“என்னவோ நாங்க பொல்லாத மனுஷர் மாதிரி இவ்வளவு நாளும் எங்கட வீட்டை வரேல்லத்தானே. இதுல நீங்க ரெண்டுபேரும் பெஸ்ட் பிரெண்ட்ஸ்.”
என்ன பதிலை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் அவள் நிற்க, “உன்ர வீட்டிலையும் தான் அப்பா, மாமா, அண்ணா எண்டு ஆண்பிள்ளைகள் இருக்கீனம். இதுல ஸ்டடி ஹாலுக்கு படிக்க வார பெடியள் வேற. ஆனாலும் நாங்க விடேல்லையா சசியை?” அவனுடைய எந்தக் கேள்விக்கும் பதில்லை அவளிடம்.
“இல்ல.. எங்கயாவது நான் பெட்டையளோட பிரச்சனைப்பட்டதை பாத்தியா?”
“ஐயோ.. இல்ல.. சாரி!” அவசரமாகச் சொன்னாள்.
“பிறகு?” விடாமல் அவன் கேட்க, “அதுதான் சாரி சொல்லீட்டன் எல்லோ. விடுங்கோவன்!” என்றாள் பாவமாக.
அவள் சொன்ன விதத்தில் அவனுக்கும் சிரிப்பு முளைத்தது. “செய்றது எல்லாம் நீ. பிறகு அழுது ஆர்ப்பாட்டம் செய்றதும் நீ!” என்றான் அவன்.
“ஆர்ப்பாட்டமா? என்னவோ தெருவில குந்தியிருந்து அழுது ஊரைக் கூட்டின மாதிரி சொல்றீங்க?” என்று சிரித்தாள் அவள்.
அவன் சிரித்துக் கதைத்தபிறகுதான் மனமே ஆறியது. அதோடு, இந்த சின்ன விஷயத்துக்கா நேற்று முழுக்க அந்தப்பாடு பட்டோம் என்று நேற்று தாங்கவியலா துன்பத்தைத் தந்த ஒரு நிகழ்வு அவன் சிரிப்பின் முன்னே ஒன்றுமே இல்லாமல் போயிற்று.
“அத மட்டும்தான் செய்யேல்ல நீ!” என்றான் அவன்.
அவளின் கண்ணீர் துளிகள் கொதி நீராய் மாறி அவன் நெஞ்சை பசட்டத்தை அவன் மட்டும்தானே அறிவான். அதைவிட என்ன செய்தாவது அவளைச் சமாதானப்படுத்து என்று மிரட்டிய மனதை எண்ணிப் பயந்தே போனான்.
“அது.. உங்களை மாதிரியே எனக்கும் முந்தி(முன்னர்) உங்களைப் பிடிக்காது.” மெல்லச் சொன்னாள் அவள்.
அது அவனுக்கும் தெரியும் தானே. “ஏன்?” உதட்டில் ஒட்டிக்கொண்ட சிரிப்புடன் கேட்டான்.
“எப்ப பாத்தாலும் ரோட்டுல பெடியளோட நிண்டு அரட்டை அடிக்கிறது. இல்ல புட்பால் விளையாடுறது. ரோட்டில போறவாற பெட்டைகளை பாத்து முறைச்சிக்கொண்டே நிண்டா யாருக்குப் பிடிக்கும்?” இதுநாள் வரையில் அவன் மீதிருந்த அவளின் அதிருப்தியை எல்லாம் படபடவென்று சொன்னாள் கவின்நிலா.
சற்றே வியந்துதான் போனான் அவன். எந்த விதத்திலும் சம்மந்தமே இல்லாத ஒரு பெண்ணின் அவன்மீதான மதிப்பீடு! இப்படி இருக்குமென்று நினைக்கவே இல்லை. இதை அவன் எதிர்பாராதபோதும் பதிலிருந்து அவனிடம்.
“நான் கடை வச்சிருக்கிறன். தேவையான அளவுக்கு உழைக்கிறன். என்ர நண்பர்களோட சந்தோசமா சிரிச்சுக் கதைக்கிறன். எனக்கு பிடிச்ச விளையாட்டை விளையாடுறன். இதுல எங்க நான் பிழையா தெரிஞ்சனான்? நாங்க என்ன பெட்டையளா வெளில நிக்காம வீட்டுக்குள்ளேயே இருக்க?” என்று அவன் கேட்டபோது அவளிடம் பதில் இல்லைதான்.
ஆனால், உணர்ந்தது உணர்ந்தது தானே.
“படிப்பையும் இடைல நிப்பாட்டியாச்சு!” குறையோடு சொன்னாள்.
“படிக்க வந்தாத்தானே படிக்க”
“சும்மா சொல்லாதீங்க. உங்களுக்கு அக்கறையில்லை! சசி சொல்லியிருக்கிறாள்; ஏஎல் படிக்கேக்கையே அங்கிளிட்ட கேட்டீங்களாம், கடை போடப்போறன் காசு தாங்கோ எண்டு. உங்களுக்கு அப்பவே பிளான் மாறீட்டுது” என்று நின்றாள் அவள்.
அவனைப்பற்றிய எல்லாம் அறிந்து வைத்திருக்கிறாள். இப்போது நேரடியாகவே குற்றம் சாட்டுகிறவளைக் கண்டு சிரிப்பு வந்தது.
“உன்ன இப்ப படிச்சது காணும் படிப்பை நிப்பாட்டு எண்டு சொன்னா எப்படி இருக்கும்?” கைகளைக் கட்டிக்கொண்டு கேட்டான்.
“என்னது?” என்று அதிர்ந்தாள் அவள்.
கனவில் கூட நினைக்க முடியாத ஒன்று.
“இதே மாதிரித்தான் எனக்கும். உன்னால படிக்காம இருக்க ஏலாது. என்னால படிக்க ஏலாது. நான் எவ்வளவோ முயற்சி செய்து பாத்திட்டன். சத்தியமா ஏறவே இல்ல. எனக்கு விருப்பம் இதுகள் தான்.” என்று கையால் அந்தக் கடையை சுற்றிக் காட்டினான்.
“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். பிடிச்ச துறைல கஷ்டப்பட்டு செய்தா எல்லாம் முன்னேற்றம்தான்.” என்றான் அவன்.
அது என்னவோ உண்மைதான் என்று அவள் நினைக்க, “ஆனாலும் என்னைப்பற்றி இவ்வளவு மோசமா நீ நினைப்ப எண்டு நான் யோசிக்கவே இல்ல.” என்றான் சோகமாக.
“அது முந்தி.” என்றாள் அவசரமாக.
“ஓகே! அப்ப இனி வருவாய் தானே? எனக்கு வேற கல்யாணம் முடிஞ்சுது. ஒண்டுக்கு ரெண்டு பிள்ளைகள் வேற இருக்கு. யாரும் என்னை சைட் அடிச்சாக்கூட திருப்பி அடிக்க முடியாத நிலைல இருக்கிறன்.” என்று அவன் சோகமாகச் சொல்லும்போதே சிரிக்கத் தொடங்கியிருந்தாள் அவள்.
“கல்யாணம் ஆகாட்டி மட்டும் நாங்க சைட் அடிக்கத்தான் போறம்? நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்குமாம்.” என்று சிரித்தவள் பிறகுதான் தான் அதிகப்படியாக கதைத்துவிட்டதை உணர்ந்தாள்.
‘அச்சோ..! என்ன நினைக்கப்போறானோ தெரியாதே..!’ என்று அவள் பார்க்க, சின்னப் புன்னகையோடு பார்த்திருந்தான் அவன்.
இந்தப் புன்னகை பொல்லாத ஆயுதம்!
“சரி, திறப்பத் தாங்கோ; நேரமாகுது.” சட்டென்று பேச்சை மாற்றினாள்.
அங்கே மாட்டியிருந்த திறப்பை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு, “எக்ஸாமுக்கு ரெடியா?” என்று கேட்டான்.
“ஓ..! புல்லா ரெடி. அதுக்கு நீங்கதான் காரணம். தேங்க்ஸ்.”
“சசிதான் அனுப்பச் சொன்னவள்.”
“அனுப்பினது நீங்கதானே.” என்றாள் விடாமல்.
“பின்ன, பெரிய படிப்ஸ் எண்டு பெயர். ஒரு பேப்பர் இல்லை எண்டதும் விழுந்துகிடந்து அழுதா அனுப்பாம என்ன செய்றது?”
“நான் எங்க அழுதனான்? அதுவும் விழுந்து கிடந்து?” என்று முறைத்தாள்.
“இதே இடத்தில நிண்டு நான் நிண்டதால நீ அழுகையை அடக்கேல்ல?” நேரடியாக அவன் கேட்டபோது அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் பார்வையில் எதுவும் தப்பாது என்று மட்டும் விளங்கியது.
“எனக்கு அந்த பெயர் அச்சடிக்கிற ஃபோன் கவர் ஒண்டு வேணும்.” என்று கேட்டு மீண்டும் பேச்சை மாற்றினாள்.
“என்ன ஃபோன்?” என்று கேட்டு அவள் வைத்திருக்கும் ஃபோனுக்கு பொருந்தும் விதம் விதமான கவர்களை அவன் எடுத்துக் காட்ட, அதிலே ஒன்றை தெரிவுசெய்தாள் அவள்.
“இதுல பெயர் அடிச்சு தாங்கோ.”
“ஓகே! ஒரு பதினைஞ்சு நிமிஷம் பொறு. செய்துதாரன்.” என்று அவன் சொல்ல, கையை திருப்பி நேரம் பார்த்துவிட்டு, “இல்லையில்லை, எக்ஸாமுக்கு நான் நேரத்துக்கே போகவேணும். நீங்க செய்து வைங்கோ, நான் வரேக்க வாங்குறன்.” என்றுவிட்டு புறப்பட்டாள்.
“பெஸ்ட் ஆஃப் லக்!” அன்று சொல்லாததை இன்று அவள் முகம் பார்த்துச் சொன்னான்.
“நன்றி!” கண்ணைப் பறிக்கும் ஒரு மின்னல் சிரிப்புடன் சொல்லிவிட்டுப் போனவளையே பார்த்திருந்தான் செந்தூரன்.
மனம் போகும் போக்கை உணராமலில்லை அவன். மனம் சொல்வதைக் கேட்டு நடக்கும் அவனுக்கே இது சரிவருமா என்றுதான் ஓடிற்று! கல்விச் செல்வத்தையும் அதன் சீரும் சிறப்பையும் பெரிதாக நினைக்கும் அவளுக்கும், படிப்பு என்றாலே பிடரியில் கால்பட ஓடும் அவனுக்கும் எதுவும் சாத்தியமாகுமா என்ன? இணையமுடியாத இரண்டு குடும்பங்கள். சிகரமாய் கனகரட்ணம் பரந்தாமன். சின்னதாய் பற்றிக்கொண்ட இந்தப் பொறியை தண்ணீரை ஊற்றி ஒரேயடியாக அணைப்பதே சாலச் சிறந்தது என்று எண்ணிக்கொண்டான்.
ஒருவர் கடைக்கு வரவும் அவரைக் கவனித்தான்.
அவர் போனதும், அவள் எடுத்துத் தந்துவிட்டுப் போன செல்போன் கவரை எடுத்தான். ‘முழுப்பெயரா இல்ல முன்பாதியா பின்பாதியா ஒன்றுமே சொல்லாம ஓடிட்டா. என்ன செய்றது?’ என்று யோசித்துவிட்டு தன் கற்பனைக்கு செய்யத் தொடங்கினான்.
யாருக்கோ லாப்டாப் ஒன்றை காட்டி விளக்கிக்கொண்டிருந்த செந்தூரன் இவளைக் கண்டதும், “அவசரமா போகோணுமா?” என்று கேட்டான்.
இல்லை என்று அவள் சொல்ல, “அப்ப கொஞ்சம் பொறு, வாறன்.” என்றுவிட்டு அவரிடம் திரும்பினான். இவளுக்கு பரீட்சை எழுதிய களைக்கு ஒரு தேநீர் அருந்தவேண்டும் போலிருக்க, உள்ளறைக்குச் சென்று தண்ணீரைக் கொதிக்க வைத்தாள். ஒற்றைப் பார்வையில் அவள் செய்வதைக் கவனித்தவனின் உதட்டினில் அழகான புன்சிரிப்பு மலர்ந்துபோயிற்று.