அவள் தோள்களைப் பற்றி தன்முன்னே நிறுத்திப் பார்வையால் அளந்தான். பள்ளிக்கூட மாணவியாக இருந்தவள் இன்று முழுமையான பெண்ணாக உருமாறி அவன் கண்களுக்குக் குளிர்ச்சியைப் பரப்பிக்கொண்டிருக்க, ரசனையுடன் வருடின விழிகள்.
“என்ன பாக்கிறீங்க?”
“அம்சமாத்தான் இருக்கிறாய்!” என்றான் கண்ணடித்து.
“உங்கள..” என்றவளுக்கும் சிரிப்புப் பொங்கிக்கொண்டு வந்தது. கண்ணடித்தே அவளைக் கவிழ்த்த அந்தக் கண்களிருந்து விழிகளை அகற்ற முடியவில்லை.
அவள் மயங்கி நின்ற வேளையில் குட்டியாய் பளீரிட்டு அவனை அலைக்கழித்துக்கொண்டிருந்த இடையில் பட்டென்று கிள்ளிவிட்டான்.
“அம்மா!” அவள் துள்ளிக் குதித்து முறைக்க,
“எனக்காகத்தான சாரி கட்டிக்கொண்டு வந்தாய்?” என்றவனின் விழிகளில் அப்பட்டமாய் விஷமம்.
அதை அப்படியே காட்டுகிறவனாய் வெற்றிடையில் கரம்படப் பற்றித் தன்னோடு சேர்த்தணைக்க, “நீங்க வாங்கித்தந்த சாரி எண்டு ஆசையா கட்டிக்கொண்டு வந்தா இவ்வளவு அநியாயம் செய்வீங்களா?” அவன் கைகளை தடுக்க முடியாமல் சிவந்துபோய் அவள் சொல்ல,
“சாரி வாங்கித் தந்ததே இதுக்குத்தான். அதையே அநியாயம் எண்டு சொன்னா?” அவளின் கழுத்து வளைவுக்குள் உதடுகளை பதித்துச் சொன்னவனின் கைகள் இடையில் ஆராய்ச்சியில் இறங்கின.
“உன்ர இடுப்பு ஏன் இவ்வளவு சின்னனா இருக்கு?” கேட்டவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் அவள். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாத கைகள். எங்கெல்லாம் அலைகிறது? அவள் முறைக்க, அவனோ கண்ணடித்துக் கள்ளச் சிரிப்புச் சிரித்தான்.
‘கள்ளன்!’ ஆசை பொங்கியது அவளுக்கு. ‘கண்ணடிச்சே கவுத்திடுவான்!’
அந்த நொடிகளை.. அவனின் குறும்பை துளித்துளியாக ரசித்தவளுக்கு, எல்லோரிடமும் பொறுப்புள்ளவனாக நடந்துகொள்கிறவன் தன்னிடம் மட்டுமே காட்டும் குறும்புத் தனத்தை எத்தனை நாட்களாக இழந்துவிட்டாள் என்கிற எண்ணம் வந்ததும், கலங்கிவிட்ட விழிகளோடு அவனை நெருங்கி நின்று அவன் முகம் பார்த்தாள். ஆசையோடு அவன் கன்னம் தடவினாள்.
“சுகமா இருக்கிறீங்களா?” குரல் தழுதழுக்கக் கேட்டபோது அவனாலும் சட்டென்று பதில் சொல்ல முடியாமல் தொண்டை அடைத்துக்கொண்டது.
“நீ இல்லாம, உன்ன பாக்காம, உன்னோட கதைக்காம எப்படி இருந்திருப்பன் எண்டு நினைக்கிற?” குரலை செருமிச் சரி செய்துகொண்டு அவன் கேட்கையிலேயே மீண்டும் விம்மல் வெடித்தது அவளிடம்.
மார்போடு அணைத்துக்கொண்டவனின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது.
“கஷ்டமான காலம்தான். ஆனா, இண்டைக்கு எவ்வளவு சந்தோசம் சொல்லுங்கோ. நானே சொன்னமாதிரி மாமாவே என்ன கொண்டுவந்து உங்கட கைல தந்திட்டார் பாத்தீங்களா?” என்றாள் ஆறுதலாக.
“ம்ம்..” என்றவன் அவள் தலைமீது தன் தாடையைப் பதித்துக் கண்களை மூடிக்கொண்டான். இன்றைக்கு எல்லாம் சுகம்தான். கடந்துபோன நாட்கள்?
மனம் இறந்தகாலத்துக்குள் நுழைய முனைய, அவனின் அந்தக் கணநேர அமைதியைக் கூட தாங்கமாட்டாமல்,
“கொழும்பு குளோரின் தண்ணில குளிச்சு குளிச்சு நீங்களும் நல்ல ரொமான்டிக் பீசா கவர்ச்சியாத்தான் இருக்கிறீங்க.” என்று அவனை விட்டு விலகிநின்று வம்பிழுத்தாள் அவள்.
“நான் கவர்ச்சியான பீசா உனக்கு? கவர்ச்சி எது எண்டு காட்டவோ?” கேட்டவன் அவளை எட்டிப் பிடித்துச் செய்த வேலைகளில் திக்குமுக்காடித்தான் போனாள்.
முகத்தை நிமிர்த்தவே முடியவில்லை. “கெட்ட ராஸ்கல்! என்ன வேலையெல்லாம் செய்றீங்க?” என்று அடிபோட்டவளுக்கு அழுகையே வந்துவிட்டது.
“என்னை கேஸ் எண்டு சொல்லுவீங்க. உங்களை பீஸ் எண்டு சொல்லக்கூடாது என்ன? சொன்னா இப்படியெல்லாம் செய்வீங்களா?”
எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் சசியின் பிறந்தநாள் அன்று அவன் சொன்ன வார்த்தைகள்.
“அதெல்லாம் நினைவு வச்சிருக்கிறியா?” உள்ளம் நெகிழக் கேட்டான்.
“நினைவா? பாடமாக்கி வச்சிருக்கிறன்.” என்றவள் தன் ஃபோனில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்திருந்த அவனோடான சாட்டிங்கை எடுத்துக்காட்ட, கண்கள் பனிக்கத் தன்னதையும் காட்டினான்.
மணிக்கணக்கிலோ நாட் கணக்கிலோ அவர்கள் சாட் செய்யவே இல்லை. ஒன்றோ இரண்டுமுறை.. ஒருசில வார்த்தைகள் மட்டும் தான். ஆனால், அதனைப் பொக்கிஷமாய் பாதுகாத்து அதன் துணையோடு நாட்களைக் கடத்தியிருந்தார்கள்.
“இதுதான் என்ர வாழ்க்கையோட மந்திரம். இத படிக்கிற ஒவ்வொரு முறையும் உன்னோட வாழ்ந்திட்டு வருவன்.”
“நானும்தான்.”
“எல்லாம் சரிதான். எதுக்கடி அப்படிச் சொன்னாய்?” சட்டென்று அவன் குரல் கோபத்தில் உயர்ந்துவிட, என்ன சொன்னேன் என்று தடுமாறினாள் அவள்.
இடையில் கையைப் போட்டு அவளைத் தன்னருகே இழுத்து, “இந்தவாய் இந்த வாய்.. என்னைப் பாத்து எவ்வளவு தைரியமா அத சொல்லப் பாத்தது…” என்று அவளின் கீழுதட்டை அவன் பற்றியபோது, எதற்கு இந்தக் கோபம் என்று புரிந்துபோயிற்று.
“இல்லாட்டி என்ன விட்டுட்டுப் போயிருப்பீங்களா? கையோட கூட்டிக்கொண்டு ஓடி இருப்பீங்க.” கொஞ்சலாய் சொன்னவள் அவன் கரத்திலேயே இதழ்களை ஒற்றி எடுத்தாள்.
அவளாகத் தந்த ஒற்றை இதழ் ஒற்றுதலில் கோபம் அத்தனையும் மாயமாகிவிட ஆசையாசையாய் அவள் உதட்டோரத்தை வருடினான் செந்தூரன். சன்னச் சிரிப்போடு கீழுதட்டைப் பற்றினான்.
“விடு..ங்கோ..” முகம் சிவக்க அவனிடமிருந்து விலகப் பார்க்க, பேசவிடாமல் அவளின் வாயைத் தன் கையால் மூடினான்.
“எ..ன்ன?” அவன் பார்வை மாறிப்போனதில் உள்ளங்கைக்குள் அடங்கிவிட்ட உதடுகள் துடித்தன! அதை உணர்ந்தவனின் உள்ளத்தில் உணர்வுகளின் பேரலை பொங்கத் தொடங்கிற்று!
கண்களில் கள்ளத்தனம் மின்ன அவன் நெருங்க, “கைய எடுங்கோ!” என்று அலறினாள். சத்தம் வெளியே வந்தால் அல்லவோ! அவன் நெருங்க நெருங்க சுவரோடு சுவராக ஒன்றியவளின் விழிகள் படபடக்கத் துவங்கின. உள்ளம் சொக்கிப்போய் நின்றான் செந்தூரன். அவன் கண்களின் பாவம் மாறவும், “ஐயோ..! கைய எடுங்கோ..!” என்று அவசரமாகச் சொன்னாள் அவள்.
“எடுக்கவா?”
“ம்ம்”
“நல்லா யோசிச்சுச் சொல்லு எடுத்திடுவன்.” அவள் முகத்தருகில் தன் முகத்தைக் கொண்டுசென்று ரகசியம்போல் சொன்னான்.
“கடவுளே.. எடுங்கோ!” அவளுக்குத் தெரியவில்லை, அவளின் உதடுகள் அசைந்து அவனின் உள்ளங்கையில் உரசி அவனுக்குள் மோகத்தீயை மூட்டிவிட்டுக் கொண்டிருக்கிறது என்று. அவனுக்குப் புரியாமலில்லை, அவன் விளையாடும் இந்த விளையாட்டு அவனுக்கே ஆபத்தாக முடியப்போகிறது என்று. ஆனாலும் எத்தனை வருடங்கள்.. இப்படி எத்தனை அழகான தருணங்கள்? இனியும் எதற்காக விரதமிருக்கவேண்டுமாம்? வசமாக மாட்டிக்கொண்டவளைச் சீண்டாவிட்டால் எப்படி?