“இது அளவான சைஸ். ஆகப் பெருசு எண்டும் இல்ல சின்னது எண்டும் இல்ல. மடியில வச்சும் வேலை செய்யலாம். டச் ஸ்க்ரீன். உங்களுக்கு பிள்ளைகள் இருந்தா கேம் எல்லாமே இருக்கு..” என்று அவன் அவருக்கு சொல்ல, அவளோ அவனையே கவனித்திருந்தாள்.
நவீன யுகத்து இந்தப் பொருட்களைப் பற்றி எந்த அறிவும் இல்லாதவர்களுக்குக் கூட விளங்கும் வகையில் மிக அழகாக தெளிவு படுத்திக்கொண்டிருந்தான் அவன்.
மெல்ல கடையைச் சுற்றி பார்த்தாள். இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்த்த பல பொருட்கள் இன்று இல்லை. கொழும்பு போய் வந்ததற்கு அடையாளமாக நிறையப் புது பொருட்கள். அப்படியென்றால் விற்பனை நன்றாக நடக்கிறது என்றுதானே அர்த்தம் என்று அவள் நினைக்கையிலேயே, “ரெண்டு வருஷம் கேரண்டி இருக்கு. பிறகும் என்ன பிழை எண்டாலும் கொண்டுவாங்கோ, நியாயமான விலைல திருத்தி தருவன். லாப்டாப்புக்கு என்ன பிழை எண்டாலும் நீங்க யோசிக்கத் தேவையில்லை.” என்று சொல்லி அவரை அவன் அனுப்பிவைத்துக் கொண்டிருந்தான்.
அவர் போனதும், “எக்ஸாம் எப்படி போச்சு? நல்லா எழுதினியா?” என்று அவன் கேட்க, “ஓ..!” என்றாள் அவள்.
“என்னவோ தண்ணி வச்ச மாதிரி இருக்கு. தேத்தண்ணியை காணேல்ல?” கண்களில் சிரிப்பு மின்னக் கேட்டான் அவன்.
“அது மட்டும்தான் வைக்கத் தெரியும்.” என்று சிரித்தாள் அவள்.
“வா..” என்று அழைத்துச் சென்று அன்றுபோலவே இன்றும் அவனே தேநீர் ஊற்றிக்கொடுக்க ஒரு இளம் பெடியன் வந்தான்.
இருவரும் கப்போடு கடைக்குள் வந்தனர்.
“அண்ணா, என்ர சார்ஜர் வயர் வேலை செய்யுது இல்லை. புதுசு இருக்கா?”
அதை பார்த்து எடுத்துக்கொடுக்க, வாங்கிக்கொண்டான். அருகிலிருந்த “ஸ்டார் வார்ஸ்” ஃபோன்கவரைக் கண்டுவிட்டு ஆசையாக எடுத்துப் பார்த்தான். “என்ன விலை அண்ணா?”
“இருநூறு ரூபாய். போட்டுப் பாக்கிறியா” என்று கேட்டு அவன் ஃபோனுக்கு போட்டுக் காட்டினான்.
கண்கள் மின்ன முகமெல்லாம் பல்லாக வாங்கிப் பார்த்தவனை பார்க்கவே விளங்கிப் போயிற்று; அவனுக்கு மிகவுமே பிடித்துவிட்டது என்று. கால்ச்சட்டைக்குள் கிடந்த காசை எடுத்து எண்ணிப்பார்க்க நூற்றியெண்பது தான் இருந்தது.
“இருபது ரூபாய் குறையுதண்ணா..”
சோகமாய்ச் சொல்லவும் சிரித்துக்கொண்டு, “பரவால்ல; தா.” என்று வாங்கிக்கொண்டான்.
“தேங்க்ஸ்ண்ணா தேங்க்ஸ்ண்ணா!” சந்தோசமாய்ச் சொல்லிவிட்டுப் போனவனிடம், “டேய்! உன்ர பிரெண்ட்ஸ் கேட்டா இருநூறு எண்டு சொல்லு! சரியா!” என்றான் சிரித்துக்கொண்டு.
“டன் ணா!” கட்டைவிரலைத் தூக்கிக்காட்டிவிட்டுப் போனான் அவன்.
அவன் போனதும், அவளின் கவரை எடுத்துக் கொடுத்தான் செந்தூரன்.
“பிடிச்சிருக்கா பார்!”
வாங்கிப் பார்த்தவள், “வாவ்…!” என்றாள் தன்னை மீறி.
அவள் எடுத்துக்கொடுத்தது ஒரு நீல நிறக்கவர். அதிலே, இருள் மங்கிய பொழுதில் நட்சத்திரங்கள் மின்னும் வானில் நிலவுப்பெண் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, கீழே அந்த நிலவின் ஒளியைத் தாங்கிப் பளபளத்த கடல் நீரில் ஆங்கில எழுத்தில் ‘Nila’ என்கிற பெயர் அசைந்தாடுவது போன்று அமைத்திருந்தான்.
அந்தக் கவரிலிருந்து கண்ணை எடுக்கவே முடியவில்லை. என்னவோ அந்த இரவு நேரக் கடலில் வானத்து நிலவை ரசித்தபடி அவளே மிதப்பது போன்றதொரு மாயை மனதை மயக்கியது.
“நீ ஒன்றுமே சொல்லேல்ல. நான் எனக்கு தெரிஞ்ச மாதிரி செய்தேன். பிடிக்காட்டி வேற செய்யலாம்.”
“பிடிக்காட்டியாவா? எவ்வளவு வடிவா செய்து இருக்கிறீங்க.”ஆசையோடு அதனைத் தடவிக்கொடுத்துக்கொண்டே அவள் சொல்ல, சின்னப்புன்னகையோடு அவளின் அசைவுகளையே ரசித்திருந்தான் அவன்.
“இப்பவே மாத்தப்போறன்.” என்றவள் வேகவேகமாய் பழைய கவரை கழற்றிவிட்டு அதை மாட்டினாள்.
“நல்லாருக்கு எல்லா..” என்று அவனிடமே காட்டிக் கேட்க, “உனக்குப் பிடிச்சிருந்தா சரிதான்.” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க இன்னொரு பெண் வந்தாள்.
விரலுக்கு அணியும் மோதிரம் போன்று போனின் பின்பக்கம் ஒட்டிவிட்டு விரலில் அதை அணிந்து கதைக்கும் ஒன்றை வாங்கிக்கொண்டு போனாள்.
“இளம் ஆட்களுக்குப் பிடிக்கிற விஷயம் எல்லாம் தேடித்தேடி வாங்கி வச்சிருக்கிறீங்க போல..” என்று அவள் சொல்ல,
“பிறகு எப்படி வியாபாரம் செய்றது?” என்று கேட்டான் அவன்.
“சரி சொல்லுங்கோ, எவ்வளவு காசு?” என்று கேட்டு பர்ஸை எடுத்தாள்.
“உன்னட்ட காசு வாங்கினா சசி என்ன துரத்தித் துரத்தி அடிப்பாள்.” என்றான் அவன்.
“அதெப்படி? ஆட்டோ காசையும் தந்திட்டீங்க.”
“எக்ஸாம் எழுதினத்துக்கு நான் தார பரிசு எண்டு வையன்.”
“அப்ப பாஸானா? அதுவும் முதலாவதா வந்தா?” என்று அன்றைய நினைவில் அவள் கேட்க,
“நீ கேக்கிறத நான் தருவன்!” என்றான் அவன் யோசனையே இன்றி.
“அவசரப்பட்டு வார்த்தையை விடாதீங்கோ. பிறகு நான் ஏதாவது பெருசா கேட்டிடப் போறன். இதோட அந்த எதிர்பாராத ஆச்சரியமும் இருக்கு. அதையும் இதையும் சேர்க்கிறேல்ல.” என்று மிரட்டினாள்.
“நீ கேளு! அதுக்குப் பிறகு பாப்பம்!” அசராமல் சொன்னான்.
அவன் அசையவே இல்லை என்றதும் அவள்தான் இறங்கி வந்தாள்.
“பாஸானதும் நீங்க தாங்கோ. இப்ப இதுக்கு காசு தாறன்..” ஆட்டோவுக்கும் வாங்காமல் இதற்கும் வாங்காமல்.. என்னவோ ஓசியில் எல்லாவற்றையும் அவள் பெற்றுக்கொள்வது போலிருந்தது.
“ஒண்டும் வேண்டாம். இருட்டுது. வீட்டுக்கு ஓடு!” கிட்டத்தட்ட விரட்டினான் அவன்.
முகத்தை சுருக்கிக்கொண்டு, “உங்கட வாய்க்கு பிரெண்ட்ஸ்க்கு இதைக்காட்டி எல்லாரையும் கூட்டிக்கொண்டு வருவன்.” என்றபடி அவள் புறப்பட,
“கூட்டிக்கொண்டு வா!” என்றான் அவன்.
“அவேற்றையும் காசு வாங்கமாட்டீங்களா?”
“கட்டாயம் வாங்குவன்!”
‘அப்போ ஏன் என்னட்ட வாங்கேல்ல? நான் மட்டும் என்ன தனி?’ இந்தக் கேள்வி நெஞ்சுக்குள் ஒரு படபடப்பை உருவாக்க, அதனை வாய்விட்டுக் கேட்கமுடியவில்லை. எதையாவது சொல்லிவிட்டான் என்றால்? கேள்வியோடு அவனைப் பார்த்தாள்.
அவனும் நீயாகக் கேள் நான் சொல்கிறேன் என்பதுபோல் நின்றான்.
‘கல்லுளிமங்கன்! அவன்ர வாய்க்க இருந்து எதையாவது எடுத்திட்டாலும்!’ இருந்த கடுப்பில், “இந்தாங்கோ! கப்பை வடிவா கழுவி வைங்கோ!” என்று தேநீர் கப்பை வைத்துவிட்டு அவள் புறப்பட, “கவனமாப்போ!” என்று அனுப்பிவைத்தான் அவன்.
அவள் என்ன கேட்க நினைத்தாள் என்று அவனுக்குத் தெரியும். உள்ளதைச் சொல்லப்போனால் அந்தக் கேள்வியை தவிர்த்தான் என்றுதான் சொல்லவேண்டும்! அவனுக்காக அல்ல அவளுக்காக! ஆனால், எத்தனை தூரத்துக்கு தவிர்க்க முடியும்? என்றைக்கு தவிர்க்க முடியாத நிலை உருவாகிறதோ அன்றைக்கு அத்தனையும் மாறும்! மாற்றுவான்!