அடுத்தவாரம் முழுவதுமே கவின்நிலாவைக் காணவில்லை. காலையில் ஒன்பதற்கு கடை திறக்கும் செந்தூரன் ஏழு முப்பதற்கே பள்ளிக்கூடம் சென்றுவிடும் அவளைக் காணச் சந்தர்ப்பமே அமையாது. மாணவத்தலைவி என்பதால் பள்ளி முடிந்துவரும் நேரமும் முன்னப்பின்னதான் அமையும். இவனுமே ஏதாவது வேலையாக இருப்பான். மாலையில் அவள் டியூஷன் போய்வரும் பொழுதுகள் இவனும் நண்பர்களோடு வெளியே நிற்கும் நேரம்தான். அந்தப் பொழுதுகளில்தான் காண்பது. இதுதான் வழமை.
ஆனால், இந்த வாரம் முழுவதும் எந்தப் பொழுதிலுமே அவளைக் காணவில்லை. சரி காலையில் பார்ப்போம், மதியம் பார்ப்போம் என்று காத்திருந்தும் காணமுடியவில்லை. என்னவாகிற்று? பார்த்து பார்த்து ஏமாந்துபோனான் செந்தூரன்.
அவனோடு சின்ன ஊடல் அவளுக்கு இருக்கலாம். இத்தனை நாட்களும் உள்ளூர அதை ரசித்துக்கொண்டான். அதற்காக இப்படிக் கண்ணிலேயே படாமல் மறைந்துபோவாளா? எல்லாவற்றையும்விட பள்ளிக்கூடம் போகாமல் இருக்க மாட்டாளே.
கடையின் கதவுநிலையில் சாய்ந்தபடி, ஜீன்ஸ் பாக்கெட்டில் கிடந்த அவளின் செயினைக் கையில் எடுத்துப்பார்த்தான். அங்கும் இங்கும் ஆடியது; அவன் மனதைப் போலவே.
இன்னும் ஒட்டவில்லை. அவளிடம் கொடுக்கவுமில்லை. ஏன்? பதிலில்லாக் கேள்வி! ஆனால் பதிலை நோக்கி அவன் மனம் நகர்ந்துகொண்டிருப்பதாய் பட்டது! உதட்டினில் பூத்துவிட்ட சிரிப்போடு செயினை மீண்டும் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டான்.
அந்த வார இறுதியும் வந்துவிடவே, டியூஷன் போவாள் தானே; காணலாம் என்று அந்தச் சனி முழுவதுமே தவம் கிடந்தும் காணக் கிடைக்கவில்லை. நேரம் எதுவும் மாற்றியதாகவும் தெரியவில்லை. சசி போகும் அதே டியூஷன் தானே. அவளிடம் கேட்க எத்தனையோ தடவைகள் வாய் வரை வந்தபோதும் அடக்கிக்கொண்டான். ஞாயிறும் அவள் இல்லை என்றதும் பார்த்தே ஆகவேண்டும் என்கிற துடிப்பு அவனுக்குள் அதிகரித்துக்கொண்டே போனது.
அன்று திங்கள்; ஒன்பதுக்கு திறக்கும் கடைக்கு ஏழு மணிக்கே வந்து நின்று காத்துக் கிடந்தும் பலனில்லை. மதியம் பள்ளிக்கூடம் முடியும் நேரம், அவள் டியூஷன் போகும் நேரம். ம்கூம்.. என்னவும் ஆனதோ? மனதில் ஒருவித பதைப்பு. அன்று அந்த நாய் செய்த வேலையால் அவளுக்கு வீட்டில் எதுவும் பிரச்சனையோ..?
இனியும் முடியாது. எப்படி இருக்கிறாள் என்று தெரிந்தே ஆகவேண்டும். அவளின் பள்ளிக்கூடத்துக்கே சென்றான்.
அவளின் பாடசாலைக்கு நேர் எதிரில்தான் ‘UC கிரவுண்ட்’ இருந்தது. அங்கு அவர்களும் புட்பால் மேட்ச் விளையாடுவது உண்டு. பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே வரும் மாணவியரைப் பார்க்க வசதியாக ஒருபக்கமாக இருந்த அரங்கின் படிக்கட்டில் சென்று அமர்ந்துகொண்டான்.
கிரவுண்டில் அவளது பாடசாலை மாணவியர் சிலர் ஓட்டப்போட்டி, ஈட்டி எறிதல் என்று பயிற்சி எடுத்துக்கொண்டு இருப்பதைக் காணவும் தான், ‘ஓ.! விளையாட்டுப்போட்டி ஆரம்பிச்சிட்டுது போல. அதுதான் ஆளைக் காணவே இல்லை.’ என்று எண்ணிக்கொண்டான்.
ஒரு பெண்ணைத் தேடிக்கொண்டு அவளைப் பார்த்தே ஆகவேண்டுமென்று இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்று விளங்காமல் இல்லை. ஆனால், இந்த உணர்வுகளைத் தூக்கி எறிந்துவிட்டுப் போக முடியவில்லையே! ஏதோ ஒரு உந்துசக்தி அவளிடம் அவனைத் துரத்திக்கொண்டேதான் இருக்கிறது. இது வேண்டுமா என்று யோசித்தும்விட்டான். வேண்டாம் என்று மூளை சொல்வதை மனம் கேட்டால் தானே? போ! போ! அவளைப் பார்த்துவிட்டு வா என்றுதான் அவனைப் பிடித்துத் தள்ளுகிறது.
அதுநாள் வரை மனத்துக்குப் பிடித்தமாதிரி மட்டுமே வாழ்ந்தவனால் மனதின் உந்துதலை அடக்க முடியவில்லை. அந்த மனம் அவன் சொல் கேளாமல் போகும் பாதையின் மங்கலான தன்மை விலகி, தெளிவாகத் தெரிவதாகத் தோன்றினாலும், முடிவெடுக்க முடியாமல் தடுமாறினான்.
பாக்கெட்டில் இருந்த செயினை மீண்டும் தூக்கிப் பார்த்தான். இப்போதும் அங்கும் இங்குமாக ஆடிக்கொண்டிருந்தது அது.
என்னை என்னதான் செய்கிறாய் பெண்ணே?
உனக்கும் எனக்கும் எட்டாப் பொருத்தம் என்று தெரிந்தும்
என்னை எட்டிப் பிடித்துவிடேன் என்று சவால் விடுகிறாயே!
பிடித்தால் விடமாட்டேன்!
முடிந்தால் தப்பித்துக்கொள்!
அதனைத் தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டான்; உன்னைத் தப்பிக்க விடமாட்டேன் என்பது போன்று!
சற்று நேரத்திலேயே எதிரே பாடசாலை மாணவிகள் வெளியே வரத் தொடங்கினர். அங்கேயே கண்களை நிறுத்திவைத்தான். ஒருசிலர் வீட்டுக்கும் பெரு வாரியானவர்கள் வாசலிலும் வந்து நிற்கத் தொடங்கினர். அப்போது வந்தாள் அவள். வெள்ளைச் சீருடையில் தலைக்குத் தொப்பி அணிந்து கைகளில் ஏதோ பொருட்களுடன். அந்தக்கணம்… காத்திருந்து அவளைக் கண்டகணம் தன்னையே உணர்ந்தான் செந்தூரன். அவளையே பார்த்திருந்தான்.
கொஞ்சம் மெலிந்திருந்தாள். பளிச்சென்று தெரியும் நிறம் மங்கிப் போயிருந்தது. ஆனால், நிமிர்ந்து நின்று, மாணவியரிடம் என்னவோ கையை ஆட்டியாட்டு அறிவுறுத்திக் கொண்டிருந்தாள். உடனேயே எல்லோரும் இருவர் இருவராக ஒரு வரிசையை அமைத்துக்கொண்டனர். ஒரு ஆசிரியர், அவரைப் பார்த்தாலே தெரிந்தது உடற்பயிற்சி ஆசிரியர் என்று. என்னவோ இவளிடம் சொல்லிவிட்டு ஒரு பைலையும் கொடுத்துவிட்டுப் போக, இவள் முன்னே நடக்க மற்றவர்கள் இவளைத் தொடர்ந்து வந்தனர்.
மிகப்பெரிய கிரவுண்ட் என்பதாலும், ஒருபுறம் ஆண்கள் குழு புட்பால் விளையாடிக்கொண்டு இருந்ததாலும், இவனை அவள் கவனிக்கச் சந்தர்ப்பமே இல்லை. ஏன் அவள் பார்வை அவர்களைத் தாண்டி இந்தப் புறம் திரும்பவே இல்லை.
மாணவர்களை அவள் குழுக்களாகப் பிரித்துக்கொண்டிருந்தாள். குரல் கேட்கவில்லைதான். ஆனாலும், அவளின் நிமிர்ந்த நேரான அசைவுகள் அவனுக்குள் மிக ஆழமாகச் சென்று தாக்கத் தொடங்கின. ஒரு மாணவியை அழைக்க அவள் இவளருகில் ஓடிவந்தாள். அவளிடம் ஒரு சிறு பகுதியினரை கொடுத்து அனுப்பினாள். ஒரு பகுதியினர் இன்னொருத்தியின் தலைமையில் ஓடத் துவங்கினர். இன்னொரு பகுதியினர் நீளம் பாய்தலுக்கு ஆயத்தம் செய்தனர். உயரம் பாய்தலுக்கு இன்னொரு பகுதி தயாரானது.
ஒரு பகுதியினரை ஒன்றாக்கி வரிசைகளில் நிறுத்தி, இவள் மார்ச் பஸ்ட்க்கு(march past) தயார் செய்துகொண்டிருந்தாள். பார்க்கப்பார்க்க அவனுக்குள் ஒரு பிரமிப்பு! ஆளுமையான தலைமைத்துவம். அவள் பேச்சுக்கு எதிர்ப்பேச்சோ, அவள் அந்தப்புறம் சென்றதும் இந்தப்புறம் சலசலப்போ உண்டாகவேயில்லை. மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்கள் போன்று, தன் ஒற்றைச் சொல்லின்கீழ் அத்தனைபேரையும் வழிநடத்திக்கொண்டிருந்தாள்.
மாணவியர் அணிவகுப்பு ஆரம்பித்தது.
லெஃப்ட் ரைட் லெஃப்ட்!
லெஃப்ட் ரைட் லெஃப்ட்!
லெஃப்ட் ரைட் லெஃப்ட்!
அற்புதமான ரிதத்தோடு மாணவியர் அச்சு அசல் ஒரே விதமாக இயங்கத் தொடங்கினர். இவள் முன்னும் பின்னுமாக நடந்து அவர்களைக் கவனித்தபடி வழிநடத்திக் கொண்டிருந்தாள்.
அணிவகுப்பு இவன் இருந்த திசையை நோக்கி வர வர அவளின் குரல் கணீர் என்று அவன் காதுகளை நிறைக்கத் தொடங்க, சிலிர்ப்பொன்று அவனை அறியாது அவனுக்குள் ஓட அவளையே பார்த்திருந்தான்.
ஒரு ஆசிரியர் அங்கில்லை. ஆயினும் எல்லா குழுவினரும் அந்தந்த வேலையைப் பார்க்கிறார்களா என்று அவ்வப்போது பார்வையால் அலசியபடி மாணவர் அணிவகுப்பையும் வழிநடத்திக் கொண்டிருந்தாள். இத்தனை அழகான தலைமைத்துவப் பண்புடன் மாணவிகளை ஒழுங்குபடுத்தி வழி நடத்தும் அவளா அவனிடம் பேச்சு வாங்கி, கண் கலங்கி நின்றவள்; பிரமிப்போடு பார்த்திருந்தான்.