நீ தந்த கனவு 1 – 1

சூரியன் உச்சிக்கு வர ஆரம்பித்திருந்த முன் காலைப் பொழுது. ஆதினியின் ஸ்கூட்டி, அந்தத் தார்ச்சாலையில் முழு வேகத்தில் வந்துகொண்டிருந்தது. தலையில் ஹெல்மெட் இல்லை. வேக எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தவும் இல்லை. சற்றுத் தொலைவில், வீதியோரமாக நின்ற இரண்டு காக்கிச் சட்டைகளைக் கண்டும் கூட அலட்டிக்கொள்ளவில்லை.

அதைக் கண்டு, அன்றைய நாளின் விசேட பாதுகாப்புக் கருதிப் பணியில் அமர்த்தப்பட்டிருந்த, ‘இன்ஸ்பெக்டர்’ கதிரவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

முப்பதில் தான் வர வேண்டும் என்று அந்த வீதி முழுக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதை மதிக்கவில்லை. நிச்சயமாக இவர்களுக்கு முன்னே எங்கேயாவது போக்குவரத்துக் காவலர்கள்(traffic police) நின்றிருப்பார்கள். அவர்கள் இவளை அறிவுறுத்தியோ, அபராதம் செலுத்த வைத்தோதான் அனுப்பியிருப்பார்கள். அதையும் மதிக்கவில்லை. கண்ணெதிரிலேயே நிற்கும் அவர்களைப் பார்த்துக் கூட வேகத்தைக் குறைக்கவில்லை என்றால், இந்த உச்சி வெய்யிலில் கால் கடுக்கக் காவல் காக்கும் அவர்களைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறாள், இந்தப் பெண்?

நொடியில் முடிவு செய்து, ‘Stop’ என்கிற சிவப்பு நிறக் குறியீட்டு அட்டையை, வீதியின் குறுக்கே நீட்டினான்.

அதை அவள் எதிர்பார்க்கவில்லை போலும். அவசரமாக பிரேக்கை அழுத்தி நிறுத்திவிட்டு, அவனை முறைத்தாள்.

வீதியில் வந்த முறையே தவறு. இதில், பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரி அவனையே முறைப்பாளா? இவளுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று மனத்தில் எண்ணியபடி, “ஹெல்மெட் எங்க?” என்று அதட்டினான்.

“போட மறந்திட்டன்.”

“லைசென்ஸ்?”

“கொண்டு வரேல்ல!”

அவளின் பணிவற்ற உடல் மொழியும், பதில் சொன்ன தோரணையும் அவனை இன்னுமே உசுப்பேற்றின. “லைசென்ஸ் இல்ல, ஹெல்மெட் இல்ல, ஓவர் ஸ்பீட். இதில ஆளுக்கு மேலால திமிர். ஒழுங்கு மரியாதையா நடந்து போய் லைசென்ஸ் எடுத்துக்கொண்டு வந்து காட்டிப் போட்டு, ஃபைனையும் கட்டிட்டுப் போகலாம்!” என்றான், இறுக்கமான குரலில்.

“இல்லாட்டி?” ஸ்கூட்டியிலிருந்து இறங்காது, கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு நிதானமாக வினவினாள் அவள்.

கதிரவனுக்குச் சுள் என்று கோபம் வந்தது. “என்ன சேட்டையா? பொம்பிளைப் பிள்ளையே எண்டு நிதானமாக் கதைச்சா, செய்றதையும் செய்துபோட்டுத் திமிர் வேற? மரியாதையா இறங்கலாம்! இண்டைக்கு முழுக்க வெய்யிலுக்க நிப்பாட்டினாத் தெரியும்!” என்று சீறினான்.

“சேர்…” அதுவரை நேரமும் என்ன செய்வது என்று தெரியாது கையைப் பிசைந்துகொண்டு நின்ற கொன்ஸ்டபிள், அவன் சொன்னதைக் கேட்டுப் பதறியடித்துக்கொண்டு இடைமறித்தார்.

“நீங்க சும்மா இருங்க நாயகம். நாலு நாளைக்குப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலையவிடோணும். அப்பதான் இந்தத் திமிர் எல்லாம் அடங்கி, ஆரிட்ட எப்பிடி நடக்கோணும் எண்டு தெரிய வரும்!” விழிகளில் நெருப்புப் பறக்கச் சொன்னவனின் மிரட்டலுக்கெல்லாம் அவள் அசையவில்லை.

மாறாக, ஸ்கூட்டியிலிருந்து இறங்கி, “வீட்ட போய் என்ர லைசென்ஸ எடுத்துக்கொண்டு வாங்க.” என்று ஸ்கூட்டியை நாயகத்திடம் கொடுத்தாள்.

ஒரு கணம் கதிரவனே அப்படியே நின்றுவிட்டான். ஒரு சின்ன பெண், காவலதிகாரி ஒருவரைப் பார்த்து வேலை ஏவுகிறாளே! அவள் சொன்னதைக் கேட்டு நாயகமும் புறப்பட்டதைக் கண்டு இன்னுமே அதிர்ந்துபோனான்.

“நாயகம் அண்ணா! என்ன செய்றீங்க?”

அவனது அதட்டலை அவர் கேட்டவில்லை; புறப்பட்டிருந்தார்.

அவளும் அவனை மிதப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, அங்கிருந்த மரத்தடி நிழலில் இருந்த கல்லில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“ஏய்! நீ என்ன பெரிய இவளா? ஒரு போலீஸ் கொன்ஸ்டபிளையே வேல வாங்குறாய்.” அடக்கப்பட்ட கோபத்தோடு இரைந்தவனின் பேச்சில், ஒரு பெண்ணுக்கான மரியாதை எங்கோ மறைந்து போயிருந்தது. அவ்வளவு சினம் பொங்கிற்று.

அவனுக்கு மாறான நிதானத்தோடு, “கதி…ர…வன்! நல்ல பெயர்தான்!” என்று அவனுடைய, ‘நேம் பட்ச்’சைப் பார்த்து எழுத்துக்கூட்டி வாசித்துச் சிலாகித்துவிட்டு, “ஊருக்குப் புதுசா கதிரவன்?” என்று விசாரித்தாள்.

எதற்கும் அசராத அவளின் அந்த நிதானம், அவனை யோசிக்க வைத்தது. எவ்வளவுதான் தைரியமானவர்களாக இருந்தாலும், போலீசின் முன்னே, இவ்வளவு இலகுவாக இருக்க முடியாது. அதுவும், ஒரு இளம் பெண், தன் பாதுகாப்பைக் குறித்து நிச்சயம் யோசிப்பாள். இவளானால் மருந்துக்கும் அசையவில்லை.

அதைவிட, அவனைப் புறக்கணித்து, அவள் சொல்லுக்குப் பணிந்து போன நாயகம் வேறு, அவன் சிந்தைக்குள் நின்று இடறினார். செழிப்பான வீட்டுப் பெண் என்று பார்க்கவே தெரிந்தது. இப்போது, அதிகாரத்தில் இருக்கும் வீட்டுப் பெண்ணோ என்று எண்ணியதும் ஒரு கணம் தனக்குள் தடுமாறினான்.

அடுத்த கணமே நிமிர்ந்தான். எவ்வளவு பெரிய இடமாக இருந்தால்தான் என்ன? தவறு அவள் மீது! பிறகு எதற்கு அவன் தடுமாற? அவன் ஒரு அதிகாரி. கடமையில் இருக்கிறான். அவன் இவளுக்கெல்லாம் பணிவதா? நிமிர்ந்து நின்று, “உன்ர பெயர் என்ன? ஐசி எடு!” என்றான் மிரட்டலாக.

“அச்சச்சோ கதிரவன்! இத நீங்க கொஞ்சம் முதலே கேட்டிருக்கக் கூடாதா? ஐசி ஸ்கூட்டியோட போய்ட்டுதே!” அளவுக்கதிகமாகக் கவலைக் கோடுகளை முகத்தில் காட்டிச் சொன்னாள் அவள்.

பல்லைக் கடித்தான் கதிரவன். என்ன ஆனாலும் சரி, இவளுக்குப் பாடம் படிப்பிக்காமல் விடக் கூடாது என்று மீண்டும் ஒருமுறை முடிவு கட்டிக்கொண்டு, வீதியில் கவனத்தைப் பதித்தான்.

எல்லாவற்றையும் விட இன்றைய நாளின் பாதுகாப்பு அவனுக்கு மிக மிக முக்கியம். அதில், சந்தேகத்திற்கு உரியவர்களை மறித்து, விசாரித்து அனுப்பிக்கொண்டிருந்தான்.

நாயகமும் இல்லாததால், ஆட்களை விசாரிப்பது, சந்தேகத்திற்குரிய நபர்களின் விபரங்களைக் குறித்து வைப்பது என்று எல்லா வேலைகளையும் அவன் ஒருவனே பார்க்க வேண்டி இருந்தது. அது வேறு இன்னுமே சினமூட்டியது. திரும்பி அவளைப் பார்த்தான். கால்களை நீட்டி அமர்ந்திருந்து கைப்பேசியில் கவனமாக இருந்தாள். அவனைக் கண்டோ, இப்படி வீதியில் நிறுத்தி வைத்திருக்கிறான் என்றோ சற்றும் பயப்படவே இல்லை.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock