“எடுத்திடுவன்!” என்றபடி அவளை இன்னுமே நெருங்கினான்.
“ம்ம்” என்று அவள் சொல்ல, “இந்தா எடுக்கப் போறன்.” என்றவன் அவனது புறங்கையில் தன் உதடுகளைப் பதித்தான்!
விழிகள் இரண்டும் பெரும் கோலிக்குண்டுகளாய் விரிய அதிர்ந்து நின்றாள் அவள்.
அந்தப் பக்கம் அவளின் உதடுகள். இந்தப்பக்கம் அவனின் உதடுகள். நடுவே அவனது கை. கடவுளே.. என்ன செய்யப்போகிறான்?
“எடுக்கவா?” அவன் கேட்க, “ஐயோ..! வேண்டாம் வேண்டாம்!” என்று பதறினாள். சற்றுமுன்னர் தானே மூச்சுக்காற்றுக்குக் கூட அவளைப் பரிதவிக்க விட்டான். மீண்டுமா?
உண்மையிலேயே அவன் வேகம் கண்டு மிரண்டுபோயிருந்தாள் கவின்நிலா.
கள்ளுண்ணக் காத்திருக்கும் வண்டாய் அவன் விழிகளில் தென்பட்ட மயக்கத்தில் அவள் கிறங்கிக்கொண்டிருந்தாள். உதட்டு முத்தமொன்றை இடாமலேயே அவளை உருக வைத்துக்கொண்டிருந்தான் அவளின் அன்புக்கு காதலன்!
இத்தனை வருடங்களில் தனியாக எத்தனை சவால்களை எதிர்நோக்கியிருப்பான். எத்தனை கஷ்டங்கள்? அவளின் ஒற்றைப் புன்னகை அவனை ஆற்றியிருக்கும். ஒருமுறை தோள் சாய்ந்திருந்தால் ஓராயிரம் முறை சக்தி வரப்பெற்றிருப்பான். அவனுக்குத் தேவை அவளின் அருகாமை. உன்னோடு நானிருப்பேன் என்று கண்கள் சொல்லும் சேதி. இன்று அவளுக்காக.. அவள் வேண்டுமென்பதற்காக மட்டுமே மாடாய் உழைத்து மனிதனாய் நிமிர்ந்து நிற்கிறான். இதுதானே காதல்!
இரு குடும்பத்தையும் முட்டாளாக்கிவிட்டு ஊரைவிட்டு ஓடி பிள்ளையை மட்டுமே பெற்றுக்கொண்டு சண்டையும் சச்சரவுமாய் நாட்களை சபித்துக்கொண்டு கடப்பதை விட, தன்னை நிரூபித்துவிட்டு அவளைக் கைப்பிடிக்கக் காத்திருக்கும் அவனுக்கு இல்லாதது என்று அவளிடம் என்ன இருக்கிறது? கண்களை மெல்லத் திறந்தாள். நேசம் பொங்கும் விழிகளால் அவனைக் கட்டியிழுத்தாள். மெல்ல அவன் கரத்தை அவளாக விலக்கினாள். அவனுடைய உதடுகள் சற்றே பின்வாங்கிய வேளையில் தன் இதழ்களை அதனோடு பொருத்தினாள். அவன் புருவங்கள் மேலே எழும்பின ஒருமுறை. ஒற்றைப் புருவத்தை மட்டும் மேலே எழுப்பி சவால்விட்டாள் அவள். அடுத்தகணம் அவன் வசமாகிப்போனாள் அவனின் நிலா.
இதயங்கள் இளைப்பாறுவரை இதழ்கள் இணைந்திருந்தன. அவன் விடுவித்தபோது மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, சராமாரியாக அவனை அடிக்கத் துவங்கியிருந்தாள் கவின்நிலா. “கள்ளன்! சான்ஸ் கிடைச்சா காணும்!”
கலைந்த தலையும் சிவந்த முகமுமாக அவன் கண்களைச் சந்திக்க முடியாமல் அடித்தவளைக் கண்டு சந்தோசமாக வாய்விட்டுச் சிரிக்கத் துவங்கியிருந்தான் அவன்.
“போடா!” அவனைத் தன்னால் அடக்கமுடியாது என்று உணர்ந்தவள் அவனிடமே சரணடைந்தாள்.
“நீ சுகமா இருக்கிறியா?” வாகாக அவளைத் தன் கரங்களால் வளைத்தபடி கேட்டவனிடம், “பாத்தா எப்படித் தெரியுதாம்?” என்று வினவினாள் அவனின் நிலா.
“எங்க? ஒழுங்கா பாக்க விட்டாத்தானே.” என்று ஆரம்பிக்க, அவன் தோளிலேயே ஒன்று போட்டுவிட்டு முறைத்தாள்.
“என்ன ரவுடி எண்டு சொல்லிப்போட்டு ரவுடித்தனம் செய்றது முழுக்க நீ! வந்த இவ்வளவு நேரத்துக்கு எத்தனை தரம் அடிச்சிட்டாய்.” அவளைத் தன்னோடு இன்னுமே இறுக்கிக்கொண்டு சொன்னான்.
அவளோ அவன் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்கவேயில்லை. அவனின் கேசத்தைக் கோதிவிட்டாள். கருத்து நீண்ட புருவங்களை வருடிக்கொடுத்தாள். எனக்குக் கோபம் தொடமுதல் வரும் என்று சொல்லும் நாசியைப் பிடித்து ஆட்டினாள். பளபளத்த கன்னங்களை ஆசையாகத் தடவினாள். அவளின் விரல்கள் அவன் முகத்தில் பரவி விளையாடிக்கொண்டே இருந்தன. இளைஞனாய் இருந்தவன் முழுமையான மனிதனாக மாறி, கூடிப்போயிருந்த கம்பீரத்தை, களையை சொட்டுச் சொட்டாய் ரசித்துக்கொண்டிருந்தாள். இத்தனை நாள் கனவுகளில் என்னவெல்லாம் செய்ய ஆசை கொண்டாளோ, ஏக்கம் கொண்டாளோ அத்தனையும் செய்தாள்.
சின்னச் சிரிப்போடு அவளின் செய்கைகளை இதமாக உணர்ந்தபடி ரசித்திருந்தவனும், அவளின் சிணுங்கல்களுக்கிடையில் கன்னத்தில், நெற்றியில், இதழ்களில், கண்களில் என்று முத்தமிட்டுக்கொண்டே இருந்தான். கருத்தடர்ந்த மீசையின் இரு புறத்தையும் பிடித்து முறுக்கி விட்டபடி, “செந்தூ..ரன்..!” என்று எதையோ அவனிடமிருந்து எதிர்பார்த்து அழைத்தாள் கவின்நிலா.
“என்ன?” தன் பெயரை உச்சரித்த அந்தச் செவ்விதழ்களுக்கு ஒரு முத்தம் வழங்கிவிட்டுக் கேட்டான்.
“செந்..தூரன்..” சிணுங்கினாள்.
“என்னடியப்பா?” என்னவென்று சொல்லாமல் சிணுங்கினால் அவனுக்கு எப்படித் தெரியுமாம்?
“நீங்க இன்னும் என்னட்ட கேக்கேல்லை..” அந்தக் கோபத்தில் அவன் கன்னத்தை அழுத்தமாகக் கிள்ளிவிட்டாள்.
“நோகுதடி ராட்சசி!” என்று கன்னத்தை தடவிவிட்டு, “என்னத்த கேக்கேல்லை எண்டு சொல்லன்!” என்றவன், அவளின் மாம்பழக் கன்னங்களில் அழுத்தமாய் உதடுகளைப் புதைத்தான்.
“ஒரு… தேத்தண்ணி வித் செந்தூரன்?” அவனைப் போலவே தலையைச் சரித்துக் கேட்டபோது, அவளை அணைத்துக்கொண்டு வாய்விட்டுச் சிரித்தவனின் கண்கள் கலங்கிப்போயிற்று!
எவ்வளவு பெரிய தொழிலதிபனாக மாறினாலும், எத்தனையோ வெற்றிகளைக் குவித்தாலும் அவளுக்கென்று தன் கையால் போட்டுக்கொடுக்கும் ஒரு கப்புத் தேநீருக்கு எதுவுமே ஈடாகாது என்று ஆத்மார்த்தமாக உணர்ந்தவன், “என்ர செல்லம்!” என்றபடி அவளை மார்போடு அணைத்துக்கொண்டான்.
அவளுக்கும், அந்த ஒரு கப்புத் தேநீருக்கு முன்னே அவள் வாங்கிய பட்டங்களோ பரிசுகளோ எதுவுமே ஈடாக மறுத்தது.
“வா..” என்று அழைக்க, “இங்க இல்ல. எங்கட இடத்தில..” என்றாள் ஆவலாக.
“சரி வா! அங்கேயே போவம்!” உள்ளம் கனிய அழைத்துச் சென்றான்.
அவன் காரில் ஏறி அமர்ந்ததுமே, எந்த மாடல் கார், எப்போது வாங்கினான், என்ன விலைக்கு என்று வாய் ஒருபக்கம் விவரம் சேகரிக்க, கைகளும் ஆர்வமாகக் காரை ஆராய்ந்தது. அவன் மடியிலேயே சரிந்து, அவன் கதவுக் கைப்பிடியில் இருந்த பட்டன்களை அவள் ஆராய, “வாடி! வந்து மடில இருந்து கிண்டு!” என்று அவன் இழுக்க துள்ளிக்கொண்டு தன் இருக்கைக்குப் பாய்ந்துசென்று முறைத்தாள் அவள்.
பொங்கிய சிரிப்புடன் அவள் கேட்கும் எல்லாக் கேள்விக்கும் பதிலைச் சொன்னபடி ரிவர்ஸ் கியரைப் போட்டான் செந்தூரன். உடனேயே நாவிகேஷன் இருக்குமிடத்தில் அவனது காரின் முழு வடிவமும் காரை சுற்றி இருக்கும் முழு இடமும் வீடியோவாகத் தெரிய, பின் பக்கம் திரும்பிப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லாமல் அந்த வீடியோவைப் பார்த்து ரிவர்ஸ் எடுத்து காரை வீதியில் ஏற்றினான் அவன்.
“செந்தூரன்! கலக்குறீங்க போங்க!” என்றவள், இதென்ன அதென்ன என்று அவனைத் தூண்டித் துருவிவிட்டாள்.
“இத போட்டுப்பார் உன்ர சீட் புல்லா ஹீட்டாகும்!” அவன் சொல்லி ஒரு நிமிடமும் இல்லை. வெகு கதகதப்பாக அவளை அணைத்துக்கொண்டது அந்த சீட்டிலிருந்து கிளம்பி வந்த வெம்மை.
“குளிருக்கு சூப்பரா இருக்கும் என்ன..” என்றாள் கண்களை விரித்து.
அவளுக்காகவே பார்த்துப் பார்த்து வாங்கிய காரல்லவா. அவள் ஏறியிருந்து, அதை இதை நோண்டி சந்தோசப்பட்டபோதுதான் அதன் முழுப்பலன் கிடைக்கப்பெற்றதை உணர்ந்தான் செந்தூரன்.
பாட்டைப் போட்டாள். “நீ எங்கே என் அன்பே..” என்று சுவர்ணலதா தன் காந்தக் குரலால் உயிரைத் தொட்டு உள்ளத்தை உருக்கத் துவங்கினார். இருவர் விழிகளும் சந்தித்துக் கொண்டன. அந்தப் பாடலில் இருந்துதானே இரண்டு வரிகளை அனுப்பிவைத்து சுருக்கமாய் தன் மனதைச் சொல்லி அனுப்பினாள்.