இன்னொரு பக்கம் கண்ணாடி ஷெல்புகளில் லாப்டாப்புகள், டாப்லெட்ஸ் நிறைந்து வழிந்தன. கடையின் நட்ட நடுவில் உயரமான கண்ணாடி பெட்டகத்துக்குள், ‘ஐ-பாட், ஐ-பொட், ஐ-மேக், மேக்புக், ஐ-போன்’ என்று ஆப்பிள் நிறுவனத்து தயாரிப்புக்கள் கண்ணை கவர்ந்துகொண்டிருந்தது. எல்இடி லைட் வேறு ஆப்பிள் நிறுவன பொருட்களை என்னைப்பார் என் அழகைப்பார் என்று அழைப்பது போலிருந்தது.
இன்னோர் பக்கம் சாம்சங் வகைகள்.
இன்னொரு பக்கம் நீட்டுக்கு கண்ணாடி மேசை அடித்து அதற்குள்ளும் ஃபோன்களை வைத்து, போன்களுக்கான கவர்கள், லாப்டாப்புக்கான கவர்கள், சார்ஜர் வயர்கள் ஹெட்போன்ஸ் என்று எல்லாமே.. உள்ளூர வியப்போடு கவனித்தாள்.
‘என்னவோ வெட்டியா இருக்கிறான் எண்டு நினைச்சம்..’
அதுவும் அவள் கொழும்பில் கூட தகப்பனிடம் சொல்லிக் கிடைக்காத ஃபோன் கவர். அவர்களின் பெயரை அச்சடிக்க கூடியதான வகையிலான கவரை இங்கே கண்டதும் அவளுக்கு அத்தனை சந்தோசம். எல்லாமே இங்கே கிடைக்கக் கூடியதாக அவன் வைத்திருக்க, அவளோ திரும்பியும் பாராமல் இருந்திருக்கிறாள்.
கப் வைக்கும் ஓசையில் படக்கென்று திரும்ப, அவள் முன்னே ஆவி பறக்கும் தேநீர் கப் வீற்றிருந்தது.
“குடி” என்றுவிட்டு அவனும் ஒரு கப்புடன் அவளுக்கு முன்னிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
இருவருக்குமிடையே பலத்த மௌனம். இது இருவருமே முன்னர் அனுபவித்திராத சூழ்நிலை.
அவளோடு என்ன கதைக்க? அவனிடமும் ஒன்றுமில்லை. அதோடு, அது அவர்களுக்குள் இதுநாள் வரை பழக்கமும் இல்லாத விடயமாயிற்றே!
தேநீரை அருந்திக்கொண்டே அவளைப் பார்த்தான். கப்பிலேயே பார்வையைப் பதித்திருந்தாள். ‘தூர பாத்தா கண்ணாலையே வெட்டுவா.. இப்ப என்ன..?’ செந்தூரனின் இதழோரம் சின்னதாய் குறுஞ்சிரிப்பு மலர்ந்தது.
கப்பை இரண்டு கையாளும் பற்றி, உள்ளங்கையில் ஏறிய சூடு கதகதப்பாக தேகத்துக்கு பரவ, மெல்லப் பருகினாள். அந்த மாலைநேரத்துக் குளிருக்கு இதமாக ஏலக்காய் போட்ட தேநீர் இறங்கிற்று.
‘நல்லாத்தான் போட்டிருக்கிறான். வாறவளுக்கு பரவாயில்ல.’ கிண்டலாய் ஓடிய எண்ணத்தில் அவளையும் மீறி சின்னதாய் சிரிப்பைச் சிந்தவிட்டாள்.
“என்ன சிரிப்பு?” என்றான் அவன்.
“இல்ல.. தேத்தண்ணி நல்லாருக்கு!”
“அதுக்கெதுக்கு சிரிப்பான்?” உதடுகளில் ஒட்டிவைத்த புன்னகையுடன் பிஸ்கட்டை மென்றுகொண்டே கேட்டான்.
“அது சும்மா..!” என்று அந்தப்பக்கம் பார்த்தவளாலும் உதட்டில் மலர்ந்த சிரிப்பை மறைக்க முடியவில்லை.
சந்தித்துக்கொண்ட இருமுறையும் சிறுபிள்ளைகள் போல் சண்டையிட்டுவிட்டு, இப்போது சுமூகமாகக் கதை என்றால் எங்கே போய் வார்த்தைகளை சேர்த்துக் கோர்ப்பதாம்?
“புது ஃ போன்களும் விக்கிறீங்களா?” வாயில் அகப்பட்ட கேள்வியொன்றை அவன் புறமாக நீட்டினாள்.
அவனுக்குப் பிடித்த துறை பற்றி அவள் கேட்டதே போதுமாயிருந்தது அவனது உற்சாகத்தைக் கிளம்பிவிட.
“எல்லாம் இருக்கு. வா காட்டுறன்!” என்று அழைத்துச் சென்றான்.
தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் காட்டிக்காட்டி, கண்கள் மின்ன துள்ளலோடு அவன் சொன்ன அழகில் அவனுக்கு இந்தத் துறை எவ்வளவு பிடிக்கும் என்று விளங்கியது.
கையிலிருந்த கப்புத் தேநீரைப் பருகியபடி, ஒவ்வொரு இடமாய் நகர்ந்து நகர்ந்து அவன் விளக்க, அவள் ஆவலாய் கேட்டுக்கொண்டாள்.
அங்கே கடைசியாக வந்த சாம்சங் போன் முதல் ஆப்பிள் போனும் இருக்கவே, “கொழும்பிலையே, ஆளாளுக்கு ஆப்பிள் போனுக்கு ஆர்டர் குடுத்திட்டு கிடைக்காம இருக்கீனம். நீங்க எப்படி அதுவும் இங்க வச்சிருக்கிறீங்க?” வியந்துபோய்க் கேட்டாள்.
“அதுதான் செந்தூரன்!” என்று கண்ணடித்துக் காலரை தூங்கிவிட்டுச் சிரித்தான் அவன்.
சில்லிட்டுக்கொண்டு அவளுக்குள் ஊடுருவியது அவனது அந்தச் செய்கை. சற்று நேரத்துக்கு கண்களை அவனிடமிருந்து பிரிக்கவே முடியவில்லை அவளால். அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பது அதன்பிறகே உறைக்க, முகம் சிவக்க வேகமாகத் திரும்பிக்கொண்டவளுக்கு அவனிடம் முகத்தை காட்டவே முடியவில்லை.
அவனுடைய அந்த அழகான செய்கையே நெஞ்சுக்குள் கிடந்து இசைபாடிக்கொண்டிருந்தது.
“கொழும்பில ஆள் வச்சிருக்கிறன். எனக்குத் தேவையான ஆர்டர் வந்த பிறகுதான் அது எங்கயும் போகும்!” என்றான் அவன் பெருமையாக. “இந்த மேக்புக் பார், வந்து மூண்டு மாதம் கூட இல்ல. கொழும்பிலையே ஆர்டர் கொடுத்துத்தான் எடுக்கோணும், ஆனா என்னட்ட இருக்கு. ” என்று அவன் காட்டியபோது,
“இதுதான் நானும் வச்சிருக்கிறன். அப்பாவும் ஆர்டர் கொடுத்துத்தான் வாங்கினவர்.” என்றாள் அவள்.
“உனக்கெல்லாம் அது எதுக்கு?” சுள்ளென்று கேட்டான் அவன்.
அவன் கேட்ட ‘உனக்கெல்லாம்?’ சுட்டுவிட, “படிக்கத்தான்!” என்றாள் அவளும்.
“படிக்க வேற லாப்டாப் காணாதா? ஆப்பிளேதான் வேணுமா?”
“ஏன் இருந்தா என்ன?” ரஷ்யாவில் இருக்கும் அண்ணா சொல்லி, அவளின் அப்பா வாங்கித் தந்த பிறந்தநாள் பரிசை அவன் குறை சொல்லவும் சின்னதாக மூண்டுவிட்ட கோபத்தோடு கேட்டாள்.
“அதுசரி! படிக்கிற திமிரு! நீங்க எல்லாம் பெரிய படிப்ஸ் பரம்பரைதானே. இருந்தா குற்றமில்லை!” நக்கலில் உதட்டோரம் நெளியச் சொன்னான்.
சட்டென சினம் மூண்டது அவளுக்குள். “நீங்க படிக்கேல்ல, உங்களுக்குப் படிப்பு வரேல்ல என்றதுக்காக எங்களைக் குறை சொல்லுவீங்களா? உங்களை மாதிரி நான் என்ன ரோட்டு அளக்கிறேனா? இல்ல ஊர் சுத்துறேனா? நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நாங்க படிச்ச குடும்பம் தான். நான் படிப்பில கெட்டிக்காரி எண்டுதான் அண்ணாவும் வாங்கித் தந்தவர். நானும் பிரயோசனமாத்தான் அதப் பாவிக்கிறன்!” என்று படபடத்தவளுக்கு அதன்பிறகுதான் தான் என்ன சொல்கிறோம் என்பதே புத்தியில் உரைத்தது. சட்டென பேச்சு நிற்க அவனைப் பார்த்தாள். கண்கள் கலங்கிப்போயிற்று. அவள் சொன்ன வார்த்தைகள் அவளுக்கே வலிக்கையில் அவனுக்கு எப்படி இருக்கும்?
எங்கேயோ பார்த்தபடி தேநீரை அருந்திக்கொண்டிருந்தான் அவன். உணர்வுகளை சொல்லும் அந்தக் கண்களில் ஒன்றையும் காணோம். அவன் மனத்தைக் காட்டிக்கொடுக்கும் உதட்டோரச் சிரிப்பைக் கூடக் காணோம்.
“சாரி!” என்றாள் கலங்கிய கண்களோடு.
அவனிடம் எந்த அசைவும் இல்லை.
“ப்ளீ..ஸ் சாரி.” உடைந்துகொண்டிருக்கிறாள் என்பதை அந்த இரு வார்த்தைகளும் உணர்த்தியது.
திரும்பி அவளைப் பார்த்தான். கண்களில் கலக்கத்தைத் தேக்கி அவனையே பார்த்துக்கொண்டு நின்றவளிடம், “விடு!” என்றுவிட்டு அவள் கையிலிருந்த கோப்பையையும் வாங்கிக்கொண்டு உள்ளறைக்கு நடந்தான்.
இன்னுமே குற்றவுணர்வாகிப் போனது. அவனுக்கும் அவளை அறவே பிடிக்காது என்று தெரியும். ஆனாலும், மழைக்கு ஒதுங்கியவளை உள்ளே அழைத்து அவளின் நலம் பேணியவனை இப்படிச் சொன்னது, அதுவும் முகத்துக்கு நேரே, உண்மையிலேயே அவன் சொன்னதுபோல படிக்கிறோம் என்கிற திமிர்தான்!
ஒருவனுக்கு வராத ஒன்றை, அவனுடைய இயலாமையை குத்திக்காட்டி பேசியதை எண்ணி வெட்கிப்போனாள். மனம் தாளாமல் அவன் பின்னே சென்று, “இங்க பாருங்கோ. நான் வேணுமெண்டு அப்படிச் சொல்லேல்ல. அது பிறந்தநாளுக்கு அண்ணா சொல்லி, அப்பா கஷ்டப்பட்டு தேடிப்பிடிச்சு வாங்கிக்கொண்டுவந்து தந்தவர். அதை நீங்க குறை சொல்லவும் யோசிக்காம கதைச்சிட்டன். உண்மையாவே சாரி.” சொல்லும்போதே கண்ணோரம் கலங்கிவிட்டது அவளுக்கு.