இல்லை! இது வேண்டாம். இந்த நேசம், மயக்கம், சுகம் எதுவுமே வேண்டாம்! இதை வளர விடாத! மூளை உறுதியாகச் சொன்னபோது, உள்ளத்தில் முணுக்கென்ற வலி கண்ணீரை உற்பத்தி செய்துவிட, கண்களைத் துடைத்துக்கொண்டாள். துடைக்கத் துடைக்கப் பெருகியது கண்ணீர் அவள் கொண்ட நேசம் போலவே!
இத்தனை நாட்களும் மூளை சொல்வதை மட்டுமே கேட்டு நடந்தவள், இன்று திடீரென்று மனதின் ஆட்சி ஓங்கவும் அமைதியான மனநிலை குழம்பித் திகைத்தாள். ஒன்றுமே செய்யமுடியாமல் மீண்டும் கட்டிலில் விழுந்தாள். கண்ணீர் இப்போது கன்னங்களை மட்டுமல்லாது தலையணையையும் நனைக்கத் தொடங்கியிருந்தது.
அவன் மனதிலும் அவள் மீதான ஒரு ஈர்ப்பை உருவாக்கிவிட்டு இப்போது வேண்டாம்; ஒன்றுமில்லை என்று விலக நினைக்கிறாள், அவளுக்கு வலிப்பது போலத்தானே அவனுக்கும் வலிக்கும். அவனை ஏமாற்றுவது போலாகாதா? என்ன நினைப்பான் அவளைப் பற்றி? மிக மோசமாகத்தான் நினைப்பான். அவன் நினைப்பில் தான் மிகவும் கீழரங்கப் போகிறோம் என்கிற எண்ணத்தில் கண்ணீர் பஞ்சமின்றி வழிந்துகொண்டிருந்தது.
அகில இலங்கையில் முதல் ரேங்க் வருவாய் என்று உன் பாடசாலை, உன் ஆசிரியர்கள், உன் குடும்பம், உன் மாவட்டம் என்று எல்லோரும் உன்னை நம்பிக்கொண்டு இருக்க உன் மனதில் சலனம் வருவதா? படிப்பு வேண்டாம் என்கிற எண்ணம் வருவதா? அதைவிட மாமா? அவரின் கனிவான விழிகள் ‘என்னம்மா செய்துகொண்டு இருக்கிறாய்?’ என்று கேட்பது போலிருந்தது.
அவரின் நம்பிக்கையை மோசம் செய்துவிட்டு, படிக்காமல் கட்டிலில் விழுந்து கண்ணீர் வடிக்கிறோமே என்கிற குற்றவுணர்ச்சி தாக்க விழுக்கென்று எழுந்து அமர்ந்தாள். மிச்சம் மிகுதியாய் இருந்த தடுமாற்றத்தை உதறித் தள்ளினாள். அது ஒன்றும் அத்தனை இலகுவாயில்லை. உள்ளுக்குள்ளே ஒரு வலி கிடந்து நமநமத்துக்கொண்டே கிடந்தது.
‘இது உனக்கு வேண்டவே வேண்டாம்! இந்தச் சலனம்.. ஆமாம் சலனம்தாம். வேண்டாம்!’ அவளே முடிவு கட்டிக்கொண்டாள்! அறைக்குள் இருந்து வேகமாக வந்து தாயின் அருகில் அமர்ந்துகொண்டாள்.
தனிமை தானே எதையெதையோ நினைக்க வைக்கும்.
“அம்மா முறுக்கு கொஞ்சம் தாங்கோ. தேத்தண்ணியும்.” இரவு நேரத்திலா என்கிற அவரின் முறைப்பையும் பொருட்படுத்தாது வாங்கிக் குடித்துவிட்டு புத்தகம் கொப்பிகளை தூக்கிக்கொண்டு ஸ்டடி ஹாலுக்கு நடந்தாள்.
அங்கே படித்துக்கொண்டிருந்த சுரேந்தரைக் கண்டதும் ‘அவனோட போறேல்ல’ என்று விரல் நீட்டி எச்சரித்தவனின் நினைவுகள் நெஞ்சை அறுக்க, கண்களை இறுக்கி மூடித்திறந்தாள்.
‘இதென்ன? அவ்வளவு இலகுவா ஒருத்தன் என்ர மனதை அசைப்பானா? அதுக்கு நான் இடம் கொடுக்கிறதா? நோ!’ உறுதியாக சொல்லிக்கொண்டு வந்து படிக்க அமர்ந்தவள், பெரும் சிரமத்துக்கு மத்தியில் படிப்பில் ஆழ்ந்தாள்.
இடைவேளையின் போது, “ஏன் முகம் ஒருமாதிரி இருக்கு? ஸ்போர்ட்ஸ் எல்லாத்துலயும் கலந்து கொள்ளவேணும் எண்டு கட்டாயமில்லை. படிப்புதான் முக்கியம். நல்லா படி” என்று சுரேந்தர் சொன்னபோது, இதையே அழுத்தமாக அதட்டிச் சொன்னவனின் நினைவு வரவும், நெற்றியை பிடித்துக்கொண்டாள்.
என்ன வேதனை இது? நெஞ்சு முழுக்க அவனிடம் ஓடப்போகிறேன் என்று கதறிக்கொண்டிருக்க, மூளை அவனை மறந்துவிட்டுப் படி படி என்கிறது.
“என்ன? திரும்பவும் தலைவலியா?” அருகில் நின்றவன் அக்கறையோடு கேட்க, “இல்ல வெயிலுக்கு நிண்டது; அதுதான்.” என்றவள் வேகமாக ஸ்டடி ஹாலுக்குள் நுழைந்துகொண்டாள்:
அங்கானால் சுரேந்தர் எதுவும் கதைக்க மாட்டானே.
சுரேந்தரின் புருவங்கள் சுருங்கியது. ஆனாலும் ஒன்றும் கேட்கவில்லை.
படித்து முடித்து வீடு வந்ததும் ஃபோனை எடுத்துப் பார்க்கத் துடித்த கையையும் மனதையும் அடக்கினாள். முடிவு செய்தது செய்ததுதான். எனக்கு எதுவும் வேண்டாம். இதையே ஜபம் போல் சொல்லிச் சொல்லியே உறங்கிப்போனாள்.
துஷ்யந்தன் சினத்தின் உச்சியில் இருந்தான். அன்றானால், யாரோ ஒருவன் திடீரென்று வந்தான்; அவனை மாட்டை அடிப்பதுபோல் அடித்துவிட்டு அவள் பக்கமே திரும்பக் கூடாது என்று எச்சரித்துவிட்டுப் போனான்.
நேற்றோ, கிரவுண்ட்டில் விளையாடிக்கொண்டு இருந்தவன் மாணவியர் நின்றபக்கம், அவள் எங்கே என்பதாகப் பார்த்தது மட்டும்தான். எங்கிருந்து வந்தான் என்றே தெரியாமல் இன்னொருவன் வந்து சட்டையை பிடித்து மிரட்டிவிட்டுப் போகிறான். இரண்டு முறையும் அசிங்கப்பட்டதுதான் மிச்சம்.
அவன் என்னவோ செய்ய நினைக்க நடப்பது என்னவோ முற்றிலும் வேறாக இருந்தது. ‘ஊருல இருக்கிறவன் எல்லாம் உனக்கு சப்போர்ட்டாடி? என்னையா அவமானப் படுத்துறாய். நினச்சு நினச்சு அழ வைக்கேல்ல. நான் துஷ்யந்தன் இல்ல.’ கருவிக்கொண்டான்.
அடுத்த நாள் இனி எந்த சந்தர்ப்பத்திலும், என்னை மீறிக்கூட அவனுக்கு அழைக்கக் கூடாது என்று அவனது இலக்கத்தை போனிலிருந்து அகற்றினாள் கவின்நிலா. அதற்குமுதல்.. கடைசியாக என்று கதறிய மனதின் வலி தாளாமல் அவனோடான அந்த உரையாடலை எடுத்துக் பார்த்தாள். பெரிதாக ஒன்றுமே அவர்கள் கதைத்துக்கொள்ளவில்லை. காதலில் உருகவில்லை. ஆனாலும் நெஞ்சில் நேசம் பொங்கிய தருணம் அல்லவா. கண்ணை மறைத்த கண்ணீரோடு வாட்சப், வைபர் என்று எல்லாவற்றிலிருந்தும் அவனை அகற்றினாள்.
‘அவன் சம்மந்தப்பட்ட எதுவுமே வேண்டாம்!’ முடிவு செய்துகொண்டு டியூஷனுக்குப் போக, ‘என்னை அத்தனை இலகுவாக உன்னால் தூக்கி எறிந்துவிட முடியுமா?’ என்று அவன் கேட்பதுபோல் சசி நின்றுகொண்டிருந்தாள்.
‘உன்னைத் தூக்கி எறியமுடியுமா தெரியாது. ஆனால், என்னை ஒருமுகப் படுத்த என்னால முடியும். என்ர மனதை அவ்வளவு இலகுவாக யாராலும் கலைத்துவிட முடியாது!’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் சசியின் முகம்பார்த்து எப்போதும்போல கதைத்தாள்.
அதன்பிறகான நாட்களில் பள்ளிக்கூடம் டியூஷன் இரண்டுக்கும் அவன் வீதியை தவிர்த்துவிட்டு சுற்றுப்பாதையில் சென்றுவந்தாள்.
அவனைக் காணும் சந்தர்ப்பத்தை அவள் அமைத்துக்கொள்ளவே இல்லை. படிப்பிலும், அது முடிந்தால் விளையாட்டுப் போட்டிக்கான இடைவிடாத பயிற்சியிலும், அவளே அவர்களின் இல்லமான அலைமகள் இல்லத்தின் தலைவி என்பதால் வேலையும் அளவுக்கு அதிகமாகவே இருந்ததிலும் ஓரளவுக்கு நிதானத்துக்கு வந்துவிட்டிருந்தாள்.
சிலநேரங்களில்.. அதுவும் கிரவுண்டுக்கு போகும் ஒவ்வொரு தருணத்திலும் நினைவுகள் அவனிடம் ஓடிவிடும். எதிர்பாராமல் அமைந்த அவனுடனான அந்த அற்புதமான தருணத்தை அவளின் அனுமதி இல்லாமலேயே மனம் மீட்டிப் பார்த்துவிடும். அந்த நேரத்தில் முணுக்கென்று ஒரு வலி உயிரின் ஆழத்தை சென்று தாக்குகையில், உள்ளம் கதறும். சட்டென்று, ‘உன் லட்சியத்தை மறக்காதே! அதற்கு தடையாக வரும் எதையும் உனக்குள் அனுமதிக்காதே!’ என்று மூளை அறிவுறுத்த தொடங்க, சட்டென அந்த இடத்தைக் கடந்துவந்து பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வாள். அவளே அவளின் மனதுக்கும் மூளைக்கும் வைத்துக்கொண்ட சவால் அது! மூளையே வென்றுகொண்டிருந்தது.
அவனும் அவளுக்கு அழைக்கவில்லை. அவளைத் தேடிக்கொண்டு வரவுமில்லை. ஏன் என்னைத் தவிர்க்கிறாய் என்று கேட்கவுமில்லை. அவனும் அவள் வேண்டாம் என்று எண்ணிக்கொண்டான் போலும் என்கிற எண்ணமே சூடான கண்ணீரை கன்னத்தில் இறக்கியபோதும் அந்த வார முடிவில் ஒரு நிதானத்துக்கு வந்திருந்தாள் கவின்நிலா.
காலம் கைகூடினால் அவளது காதலும் கைகூடும். அதற்கான காலம் மட்டும் இதுவல்ல!
அவள் வாழ்வின் முதல் சலனம் என்ன நடக்கிறது என்று உணர முதலே நடந்து முடிந்திருந்தது. அப்படித்தான் நினைத்துக்கொண்டாள்.