“நான் தான் அறிவில்லாம வாயை மூடிக்கொண்டு இருந்திட்டன். எனக்காக எண்டு ஏன் அண்ணா நீங்க ஓம் எண்டு சொன்னீங்க? விருப்பம் இல்லை எண்டு சொல்லியிருக்கலாம். மாமா பிழையா நினைச்சிருக்க மாட்டார்.” மனம் தாங்காமல் மீண்டும் சொன்னாள் அவள்.
உண்மைதான். அவன் மறுத்திருந்தாலும் அவளின் திருமணம் நடந்திருக்கும் தான். அவரின் பேச்சை மீற முடியாமையும், தன் மறுப்பினால் நெருஞ்சிமுள்ளாய் அவர்கள் மனதில் ஏதாவது தைத்து, அந்த முள்ளு தங்கையின் சந்தோசத்தைப் பாதித்துவிடுமோ என்கிற அச்சமும்தான் சம்மதிக்க வைத்தது. கூடவே, எப்படியும் கல்யாணம் என்கிற ஒன்றை அவனும் செய்யத்தான் போகிறான். அது இவளாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்றிருந்தது.
இதை அவனுக்குச் சியாமளாவிடம் சொல்ல விருப்பமில்லை. சும்மாவே தன்னால் தானோ என்று கலங்குகிறவள் இன்னுமே கவலைப்படுவாள். அதில், ஒன்றும் சொல்லாமல் தேநீர் பருகுவதில் மாத்திரம் கவனம் செலுத்தினான்.
அவனுடைய அந்த மௌனம், அவர்கள் அறியாமல், அவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆதினியின் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது.
பல்கலைக்கழகத்துக்குப் போய்விட்டு வருகிற வழியில் அவளின் சிலுக்கு நின்றுவிட்டது. ஸ்டார்ட் வரமாட்டேன் என்றதும், அதை கராஜில் விட்டுவிட்டு, தெரிந்த அண்ணா ஒருவரின் ஆட்டோவை அழைத்து, அதில் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள். சாந்தியும் வீட்டில் இல்லை என்பதால் வீட்டின் கதவைப் பூட்டி இருந்தாள். மோதிரம் வாங்கச் செல்வதற்குத் தயாராகி இருந்தவள், இவர்கள் மூவரும் வருவதை மேலே தன் அறையிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். என்ன, குதூகலத்துடனோ உற்சாகத்துடனோ தடதட என்று கீழே ஓடிவந்து அவர்களை வரவேற்க முடியவில்லை.
அந்தளவில், எல்லாளன் அறைந்தது கன்னத்தை விடவும் மனதை அதிகளவில் பாதித்திருந்தது. அவனிடம் சரிந்துவிட்ட மனது, நடந்ததைத் தந்தை தமையனிடம் கொண்டுசென்று பிரச்சனையாக்கவும் விரும்பவில்லை. ஒன்றுமே நடவாததுபோல் அவன் முன் சென்று நிற்கவும் முடியவில்லை. கூடவே, அவளே எதிர்பாராமல், அவள் வழங்கிய அந்த முத்தம் வேறு, அவளின் கால்களைப் பின்ன வைத்தது.
தயங்கி தயங்கி அவள் அறையை விட்டு வெளியே வந்தபோதுதான் இவர்களின் பேச்சு முழுவதையும் கேட்க நேர்ந்தது. எல்லாளனின் மனநிலை என்ன என்று அறிய எண்ணி, கீழே செல்லாமல் நின்றவளின் காதில் விழுந்தவை எல்லாம், அவள் மனதை இன்னுமோர் முறை காயப்படுத்திற்று.
அவள் ஒன்றும் அவனைக் காதலிக்கவில்லை. அப்படியான ஒரு எண்ணம் அவன் மீது இருந்ததும் இல்லை. அவளுடனான திருமணத்துக்குச் சம்மதம் சொன்னது அவன். இவன் தான் உன் எதிர்காலம் என்று காட்டியது அவளின் தந்தை. அதை ஏற்றுக்கொண்டு அவனைத் தன் மனதினில் அமர்த்திக்கொண்டது மாத்திரமே அவள்.
அப்படியிருக்க, அவளைப்பற்றி அவர்கள் இருவரும் பேசிக்கொள்வது என்ன? விருப்பம் இல்லை என்றால் மறுத்திருக்கலாமே. எப்போதும்போல அவள் அவளின் உலகத்தில் சந்தோசமாக இருந்திருப்பாளே.
இப்படி, அவள் மேலே இருக்கிறாள் என்பதை அறியாத சியாமளாவுக்குத் தமையனின் மௌனம் அவனும் தன் மனநிலையில் தான் இருக்கிறான் என்பதைக் காட்டிக் கொடுத்திருந்தது. அதில், “அதையெல்லாம் கட்டி வாழுறது சரியான கஷ்டம் அண்ணா. அடங்காப்பிடாரி. அகங்காரம் பிடிச்சது. ஒண்டுக்கும் உதவாம வளந்து நிக்குது. அதுதான் மாமா உங்கட தலைல கட்டப் பாக்கிறாரோ தெரியாது. இவர் உங்கட பிரென்ட் தானே. இந்தக் கலியாணம் வேண்டாம் எண்டு அவரிட்டச் சொல்லுங்கோ. அஜய்யத் தப்ப வச்சு உங்கட உயிரை எடுக்கிற மாதிரி இன்னும் எத்தின பேரின்ர நிம்மதியக் கெடுப்பாளோ தெரியாது. அந்தப் பாவம் பழி எல்லாம் உங்கட தலைல தான் வந்து விழப்போகுது.” என்று படபடத்தாள்.
“இப்படியெல்லாம் கதைக்காத எண்டு உனக்கு எத்தின தரம் சொல்லுறது? முதல் இதென்ன சொல்லு எல்லாம் உன்ர வாயில வருது? கலியாணம் என்ன சின்னப்பிள்ளை விளையாட்டா ஓம், இல்லை எண்டு மாறி மாறிச் சொல்ல? ஓம் எண்டு சொன்னா ஓம் தான்!” அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் எல்லாளன்.
“எனக்கும் என்ன அவளைப்பற்றி இப்பிடிக் கதைக்க ஆசையா அண்ணா. இனி அவள் உங்களுக்கு மனுசியா வரப்போறாள். அதுக்கு ஏற்றமாதிரி பொறுப்பானவளா இருக்கவேண்டாமா?” என்றாள் சியாமளா வேகமாக. “மாமா உங்களை மறைமுகமா வற்புறுத்தினவர். அதாலதான் ஓம் எண்டு சொன்னீங்க. சரி, அத இனி மாத்தேலாது, அவளைத்தான் கட்டப்போறீங்க எண்டா அவள் திருந்தோணும் அண்ணா. இல்லாம உங்கட வாழ்க்கை நிம்மதியா இருக்காது. அதுக்கான வேலையையாவது நாங்க பாக்கோணும். மாமாவும் இவரும் பாசத்தில கண்ண மூடிக்கொண்டுதான் இருப்பினம். இதில நாங்களும் வாயமூடிக்கொண்டு இருந்தா எல்லாரின்ர நிம்மதியும் சந்தோசமும் போயிடும். அதால அவளைப்பற்றி நான் இவரோட கதைக்கப் போறன்.” ஒரு முடிவுடன் சொல்லிவிட்டு, அவர்கள் அருந்திமுடித்த கோப்பைகளை எடுத்துக்கொண்டு சமையலறைக்கு நடந்தாள்.
“ப்ச்! நீயும் அவளை மாதிரி அவசரப்படாத. அதைவிட, எனக்கும் அவளுக்கும் இப்பவா கலியாணம் நடக்கப்போகுது? காலம் இருக்குதானே. அதுக்கிடைல அவள் மாறிடுவாள். இல்லையோ அப்ப பாப்பம்.” என்று தடுத்தான் எல்லாளன்.
“என்ன பாப்பீங்க? பிடிக்காதவளைக் கட்டுறதுக்கு ஓம் எண்டு சொன்ன மாதிரி எல்லாத்தையும் எனக்காகவும் மாமாக்காகவும் பொறுத்துப் போவீங்க. அத நான் பாத்துக்கொண்டு இருக்கோணுமா? உங்களுக்கு என்னில இருக்கிற அதே பாசமும் அக்கறையும் தானே அண்ணா எனக்கு உங்களில இருக்கு. அவளை நான் திருத்தி எடுக்கிறன். நீங்க பேசாம இருங்க!”
“விடம்மா!” அலுப்புடன் சொன்னவனுக்கு ஏனோ இதைப்பற்றித் திரும்ப திரும்பக் கதைப்பது பிடிக்கவில்லை. கூடவே, சியாமளா சொல்வதுபோல் அவள் கொஞ்சம் பொறுப்பாக மாறினால் அவனுக்கும் ஒரு பிடிப்பு வருமோ என்று தோன்றிற்று. பக்குவமான தங்கை இதைப் பக்குவமாகக் கையாள்வாள் என்றும் நம்பினான்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தவளை அதிர்ச்சி, ஏமாற்றம், கோபம், வேதனை என்று பலவித உணர்வுகள் கலந்துகட்டித் தாக்கியது. என்னைத் திருத்தப் போகிறாளாமா? அப்படித் திருத்தும் அளவில் அவளிடம் என்ன குறையாம்? ஆத்திர முறுவல் ஒன்று உதட்டோரம் சீறலாகப் பூத்தது.
அவளின் அண்ணா அவள்மேல் உயிரையே வைத்திருப்பவன். இவள் சொன்னதும் அப்படி என்ன செய்வானாம்? ‘என் தங்கையைப்பற்றி எனக்குத் தெரியும். நீ வாயை மூடு!’ என்று இவள்தான் வேண்டிக் கட்டுவாள். வேண்டிக் கட்டட்டும். அவளைப்பற்றி என்னவெல்லாம் சொன்னாள்?
அகரன் தன் அறையில் இருந்து வெளியே வரும் அரவம் கேட்டது. அவள் இருக்கிற மனநிலைக்குத் தமையனின் முகத்தைப் பார்த்தாலே உடைந்துவிடுவாள். ‘அண்ணா, சொறி எனக்கு வரேலாம போயிற்று. எனக்கும் சேர்த்து மோதிரம் நீயே வாங்கு. அளவு மோதிரம் என்ர ரூம்ல இருக்கு.’ என்று குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு, வேகமாக மொட்டை மாடிக்குச் சென்று நின்றுகொண்டாள்.
மனம் மட்டும் கேட்டவற்றை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் துடித்துக்கொண்டிருந்தது.