“அப்படி எடுத்தா என்ன தருவாய்?” பேரம் பேசினாள் தங்கை.
“எதிர்பாராத ஆச்சரியம் காத்திருக்கும்.” என்றான் அவன்.
‘அப்ப நான் எடுத்தா?’ அவளையறியாமல் தோன்றிவிட்ட கேள்வியோடு அவள் பார்க்க, “யார் எடுத்தாலும் அவேக்கு தான் அந்த ஆச்சரியம்!” என்றான் அவளிடம்.
முகம் சிவக்க சட்டென்று பார்வையை திருப்பிக்கொண்டாள் கவின்நிலா.
‘கொஞ்சமும் பயமே இல்ல இவனுக்கு! என்னோட கதைக்கிறத சசி பாத்தா என்ன நினைப்பாள்.’
‘ஆனா இவன்ர தில்லாலங்கடி வேலைக்கு எடுக்காம விடமாட்டன்!’ மனதில் அவனைத் திட்டிக்கொண்டாலும் முடிவும் எடுத்துக்கொண்டாள்.
அப்படி எடுத்து, அவன் தரப்போகும் அந்த ஆச்சரியம் என்ன என்று அறிந்துகொள்ள மனம் இப்போதே ஆவல் கொண்டது.
சசியோ இதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை. பரபரவென்று பெட்டியை பிரிக்க, கடைசியாக வந்த சாம்சங் போன் கண்சிமிட்டியது!
“ஹேய் அண்ணா! சூப்பர் போ!” என்று துள்ளிக்குதித்தாள். “உனக்கு அப்பப்ப நல்ல குணமெல்லாம் வருதடா!”
“அதுசரி, எப்படி உன்ர மனுசி இதுக்கு விட்டவள்?”
குறும்போடு அவள் கேட்க, ‘என்னது மனுசியா?’ என்று கவின்நிலா அதிர்ந்து அவனைப் பார்க்க, உதட்டில் பூத்த குறும்புச் சிரிப்புடன் சட்டெனக் கண்ணடித்தான் அவன்.
‘அம்மாடி!’ இனிமையாய் அதிர்ந்தாள் கவின்நிலா. இவன் எந்த நேரம் என்ன குண்டை போடுறது எண்டு இல்லாம போடுவான். படபடத்த நெஞ்சத்தோடு சசியைப் பார்க்க அவள் எங்கே இதையெல்லாம் கவனித்தாள். ஃபோனில் மூழ்கி இருந்தாள்.
“அவளை என்ன உன்ன மாதிரி எண்டு நினைச்சியா? அவளாத்தான் தந்தவள் உங்கட தங்கச்சிக்கு கொண்டுபோய் குடுங்கோ எண்டு. பாத்தியா என்ர மனுசி எவ்வளவு நல்லவள் எண்டு.” வாய்க்கு வந்ததை எல்லாம் எடுத்துவிட்டான் அவன்.
“உனக்கொரு மனுசி, அவள் தந்து நீ கொண்டுவந்தனீ?” என்று அவனை முறைத்துவிட்டு,
“உனக்கு தெரியுமாடி, என்ர அண்ணா கல்யாணம் கட்டி அவனுக்கு ரெண்டு பிள்ளைகளும் இருக்கு.” என்றாள் நக்கலாக.
சிரிப்பை அடக்கமுடியவில்லை கவின்நிலாவாள். இவன் அடித்துவிடும் பொய்களுக்கு அளவே இல்லையா?
“நீ சொல்ற விதத்த பாத்தா நான் சொன்னதை நம்பேல்ல போல இருக்கே. எதுக்கு மாதம் மாதம் கொழும்புக்கு ஓடுறன் எண்டு நினைச்ச? மனுசி பிள்ளைகளை பாக்காம இருக்க முடியாமத்தான்.”
“ஆசை மனுசியோட இருக்கேலாமத்தான் விழுந்தடிச்சுக்கொண்டு திரும்பி ஓடிவாராய் போல.”
“அம்மா அப்பாக்கு சந்தேகம் வரக்கூடாது எண்டுதான் ஓடிவாறது. ஆனா அடுத்த மாதம் திரும்ப ஓடிடுவேனே.”
“போடா டேய்! உன்ர மூஞ்சி ஒரு மூஞ்சி எண்டு ஒருத்தி உன்னைக் காதலிச்சு கட்டியிருக்கிறாள். இத நான் நம்ப வேணுமாக்கும்.” என்று அவள் சொல்ல, ஐயோ இவள் என்ன எனக்கு முன்னால இப்படிக் கதைக்கிறாள் என்றுதான் கவின்நிலா நினைத்தாள்.
ஆனால் அவனோ, “உனக்கு என்ன தெரியும்? இந்த ஊர்ல என்ர அழகில மயங்காத ஒருத்தி இல்ல. போற போக்கிலே ஆபுலன்சுக்கு அடிச்சு அடிச்சே என்ர ஃபோன்ல நம்பர் தேய்ஞ்சு போச்சு!” என்று அடித்துவிட, கவின்நிலாவாள் சிரிப்பை அடக்கவே முடியாமல் போனது.
அவர்களின் விஷயத்தில் நாம் தலையிடக் கூடாது, அண்ணாவும் தங்கையும் அடிபட்டுக் கொள்கிறார்கள் என்று சின்னதாய் எழுந்த சிரிப்பைக் கூட அடக்கிக்கொண்டு நின்றவளால், அதற்குமேல் அடக்கவே முடியாமல் சிரித்துவிட்டாள்.
“ஹலோ! என்ன சிரிப்பு! நான் என்ன பொய்யா சொல்லுறன்?” என்று அவன் அதட்ட, “ஐயோ இல்ல! சிரிக்கேல்ல!” என்று விழுந்தடித்துக்கொண்டு சொன்னாள் கவின்நிலா.
“அப்ப சொல்லு, நீ மயங்கிற அளவுக்கு நான் அழகனா இல்லையா?” என்று அவளிடமே கேட்டுவிட்டான் அவன்.
மூச்சைக்கூட விடமறந்து அவள் நின்றுவிட, “சொல்லு!” என்றான் அதட்டலாக.
அழகன்தான் என்றது அவன் முகத்திலேயே பதிந்துகிடந்த விழிகள். வாய்விட்டுச் சொல்லவா முடியும்? கலவரத்தோடு சசியைப் பாக்க, “டேய்! சும்மா இரு! இதாலதான் அவள் இங்க வாறதே இல்லை!” என்றாள் அவள்.
அதுவரை முகத்திலிருந்த சிரிப்பு அப்படியே துடைக்கப்பட்டுவிட, “இதாலதான் எண்டா?” என்றான் கூர் விழிகளை அவள் முகத்தில் நிறுத்தி.
அதுவரை அவனிடமிருந்த விளையாட்டுத்தனம் துணிகொண்டு முற்றிலுமாக துடைக்கப்பட்டிருக்க பயந்துபோனாள் கவின்நிலா.
“ஐயோ அப்படி ஒண்டுமில்ல!”
“சசி வேற என்னவோ சொல்றாளே?” விடாமல் கேட்டான் அவன்.
சற்றுமுன் கண்ணடித்துச் சிரித்த கண்களா அவை என்று கேட்குமளவில் கூர் ஈட்டிகளாய் மாறி நெஞ்சின் ஆழம்வரை சென்று தாக்கியது.
“டேய் அண்ணா! சும்மா கத்தாம போ! அவள் பயப்படப்போறாள்.” என்று அதட்டினாள் சசி.
அதை அவன் பொருட்படுத்தவேயில்லை. “உன்ர பிரெண்டுட்ட சொல்லிவை, நாங்களும் மனுசர்தான்; அம்மா, தங்கச்சி எண்டு பொம்பிளைகளோட சேர்ந்து வளந்த ஆட்கள்தான்; அடுத்தவீட்டு பொம்பிளை பிள்ளைகளை மதிச்சு பழக எங்களுக்கும் தெரியும் எண்டு. படிச்சா மட்டும் போதாது, மனுசர மதிக்கத் தெரியவேணும்! இனி நீயும் அங்க போகத் தேவையில்லை. விளங்கினதா?” என்று இவள் மீதே விழிகளை பதித்து, சசியிடம் சொல்லிவிட்டு விருட்டென்று அவன் போக, கண்ணீர் மல்கியே விட்டது கவின்நிலாவுக்கு.
உதட்டைக் கடித்து அடக்க, “அவன் அப்படித்தான். அவன்ர கதையை நீ பெருசா எடுக்காத.” என்றவள், “மரியாதையா அவளைக் கொண்டுபோய் விட்டுட்டு வா அண்ணா!” என்றாள் அவனிடம் கோபமாக.
முதன்முதலாக வீட்டுக்கு வந்தவளிடம் தமையன் கோபப்பட்டுவிட்டானே என்கிற கோபத்தில் இவள் சொல்ல, “ஏய் சசி லூசாடி நீ?” என்று அதிர்ந்துபோனாள் கவின்நிலா.
அவனோடு அவள் போகமுடியுமா? அதைவிட இப்போதுதான் கத்திவிட்டுப் போகிறான். திரும்பவுமா?
அவனோ வாசலில் நின்று சுளித்த புருவங்களோடு திரும்பிப் பார்த்தான். கண்களை நிறைத்துவிட்டிருந்த கண்ணீரோடு கவின்நிலா வேகமாகப் பார்வையைத் திருப்பிக்கொள்ள, அந்தக் கண்ணீரும் இரத்தமெனக் கன்றிச் சிவந்துவிட்ட முகமும் அவன் பார்வையிலிருந்து இப்போதும் தப்பவில்லை. “படிச்சு முடிஞ்சது எண்டா கீழ வா!” என்றுவிட்டுப் போனான்.
“என்னடி நீ?” ஆற்றாமையோடு கேட்டாள்.
“ஏய் லூசு! அவன் எல்லாம் ஒரு ஆள் எண்டு அவன்ர கதையை தூக்கிப் பிடிக்காம, வா நீ!” என்று அழைத்துச் சென்றாள் சசி.
“செல்வாண்ணா நான் செந்தூரன். ஒருக்கா வீட்டடிக்கு வாங்கோ” என்று அவன் ஃபோனில் யாரிடமோ சொல்வது கேட்டது.
அங்கே கீழே ஹாலில் அமர்ந்திருந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த தகப்பனிடம், “அப்பா, சசியோட பிரெண்ட வீட்ட கொண்டுபோய் விட்டுட்டு வாறீங்களா?” என்று கேட்டான்.
“அதுக்காகத்தான் அப்பா ஜீன்ஸ் கழட்டாம இருக்கிறார்.” என்று இந்திராணியும் சொல்ல, மகளோடு இறங்கி வந்தவளைப் பார்த்து, “வாம்மா போவம்!” என்று அழைத்தார் மயில்வாகனம்.
அவனோடு போக அவளுக்கும் சங்கடம் தான். ஆனால், அவனே தகப்பனோடு அனுப்பிவைக்க முனைந்தபோது, சற்றுமுன் சம்பவித்த சம்பவத்தினால் அவன் அவளைத் தவிர்க்கிறான் என்று பட்டுவிட இன்னுமே கன்றிப்போனது அவள் முகம்.
மயில்வாகனம் தன் வண்டிப் பக்கம் போக, “செல்வாண்ணாவ வரச்சொன்னனான். ஆட்டோவில் போங்கோ.” என்றான் செந்தூரன்.
இரவில் எதிரில் வரும் வாகன வெளிச்சங்களுக்கு மத்தியில் அவர் மோட்டார் வண்டி ஓட சற்றே சிரமப்படுவார் என்று தெரிந்து அவன் சொல்ல, “அப்ப அவளின்ர ஸ்கூட்டியை என்ன செய்றது?” என்று கேட்டாள் சசி.
“நாளைக்கு என்ர கடைல வந்து எடுக்கட்டும்” என்றான் அவன்.
“பஸ்ல வந்து அங்க இறங்கலாம் தானே?” என்று அவளிடமும் கேட்க, அவன் முகம் பாராது ஆம் என்று தலையசைத்தாள்.
முகக் கன்றல் கூடிக்கொண்டே போனது. அழையா விருந்தாளியாக வந்து, அவர்களுக்கு வேலையும் வைத்து, அவளால் அவர்கள் சிரமப்படுவதும் போலிருக்க ஏன்தான் வந்தோம் என்றானது. இதில் ஆட்டோ செலவு வேறு!
ஆட்டோவும் வந்துவிட, “அப்ப சரியடி கவனமா போயிட்டு வா!” என்று சசி சொல்ல, “வாறன் ஆண்ட்டி!” என்று இந்திராணியிடம் விடைபெற்றவள் செந்தூரனைப் பாராது நடந்தாள்.
போகிறவளையே பார்த்திருந்தான் அவன்.