மயில்வாகனம் ஆட்டோவுக்குள் ஏறியதும், அவளும் ஏறிக்கொண்டாள். ஆட்டோ அருகே குனிந்து, “செல்வாண்ணா, இவேன்ர வீட்ட விட்டுவிட்டு அப்பாவை திரும்பக் கூட்டிக்கொண்டு வந்து விடுங்கோ. பஸ்ஸில போறன் எண்டு சொல்லுவார். விடாம ஆளை ஒரே அள்ளா அள்ளிக்கொண்டு வந்து இங்க இறக்க வேண்டியது உங்கட பொறுப்பு.” என்று அவரிடம் சொல்லிவிட்டு, “அப்பா உங்கட கண்ணுக்கு முன்னாலேயே போகவும் வரவும் காசு கொடுக்கிறன். பிறகு அநியாயக் காசு எண்டு பஸ்ஸில வாரேல்ல. சரியா?” என்றான் தகப்பனிடம்.
அவன் நின்ற பக்கமே கவின்நிலா அமர்ந்திருந்தாள். குனிந்து தகப்பனைப் பார்த்துக் கதைத்தவனின் முகத்தை வேதனையோடு பார்த்திருந்தவள், வேகமாகத் தன் பர்சில் இருந்து பணத்தை எடுத்து செல்வாவிடம் நீட்டினாள். காசு முன்பக்கமாக வரவும் யார் தந்தார்கள் என்று கவனிக்காமல் செல்வாவும் வாங்கிக்கொண்டார். தகப்பனோடு கதைத்துக்கொண்டிருந்தவன் இதனை எதிர்பார்க்கவில்லை. முகத்தில் கோபம் தெறிக்க அவளிடம் பார்வையை திருப்பினான். நேரே பார்வையை பதித்து அமர்ந்திருந்தாலும் உள்ளே நடக்கும் மனப்போராட்டத்தை அடக்கியபடி எதையும் காட்டிவிடக்கூடாது என்று இறுக்கமாக அமர்ந்திருந்தவளைக் கண்டபோது வலித்தது. என்னவோ அவனுக்குள் மொத்தமாய் உடைந்துபோனது.
“நீ ஏனம்மா குடுத்தாய்?” என்று மயில்வாகனம் கேட்க, “பரவாயில்ல அங்கிள். என்னாலதானே உங்களுக்கு சிரமமும் செலவும்.” என்று சொல்லி வலுக்கட்டாயமாய் சிரிப்பைச் சிந்திய செம்பவள உதடுகள் நடுங்கவும் தன் மீதே சினம் துளிர்த்தது செந்தூரனுக்கு.
“இதுல என்ன செலவும் சிரமும்? தம்பி பிள்ளைக்கு காச குடு!” என்று அவர் சொல்ல, “இல்ல இருக்கட்டும் அங்கிள்!” என்றாள் அவள்.
இன்னும் உடைந்துகொண்டிருக்கிறாள் என்று குரலே காட்டிக்கொடுக்க, அவளைத் தேற்ற முடியாத நிலையில் நிற்பது பெரும் கொடுமையாக இருந்தது செந்தூரனுக்கு. “எடுங்கண்ணா!” என்றான் செல்வாவிடம்.
அவனைத் திரும்பியே பார்க்கக் கூடாது என்கிற பிடிவாதத்தோடு இருந்தவள், போகப்போகிறோம் என்கிற உந்துதலில் தன்னை மறந்து திரும்பிப்பார்க்க, மெல்லத் தலையசைத்தான் அவன். பதிலுக்கு தலையை அசைக்கக்கூட முடியாமல் அமர்ந்திருந்தாள். ஆட்டோ மெல்ல நகரத்தொடங்க அவளின் கரத்தினுள் காசைப் புதைத்தான். காசோடு மெல்ல அழுத்தியும் கொடுத்தான்.
உனக்கு நானிருக்கிறேன் என்றானா? கலங்காதே என்றானா? எதைச் சொல்ல வந்தானோ அவளறியாள்! ஆனால் அந்தத் தொடுகையில், அழுத்தத்தில் பொசுக்கென்று பொங்கிய கண்ணீர் கன்னங்களை நனைந்துக்கொண்டு இறங்கிற்று! முகத்தை உட்பக்கம் திருப்பினால் மற்றவர்கள் கண்டுகொள்வார்கள் என்று வெளிப்பக்கமே வைத்திருக்க, இவனது நெஞ்சை சுட்டுக்கொண்டு இறங்கியது அந்தக் கண்ணீர் துளிகள்!
போகும் ஆட்டோவையே பார்த்தபடி நின்றுவிட்டான் செந்தூரன்.
அங்கே வீட்டு வாசலில் இறங்கிக் கொண்டதும், “நீங்க இறங்காதீங்கோ அண்ணா. இல்லாட்டி செந்தூரன் எனக்குத்தான் பேசுவான்.” என்று செல்வா சொல்வதைக் கேட்டுக்கொண்டே நடந்தவளின் மனதில் அத்தனை துயரம்.
எல்லாவற்றையும் கவனித்து நடக்கிறான். சசி யோசிக்காமல் அவனிடம் கூட்டிக்கொண்டு போ என்று சொன்னதும், அவளின் மனதை உணர்ந்து தகப்பனோடு அனுப்பி வைக்கிறான். அவரின் வசதிக்காக ஆட்டோ பிடித்ததும், ஆட்டோவிலேயே திரும்பி வரவேண்டும் என்று மிரட்டியதும் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிற அவனோடு அவளால் சுமூகமாகப் போகமுடியவில்லையே. அவனாலும் முடியவில்லையே! ஏன்?
அவளை அவன் கூட்டிக்கொண்டு வருவது முறையல்ல என்று உணர்ந்துதான் தகப்பனோடு அனுப்பிவைத்தான். அது தெரிகிறதுதான். அதற்கு முதல் நிகழ்ந்துவிட்ட நிகழ்வுதான் தன்னோடு வர அவனுக்குப் பிடிக்கவில்லையோ, தன்னைத் தவிர்க்கிறானோ என்கிற உணர்வை தோற்றுவித்துக்கொண்டே இருந்தது. அவன் தன்னை வெறுத்துவிடுவானோ? இனிக் கதைக்கமாட்டானோ என்கிற புள்ளியில் சிக்குண்டு நெஞ்சம் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தது.
அவன் பொத்திய காசினை அவளும் பொத்தியே வைத்துக்கொண்டாள். அவனின் தீண்டல் இதயத்தையே தீண்டி உயிரோடு உயிராய் கலந்திட முனைந்துகொண்டிருக்க என்ன முயன்றும் முடியாமல் துவன்றே போனாள் கவின்நிலா.
அவன் சிறுபிள்ளை போன்று சசியோடு வாயடித்தது, அவளைப் பார்த்து விளையாட்டாகக் கண்ணடித்தது, நான் அழகனா இல்லையா என்று கேட்டது, திடீரென்று பார்வையால் சுட்டது, கதவருகில் சுளித்த புருவங்களுடன் திரும்பிப் பார்த்தது, கடைசியாக ஆட்டோவில் வைத்து அவன் பார்த்த பார்வை. இதையெல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது; அத்தனையையும் தூக்கிப் போட்டுவிட்டுப் படிக்கவேண்டும் என்று நினைத்தாலும் எங்கே? வாய் வார்த்தைகளே தேவையில்லாமல் அந்தக் கண்களே அவனது உணர்வுகளை அவளிடம் அப்படியே கடத்திவிட்டிருந்தது.
நல்லகாலம் முதல்நாளே பரீட்சைக்குத் தயாராகிவிட்டாள். அதோடு சசிக்கு ஒவ்வொன்றாக சொல்லிச்சொல்லி விளங்கப்படுத்தியதில் அவள் மனதில் எல்லாமே மிக நன்றாகப் பதிந்து போயிருந்ததும் வசதியாய் போயிற்று!
“அம்மா, நான் படுக்கப்போறன்!”
“சாப்பாடு?” என்று வந்தார் அவர்.
“சசி வீட்டுல சாப்பிட்டன்.” பொய் சொன்னாள்.
“என்னமாதிரி ஆக்கள்? பழக நல்ல மாதிரியா?” முதன் முதலாக போயிருக்கிறாள் என்பதில் விசாரித்தார் மேகலா.
உடனே அவன்தான் வந்துநின்று முறைத்தான். அதை மறைத்துக்கொண்டு, “நல்ல மனுஷர் அம்மா. நானே போவன் எண்டு சொல்லியும் விடாம, கூட்டிக்கொண்டு வந்து விட்டவர் அங்கிள்.” என்றவள் படுக்கப் போய்விட்டாள்.
அடுத்தநாள் பரீட்சை என்றால் முதல்நாள் நேரத்துக்கே உறங்கி வேளைக்கே எழுந்து அவள் படிப்பது வழமை என்பதால், “பிளாஸ்க்ல தேத்தண்ணி ஊத்தி வச்சு விடுறன். எடுத்துக் குடி. முறுக்கும் கிடக்கு. விடிய என்ன வேணும் எண்டாலும் அம்மாவை எழுப்பு என்ன?” என்றுவிட்டுப் போனார் அவர்.
மனதில் ஒருபாரம் கிடந்து அழுத்திக்கொண்டே இருந்தாலும், ‘இதையெல்லாம் சிந்தித்து பரீட்சையை விட்டுவிடக் கூடாது. நான் படிக்கோணும். ஃபெர்ஸ்ட் ரேங்க் எடுக்கோணும்.’ என்று அவளின் தாரக மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே உறங்கிப்போனாள். மேகலா நினைத்தது போலவே அதிகாலையில் எழுந்து, அவனிடம் ஓடிய மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டு, “உன்ர அந்த ‘எதிர்பாராத ஆச்சரியம்’ எனக்குத்தான்டா!’ என்று அவனிடம் சவால் விட்டுவிட்டு மீண்டும் நன்றாக ஒருமுறை எல்லாவற்றையும் திருப்பிப் பார்த்துவிட்டு, பாடசாலைக்கு சென்றுவந்தவள் பரீட்சைக்கு மிக நன்றாகவே தயாராகி, நேரத்துக்கே பஸ்ஸில் புறப்பட்டாள்.
பயணம் முழுவதும் அவனை எப்படி எதிர்கொள்வது என்கிற யோசனைதான்.
அந்த வார இறுதியில் அப்பா வந்ததும் அவரைக்கொண்டு ஸ்கூட்டியை எடுப்போமா என்றுகூட யோசித்தாள். பிறகு நீ ஏன் போய் எடுக்கவில்லை என்கிற கேள்வி எழுமே. அதை விரும்பவில்லை. அதைவிட, எதற்காக நான் போகக்கூடாது என்றும் தோன்றிக்கொண்டிருந்தது. இது எல்லாவற்றையும்விட அவனோடு கதைத்து எப்படியாவது மீண்டும் சுமூகமாகிவிட அவள் உள்ளம் ஏங்கிப்போயிற்று! செந்தூரனின் கடையருகில் இருந்த ஸ்டாப்பில் இறங்கி அவன் கடைக்குச் செல்கையில், வாசலில் அவளின் ஸ்கூட்டி நின்றது. உள்ளே தயக்கத்துடன் எட்டிப் பார்க்க, ஒரு ஃபோனை வைத்து ஏதோ செய்துகொண்டு இருந்தவன் நிமிர்ந்து பார்த்தான். அவனும் அவளுக்காகத்தானே காத்திருந்தான். எனவே ஆவலோடு, “வாவா!” என்று பலமாகவே வரவேற்றான்.
“ஸ்கூட்டி எடுக்க வந்தனான்.” முகம் பாராமல் சொன்னாள்.
கையிலிருந்த ஃபோனை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, அந்த நீண்ட கண்ணாடி மேசையில் கைகளை ஊன்றிக்கொண்டு அவளின் கோபத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான் செந்தூரன்.
“திறப்பு வேணும்!” முகத்தை திருப்பிக்கொண்டு மீண்டும் சொன்னாள்.
அவனிடம் அசைவே இல்லை. பார்வையையும் விலக்கிக்கொள்ளவில்லை.
‘என்ன இது?’ கண்களில் கேள்வியோடு அவனை ஏறிட, “மேடம், கோபமா இருக்கிறீங்க போல..” என்றான் சிரிப்புடன்.
‘அடப்பாவி! இதுக்கு பெயர் கோபமாடா? அப்ப நேற்று நீ காட்டின முகத்துக்கு என்னடா பெயர்?’ பார்வையால் வெட்டிவிட்டுத் திரும்பிக்கொண்டாள்.
“என்னோட கதைக்கமாட்டியா?” அமைதியாக இருந்த கடைக்குள் ஆழ்ந்த குரலில் அவன் கேட்டது அவளுக்குள் ஊடுருவித் தாக்கியது.
சட்டென்று கண்ணீர் பொங்கியது அவளுக்கு.
என்னவோ அவனோடு கதைக்காமல் இருந்து அவள் அவனை வஞ்சிப்பது போல் கேக்கிறானே. நேற்று எவ்வளவு கடுமை காட்டினான்? அவளுக்கு எப்படி வலித்தது?
அவளின் கண்ணீரைக் கவனித்துவிட்டான் அவன்.
“உனக்கென்ன தொட்டதுக்கெல்லாம் அழுகை?” அதட்டினான்.
“முன்னபின்ன பேச்சு(திட்டு) வாங்கி இருந்தாத் தானே அழாம இருக்க?” கேட்டவளுக்கு இன்னுமே கண்கள் குளமாக கைக்குட்டையை எடுத்து கண்களைத் துடைத்தாள்.
“திரும்பவும் கண்ணைக் கசக்கி விசரக் கிளப்பாத!” என்று அதட்டிவிட்டு, “நீ செய்ததும் பிழைதானே!” என்றான் அவன் மனத்தங்களோடு.