வீட்டுக்குச் சென்று, உடை மாற்றிக்கொண்டு, சியாமளாவையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான் எல்லாளன். இருவருக்கிடையிலும் மிகுந்த அமைதி. சியாமளா தமையனின் முகத்தை முகத்தைப் பார்த்தாள். அவன் அதிகம் பேசுகிறவன் அல்லதான். கலகலப்பான இயல்பு கொண்டவனும் அல்ல. ஆனால், சின்னச் சிரிப்பு, சிறு சிறு கேலிகள், தேவையான பேச்சுக்கெல்லாம் பஞ்சம் இராது. அப்படியானவன், ஆதினியோடான திருமணத்துக்குச் சம்மதம் சொன்னதில் இருந்து இன்னுமே அமைதியாகிப் போனானோ என்று தோன்றிற்று.
தன்னைக் கண்டதும் தேவையற்றுக் கூடிவிடுகிற கூட்டம், பாதுகாப்புப் பிரச்சனைகள் என்று, தன் பதவி காரணமாக முடிந்தவரைக்கும் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துவிடுவார் இளந்திரையன். இப்போதும், திருமணம் அவர்களுக்குத்தான், அவர்களே தமக்குப் பிடித்தமாதிரி எடுத்துக்கொள்ளட்டும் என்று, நிச்சய மோதிரம் எடுக்கும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்திருந்தார்.
அதன்படி, இதோ, நால்வருமாகச் சேர்ந்து நிச்சய மோதிரம் எடுப்பதற்காக ஆதினியின் வீட்டுக்குப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். அதற்கான எந்த மலர்ச்சியையும் அவன் முகத்தில் காணோம். எதிர்காலத் துணையின் மீதான ஈர்ப்பு, அவளோடு பேசுவதில் காட்டும் ஈடுபாடு என்று எதுவும் இல்லை. இந்த ஆதினியாவது அண்ணாவுக்கு ஏற்ற வகையில் மாறிக்கொள்ளலாம். அதெல்லாம் அவள் செய்யமாட்டாள் அவளைப்பற்றி நினைத்ததுமே இன்னும் எரிச்சல் தான் மண்டியது.
எல்லாளனின் வண்டி அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தபோது பின்னாலேயே வந்து சேர்ந்தது அகரனின் பைக். “என்னடா, இப்பதான் வாறியா?” அகரனின் பைக்குக்கும் இடம் விட்டுத் தன் பைக்கை நிறுத்திவிட்டு வினவினான் எல்லாளன்.
“ஓம் மச்சான்! நேரத்துக்கே வெளிக்கிடுவம் எண்டா எங்க? ஒண்டு முடிய ஒண்டு எண்டு ஒரே வேல! ரெண்டுபேரும் உள்ளுக்கு வாங்க. பத்து நிமிசத்தில குளிச்சிட்டு ஓடிவாறன்.” என்றபடி வீட்டின் கதவைத் திறந்து, இவர்களை அமரச் சொல்லிவிட்டுக் குளிக்க ஓடினான், அவன்.
வவுனியாவில் இருந்து அவ்வளவு தூரம் பயணித்து வந்திருக்கிறான். நிச்சயம் களைப்பாக இருக்கும். ஒரு வாய்த் தேநீர் கொடுக்க யாருமில்லாமல் வெறிச்சோடிப்போய்க் கிடந்தது, அந்தப் பெரிய வீடு. சியாமளாவுக்கு இன்னும் சினம் பெருகிற்று.
“இந்த ஆதினி வீட்டில இருந்து வாறவரக் கவனிக்கிறாளா பாருங்க, அண்ணா. எங்க போவாளோ தெரியாது. ஒரே ஊர் சுத்துறது. இப்பவும் ஆள் இல்ல.” வீட்டுக்குள் வரும்போதே ஆதினியின் ஸ்கூட்டி நிற்கும் இடம் வெறுமையாக இருந்ததைக் கவனித்திருந்ததில் சொன்னாள் சியாமளா.
வந்ததும் வராததுமாகக் கொண்டுவந்த டிராவலிங் பாக்கை போட்டுவிட்டு ஓடிய நண்பனைப் பார்த்தபோது, அவனுக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனாலும், அதை அவளிடம் வெளிக்காட்டிக்கொள்ளாமல், “இன்னும் அவளுக்கு அந்தளவுக்கெல்லாம் பொறுப்பு இல்ல சியாமளா. முதல், இப்பிடியெல்லாம் கதைச்சுப் பழகாத. இனி நீயும் இந்த வீட்டுலதான் இருக்கப் போறாய். அவளில வெறுப்பை வளத்தியோ சேர்ந்து இருக்கேலாம போயிடும். அதவிட, அவளின்ர காதில விழுந்தா பெரிய பிரச்சினையாக்கி விட்டுடுவாள். அகரனுக்கும் தன்ர தங்கச்சியைப்பற்றி நீ இப்பிடிக் கதைக்கிறது பிடிக்காது. கவனமா இரு.” என்று கண்டித்தான்.
அவளுக்கு முகம் சுருங்கிப் போயிற்று. “என்ன அண்ணா, நான் என்னவோ வேணுமெண்டு கதைக்கிற மாதிரிச் சொல்லுறீங்க. இவர் இண்டைக்கு வருவார் எண்டு அவளுக்குத் தெரியும். மோதிரம் வாங்கப் போகவேணும், வீட்டில இரு, வெளில போயிடாத எண்டு நானே எடுத்துச் சொன்னனான். ஆனாலும், ஆள் இல்ல. இதெல்லாம் என்ன அண்ணா பழக்கம்?” சமையலுக்கு மாத்திரமே வந்து போகிறவர் சாந்தி. இன்றைக்கு என்று பார்த்து அவரும் வீட்டில் இல்லை. மூவருக்கும் தேநீர் ஊற்றுவதற்காகத் தண்ணீரைத் தானே கொதிக்க வைத்துவிட்டு வந்து சொன்னாள் சியாமளா.
“சரி விடு. போகப்போக மாறுவாளா இருக்கும்.”
“அவள் எல்லாம் மாறுற ஆள்? எங்கட உயிரைத்தான் எடுப்பாள்.” வீட்டில் யாருமில்லாமல் போன தைரியத்தில் எரிச்சலுடன் சொன்னாள் சியாமளா. “இவ்வளவு நாளும் இவரின்ர தங்கச்சிதானே, இவரே பாத்துக்கொள்ளட்டும் எண்டுதான் பேசாம இருந்தனான். இனி அவள் உங்களுக்கு மனுசியா வரப்போறாள். அப்பவும் இப்பிடி இருந்தா உங்கட நிலைமை என்ன சொல்லுங்க?”
அவளின் கேள்விக்கு அவனிடமும் பதில் இல்லை.
“அண்டைக்கு, இந்த ரெண்டு கலியாணமும் நடந்தா நீங்களும் எனக்குப் பக்கத்திலேயே இருப்பீங்க எண்டுறது மட்டும் தான் பெருசாத் தெரிஞ்சது. இப்ப யோசிக்க யோசிக்க உங்களுக்குக் கொஞ்சமும் பொருத்தம் இல்லாத ஒருத்திய, எனக்காக ஓம் எண்டு சொல்லிட்டீங்களோ எண்டு கவலையா இருக்கு. நானும், உங்களுக்குப் பிடிச்சிருக்கா, விருப்பமா எண்டு கேக்கவும் இல்ல. எவ்வளவு சுயநலம் பிடிச்சவளா இருந்திருக்கிறன் எண்டு பாருங்களன். எனக்கே அவளைப் பிடிக்கேல்ல. நீங்க எப்பிடி அண்ணா அவளோட..” என்றவளுக்கு மேலே பேச வரமாட்டேன் என்றது.
அவர்களுக்கு உறவென்று வேறு யாருமில்லை. துணையாக வருகிறவர்கள் தான் அனைத்துமாக இருக்கவேண்டும். ஆதினியெல்லாம் அந்த ரகமல்ல. அனைவரும் அவளுக்குத்தான் சேவகம் செய்யவேண்டும். அப்படியானவளைப்போய்…
“என்ர சுயநலத்துக்காக உங்கள பலிகடா ஆக்கிட்டேனா அண்ணா? என்னில கோவமா?” கலங்கிவிட்ட விழிகளோடு கேட்டவளை, “உனக்கு என்ன விசராம்மா? முதல், பலிகடா அது இது எண்டு இதென்ன கத பேச்சு. அங்கால அகரன் இருக்கிறான். பேசாம இரு!” என்று அதட்டினான் எல்லாளன்.
அவனுக்கு என்னவோ அன்றைக்கு அவன் அறைந்த பிறகு கண்ணிலேயே படாதவளின் செய்கை சற்றே வித்தியாசமாகப் பட்டது. என்ன நடந்தாலும் ஒன்றுக்குப் பத்து மடங்காகத் திருப்பித் தருவதுதான் அவளின் இயல்பு. குறைந்த பட்சமாக இன்றைக்காவது அவனை அவள் இரண்டில் ஒன்று பார்த்திருக்க வேண்டும். அவளோ கண்ணிலேயே படவில்லை. ஏனோ என்று அதுவேறு உள்ளே ஓடிக்கொண்டிருந்தது. இதில், இவளும் இப்படி எதையாவது கதைத்து, அது அவர்கள் யாரினதாவது காதில் விழுந்து, இன்னுமோர் பிரச்சனையாக உருவெடுக்க வேண்டாம் என்று நினைத்தான்.
“அவர் இன்னும் குளிச்சு முடியேல்ல. பாத்ரூம்ல தண்ணிச் சத்தம் இன்னும் கேக்குது.” அந்த வீட்டில் திறந்த சமையலறையோடுதான் உணவு மேசையும் போடப்பட்டிருந்தது. அங்கேதான் எல்லாளன் அமர்ந்திருந்தான். மூன்று கோப்பைகளில் ஊற்றிய தேநீரைக் கொண்டுவந்து மேசையில் வைத்துவிட்டு, தமையனின் கப்பை எடுத்து அவனிடம் கொடுத்தாள். தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு அவனெதிரில் அமர்ந்துகொண்டாள் சியாமளா.