத்தவளிடமிருந்து விழிகளை அகற்றமுடியவில்லை. உடலின் ஒவ்வொரு அணுவும் தன்னிடம் தாவிடத் துடிக்க கட்டுப்படுத்திக்கொண்டு நிற்கிறாள் என்பதை நடுங்கிய இதழ்கள் சொல்ல, அவன் நிலையும் அப்படித்தான் இருந்தது. கைகளை விரித்து, வா என்று அழைத்து மார்போடு அணைத்து ஓராயிரம் முத்தங்களைப் பதித்து, இத்தனை நாள் பிரிவைப் போக்கிட எழுந்த உள்ளத்து உந்துதலில் தடுமாறிப்போனவன் அப்படியே நின்றான்.

விழிகள் நான்கும் கவ்விக் கலந்து, பிரிய மனமற்று கலங்கிக் கிடந்தன.

எலும்புகள் நொறுங்கிவிடுமோ என்கிற அளவில் ஓடிப்போய் அவளை இறுக்கி அணைத்திருப்பான். அவளும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் பாய்ந்து சென்று அவன் மார்பில் அடைக்கலமாகியிருப்பாள்.

சுற்றி நின்றவர்கள் இருவருக்குமிடையே பொங்கிய உணர்வுகளுக்கு அணைபோட்டுக் கொண்டிருந்தனர். விழிகள் அவளிடமே இருக்க, மீண்டும் அவன் கால்கள் படிகளில் நிதானமாக இறங்கத் துவங்கிற்று!

“உங்களைப் பாக்க ஆசைப்படுவா எண்டு தெரியும் தம்பி. அதான் கூட்டிக்கொண்டு வந்தனான். பிறகு நீயே கொண்டுவந்து விடப்பு!” மருமகளையும் அவனையும் கவனித்திருந்த கேபியின் குரலும் நெகிழ்ச்சியில் தடுமாறி வந்தது. மரியாதையாக ஆரம்பித்தவர் நெகிழ்ந்து உரிமையோடு முடித்தார்.

“கட்டாயம் அங்கிள். நானே கொண்டுவந்து விடுறன்.” அவருக்குத்தான் பதில் சொன்னான். கம்பீரமான அந்தக் குரல் நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு அவள் செவிகளை நிறைத்தபோது தேகம் சிலிர்க்க உள்ளத்துக்குள் உள்வாங்கிக் கொண்டவளால் அவனிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை. உடலின் ஒவ்வொரு அணுவும் அவனிடம் தாவிடத் துடித்தது.

“சரி.. அப்ப நான் வாறன்.” விடைபெற்று எழுந்து வாசலுக்கு நடந்தவர் நின்று அவனைப் பார்த்து, “அங்கிள் எண்டு சொல்லாத அப்பு. அவள் எனக்கு மருமகள். அப்ப நீ எனக்கு மகன். இனி அப்பா எண்டே சொல்லு.” சொன்னவரின் குரல் கடைசியில் சின்னதாய்த் தடுமாறியது.

சட்டென அவன் விழிகளும் அவள் விழிகளும் சந்தித்துக்கொண்டன. ‘என்ர குடும்பமே என்னைக் கொண்டுவந்து உங்களிட்ட தருவீனம். அண்டைக்கு வாறன்.’ சொன்னதை நிறைவேற்றிவிட்டாள் அவனின் நிலா.

“சரிப்பா..” என்றான் சிரித்துக்கொண்டே.

அவர் புறப்பட்டதும், “மேல போய் ரெண்டுபேரும் கொஞ்ச நேரம் கதைச்சிக்கொண்டு இருங்கோ.” என்று கல்யாணி சொல்லவும், “சரி மாமி.” என்றாள் இவள் வேகமாக.

அவசரப்பட்டு விட்டோமோ என்று சொன்ன பிறகுதான் உணர்ந்தாள். சங்கடத்தோடு அவள் நிமிர்ந்து பார்க்க, சசி சத்தமாகச் சிரிக்கத் துவங்கியிருந்தாள். “மாடு! மானத்த வாங்காம பேசாம இரடி!” சிவந்துவிட்ட முகத்தோடு முணுமுணுத்தவளுக்கு வெட்கமாய் போயிற்று!

சின்னச் சிரிப்போடு, “நாங்க கோவிலுக்குப் போயிட்டு வாறம். சசி நீயும் வா.” என்றவர், “அவளைக் கூட்டிக்கொண்டு மேல போ தம்பி!” என்று அவர்களை மேலே அனுப்பிவைத்தார்.

“அண்ணா ஆகத் துள்ளினான் எண்டு வை, படக்கெண்டு இறுக்கி அணைச்சு ஒரு உம்மா குடுத்துவிடு!” என்று காதுக்குள் கேலி பேசி அவளைச் சிவக்க வைத்து அனுப்பிவைத்தாள் சசி.

அவன் வேகமாகப் படியேற, அவள் ஆர்வம் பாதி மெல்லிய தயக்கம் மீதியாகப் படியேறினாள்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock