பரீட்சையை அவள் திறம்படச் செய்வாள் தான் என்றாலும், ஆசிரியர் சொல்லும் விளக்கங்களைக் கேட்டு விளங்கிக்கொள்வது போல் வராதே. இதில் பேப்பர் வேறு நாளை மாலைதான் கையில் கிடைக்கும். மழையைப் பார்க்காமல் போயிருக்க வேண்டுமோ!
மாமா வேறு கருத்தரங்கு ஒன்றுக்காக கொழும்பு சென்றிருந்தார்.
“என்ன?” அதுவரை அவளையே பார்த்திருந்தவன் கேட்டான்.
அவள் விஷயத்தை சொல்ல, “நீதான் பெரிய படிப்ஸ் ஆச்சே. இதுக்கெல்லாமா கவலைப்படுவாய்?” என்று கேட்டான் அவன்.
அவள் இருந்த மனநிலைக்கு மெய்யாகவே கோபம் வந்தது. “இப்பவும் விளையாடாதீங்கோ. அநியாயமா இண்டைக்கு கிளாச கட் பண்ணிட்டேனே என்ற கவலைல நான் இருக்கிறன்.” அழுகையை அடக்கிக்கொண்டு சொன்னாள்.
“உண்மையாவே நான் விளையாடேல்ல. வகுப்பிலேயே கெட்டிக்காரியான உனக்கு இது அவ்வளவு பெரிய தாக்கமா என்ன? மனதை குழப்பமா நோட்ஸ் எடுத்துப் படி. நோட்ஸ்ல இல்லாததை வாத்தி ஒண்டும் சொல்லப்போறேல்ல. எப்பவும் போல உனக்குத்தான் இந்தமுறையும் ஹயர்ஸ்ட் மார்க்ஸ்.” என்று இதமாகப் புன்னகைத்தான் அவன்.
சற்றே அமைதியானாள். அவன் உதடுகள் சிந்தும் ஒவ்வொரு வகையான புன்னகையும் அவளுக்குள் பெரும் மாற்றங்களை உருவாக்குவதை உணர்ந்துகொண்ட, “ம்ம்.” என்றாள்.
அந்தப் பேப்பர் முக்கியமானது, அது பரீட்சசைக்கு மிகவுமே உதவும் என்றுதான் இன்று அவர் ‘ஸ்பெஷல் கிளாஸ்’ வைத்ததே! அதைத் தவற விட்டுவிட்டாளே! உள்ளூர அதிலிருந்து வெளிவரமுடியாமல் மனம் அல்லாடியாது.
“பிறகு நீ ‘படிப்ஸ்’ எண்டு பெயர் வாங்கினதுக்கு அர்த்தமே இல்லாம போய்டும்.” என்று அவன் சீண்ட, “இத விடவே மாட்டீங்களா!” என்று சலித்தாள் அவள்.
இதற்குள் மழை விட்டிருந்தது. “நான் போயிட்டு வாறன்.” என்று விடைபெற, செந்தூரனும் வெளியே எட்டிப்பார்த்தான்.
திரும்பவும் வருவேன் என்று மிரட்டிக்கொண்டிருந்தது மழை. உள்ளே சென்று குடையை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து, “இதையும் கொண்டுபோ.” என்றான்.
அவள் விடைபெற்றுச் சென்றதும் வாசல் நிலையில் கைகளை கட்டிக்கொண்டு சாய்ந்து, அவள் போன திசையிலேயே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவள் போய்விட்டாள்தான். அவள் மட்டும்தான் போயிருந்தாள். அவளின் நினைவுகள் இன்னும் அவனையே சுற்றிக்கொண்டு இருந்தது.
பேப்பர் இல்லை என்றதும் வாடிப்போன முகம், கண்ணீரை அடக்கிய கண்கள். அந்தக் கண்கள் காந்தமாய் அவனை அவள்புறமாய் இழுப்பது போலிருந்தது.
‘டேய் செந்தூரா! இதெல்லாம் உனக்கு சரிவராதுடா..! விட்டுட்டு பாக்கிற வேலையை பார்!’ தன் கேசத்துக்குள் விரல்களை வீட்டுக் கோதியபடி சிரித்துக்கொண்டான். எச்சரிக்கை மணி அடித்தாலும் அதையும் மீறிக்கொண்டு அவளின் நினைவுகள் அவனுக்குள்!
அவனெல்லாம் இந்தளவு கல்விக்காக கவலை என்ன சிந்தித்ததே இல்லை. எப்போதடா ‘ஏஎல்’லை பெயருக்கேனும் முடிப்பேன் என்றுதான் நினைத்திருக்கிறான்.
அவளோ ஒரு பேப்பருக்காக அழுகிறாள். உள்ளதைச் சொல்லப்போனால் அந்த வருடத்தின் விஞ்ஞானப்பிரிவின் யாழ்ப்பாணத்தின் நம்பிக்கை நட்சத்திரமே அவள்தான்! இலங்கை மட்டத்திலேயே அதிக ஸ்கோர் எடுப்பாள் என்று பரவலாக நம்பப்படும் ஒருத்தி! எடுக்கவேண்டும், எடுத்து யாழ்ப்பாணத்தினதும் தமிழர்களினதும் திறமையை இலங்கைக்கே பறைசாற்றவேண்டும் என்று எல்லோராலும் ஊக்குவிக்கப்படும் ஒருத்தி!
மதிப்பிற்குரிய கனகரட்ணம் பரந்தாமனின் மருமகள் பரீட்சை எடுக்கிறாள் என்பது ஒருபுறம் என்றால், சாதாரண தரத்தில் அகில இலங்கையிலேயே முதலிடம் பிடித்தவள் என்பதனால் உண்டான நம்பிக்கை மறுபுறம் என்று சிறந்து விளங்கும் மாணவி அவள். அத்தனை திறமை மிக்கவள் ஒரு பேப்பருக்காக கலங்கி நின்றாளே.
அதுதான் சொல்வார்களே நூற்றுக்கு முப்பத்தியாறு எடுத்தவன் பாஸாகிவிட்டேன் என்று சந்தோசப்பட, நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது எடுத்தவன் ஒன்றை விட்டுவிட்டேன் என்று அழுவானாம். இவளும் அதைப்போலத்தான் போல.
கடைக்கு வந்த வாடிக்கையாளர் அவனது சிந்தனைகளை இடையில் நிறுத்தினாலும் வாடிப்போய் நின்றவள் முகம் தான் கண்ணுக்குள் நின்றது.
அஜந்தனை நேரத்துக்கே வரச்சொல்லி அவனிடம் கடையை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றான். சசியின் அறையை எட்டிப்பார்க்க, அவளோ மேசையில் இரண்டு பேப்பர்களை விரித்து வைத்துக்கொண்டு மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தாள்.
“என்ன மேடம் படிக்கிறாய் போல இருக்கு!” என்றபடி அவளருகில் போய் அமர்ந்தான்.
“முக்கியமான டெஸ்ட் அண்ணா, விளையாடாம எழும்பிப் போ!” என்றுவிட்டு அவள் பேப்பரில் கவனம் செலுத்த, “இதென்ன ரெண்டு பேப்பர் வச்சிருக்கிறாய்!” என்று ஒன்றைக் கையிலெடுத்தான்.
ஒவ்வொரு முத்துக்களாக எடுத்துக் கோர்த்தது போன்ற அழகிய ஆங்கில எழுத்தில் மேல் மூலையில் கவின்நிலா தயாபரன் என்று எழுதியிருந்தாள்.
அந்தப் பேப்பரை பறித்து வைத்துவிட்டு, “இது கவின்நிலாவின்ர. அவள் இண்டைக்கு கிளாசுக்கு வரேல்ல!” என்றபடி தன் பேப்பரில் பார்வையை ஓட்டினாள் சசி.
“அது உன்னட்ட இருந்தா அவள் எப்படிப் படிப்பாள்?”
“என்னத்துக்கு நீ அவளைப் பற்றி விசாரிக்கிறாய்? அதுவும் அக்கறையா!” விடாமல் நச்சரித்தவனை சந்தேகமாக நோக்கிக் அவள்.
தோளை குலுக்கிவிட்டு எழுந்தான் அவன். “அவளைப்பற்றி எனக்கென்ன அக்கறை. நீதானே ஒருக்காவாவது அவளைவிட கூட மார்க்ஸ் எடுக்கோணும் எண்டு அண்டைக்கு சொன்னாய். அதான் அவளின்ர பேப்பரை அவளுக்கே தெரியாம அடிச்சுக்கொண்டு வந்திட்டியோ எண்டு யோசிச்சன்.” என்றவன் இப்போது அவளை சந்தேகமாகப் பார்த்தான்.
“டேய்! என்னை என்ன உன்னமாதிரி எண்டு நினைச்சியா?” என்று பொங்கியவள் சட்டென்று தணிந்தாள்.
அவனிடம் ஓடிவந்து, “என்ர செல்ல அண்ணா எல்லே! அவளின்ர வீட்டபோய் ஒருக்கா இந்தப் பேப்பரை குடுத்திட்டு வாரியா? அவள் பாவமடா. அங்க கவலையோட இருப்பாள்.” என்று கெஞ்சினாள்.
“நான் என்ன அவளுக்கு வேலைக்காரனா? பூவைக் குடு, பேப்பரைக் குடு எண்டு நிக்கிறாய். எனக்கு வேற வேலை இல்ல பார்!” என்றுவிட்டு அவன் தன்னறை நோக்கி நடக்க,
“அண்ணா ப்ளீஸ்!” என்று பின்னாலேயே ஓடிவந்து கெஞ்சினாள் தங்கை.
நின்று முறைத்தான் அவன். “உனக்கு இதே வேலையாப் போச்சு சசி! அதுக்காக அவளின்ர வீட்டை எல்லாம் போகேலாது. வேணுமெண்டா ‘ஃபக்ஸ்’ போட்டு விடுறன்.” என்று சற்றே இறங்கி வந்தான்.
“அவேற்ற ஃபக்ஸ் இருக்கோ தெரியாதே.”
“கட்டாயம் இருக்கும். இல்லாட்டி பிரிண்டர் இருக்கா எண்டு கேள். அப்படியே மெயில் ஐடியும் வாங்கு.” என்று அவன் சொல்ல, ஓடிப்போய் செல்லை எடுத்து கவின்நிலாவுக்கு அழைத்துக் கதைத்தாள்.
“அண்ணா, ஃபக்ஸ் அவளின்ர மாமாட்ட தான் இருக்காம். ஆனா, பிரிண்டர் இருக்கு எண்டு சொன்னவள். மெயில் ஐடியும் தந்தவள். அவளின்ர அம்மாடையாம்.” என்று அவள் சொல்ல, அதையும் பேப்பரையும் வாங்கிக்கொண்டு தன் அறைக்குச் சென்றான்.
டெஸ்ட் பேப்பரை ஸ்கான் செய்து கொம்பியூட்டருக்கு ஏற்றினான். அதனை தன் மெயிலில் இருந்து அவளின் மெயிலுக்கு அனுப்பி வைத்தான். அவள் எடுத்த நோட்ஸ் என்று சில பேப்பர்களை கொண்டுவந்து கொடுக்க அவற்றையும் அனுப்பி வைத்தான்.
“மெயில் அனுப்பிட்டன். அதை டவுன்லோட் செய்து பிரிண்ட் பண்ணி எடுக்கட்டாம் என்று சொல்” என்று அவன் சொல்ல, “டேய் அண்ணா சூப்பர் போ! இப்பதான் நிம்மதியா இருக்கு!” என்றவள் தோழிக்குச் சொல்ல ஓடினாள்.
அவனும் நிம்மதியாக உதடுகளில் பூத்துவிட்ட சிரிப்போடு எழுந்து குளிக்கப் போனான்.
இரவு உணவையெல்லாம் முடித்துவிட்டு உறங்க அறைக்கு வந்தவன், மெயில் செக் பண்ணியபோது ‘Thank u’ என்று அனுப்பியிருந்தாள்.
ஒற்றை வார்த்தைதான். ஆனால், எத்தனை ஆத்மார்த்தமாய் அதனை அனுப்பியிருப்பாள் என்று உணர்ந்துகொள்ள முடிந்தது. கண்ணோரம் சின்னதாய் சந்தோஷக் கண்ணீர் கூடப் பூத்திருக்கும். உணர்ச்சிக்குவியல் அவள்! கட்டாயம் பூத்துத்தானிருக்கும்! நெஞ்சமெல்லாம் நெகிழ்ந்து போயிருக்க, துடிப்போடு அதை எழுதி அனுப்பி இருப்பாள்.
இதற்காகத்தானே அத்தனை திருகுதாளங்களையும் தங்கையிடம் செய்தான்.
‘பெஸ்ட் ஆஃப் லக்’ என்று பதிலுக்கு டைப் செய்தான். பிறகு, அதைத் தூக்கி டஸ்ட் பின்னுக்குள் போட்டுவிட்டு போய்ப் படுத்துக்கொண்டான். ஆழ்ந்த நித்திரை அவனை ஆரத்தழுவிக்கொண்டது!