அவனுக்கும் அது தெரியாமல் இல்லையே! “உனக்கு நான் இருக்கிறன்மா.” என்றான் தணிந்த குரலில்.
“உங்களுக்கு?”
அவன் பதிலற்று நின்றான்.
“இதுதான் அண்ணா பயமா இருக்கு. நாளைக்கு அவளோட ஒரு பிரச்சினை வந்தாலும் நீங்க என்னட்டையோ இவரிட்டயோ சொல்லப் போறேல்ல. அப்பவும் எங்களுக்காகப் பொறுத்து, சமாளிச்சுத்தான் போவீங்க. ஏன் அப்பிடி ஒரு வாழ்க்கை வாழ வேணும் எண்டுதான் கேக்கிறன். இவ்வளவு காலமும் எனக்காகவும் அம்மா அப்பான்ர சாவுக்கு நியாயம் கிடைக்க வேணும் எண்டும் நீங்க ஓடினது காணும். மிச்ச வாழ்க்கையயாவது நீங்க சந்தோசமா, நிம்மதியா வாழோணும். அதுக்குப் பொறுப்பான, பக்குவமான ஒருத்தி உங்களுக்கு மனுசியா வரோணும் அண்ணா.”
இத்தனை நாள்களும் எல்லோர் முன்னும் வைத்துச் சம்மதம் சொல்லியாயிற்றே, இனிப் போய் வேண்டாம் என்று சொன்னால் மாமா என்ன நினைப்பார், இனி என்ன செய்வது என்று தனக்குள்ளேயே வைத்துக் குமைந்தவள், இன்றைக்கும் விட்டால் இனி முடியாது என்னும் அளவுக்கு வந்துவிட்டதால், தன் கவலைகளையும் பயங்களையும் அவனிடம் கொட்டினாள்.
இந்தளவுக்கெல்லாம் யோசித்துத் தனக்குள்ளேயே உழன்றிருக்கிறாள் என்பதை எல்லாளன் எதிர்பார்க்கவில்லை. அவனுக்குத் தன் வாழ்க்கையைப் பற்றியோ, ஆதினியைப் பற்றியோ இவ்வளவில் யோசிக்க நேரம் இருந்ததும் இல்லை; நேரமெடுத்து யோசித்ததும் இல்லை.
இன்றைக்கு அவள் சொன்னதையெல்லாம் கேட்டபோது, அவளின் பயம் புரிந்த அதே வேளை, சின்ன சிரிப்பும் உண்டாயிற்று.
“நீ பயப்பிடுற மாதிரியெல்லாம் ஒண்டும் நடக்காதம்மா. வீணாக் கண்டதையும் யோசிக்காத. நானும் சந்தோசமாத்தான் வாழுவன்.” என்றான் கனிந்த குரலில்.
ஆக மொத்தத்தில் அவளின் தமையன் இந்த நிச்சயத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை. இது அவள் எதிர்பார்த்ததுதான். சொன்ன சொல் தவறுகிறவன் அவன் அல்லனே!
“சரி அண்ணா. நீங்க அவளையே கட்டுங்க. நானும் இனி இப்பிடியெல்லாம் கதைக்கேல்ல. ஆனா, அதுக்கு முதல் அவள் மாறோணும். பொறுப்பா இருக்கப் பழகோணும். இல்லாம, உங்கட வாழ்க்கை நிம்மதியா இருக்காது. அதுக்கான வேலையையாவது நாங்க பாக்கோணும். மாமாவும் இவரும் பாசத்தில கண்ண மூடிக்கொண்டு இருப்பினம். நாங்களும் வாய மூடிக்கொண்டிருந்தா எல்லாரின்ர நிம்மதியும் சந்தோசமும் போயிடும். அதால அவளைப் பற்றி நான் இவரோட கதைக்கப் போறன்.” ஒரு முடிவுடன் சொல்லிவிட்டு, அவர்கள் அருந்தி முடித்த கோப்பைகளை எடுத்துக்கொண்டு சமையலறைக்கு நடந்தாள்.
அவள் சொல்வது போல் ஆதினி கொஞ்சம் பொறுப்பாக மாறினால் அவனுக்கும் ஒரு பிடிப்பு வருமோ என்று தோன்றிற்று. இது வரையில் அப்படி எதுவும் அவனுக்குள் நிகழவில்லையே! ஒரு நெடிய மூச்சு ஒன்று அவனிடமிருந்து வெளியேறியது.
இதையெல்லாம் அவர்கள் அறியாமல், அவர்கள் வீட்டு வாசலில் நின்று கேட்டுவிட்ட ஆதினி, சுக்குநூறாக நொருங்கிப் போனாள். ஆத்திரமா அழுகையா என்று தெரியவில்லை, தொண்டையை அடைத்துக்கொண்டு வந்தது. தன்னைச் சமாளித்துக்கொண்டு வந்தது போலவே சத்தமில்லாமல் வெளியேறினாள்.
இத்தனை நாள்களும் அன்றைய எல்லாளனின் கடுமையில் மொத்தமாக வாடிப்போயிருந்தாள். வெளியில் செல்லாமல் நண்பர்களோடு நேரம் செலவழிக்கவும் பிடிக்காமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். காண்டீபன் அழைத்தானே போவோமா என்று நினைத்தாலும் மனம் வரமாட்டேன் என்றது.
இப்படி, தன் இயல்பைத் தொலைத்து, தனக்குள்ளேயே வைத்து மருகும் அவளை அவளுக்கே பிடிக்கவில்லை. சும்மா இருந்தவளிடம் உன் எதிர்காலம் அவன்தான் என்று சொல்லி, அவள் மனத்தை அவன் புறமாகப் படர வைத்த தந்தை மீது கோபம் வந்தது.
இல்லையானால் இந்த வலியெல்லாம் அவளுக்கு வந்திராதே. எப்போதும் போல, அவனையும் அவன் செயலையும் தூக்கி எறிந்துவிட்டுப் போயிருப்பாளே.
இப்படித் தனக்குள்ளேயே குமைந்துகொண்டு இருக்கையில்தான், வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்து, இன்றைக்கு மோதிரம் வாங்கச் செல்வதற்குத் தயாராக இருக்கும்படி அகரன் சொன்னான்.
அப்போதுதான் அவள் கைப்பேசி இன்னும் எல்லாளனிடமே இருப்பது நினைவிற்கு வந்தது. அது அவளின் கோபத்தை இன்னுமே விசிறிவிட, அன்றைக்கு அவன் நடந்து கொண்டதற்கும் சேர்த்து இன்றைக்குக் கொடுத்துவிட்டு வருகிறேன் என்றுதான் புறப்பட்டு வந்திருந்தாள்.
வந்தவளுக்குக் கிடைத்ததோ மிகப் பெரிய அடி!
அவளின் கெட்ட நேரமா, அல்லது, அவர்களின் கெட்ட நேரமா ஸ்கூட்டியை வெளியே நிறுத்தியதில், அவள் வந்ததை அவர்களும் அறியாமல் போயிருந்தார்கள்.
விருப்பம் இல்லை என்றால் மறுத்திருக்கலாமே. அதை விட்டுவிட்டு என்னென்ன வார்த்தைப் பிரயோகங்கள்? போதாக்குறைக்கு அவளைப் பற்றி அவள் தமையனிடம் பேசப் போகிறாளாம்!
நன்றாகப் பேசட்டும்! பேசிவிட்டு வாங்கிக் கட்டட்டும்! மனம் கருவிக்கொண்டது. அவளின் அண்ணா அவளை எங்கும் விட்டுக்கொடுக்கமாட்டானே!
வந்தது போலவே திரும்பிவிட்டவளுக்கு ஸ்கூட்டியை செலுத்தவே முடியவில்லை. எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்றும் தெரியாது.
இனி அவனிடம் இருக்கும் கைப்பேசியை தொடவே கூடாது என்கிற வைராக்கியத்தோடு, வருகிற வழியில் கடைக்குச் சென்று, புது ஃபோனும் சிம்மும் வாங்கிக்கொண்டாள். தந்தை, அவள் பெயரில் வங்கியில் வைப்புச் செய்திருந்த பணமும், எப்போதும் கூடவே இருக்கும் வங்கி அட்டையும் அதற்கு உதவிற்று.
சற்று நேரத்தில் அவர்களும் வருவார்கள் என்று தெரியுமாதலால், ஸ்கூட்டியை கொண்டுவந்து வீட்டின் பின்னால் நிறுத்திவிட்டு அறைக்கு வந்து சேர்ந்தாள். அதற்காகவே காத்திருந்தது போன்று அவ்வளவு நேரமாக அடக்கி வைத்திருந்த கண்ணீர் கரையுடைத்துக்கொண்டு வழிந்தது.
சற்று நேரத்தில் கீழே அகரன் வந்துவிட்ட அரவம் கேட்டது. கூடவே அவர்களும். அவள் இருக்கிற மனநிலைக்கு யாரையும் எதிர்கொள்ள விருப்பமில்லை. அதுவும், தமையனின் முகத்தைப் பார்த்தாலே உடைந்துவிடுவாள்.
அதைவிட, இனியும் அவர்களோடு சென்று, நிச்சய மோதிரம் எடுக்கத்தான் வேண்டுமா என்கிற கேள்வியும் வந்து நின்றது.
‘அண்ணா சொறி, எனக்கு வரேலாமப் போயிற்று. நீங்க மட்டும் போயிற்று வாங்கோ.’ வாங்கிய புதுக் கைப்பேசியிலிருந்து குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு, வேகமாக மொட்டை மாடிக்குச் சென்று நின்றுகொண்டாள்.
மனம் மட்டும் சற்று முன் கேட்டவற்றை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் துடித்துக்கொண்டிருந்தது.