அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு வார்த்தைகளை விடுவதும், அடுத்தவரை நோகடிப்பதும் அவளின் இயல்பே அல்ல. இப்படி யாரிடமும் மன்னிப்பைக் கெஞ்சிக் கேட்கும் நிலை அவளுக்கு வந்ததே இல்லை.
தவிப்போடு நின்றவளை திரும்பிப் பார்த்தான். அவளின் விழியோர நீர்க்கசிவு அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை.
“அதுதான் விடு எண்டு சொன்னேனே..!”
“கோபம் இல்லையே?”
“இல்ல.”
அவன் கப்புகளை கழுவப்போக, “விடுங்கோ. நான் கழுவுறன்.” என்றாள் அவள்.
“முன்னப்பின்ன கழுவி இருக்கிறியா?” சின்னச் சிரிப்போடு அவன் கேட்க, அவ்வளவு நேரமாய் தொலைந்துபோயிருந்த அந்தச் சிரிப்பைக் கண்டபிறகுதான் ஆசுவாசமானாள்.
“இல்..ல.” சின்னதாய் அசடு வழியச் சொன்னாள்.
“பிறகு?”
“அது.. உங்களை சமாதானப் படுத்தத்தான்.” என்றாள் அவள். இதற்குள் அவன் கழுவியே வைத்திருந்தான்.
“அப்படி எண்டா சமச்சுத் தா!” வெகு சாதாரணமாக அவன் சொல்ல,
“என்னது?” என்று அதிர்ந்துபோய் விழித்தாள் அவள்.
அவன் சிரிக்கவும், “நீங்களும் படிச்ச திமிர் எண்டு சொன்னீங்க தானே.” என்றாள் மனத்தங்களோடு.
அதுநாள் வரை இப்படி யாரோடும் நடந்திராதவளின் மனதையும் அவன் பேச்சு தாக்கித்தான் இருந்தது.
“அது.. இவ்வளவு நாளும் உன்னைப்பற்றி அப்படித்தான் நினைச்சிருந்தனான். செருக்கு பிடிச்சவள் எண்டு. அது அப்படியே வாயில வந்திட்டுது.”
சமாதானமாக அவன் அதைச் சொன்னாலும் தன்னைப்போல மன்னிப்பைக் கேட்கவில்லை என்பதைக் கவனித்தாள். ‘அவ்வளவு திமிறாடா உனக்கு?’
“என்னது செருக்கா?” எப்போது அப்படி நடந்துகொண்டோம் என்று நம்பவே முடியாமல் கேட்டாள்.
“ம்! உன்னை ஒருவிதத்தில் எனக்குப் பிடிக்கும். அதே நேரம் பிடிக்காது.” என்றான் அவன்.
“எனக்கு வராத படிப்பு உனக்கு நல்லா வருதே எண்டு பிடிக்கும். இந்த வருஷம் முழு யாழ்ப்பாணமுமே உன்னை எதிர்பார்த்திருக்கு எண்டேக்க ‘எப்படிடா இப்படி படிக்கிறா?’ எண்டு வியந்து பார்த்திருக்கிறன். அதே படிப்போடு நீ செருக்கோடு பாக்கிறது பிடிக்கவே பிடிக்காது.”
சிரித்தாள் அவள். “நான் எப்ப செருக்கோட.. அதுவும் உங்கள பாத்தனான்?” இன்னுமே நம்பாமல் அவள் கேட்க,
“அதுதான் ஒவ்வொரு நாளும் இதால நீ போகேக்க..” என்று சொல்லிக்கொண்டு வந்தவன் கைகளை நீட்டி ஹாண்டிலை பிடிப்பதுபோல் பிடித்து, “நீ இப்படி பாப்பியே..” என்று அவள் கடைக்கண்ணால் பார்ப்பதை அப்படியே நகல் செய்து காட்டவும் ஒரே வெட்கமாய் போயிற்று. அவன் முதுகிலேயே இரண்டு போட்டால் என்ன என்று ஆகிற்று அவளுக்கு.
எல்லாவற்றையும் கவனித்திருக்கிறான். அதைவிட பார்வையாலேயே நக்கல் செய்வது அவன் இயல்பு. ஒற்றைச் சிரிப்பிலேயே அவளைச் சீண்டி விடுவதில் வல்லவன். அவனைக் கடக்கையில் ஏன் நக்கலாகப் பார்க்கிறான் என்கிற கேள்வி மனதை அரிக்கையில் இன்றைக்கும் பார்க்கிறானா என்றுதான் அவளின் கண்கள் அவளையும் மீறிப் பார்க்கும். அதை செருக்குப் பார்வை என்பானா?
“அது உங்களுக்கு செருக்கு பார்வையா?” என்று முறைத்தாள்.
“எனக்கு அப்படித்தான்!” என்றான் அவனும் சிரித்துக்கொண்டு. “நான் பாக்கிறது உனக்குப் பிடிக்காது எண்டு தெரிஞ்சுதான் இதால நீ போகேக்கையும் வரேக்கையும் உன்ன வேணுமெண்டு பாக்கிறது.” என்று அவன் சொன்னபோது, அடப்பாவி என்று வாயில் கை வைக்காத குறையாகப் பார்த்தாள் அவள்.
ஆனால், அவளுக்கும் அதேதான்! ஒரு தங்கையின் அண்ணனாக அவனைப் பிடிக்கும். ‘இண்டைக்கு அந்த சண்டை, அண்ணா திட்டிட்டான். போடா எண்டு சொல்லிப்போட்டு வந்திட்டன்’ என்று ஆயிரம் கதை சொல்வாள் சசி. இவனோ பின்னேரம் அவளைக் கூட்டிக்கொண்டு போக வந்து நிற்பான். அது பிடிக்கும். ஏன், அன்றுகூட தங்கை சொன்னாள் என்றுதானே பிடிக்காத அவளுக்கு பூ கொடுக்கக் காத்திருந்தான். அதே நேரம் எப்போது பார்த்தாலும் கடைக்கு முன்னால் நிற்பதும், கிரவுண்ட்டில் பெடியலோடு விளையாடும் பொறுப்பற்ற அவனைப் பிடிக்காது. அதுவும் படிப்பை இடையில் நிறுத்திவிட்டான் என்று அறிந்ததில் இருந்து மனித குலத்தவனாக அவனைச் சேர்க்கக் கூட அவள் தயாரில்லை.
அவனைப் பற்றி அறிந்துகொண்ட இன்றோ, தொழிலில் முழு ஈடுபாட்டுடன் இயங்கும் ஒருவனாகவும், அதேநேரம் தனக்காகவும் நேரம் ஒதுக்கி விளையாட்டுப் பிள்ளையாக வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு இளைஞனாகவும் என்று மாறுபட்ட இருவிதமான செந்தூரனை பார்த்தாள் கவின்நிலா.
ஒருவரோடு ஒருவர் கதைக்காதவரை மற்றவரைப் பற்றி எண்ணியிருந்த எண்ணங்கள் மாறிப்போயின.
அப்போது கவின்நிலாவின் கைபேசி அழைக்கவும் எடுத்துப் பார்த்தாள்.
“சசி.” என்று அவனிடம் சொல்லிவிட்டு, “சொல்லடி!” என்றாள் அவளிடம்.
“செமினாருக்கு ஏனடி வரேல்ல?” எடுத்ததும் கேட்டாள் அவள்.
“வந்தனான். இடைல மழைல மாட்டி நிண்டுட்டன்.” என்றவள், எங்கே நிற்கிறாய் என்று கேட்டாலும் என்று, “நீ எப்படி போனாய்?” என்று கேட்டாள்.
“பஸ்ஸிலயடி. அண்ணாதான் சொன்னவன், இண்டைக்கு மழை வரும் பஸ்ல போ எண்டு.” என்று அவள் சொல்லவும், இவள் அவனைப் பார்த்தாள்.
எப்போதும்போல கைகளைக் கட்டிக்கொண்டு மேசையில் சாய்ந்து நின்றிருந்தவன், மறுமுனையில் என்ன பதில் சொல்லப்பட்டிருக்கும் என்று தெரிந்ததால், மீண்டும் காலரை தூக்கிவிட்டு கண்ணடித்துச் சிரித்தான்.
‘டேய்! நீ தெரிஞ்சு கண்ணடிக்கிறியா? இல்ல தெரியாம கண்ணடிக்கிறியா?’ அவள் இதயம் எகிறிக்குதித்துக் கேட்டது. எது எப்படியோ அவன் கண்களை இவளால் நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை.
“சேர் பேப்பர் கரெக்ஷன் செய்தவராடி?” விழிகளை நிலத்தில் விழுத்திக் கேட்டாள்.
“ஓமடி! பெரும்பாலும் எல்லாரும் வந்தவே. நீயும் சிந்துவும் தான் வரேல்ல.” என்று அவள் சொல்ல, அதுவரை மலர்ந்திருந்த முகம் கூம்பி அழுகைதான் வந்தது.
அவளையே பார்த்துக்கொண்டு நின்றவனை எண்ணி அடக்கினாள். எவ்வளவு முக்கியமான செமினார். தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இலங்கை முழுவதிலுமே நடாத்தும் பரீட்சை ஒன்று நாளை மறுநாள் நடக்க இருந்தது. அதில் வரும் ரிசெல்ஸ் கிட்டத்தட்ட இறுதிப் பரீட்சசையில் அவர்கள் எடுக்கப்போகும் பெறுபேற்றைச் சொல்லிவிடும். அதற்கான முன்னோடியான செமினாரை தவற விட்டுவிட்டாளே.
“நாளைக்கு டியூஷனுக்கு பேப்பரை கொண்டு வாரியா?” குரலடைக்கக் கேட்டாள். இருவருக்கும் பள்ளிக்கூடமும் வேறு. கௌரி விரதமும் முடிந்துவிட்டதே!
சசிக்கும் என்ன செய்ய என்று தெரியவில்லை. நாளை மறுநாள் பரீட்சை. இன்று அவள் வகுப்புக்கும் வரவில்லை. நாளை பின்னேரம் கிடைக்கும் பேப்பரை வைத்து என்ன செய்வாள்?
“இப்ப வீட்ட கொண்டுவந்து தரவாடி?”
“இல்ல வேணாம். சைக்கிள் எண்டாலும் பரவாயில்ல. பஸ்ஸில கஷ்டம். நாளைக்கு கிளாஸுக்கே கொண்டுவா.” என்றுவிட்டு வைத்தவளுக்கு முகமே வாடிப்போயிற்று.
இவள் வீட்டுக்கு சசி பஸ்ஸில் வருவதனால் வருவதற்கு இரண்டுமுறை திரும்புவதற்கு இரண்டு முறை என்று பஸ் மாறி ஏறவேண்டும். பிறகு எப்படி அவள் படிப்பாள்? இவள் அங்கு போய் வருவதனால், நன்றாகவே இருட்டிவிடும். நேரமும் போய்விடும்.