அணிந்திருந்த காக்கிச் சட்டையின் மீதான, அவன் பார்க்கும் உத்தியோகத்தின் மீதான அவனுடைய கர்வம், அவள் முன்னே அடி வாங்கியது. பற்களை நறநறத்தான். ‘இரடி, உனக்கு இண்டைக்கு இருக்கு!’ என்று கறுவிக்கொண்டான்.
இதற்குள் போலீஸ் ஜீப் ஒன்று வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவனின் முன்னே ஓடிச் சென்று நின்று சல்யூட் அடித்தான்.
சிறு தலையசைப்பால் அதை அங்கீகரித்தவன் பார்வை, கதிரவனைத் தாண்டி அவளிடம் நகர்ந்தது.
யார் என்று நிமிர்ந்தவளும், வியப்போடு விழிகளை விரித்து, “அட எள்ளுவய பூக்கலையா, என்ன இந்தப் பக்கம்?” என்று விசாரித்தாள்.
கதிரவனுக்கு விழிகள் வெளியே தெறித்து விடும் நிலை. அதிர்ச்சியுடன் எல்லாளனைப் பார்த்தான். அவன் பார்வையை உணர்ந்த எல்லாளன் பல்லைக் கடித்தான். அவன் என்றால் டிப்பார்ட்மெண்டே அலறும். அப்படியிருக்க, சின்ன பெண் இவள், கதிரவன் முன்னால் எள்ளுவய என்கிறாளே!
“நீ இஞ்ச என்ன செய்றாய்?” என்று அதட்டினான்.
“அது சேர்…” என்று கதிரவன் ஆரம்பிக்க முதலே, “ஹெல்மெட் இல்ல, லைசென்ஸ் இல்ல எண்டு கதிரவன் என்னைப் பிடிச்சு வச்சிட்டார். அதான் எடுத்துக்கொண்டு வர நாயகம் அங்கிளை அனுப்பி இருக்கிறன்.” என்று உதட்டோரம் வழியும் சின்னச் சிரிப்புடன் சொன்னாள் அவள்.
“அதை எல்லாம் கையிலேயே வச்சிருக்கோணும் எண்டு உனக்குத் தெரியாதா? என்ன நினைப்பில வீட்டை விட்டு வெளிக்கிட்டனி?” குரலை உயர்த்தாமல் சீறினான் அவன்.
“விடுங்க எள்ளுவய! விட்டுட்டு வந்ததாலதானே கதிரவன் எனக்குப் ஃபிரெண்ட் ஆனவர். ஓமெல்லா கதிரவன்?” சீண்டும் குரலில் அவள் கேட்க, கதிரவன் மீண்டும் பற்களை நறநறத்தான்.
எல்லாளனுக்கு இருக்கிற பிரச்சனைகள் போதாது என்று இவளுமா என்று சினம் துளிர்த்தது. அதைவிட, பொது இடங்களில் வைத்து, மற்றவர்களின் முன்னே, இப்படியெல்லாம் அழைத்துப் பழகாதே என்று எத்தனையோ முறை சொல்லிவிட்டான். கேட்பதே இல்லை. அந்த எரிச்சலில், “எழும்பி நட நீ!” என்று வாய்க்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
அப்போதும் மங்காத சிரிப்புடன் மறுத்துத் தலையசைத்தாள் அவள். அதற்குள் அவளின் லைசென்ஸ், ஹெல்மெட்டுடன் வந்து சேர்ந்தார் நாயகம்.
“சிலுக்குக்கு ஒண்டும் நடக்கேல்லையே?”
“இல்லயம்மா, கவனமாத்தான் ஓடினனான்.” அவளின் சிலுக்கை மிகக் கவனமாக மரத்தின் கீழே நிறுத்திவிட்டு, கொண்டுவந்தவற்றை அவளிடம் நீட்டினார்.
“அதுதான் எல்லாம் வந்திட்டுதுதானே. அவளை அனுப்பி வைங்க!” கதிரவனுக்கு ஆணையிட்டான் எல்லாளன்.
“சேர், ஃபைன்…”
“அனுப்புங்க கதிரவன்!”
அவன் வார்த்தைகளை அழுத்திச் சொன்ன விதத்தில் தனக்குள் பதறிய கதிரவன், “சரி, நீங்க போகலாம்!” என்றான் அவள் மீதான தன் எரிச்சலை மறைத்துக்கொண்டு.
“அப்பிடி நான் போகோணும் எண்டா, நீங்க எனக்கு சல்யூட் அடிக்கோணுமே கதிரவன்!” சிரித்துக்கொண்டு சொன்னாள் ஆதினி.
கதிரவனுக்கு மீண்டும் சினம் உச்சிக்கு ஏறியது. எல்லாளனாலும் அதை அனுமதிக்க முடியாது. அதில், “விளையாடம எழும்பி நட ஆதினி!” என்றான் கண்டிப்புடன்.
“நான் சொன்னது நடக்காம அசைய மாட்டன்!”
எல்லாளனுக்கு அவளைப் பற்றித் தெரியும். கதிரவனுக்குச் செக் வைத்து விட்டாள் என்று புரிந்தது. அதைவிட, இந்தப் பிரச்னையை வளர்க்கவோ, அங்கு மெனக்கெடவோ அவனுக்கு நேரமில்லை. அன்றைய நாளுக்கான வேலைகள் விரட்டிக்கொண்டிருந்தன. அதில், பேசாமல் திரும்பிக் கதிரவனை ஒரு பார்வை பார்த்தான்.
அதன் பொருள் புரிந்தபோதும், “சொறி சேர்! என்ர மேலதிகாரிகளைத் தவிர்த்து வேற ஆருக்கும் நான் சல்யூட் அடிக்க மாட்டன்!” என்று விறைப்புடன் சொன்னான் கதிரவன்.
எல்லாளனின் முகம் கடுத்தது. “எனக்குப் பாதுகாப்பு முக்கியம், கதிரவன். உங்கட கட்டுப்பாட்டுக்குக் கீழ இருக்கிற இந்த ஏரியாவில ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்திது… அதுக்குப் பிறகு தெரியும்!” கடுமையாக அவனை எச்சரித்துவிட்டுப் போனவனின் ஜீப், வீதியில் சீறிப்பாய்ந்த வேகத்திலேயே அவன் கோபம் புரிந்தது.
கதிரவனுக்கு நெஞ்சுக்கூடே ஒரு முறை நடுங்கிற்று. அதைவிட, சுண்டு விரலைக் கூட அசைக்காமல், ஏஎஸ்பியை(Assistance Superintendent of Police) கூட ஆட்டி வைக்கும் அதிகாரம் கொண்ட இவள் யார் என்கிற கேள்வி எழுந்தது.
எவளாக இருந்தாலும் அவளுக்கு அவன் அடிபணிவதா என்கிற வீம்பு, அவனை இறங்கி வர விடமாட்டேன் என்றது.
அதில், “ஏஎஸ்பி சேரே சொன்னபடியாத்தான் ஃபைன் இல்லாம விடுறன்! நீங்க போகலாம்!” அவளைப் பாராமல் சொல்லிவிட்டு, வாகனங்களைக் கவனிக்க வீதியின் பக்கமாக வந்து நின்றான்.
அவள் புறப்படவில்லை. அதற்கு மாறாக அவனருகில் தானும் வந்து நின்றுகொண்டு, அவன் மறிக்கிற வாகனத்தை எல்லாம், “நிக்காமப் போங்க போங்க!” என்று அனுப்ப ஆரம்பித்தாள்.
அவளை அறிந்த இளவட்டங்கள், “நன்றி தல!”, “தேங்க்ஸ் தங்கம்!” என்றபடி, கதிரவனைப் புறக்கணித்தனர். அவளை அறியாதவர்கள் கதிரவன் சொல்வதைக் கேட்பதா, இல்லை, அவள் சொல்வதைக் கேட்பதா என்று வாகனத்தை வைத்துக் கொண்டு தடுமாறினார்.
பல்லைக் கடித்த கதிரவன், “ஏய் என்ன? திமிரா உனக்கு? மரியாதையாப் போயிடு, இல்ல காலத்துக்கும் கவலைப்படுற மாதிரி எதையாவது செய்திடுவன்!” என்று, அவள் முகத்துக்கு முன்னே வந்து சீறினான்.
அவள் அசையவே இல்லை. “நீங்க ஒரு சல்யூட் அடிச்சா நான் போயிடுவன். அத விட்டுப்போட்டு ஏன் இவ்வளவு கோவம்?” என்றாள் அப்போதும் மங்காத சிரிப்புடன்.
அதற்குள், “எஸ்பி(Superintendent of Police) லைன்ல நிக்கிறார்.” என்றபடி ஓடி வந்தார், நாயகம்.
வேகமாகச் சென்று அவரோடு பேசினான் கதிரவன். யாழ். மேல் நீதிமன்றத்தின் நீதிபதி குழந்தைவேலு இளந்திரையன், தன் வீட்டிலிருந்து நீதிமன்றத்துக்குப் புறப்பட்டுவிட்ட அறிவுறுத்தலை வழங்கிவிட்டு, அவருக்கான பாதுகாப்புக் குறித்தும் அறிவுறுத்திவிட்டு, அழைப்பைத் துண்டித்தார் அவர்.
இன்னுமே பதட்டமானான் கதிரவன்.
எதற்கும் அஞ்சாமல், எதைப் பற்றியும் யோசிக்காமல், யாருக்கும் எந்த அதிகாரத்துக்கும் அடிபணியாமல், நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் மாத்திரமே தீர்ப்புச் சொல்லும் அவருக்கான ஆபத்து, எப்போதுமே அவரைச் சுற்றியிருக்கும்.
அப்படியிருக்க, இன்றைக்கு அவர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற அச்சத்தினாலேயே இன்றைய பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. காரணம், இன்று அவர் சொல்லப்போகும் தீர்ப்பு அத்தகையது.
அப்படியிருக்க, அவன் அவருக்கான பாதுகாப்பைக் கவனிப்பானா, இல்லை, பக்கத்தில் இருக்கும் தொல்லையைக் கவனிப்பானா? அவர் வருகிறபோது இவள் ஏதும் குரங்குச் சேட்டை காட்டிவிட்டாள் என்றால் அவன் கதி என்னாவது?
வேகமாகச் சென்று அவள் முன்னே நின்று, “அம்மா தாயே, சல்யூட் என்ன கையெடுத்தே கும்பிடுறன். தயவு செய்து போங்க! எனக்கு ஒரு நல்ல மனுசனின்ர உயிரைக் காப்பாத்திற வேல இருக்கு!” என்றான் மெய்யாகவே கையெடுத்துக் கும்பிட்டபடி.
“அந்த சல்யூட்?”
அவனும் விறைத்து நின்ற தேகத்துடன் அவள் கேட்டதைச் செய்தான்.
“இது நல்ல பிள்ளைக்கு அழகு!” அவன் தோளில் தட்டிச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் ஆதினி.
“அந்த றோட்டால போய்ப் போங்க! இதால இப்ப நீதிபதின்ர கார் வரும்!” என்று, எதிரில் தெரிந்த குறுக்கு வீதிக்குள் அவளை அனுப்பிய பிறகே நிம்மதியானான் அவன்.
ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுவிட்டு, “இந்தப் பிள்ளை ஆர் நாயகம்? நீங்க இந்தப் பம்மு பம்முறீங்க. ஏஎஸ்பி சேர் கூட ஒண்டுமே சொல்லாமப் போறார்.” என்று ஆற்றாமையும் சினமுமாகக் கேட்டான்.
“இவ்வளவு நேரமா ஆருக்குப் பாதுகாப்புக் குடுக்கிறதுக்காக இந்த உச்சி வெயிலுக்க நிக்கிறீங்களோ அவரின்ர மகள்!” அமைதியான குரலில் சொன்னார், நாயகம்.
“என்ன?” அதிர்ந்து திரும்பினான் கதிரவன். அப்படியான ஒரு மனிதருக்கு இப்படியான ஒரு பெண்ணா? அவனால் நம்பவே முடியவில்லை.