அன்று அவர்களின் ட்ரெஸ் கோட் சுடிதார். தலைக்கு சிவப்பு ரோஜாவோடு சின்னதாய் எவர்கிறீன் இலை ஒன்று. எல்லோருக்கும் தனித்தனியாக ரோஜாக்களை வெட்டி எடுக்கும்போதே, இந்திராணி கடிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார். மல்லிகை இன்று பறித்தாலும் நாளை பூத்து நிற்கும். ரோஜா அப்படி அல்லவே!
ஆனால், சசிரூபாவோ அன்னையின் பேச்சைக் காதிலேயே வாங்கவில்லை. “எனக்கு உதவாத ரோஜா இந்த வீட்டுல பூத்து என்ன பூக்காட்டி என்ன!” என்றபடி, அவற்றை வெட்டி, அதற்கு ஏற்ற வகையில் எல்லோருக்கும் ஒரே மாதிரி எவர்கிறீன் இலைகளையும் வெட்டி எடுத்துக்கொண்டாள்.
‘இண்டைக்காவது மறக்காம கையோட கொண்டு போகவேணும். இந்த அண்ணாட்ட வாங்கிக்கட்ட ஏலாது’ என்று எண்ணியபடி அழகாகச் சுற்றி கசங்கிவிடாமல் எடுத்து வைத்தவள் தயாராகி வந்தாள்.
அப்போதுதான் கடையிலிருந்து வந்த செந்தூரனுக்கு தங்கையைப் பார்த்ததும் விளங்கிவிட்டது இன்றைய ட்ரெஸ் கோட் என்ன என்று. “பள்ளிக்கூடத்துக்கு யூனிபார்ம் போட விருப்பம் இல்ல. ஆனா, கோவிலுக்கு யூனிபார்ம்ல போக ஓகே.” என்றான் தாயிடம் வேண்டுமென்றே.
அவர் சிரிக்க, இவள் முறைத்தாள். “அது அப்படித்தான்! எதுவா இருந்தாலும் நாங்க டிசைட் பண்ணவேணும். அதென்ன மற்றவே சொல்லுறது யூனிபார்ம் போடு எண்டு!” என்று நின்றாள் அவள்.
“கேளுங்க அம்மா. நீங்க சொன்னாலும் அவள் கேக்கமாட்டாளாம்.” அவன் கோர்த்துவிட முயல, “டேய் அண்ணா! இதுக்கெல்லாம் நீ சரிவர மாட்ட, அதால பேசாம வா!” என்றவள் சிலுப்பிக்கொண்டு நடக்க, பார்த்திருந்த இருவருக்குமே சிரிப்புத்தான்.
அண்ணா என்கிற பெயருக்குத்தான் அவன். மற்றும்படி டேய் தான். சொல்லி சொல்லிப் பார்த்த இந்திராணியும் அடிபட்டாலும் இருவரும் மற்றவரில் பாசம் என்பதில் விட்டுவிட்டார். மயில்வாகனம் சிலநேரங்களில் கோபம் கொண்டாலும் அவரையும் சமாளித்துவிடுவார். சில சந்தோசங்களை சில காலங்களில் மட்டும் தானே அனுபவிக்கவும் முடியும்!
“ஏதாவது கொண்டு போறதா இருந்தா, மறக்காம கையோட எடுத்து வச்சுக்கொள்! பிறகு எனக்குத் தொல்லை தராத.” என்றான் அவன்.
“ஏன், மறந்தா நீ கொண்டுவந்து தரமாட்டீயா?” பூக்கள் அடங்கிய பை கையில் இருந்தாலும் வேண்டுமென்றே கேட்டாள்.
“இனி கொண்டு வந்தெல்லாம் தரமாட்டன், நேரா குப்பை வாளிதான்.”
“விடுவிடு! நான் மறக்கிறதும் நீ கொண்டுவந்து தாரதும் என்ன புதுசா? முதலாம் வகுப்புல மறந்த தண்ணிப்போத்தல்ல இருந்து இண்டைக்கு பூ வரைக்கும் நீதானே காவிக்கொண்டு திரியிறாய். அதால இனியும் காவுவாய்.” அவனது வண்டியில் பையைக் கொழுவியபடி ஆரூடம் சொன்னாள் அவள்.
அது உண்மைதான் என்பதில் செந்தூரனுக்கும் சிரிப்புத்தான் வந்தது. எவ்வளவு கோபித்துக்கொண்டாலும் அவளும் திருந்துவதாய் இல்லை. அவனும் கொண்டுபோய்க் கொடுக்காமல் இருப்பதும் இல்லை.
“விட்டா நீ அலட்டிக்கொண்டே நிப்பாய்! ஏறு!” வண்டியில் ஏறி ஸ்டார்ட் செய்துகொண்டே சொன்னான் அவன்.
செந்தூரனின் வண்டி பிரதான வீதிக்குள் நுழைந்து வேகமெடுத்ததும், “டேய் அண்ணா! அப்பா என்ன உன்னை புகழோ புகழ் எண்டு புகழ்றார். நீ நல்ல பிள்ளையாம், படிப்பு ஓடாட்டியும் தொழில்ல கெட்டிக்காரனாம், கடனை முக்கால்வாசி அடச்சிட்டியாம். உண்மையாடா?” என்று கேட்டாள் சசி.
“பின்ன! என்னை என்ன உன்ன மாதிரி படிக்கிறன் என்ற பெயர்ல டியூஷனுக்கு காசு, இப்படி கோவிலுக்கு போட சட்டைக்கு காசு எண்டு செலவு வைக்கிற ஆள் எண்டு நினைச்சியா.” என்றான் அவன்.
“நீ நல்லா உழைக்கிறாய் எண்டா அத நான் நல்லா செலவு செய்யோணும் எண்டு அர்த்தம். எல்லாம் அண்ணி வர்ற வரைக்கும் தானே. பிறகு எனக்கா தரப்போறாய்?”
“உன்ர அண்ணில பாசம் இருந்தா நீ இப்படி எல்லாம் செலவழிக்க மாட்டாய். அவள் பாவம், என்னை நம்பி வந்து ஏமாறப்போறாள். அதால இனி சும்மா காசைக் கரியாக்காம சேர்த்து வை! அவளை நல்லா வாழவைக்க வேண்டியது எங்கட கடமை.” என்றான் அவன்.
அவன் முதுகிலேயே படார் என்று போட்டாள் அவள். “இங்க கூடப்பிறந்தவள் நான் இருக்கிறன், என்னை சந்தோசமா பாப்பம் எண்டில்லை. யாரு எண்டே தெரியாதவளுக்கு நான் சேர்த்து வைக்கவோ? மரியாதையா எனக்கு எல்லாம் வாங்கித்தா! இப்ப மட்டுமில்ல உனக்கு மனுசி வந்த பிறகும்! கல்யாணம் முடிஞ்சதும் அவளுக்கு பின்னால வால் பிடிச்சியோ உன்ர குடும்பத்தையே பிரிச்சிடுவன்” என்று மிரட்டினாள் அவள்.
“உன்னட்ட கொடுமை அனுபவிக்க நான் விடுவனா? அவளை கூட்டிக்கொண்டு தனிக்குடித்தனம் போய்டுவன்.” என்று அவன் சொல்ல, “டேய் அண்ணா யாரையாவது லவ் பன்றியா நீ? அண்ணி கிண்ணி எண்டெல்லாம் சொல்லுறாய்.” என்று சந்தேகமாக அவன் முகத்தைப் பார்க்க முயன்றுகொண்டே கேட்டாள் அவள்.
“லவ்வா? கல்யாணமே கட்டீட்டன். ரெண்டு பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகுது. இப்ப வந்து இந்தக் கேள்விய கேக்கிறீயே.” குறும்புடன் கண்ணடித்துச் சொன்னான் அவன்.
“நம்பீட்டன்!” ராகத்தோடு அவள் சொல்ல,
“நம்பாட்டி போ! பிள்ளைகள் ரெண்டும் கொழும்பு கான்வென்ட் ஸ்கூல்ல படிக்கிதுகள். ஒருநாளைக்கு கூட்டிக்கொண்டு வந்து கண்ணுக்கு முன்னால நிப்பாட்டுறன். அப்ப நம்பு!” என்றான் வெகு சாதாரணமாய் அவன்.
“அண்ணா விளையாடாத! அம்மா அப்பாக்கு தெரியுமா?” என்று பதறிப்போனாள் அவள்.
“இன்னும் தெரியாது. பிள்ளைகள் கொஞ்சம் வளரட்டும்; பிறகு கூட்டிக்கொண்டு வருவம் என்று இருக்கிறன்.” என்று அவன் சொல்ல சொல்ல சசி பதறியே போனாள்.
“அம்மாக்கு தெரிஞ்சா எவ்வளவு கவலைப்படுவா? அப்பா என்ன நினைப்பார் உன்னைப்பற்றி? எங்களை எல்லாம் யோசிக்காம எவளையோ கட்டி இருக்கிறாய் நீ!”
அடக்கமுடியாமல் பெரிதாக சிரிக்கத் தொடங்கினான் செந்தூரன். பின்னே, ஆனானப்பட்ட சசிரூபாவையே ஒரு ஆட்டு ஆட்டிவிட்டானே! அவனது சிரிப்பிலேயே உண்மையைக் கண்டுகொண்டாள் அவள்.
“டேய் பொய்தானே? அம்மாடி! ஒரு நிமிஷம் நான் பயந்தே போய்ட்டன்!” என்று ஆசுவாசமானவள், “நான் ஒரு விசரி! உன்ர மூஞ்சிய எவள் விரும்புவாள் எண்டு யோசிக்கேல்ல பார்!” என்றாள் தன்னை ஏமாற்றியதற்குப் பதிலாக.
“உன்ர அண்ணான்ட ரேஞ்ச் என்ன எண்டு உனக்குத் தெரியேல்ல சசி. அதுதான் இப்படி சொல்லுறாய். நாலு பெட்டையளுக்கு முன்னால போனேன் என்றால் எல்லாரும் என்னத்தான் பாப்பீனம்(பார்ப்பார்கள்).” ஒற்றைக் கையால் காலரை தூக்கி விட்டபடி சொன்னான் அவன்.
“ம்க்கும்! நினைப்புதான் பிழைப்ப கெடுக்குமாம் எண்டு ஒரு பழமொழி இருக்கு, தெரியுமோ உனக்கு? அதுதான் நீ!”
“இல்லாத ஒண்ட நினைக்கிற ஆக்களுக்குத்தானே அது. நான்தான் உள்ளதைச் சொல்றேனே.”
“நீ விழுந்தாலும் மீசைல மண் ஓட்டேல்ல எண்டுதான் சொல்லுவாய். அதைவிட்டுட்டு எனக்கொரு ஃபோன் வாங்கித் தா அண்ணா. இது ஆக ஸ்லோவா இருக்கு.”
“ஸ்லோவா இருந்தா கொண்டுவா அப்டேட் பண்ணித்தாறன். அதுக்கு எதுக்கு புது ஃபோன்?”
“நீயெல்லாம் ஒரு அண்ணா! வெளில சொல்லிடாத. அங்க பாரு, கவின்நிலான்ர அண்ணா அவளுக்கு ‘மேக் புக்’(Macbook) வாங்கி அனுப்பி இருக்கிறார். நீ எனக்கு என்ன வாங்கித் தந்த?”