அறை வாசலுக்குச் சென்றவளின் பாதங்கள் மெல்லத் தயங்கின. கதவு நிலையைக் கையால் பற்றினாள். ஒருவித சிலிர்ப்போடியது. அந்த அறை இனி அவர்களுக்கானது. அவள் வாழப்போகும் வாழ்க்கை கண்முன்னே அழகழகாய் விரிய, சிலிர்ப்பும் தடுமாற்றமுமாக அந்த அறைக்குள்ளும் வலது காலை எடுத்துவைத்து உள்ளே சென்றாள்.
தனிமை கிடைத்துவிட்டதில் ஆர்வத்தோடு அவள் பார்க்க, எப்போதும்போல கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் செந்தூரன்.
அவனுடைய அமைதியில் மனம் சிணுங்கியது. ‘எத்தன வருசத்துக்கு பிறகு சந்திச்சு இருக்கிறம்.. எப்படி இருக்கிறாய் எண்டாவது கேக்க மாட்டீங்களா?’ அவனோடான தனிமை, இப்படி அமைதியாகப் போவதை அவளால் தாழவே முடியவில்லை. அவன் கைகளுக்குள் அடைக்கலமாகி மார்போடு ஒண்டிக்கொள்ள உடலின் ஒவ்வொரு அணுவும் துடித்துக்கொண்டிருந்தது.
இத்தனை வருடங்கள் போதாதா அவனும் அவளும் தனித் தனித் தீவாக இருந்தது. அவன் காலடிக்கு வந்தும் தூர நிறுத்தி வதைப்பவனின் விலகல் உள்ளத்தைக் காயப்படுத்த, அதுவரை கட்டுப்பட்டு நின்ற கண்ணீர் மீண்டும் உடைப்பெடுக்கும் போலிருந்தது. சட்டென்று அறையை சுற்றிப் பார்ப்பதுபோல் பார்த்தாள். ஒரு அறைதான். அட்டாச் பாத்ரூம் மட்டும் இருந்தது. அவன் முகத்தைப் பாராமல் ஆரம்பித்துவிட்டாள்.
“இந்த ஒரு ரூம் பத்தாது. இதுல ஒரு கதவு வச்சு அந்தப் பக்கம் ஒரு அறை கட்டுங்க. அது எனக்கு வேணும். அப்படியே அதுக்குப் பக்கத்துல டிரெஸ்ஸிங் ரூம் வரோணும். என்ர அறைக்குள்ள இருந்தும் பால்கனிக்கு போறமாதிரி கதவு வரோணும். பால்கனில இருந்து ஒரு படி கீழ போகட்டும். தோட்டத்துக்கு போகவேணும் எண்டா உடன போற மாதிரி இருக்கோணும். என்னால வெளில போய் சுத்திக்கொண்டு எல்லாம் தோட்டத்துக்கு போக ஏலாது.” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, “அப்படியே முதுகுல ஒண்டு போட்டன் எண்டா தெரியும்!” என்றபடி கையை ஓங்கிக்கொண்டு வந்து நின்றான் அவன்.
ஒருகணம் திகைத்தாலும் பக்கெனச் சிரித்துவிட்டாள் அவள். உதட்டில் முளைத்த சிரிப்புடன் கைகளை விரித்துக் கண்களால் தன் பரந்த மார்புக்குள் ஆசையாய் அழைத்தவனின் செய்கையில் அழுகை பொங்க, அப்படியே அவன் கரங்களுக்குள் அவள் சிறைப்பட, “என்ர நிலா!” என்றபடி ஆசையாய் வாரி அணைத்துக்கொண்டான் செந்தூரன்.
அவள் தேகத்தில் நடுக்கமொன்று பெரிதாக ஓடி அடங்கியது! இதற்காகத்தானே.. இந்த நொடிக்காகத்தானே.. இந்த அணைப்புக்காகத்தானே இத்தனை காலமும் காத்திருந்தார்கள்.
மார்பில் ஒன்றிக்கொண்டு கதறித் தீர்த்துவிட்டாள் அவனது நிலாப்பெண்!
“டேய் செல்லம்மா! என்னடா.. அழாதம்மா!” அவனுக்கும் கண்களில் கண்ணீர் தளும்பிற்று.
“ப்ளீஸ் என்னைக் கொஞ்சம் அழ விடுங்கோ. மூச்சு முட்டிப்போய் நிக்கிறன்.” இத்தனை வருடமாக அழாத கண்ணீரை அழுது தீர்த்தாள்.
அன்று அவனைப் போகச் சொன்ன நாளை நினைத்து அழுதாள். தினமும் பள்ளிக்கும் டியுஷனுக்கும் செல்லும்போது அவனில்லாமல் காட்சியளித்த கடையைப் பார்க்கையில் வெடிக்கப் பார்க்கும் நெஞ்சை பல்லைக் கடித்து அடக்கியபடி சைக்கிளை மிதிக்கும் நாட்களை எண்ணி அழுதாள். கடைசியாக அவனைப் பார்க்கலாம் என்று அவள் ஓடிவர கண்ணிலேயே படாமல் மின்னலாக அவன் மறைந்துபோன நாளை எண்ணி அழுதாள்.
“இதுக்கு மேல என்னால முடியாது. நிப்பாட்டு! போதும்!” கற்பனையில் கூட நினைக்கப் பிடிக்காத காட்சி கையணைப்புக்குள் நடந்துகொண்டிருப்பதைக் காணச் சகியாமல் அவன் வெடிக்கவும்தான் கட்டுக்குள் வந்தாள் அவள்.
“தோட்டத்துக்கு போறதுக்கு வழி வேணுமாம் வழி! கோவமா இருக்கிறானே.. அவன சமாதானப் படுத்துவம் எண்டில்ல.. உன்ன..” என்று சொல்லிக்கொண்டு வந்தவன், “எப்பவுமே நீ இப்படித்தான். நான் கோவமா இருந்தா என்னை சமாதானப்படுத்துறதே இல்ல!” என்றுவிட்டு அதற்கு மேலும் முடியாமல் எலும்புகள் நொருங்கிப் போகுமோ என்கிற அளவுக்கு இறுக்கி அணைத்து அவள் இதழ்களில் அழுத்தமாகத் தன் இதழ்களைப் பதித்தான்.
முதல் முத்தம்! கிறங்கி மயங்கிப்போனாள் நிலா!
எத்தனை வருடத்துத் தாபம். தீர்வதற்கு நீண்ட நேரமெடுத்தது. அவன் மெல்ல விடுவித்தபோது செங்கொழுந்தாகிப் போயிருந்தாள் அவனின் நிலா. நிற்கவே முடியாமல் அவன்மீதே சாய்ந்துகொண்டாள். மயக்கத்தில் கிறங்கி மீண்டும் அழைத்தவனின் கண்களை சந்திக்க முடியாமல் அவள் விழிகள் தாழ, “நிலா.. என்னை பாரேன்!” என்று கிசுகிசுத்தான் செந்தூரன்.
“ம்ஹூம்!” அவன் மார்பிலேயே முகத்தை மறைத்துக்கொண்டாள் நிலா. வேண்டுமென்றே அவளின் செவிகளைத் தீண்டி விளையாடியது செந்தூரனின் உதடுகள்.
“பாருடா..!” சன்னக் குரலில் கெஞ்சினான்.
“மாட்டன்!” தன்னை அவனிடமிருந்து பிரிக்காதபடிக்கு, அவனையே இறுக்கிக் கட்டிக்கொண்டவளிடம் மயங்கிப் போனவனின் உதடுகளும் கரங்களும் அத்துமீறத் துவங்க, அவள் மேனி தன்னியல்பாகக் கூசிச் சிலிர்த்து விலகப் பார்த்தது. விடாமல் இழுத்தணைத்தவனின் வேகம் கண்டு மிரண்டுபோனாள் அவனது நிலா.
“செந்தூ..ரன்!” அவன் செய்யும் சில்மிஷங்கள் தாங்காது சிணுங்கியவளை சிவக்க வைத்துவிட்டே விட்டான்.
அடங்காத தாபத்தில் தேகம் தகிக்க, பிறை நிலவு போன்ற நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்துவிட்டு அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான் அவன். மெல்லிய அணைப்புக்கூட போதாமலிருந்து. அவளுக்கும் அதைத்தவிர வேறொன்றும் வேண்டுமாயிருக்கவில்லை. சுகமான அமைதி. அவளின் தலையை வருடிக் கொடுத்தபடி அவனும் அமைதியாகிப் போனான்.
“நான் படிச்ச பள்ளிக்கூடத்துக்கு வந்து, நான் எப்பயோ சொன்னத மனசுல வச்சு, கிரவுண்ட் வாங்கிக் குடுத்து மதில் கட்டிக் குடுத்தவருக்கு என்னை பாக்கோணும் என்ற எண்ணம் கொஞ்சமும் வரேல்ல தானே.. உடம்பு முழுக்கத் திமிர் உங்களுக்கு!” அவனது கைவளையத்துக்குள் இருந்தபடியே கேட்டாள்.
“நீதானே, நீயா கூப்பிடாம வரக்கூடாது எண்டு சொன்னாய்?” அரும்பிய முறுவலோடு சொன்னான்.
“அதுக்காக?” மனச்சிணுக்கத்தோடு கேட்க, “நானும் உன்னைத் தேடினான். நீ கண்ணுலையும் படேல்ல.” என்றவன், நடந்ததைச் சொன்னான்.
“அதெல்லாம் நடந்து முடிஞ்சது. அதையெல்லாம் விட்டுட்டு இங்க பார். இந்த அறைதான் நாங்க வாழப்போற வாழ்க்கை. இங்கதான் எது நடந்தாலும். நானில்லாம உனக்கு எண்டு தனியா எதுவும் இல்ல. நீயில்லாம எனக்கும் எதுவும் இல்ல. இனி வர்ற ஒவ்வொரு நிமிஷமும்.. உன்ர ஒவ்வொரு நிமிசமும் எனக்கு வேணும். இனியும் பிரைவசி அது இது எண்டு சொல்லிக்கொண்டு பக்கத்து அறைக்குக் கூட நீ போக ஏலாது. உடுப்பு மாத்துறதும் இங்கதான்.. படுக்கிறதும் இங்கதான்.. எதுவா இருந்தாலும் இந்த அறைதான்.” என்றவன் கண்ணடித்து, “நீ குளிச்சிட்டு டவலை சுத்திக்கொண்டு வாரதும் இந்த அறையாத்தான் இருக்கோணும். என்னைக் கேட்டா அந்த டவல் இல்லாம வந்தாலும்..” என்றவனின் வாயை அவசரமாகத் தன் கரம் கொண்டு பொத்தினாள் அவள்.
‘சீச்சீ! வெக்கமே இல்லாதவன்!’
அவன் வாயை மூடியவள் கண் சிமிட்டிச் சிரித்த அந்தக் கண்களை எதைக் கொண்டு மூட என்று தெரியாமல் தடுமாறி, செக்கச் சிவந்துவிட்ட முகத்தை மறைக்க வழியின்றி வெளியே ஓட முனைய, எட்டி அவளைப் பிடித்தான் அவன்.
“கதைக்க எண்டு வந்திட்டு ஓடினா எப்படி..”
“அதுக்காக இப்படியா கதைப்பீங்க?” முறைக்க முயன்றபடி கேட்டாலும் விழிகள் அவனைக் காணமுடியாது அங்குமிங்கும் அலைபாய்ந்தது.