அடுத்த பாட்டைப் போட அப்போதும் ‘நீ எங்கே என் என்பே’ என்றுதான் சுவர்ணலதா பாடினார். அடுத்தடுத்து மாற்றியபோதும் அதே பாட்டு வர, கன்னங்களை நனைத்துக்கொண்டு ஓடியது கண்ணீர். அவளை உணர்ந்தவனாக ஒரு கையால் அணைத்துத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான் செந்தூரன்.
ஒருமுறை தன் அணைப்பை இறுக்கிவிட்டு, “அந்தக்காலம் எல்லாம் முடிஞ்சுபோச்சு. இப்ப நானும் நீயும் ஒண்டா பக்கத்துல பக்கத்துல சந்தோசமா இருக்கிறம். அதை நினை. இனியும் நீ அழக் கூடாது!” என்றான் அவளைத் தேற்றும் விதமாக.
காரை கடையின் முன்னே நிறுத்தியதும் இருவர் முகத்திலும் புன்னகை. “முதல் முதல் மழைக்கு அங்கதான் வந்து ஒதுங்கினாய்.” சிரித்துக்கொண்டு அவள் நின்ற இடத்தைக் காட்டிச் சொன்னான் செந்தூரன்.
“நீங்க இல்ல எண்டு நினைச்சுத்தான் வந்தனான். பாத்தா உள்ளுக்க இருந்து வாறீங்க..” அவளுக்கும் முகமெல்லாம் சிரிப்பு. “அண்டைக்கு நக்கலா பாத்தீங்க பாருங்க.. அப்படியே கண்ணையே நோண்டவேணும் மாதிரி வெறி வந்தது.”
அதைக்கேட்டு வாய்விட்டுச் சிரித்தான் செந்தூரன்.
“அண்டைக்கு நினச்சுப் பாத்திருப்பமா, ரெண்டு பேரும் காதலிச்சு இவ்வளவு காலம் காத்திருந்து சேருவம் எண்டு?” சிரிப்போடு கேட்டான் அவன்.
“ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு தின்னுற கோபத்தில எல்லோ இருந்தனாங்க.” அழகான நினைவுகளை மீட்டியபடியே அவளை அழைத்துச் சென்றான் அவன்.
கடை பூட்டும் நேரம் வந்துவிட்டபடியால் கதிரை அனுப்பிவிட்டு, கடையையும் உட்புறமாகப் பூட்டிவிட்டு இருவருமாக உள்ளே சென்றபோது இருவர் முகத்திலும் புன்னகை. அதே கிட்சன், அதே மேசை, அதே நாற்காலிகள், அதே அறை.. அங்கே காதல் பறவைகளாக அதே அவர்கள்.
தண்ணீரை அவள் கொதிக்க வைக்கவும், “நீ ஊத்தி தரப்போறியா?” என்று கேட்டான் அவன்.
“நாங்க எப்பவும் ஒரே மாதிரித்தான். மாறமாட்டம்.” என்றாள் அவள்.
“இந்த வாய்க்கு ஒண்டும் குறைச்சல் இல்ல. தள்ளு!” என்றுவிட்டு ஒரே ஒரு கப்பில் தேநீர் ஊற்றினான்.
“எனக்கு?” சின்னப்பெண்ணாகச் சிணுங்கிக்கொண்டு அவள் கேட்க, “ரெண்டு பேருக்கும் ஒரு கப்புத்தான்!” என்றவனின் பதிலில் முகம் சிவந்து போயிற்று அவளுக்கு.
கட்டவிழ்த்த கன்றாய் அவன் குறும்புகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.
ஒரு ட்ரேயில் பிஸ்கட்டோடு மேசையில் வைத்துவிட்டு, அவளை இடித்துக்கொண்டு அமர்ந்தான்.
“வரவர பே மோசம் நீங்க!” அவளின் பேச்சை அவன் கேட்பதாயில்லை. அவளையும் பருக வைத்து அதே கோப்பையில் தானும் பருகி பார்வையால் அவளைத் திணறடித்துக்கொண்டே இருந்தான். வெட்கிச் சிவந்தாலும் அவளுக்கும், அவனோடு ஒட்டிக்கொண்டு இருப்பதும், மார்பில் சாய்ந்துகொள்வதும், அவன் இடுப்பைக் இறுக்கிக் கட்டிக்கொண்டு குழந்தையாய்ச் செல்லம் கொஞ்சுவதும் மிக மிகப் பிடித்திருந்தது.
அவர்களுடைய தேநீர் பொழுதுகள் எப்போதுமே மிக மிக அழகானவைதான். அப்படித்தான் இன்றைய ஒரு கப்புத் தேநீர் பொழுதும் மிக மிக ரம்மியமாய், உள்ளத்தை தொட்டுச் செல்லும் மிகவுமே மென்மையான நேச உணர்வுகளால் கட்டியமைக்கப்பட்டு அழகாய் நிகழ்ந்துகொண்டிருந்தது.
கண்ணடித்துச் சிரிக்கும் அவனது காந்தக் கண்களின் மீது காதல் பொங்க, “எனக்கு இந்தக் கண் செய்ற சேட்டை எல்லாம் நிறையப் பிடிக்கும். நீங்க கதைச்சதைவிட இந்தக் கண்தான் என்னோட நிறையக் கதைச்சிருக்கு. கண்ண சிமிட்டுறது, கள்ளத்தனமா பாக்கிறது, குறும்பா சிரிக்கிறது..” என்று சொல்லிச்சொல்லி அந்தக் கண்களின் மீதே முத்தமிட, அவளின் ஈர உதடுகள் நடாத்திய முத்த யுத்தத்தில் இப்போது செந்தூரன் திணறிப்போனான்.
ஏகாந்தமான இரவில் யாருமற்ற தனிமையில் மனதுக்கு இனியவளின் அருகாமையில் கட்டவிழ்த்துத் துள்ளிக்கொண்டிருந்த உள்ளத்தின் தூண்டுதலில் அவனுக்குள்ளே மாற்றங்கள் ஏற்கனவே உருவாகத் துவங்கியிருந்த வேளையில் அவள் வழங்கிய முத்தங்கள் அவனது திட மனதையும் அசைக்க வல்லதாய்த்தான் இருந்தது.
“இப்ப சும்மா இருக்கப்போறியா இல்லையா?” அனலைப் பரப்பிய உணர்வுகளில் இருந்து தப்பிக்க முடியாமல் பொய்யாக அதட்டினான்.
“இருக்கமாட்டன், என்ன செய்வீங்க!” அவனின் திண்டாட்டத்தை ரசித்தவள் சண்டைக்கு நின்றாள்.
“சொன்னா கேக்கமாட்ட நீ.” கப்பை மேசையில் வைத்துவிட்டு அவளின் இடையை வளைத்துத் தன்னோடு இழுக்கவும், “இல்லையில்லை. இனிச் செய்யமாட்டன்.. விடுங்கோ!” என்றவளிடம் தன் தேவைகளைத் தீர்த்துவிட்டே விட்டான் செந்தூரன்.
“நீங்க ஆக மோசம்!” மார்பில் குத்தியவளை ஆசையாய் அணைத்துக்கொண்டு சிரித்தான் அவன்.
“எவ்வளவு நாளாச்சு உங்கட இந்த சண்டித்தனத்தை, சிரிப்பை, சில்மிஷத்தை எல்லாம் பாத்து? நான் சொன்னா இதுதான் சாட்டு எண்டு வராம இருக்கிறதா? தள்ளி இருங்கோ என்றுதானே சொன்னான்.” மனத்தங்களோடு அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள்.
“உன்ன பாத்துக்கொண்டே என்னால தள்ளி இருக்க ஏலுமா சொல்லு? நீ ஒரு மெசேஜ் அனுப்பினதுக்கே கொழும்பில இருந்து இங்க தலைதெறிக்க ஓடி வந்தவன் நான்.” என்றவன் அவள் முதுகை வருடிக்கொடுத்தான் ஆறுதலாக.
“அதோட, நீ சொன்னாய் தானே எங்கட குடும்பங்கள் ஒண்டும் கெட்டவர்கள் இல்ல. எங்கட சந்தோசம் தான் அவேக்கும் வேணும் எண்டு. அப்படி நினைக்கிற அவர்களும் சந்தோசமா எங்களை சேர்த்து வைக்க வேணாமா? உனக்குத் தகுதியானவனா நானும் எனக்குத் தகுதியானவளா நீயும் இருந்தா ஏன் காதலை வேண்டாம் எண்டு சொல்ல போறாங்க? அதுதான், நீ உன் பாட்டுக்கு படிக்கோணும். உன்னப் பிரிஞ்சு இருக்கிறன், உன்னப் பாக்க முடியேல்ல, உன்னோட கதைக்க முடியேல்ல என்ற ஏக்கம் இன்னும்மின்னும் என்னை வேகமா உழைக்க வைக்கும். எவ்வளவு கெதியா முன்னுக்கு வாறனோ அவ்வளவு கெதியா உன்ன தூக்குவனே. அதுதான் வரவே இல்ல.” என்றவனின் கைகள் எல்லைகளை மீறத் துவங்க, அவனிடம் இருந்து விலக முயன்றவளால் அது முடியவே இல்லை.
“என்ன நீங்க ஊருக்குள்ள கேட்டா உங்கள அந்தளவுக்கு புகழ்ந்து தள்ளுறாங்க.. இங்க என்னடா எண்டா இவ்வளவு மோசமா இருக்கிறீங்க..” அவனது சேட்டைகள் தாங்காமல் சிணுங்கினாள் அவள்
அவளின் சிணுங்கல் அவனின் ஆசையை தூண்டி விட்டது. “அண்டைக்கு என்னடி சொன்னாய்?” திடீரென்று சண்டைக்கு வந்தான் அவன்.
“என்ன சொன்னான்? உங்களுக்கு வேற யார்..” அன்றுபோலவே இன்றும் அவளை முழுதாகச் செல்லவிடாமல் அவள் இதழ்களை கோபத்தோடு சிறை செய்திருந்தன அவன் உதடுகள்!
அவளுக்குப் புரிந்து போயிற்று. இந்தக் கள்ளன் இனிக் காலம் முழுமைக்கும் இந்தக் கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கப் போகிறான். அவள் சொல்லத் தொடங்கும் ஒவ்வொரு பொழுதுகளிலும் தண்டனை என்கிற பெயரில் தன் வேலையை காட்டப்போகிறான். காதல் போர்க்களத்தில் தண்டனைகள் எப்போதுமே மிக அழகானவைதானே. சந்தோசமாக அனுபவிக்கத் துவங்கினாள் செந்தூரனின் நிலாப்பெண்!
முற்றும்!