நீ தந்த கனவு 10 – 1

இன்றைக்கு வவுனியாவிலிருந்து அகரனும் வருகிறான் என்பதில், நால்வருக்குமான நிச்சய மோதிரங்களை எடுக்கப் போகலாம் என்று அகரனும் எல்லாளனும் முடிவு செய்திருந்தனர். அதற்காக வீடு வந்து தயாரானான் எல்லாளன்.

அவனுக்கான சிற்றுண்டியையும் தேநீரையும் கொண்டுவந்து கொடுத்த சியாமளாவின் முகம் நன்றாக இல்லை.

அதைக் கவனித்துவிட்டு, “என்னம்மா?” என்று வினவினான் தமையன்.

உடனேயே எதையும் சொல்லவில்லை அவள். மனத்தில் இருப்பதைக் கேட்பதா வேண்டாமா என்கிற கலக்கமும் குழப்பமுமாக அவனைப் பார்த்தாள்.

“யோசிக்காமச் சொல்லு. என்ன?” விடாமல் ஊக்கினான் தமையன்.

“உங்களுக்கு இந்த நிச்சயத்தில விருப்பம்தானா அண்ணா?” குழப்பத்திற்கும் தடுமாற்றத்துக்கும் மத்தியில் கேட்டுமுடித்தாள்.

இளம் வயதிலேயே வயதை மீறிய பிரச்சனைகளைச் சந்தித்து, அளவுக்கதிகமான பொறுப்புகளையும் கடமைகளையும் ஏற்றுக்கொண்டதாலோ என்னவோ, அன்னை தந்தையரோடே அவனுடைய இலகு சுபாவமும் காணாமல் போயிருந்தது. எனினும் சின்ன சிரிப்பு, சிறு சிறு கேலிகளுக்கெல்லாம் பஞ்சம் இராது.

அப்படியானவனின் முகத்தில் திருமண நிச்சயம் நடக்கப் போவதற்கான எந்த மலர்ச்சியும் இல்லை. ஆதினியின் மீது ஈர்ப்போ, அவளோடு பேசுவதற்கு ஆர்வமோ காட்டவும் இல்லை.

அவன் கையாளும் வழக்குகளில் ஒன்றைப் போன்றே நடக்கப் போகிற நிச்சயத்தையும் கையாள்கிறானோ, தனக்காகத்தான் இதற்குச் சம்மதித்தானோ என்கிற கேள்விகள் அவளுக்குள் எழுந்துகொண்டே இருந்தன. அதை, காலம் கடந்துவிட முதல் கேட்டால்தானே பிரயோசனம்?

அவன் பார்வையில் மெல்லிய ஆச்சரியம் படர்ந்தது.

“திடீரெண்டு என்னத்துக்கு இந்தக் கேள்வி?” என்று திருப்பிக் கேட்டான்.

“திடீரெண்டு இல்லை அண்ணா. கொஞ்ச நாளா இது மட்டும்தான் மண்டைக்க ஓடிக்கொண்டே இருக்கு.”

“அதுதான் ஏன்?”

“உங்களுக்கு விருப்பம் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியவே இல்லயே.” கவலையோடு சொன்னாள்.

“விருப்பம் இல்லாமையா ஓம் எண்டு சொன்னனான்?”

“பாத்தா அப்பிடித் தெரியேல்லையே அண்ணா.” கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் அவன் கேள்விகளாகக் கேட்பதிலேயே அவள் சந்தேகம் வலுத்துப்போயிற்று.

“நான் என்ன சின்ன பிள்ளையாம்மா? எனக்கு நிச்சயம், எனக்கு நிச்சயம் எண்டு துள்ளிக்கொண்டு திரிய?” சிறு சிரிப்புடன் வினவினான் அவன்.

“அண்டைக்கும் கரும்பு தின்னக் கூலியா எண்டு மறைமுகமாத்தான் பதில் சொன்னனீங்க. இப்பவும் அப்பிடித்தான். எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு எண்டு நேரடியாச் சொல்லுறீங்களே இல்ல. அண்டைக்கு ரெண்டு கலியாணமும் நடந்தா என்ர அண்ணா என்னோடயே இருப்பார், காலத்துக்கும் எல்லாரும் ஒரே வீட்டிலேயே இருக்கலாம் எண்டுறது மட்டும்தான் பெருசாத் தெரிஞ்சது. இப்ப யோசிக்க யோசிக்க, உங்களுக்குக் கொஞ்சமும் பொருத்தம் இல்லாத ஒருத்திய, எனக்காகவும் மாமா மறைமுகமா வற்புறுத்தினதாலயும் ஓம் எண்டு சொல்லிட்டீங்களோ எண்டு கவலையா இருக்கு. நானும் உங்களுக்குப் பிடிச்சிருக்கா, விருப்பமா எண்டு கேக்கேல்ல. அவள் உங்களுக்குப் பொருத்தமா எண்டு யோசிக்கவும் இல்ல. எவ்வளவு சுயநலம் பிடிச்சவளா இருந்திருக்கிறன் எண்டு பாருங்களன்.” என்றவளுக்கு மேலே பேச வரமாட்டேன் என்றது.

அவளுக்கென்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்யும் தமையனுக்கான வாழ்க்கையை மெத்தனமாக அணுகிவிட்டாளே!

“என்ர சந்தோசத்துக்காக உங்களப் பலிகடா ஆக்கிட்டேனா அண்ணா?” கலங்கிவிட்ட விழிகளோடு கேட்டவளை, “உனக்கு என்ன விசராம்மா? முதல், இதென்ன பலிகடா அது இது எண்டு கத பேச்சு?” என்று அதட்டினான் தமையன்.

இப்போதும், ஆதினியை அப்படிச் சொல்லாதே என்று அவன் சொல்லவில்லை. இப்படிக் கதைத்துப் பழகாதே என்கிறான். அவள் கலக்கம் கூடிப்போனது. ஆதினி மீது அவனுக்குப் பெரிய ஈடுபாடு இல்லை என்பதும் தெள்ளத் தெளிவானது.

அதில், “சும்மா சும்மா அதட்டாதீங்க அண்ணா. எனக்கு யோசிக்க யோசிக்க விசராக்குது. அண்டைக்கு மருந்துக்கும் பயப்பிடாம எப்பிடித் துவக்கத் தூக்கிக்கொண்டு வந்தாள்? அப்பிடியான அவளோட வாழுறது கஷ்டம். அவள் ஒரு அடங்காப்பிடாரி, அகங்காரம் பிடிச்சவள். அதுதான் சீதனம் வேணும் எண்டு சொல்லி மாமா உங்கட தலைல அவளைக் கட்டிட்டார். நான்தான் அறிவில்லாம வாயை மூடிக்கொண்டு இருந்திட்டன் எண்டா, நீங்களும் ஏன் அண்ணா ஓம் எண்டு சொன்னனீங்க? விருப்பம் இல்லை எண்டு சொல்லியிருக்கலாம். மாமா பிழையா நினைச்சிருக்க மாட்டார். இப்பவும் ஒண்டும் லேட் ஆகேல்ல. இந்த நிச்சயம் வேண்டாம் எண்டு இவரிட்டச் சொல்லுங்கோ. பிடிக்காதவளக் கட்டிக் காலம் முழுக்கச் சிரமப்படுறதுக்கு அது எவ்வளவோ நல்லம் எல்லா.” என்றாள் கவலையும் கலக்கமுமாக.

அதற்கு மாறாக அவளின் பேச்சு எல்லாளனுக்கு அதிர்ச்சியையே கொடுத்தது. அவன் தங்கையா என்று திகைத்தான்.

அதில், “எவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் கதைக்கிறாய் நீ? முதல், அங்கிள் அப்பிடியான ஆளா? எங்களுக்கும் சேத்துத்தான் இத அவர் யோசிச்சிருப்பாரா இருக்கும். அதை விளங்கிக்கொள்ளாம… எல்லாத்தையும் விட, நீயும் ஒரு பொம்பிளைப் பிள்ளை. அப்பிடி இருக்கேக்க அவளைப் பற்றி இப்பிடியெல்லாம் கதைக்காத. அதைவிட, ஓம் இல்லை எண்டு மாறி மாறிச் சொல்ல இது சின்ன பிள்ளை விளையாட்டு இல்ல. கலியாணம். ஒருக்காச் சொன்னாச் சொன்னதுதான்! நானும் யோசிக்காம ஓம் எண்டு சொல்லேல்ல. அதால இதைப் பற்றி இனி ஒண்டும் கதைக்காத!” என்று கண்டித்தான்.

அவளுக்கு அவன் கடிந்துகொண்டதை விட, சொல்லிவிட்ட சம்மதத்திற்காக இந்த வாழ்க்கையை ஏற்க நினைக்கிறானோ என்பதுதான் முதன்மையாக நின்றது.

“எனக்கும் இப்பிடி எல்லாம் கதைக்க விருப்பம் இல்ல அண்ணா. ஆனா, உண்மைய உடைச்சுக் கதைக்கிறதுதானே நல்லது? இங்க சிக்குப்பட்டு இருக்கிறது என்ர அண்ணான்ர எதிர்கால வாழ்க்கை. என்னால நாகரீகம் நாசூக்கு எல்லாம் பாக்கேலாது. எங்களுக்கு என்ன அம்மா, அப்பா, சொந்த பந்தம் எண்டு ஆரும் இருக்கினமா இதெல்லாம் பாத்துச் செய்து வைக்கிறதுக்கு?”

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock