நீ தந்த கனவு – நிதனிபிரபு
அத்தியாயம் 1
சூரியன் உச்சிக்கு வர ஆரம்பித்திருந்த முன்காலைப்பொழுது. ஆதினியின் ஸ்கூட்டி, அந்தத் தார் சாலையில் முழு வேகத்தில் வந்துகொண்டு இருந்தது. தலையில் ஹெல்மெட் இல்லை. வேக எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தவும் இல்லை. சற்றுத் தொலைவில், வீதியோரமாக நின்ற இரண்டு காக்கிச் சட்டைகளைக் கண்டும் கூட, அவள் லட்சியம் செய்யவில்லை.
அன்றைய நாளின், விசேட பாதுகாப்புக் கருதி பணியில் அமர்த்தப்பட்டிருந்த, ‘இன்ஸ்பெக்டர்’ கதிரவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. முப்பதில் தான் வரவேண்டும் என்று அந்த வீதி முழுக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதை மதிக்கவில்லை. நிச்சயமாக இவர்களுக்கு முன்னே எங்கேயாவது போக்குவரத்துக் காவலர்கள்(traffic police) நின்றிருப்பார்கள். அவர்கள், அறிவுறுத்தியோ அபராதம் செலுத்த வைத்தோதான் இவளை அனுப்பியிருக்க வேண்டும். அதையும் மதிக்கவில்லை. கண்ணெதிரிலேயே நிற்கும் அவர்களைப் பார்த்துக்கூட வேகத்தைக் குறைக்கவில்லை என்றால், இந்த உச்சி வெயிலில் கால் கடுக்கக் காவல் காக்கும் அவர்களைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறாள் இந்தப் பெண்? நொடியில் முடிவு செய்து, ‘Stop’ என்கிற சிவப்புநிறக் குறியீட்டை வீதியின் குறுக்கே நீட்டினான்.
அதை, அவள் எதிர்பார்க்கவில்லை போலும். அவசரமாகப் பிரேக்கை அழுத்தி நிறுத்திவிட்டு, அவனை முறைத்தாள்.
வீதியில் வந்த முறையே தவறு. இதில், பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரி அவனையே முறைப்பாளா? இவளுக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்று மனத்தில் எண்ணியபடி, “ஹெல்மெட் எங்க?” என்றான் அதட்டலாக.
“போட மறந்திட்டன்.”
“லைசென்ஸ்?”
“கொண்டு வரேல்ல!”
அவளின் உடல் மொழியும், பதில் சொன்ன தோரணையும், அவனை இன்னுமே உசுப்பேற்றின. “லைசென்ஸ் இல்ல. ஹெல்மெட் இல்ல. ஓவர் ஸ்பீட். இதுல ஆளுக்கு மேலால திமிர். ஒழுங்கு மரியாதையா நடந்துபோய் லைசென்ஸ் எடுத்துக்கொண்டு வந்து காட்டிப்போட்டு, ஃபைனையும் கட்டிட்டுப் போகலாம்!” என்றான் அவன்.
“இல்லாட்டி?” ஸ்கூட்டியில் இருந்து இறங்காது, கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு நிதானமாக வினவினாள், அவள்.
கதிரவனுக்கு ‘சுள்’ என்று கோபம் வந்தது. “என்ன, சேட்டையா? பொம்பிளைப் பிள்ளையாச்சே எண்டு நிதானமா கதைச்சா, செய்றதையும் செய்துபோட்டு திமிர் வேற? மரியாதையா இறங்கலாம்! இண்டைக்கு முழுக்க வெயிலுக்க நிப்பாட்டினாத் தெரியும்!” என்று சீறினான்.
“சேர்..” அதுவரை நேரமும் என்ன செய்வது என்று தெரியாது, அவனுக்குப் பின்னால் கையைப் பிசைந்துகொண்டு நின்ற கான்ஸடபிள், அவன் சொன்னதைக் கேட்டுப் பதறியடித்துக்கொண்டு இடைமறித்தார்.
“நீங்க சும்மா இருங்க நாயகம். நாலு நாளைக்குப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலையவிட்டா தெரியும்!” என்றவனைப் பொருட்படுத்தாமல் ஸ்கூட்டியை நாயகத்திடம் கொடுத்து, “வீட்டை போய் என்ர லைசென்ஸ எடுத்துக்கொண்டு வாங்க.” என்றாள் அவள்.
கதிரவனால் நம்பவே முடியவில்லை. ஒரு சாதாரணப் பெண், ஒரு காவலதிகாரியைப் பார்த்து வேலை ஏவுகிறாளே. அதைவிட அதிர்ச்சி, நாயகமும் அவள் சொன்னதைக் கேட்டு, அவளின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டதுதான்.
“நாயகம்! என்ன செய்றீங்க?” என்றவனின் அதட்டலை, அவர் கேட்டதாகவே தெரியவில்லை. புறப்பட்டிருந்தார்.
அவளும் அவனை மிதப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்து, அங்கிருந்த மரத்தடி நிழலில் இருந்த கல்லில், இலகுவாக அமர்ந்துகொண்டாள்.
“ஏய்! நீ என்ன பெரிய இவளா? ஒரு போலீஸ் கான்ஸடபிளையே வேல வாங்குறாய்.” கோபத்துடன் இரைந்தவனின் பேச்சில் அவளுக்கான மரியாதை எங்கோ மறைந்துபோயிருந்தது. அவ்வளவு சினம் பொங்கிற்று.
அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல், அவனுடைய, ‘நேம் பட்ச்’சை கவனித்தாள் அவள். “கதி..ர..வன்! நல்ல பெயர்தான்!” என்று சிலாகித்துவிட்டு, “ஊருக்குப் புதுசா கதிரவன்?” என்று சாவகாசமாக விசாரித்தாள்.
அவளின் அந்த அசராத நிதானம் அவனை யோசிக்க வைத்தது. எவ்வளவுதான் தைரியமானவர்களாக இருந்தாலும், போலீசின் முன்னே, இவ்வளவு இலகுவாக இருந்து பேசமாட்டார்கள். அதுவும், ஒரு இளம் பெண், தன் பாதுகாப்பைக் குறித்து நிச்சயம் யோசிப்பாள். இவளானால் மருந்துக்கும் அசைகிறாள் இல்லையே. அதைவிட, அவனைப் புறக்கணித்து, அவளின் சொல்லுக்குப் பணிந்து போன நாயகம் வேறு, அவன் சிந்தைக்குள் நின்று இடறினார். அதில், அவளை அளவிட்டான். செழிப்பான வீட்டுப் பெண் என்று தெரிந்தது. பெரிய இடமோ என்று ஒருகணம் தனக்குள் தடுமாறினான். அடுத்தக் கணமே நிமிர்ந்தான். எவ்வளவு பெரிய இடமாக இருந்தால்தான் என்ன. தவறு அவள் மீது. பிறகு எதற்கு அவன் எதைப்பற்றியும் யோசிக்க?
அதைவிட அவன் ஒரு அதிகாரி. அவன் இவளுக்கெல்லாம் பணிவதா? நிமிர்ந்து நின்று, “உன்ர பெயர் என்ன? ஐசி எடு!” என்றான் மிரட்டலாக.
“அச்சோ கதிரவன்! இதைக் கொஞ்சம் முதலே கேட்டிருக்கக் கூடாதா? ஐசி ஸ்கூட்டியோட போய்ட்டுதே!” அளவுக்கதிகமாகக் கவலைக் கோடுகளை முகத்தில் காட்டிச் சொன்னாள், அவள்.
பல்லைக் கடித்தான் கதிரவன். என்ன ஆனாலும் சரி, இவளுக்குப் பாடம் படிப்பிக்காமல் விடக்கூடாது என்று மீண்டுமொருமுறை முடிவு கட்டிக்கொண்டு, வீதியில் கவனத்தைப் பதித்தான். எல்லாவற்றையும் விட இன்றைய நாளின் பாதுகாப்பு அவனுக்கு மிக மிக முக்கியம். அதில், சந்தேகத்திற்குரியவர்களை மறித்து, விசாரித்து அனுப்பிக்கொண்டிருந்தான்.
நாயகமும் இல்லாததால், ஆட்களை விசாரிப்பது, சந்தேகத்திற்கு உரிய நபர்களின் விபரங்களைக் குறித்து வைப்பது என்று, எல்லா வேலையையும் அவன் ஒருவனே பார்க்கவேண்டி இருந்தது வேறு, அவனை இன்னுமே சினமூட்டியது. திரும்பி அவளைப் பார்த்தான். கால்களை நீட்டி அமர்ந்திருந்து, கைபேசியில் கவனமாக இருந்தாள். அவனைக் கண்டோ, இப்படி வீதியில் நிறுத்தி வைத்திருக்கிறான் என்றோ சற்றும் பயப்படவே இல்லை.
அவன் அணிந்திருந்த காக்கிச் சட்டையின் மீதான, உத்தியோகத்தின் மீதான அவனுடைய கர்வம் அவளின் முன்னே அடிவாங்கியது. பல்லை நறநறத்தான். ‘இரடி, உனக்கு இண்டைக்கு இருக்கு!’ என்று மீண்டும் கருவிக்கொண்டான்.
இதற்குள், போலீஸ் ஜீப் ஒன்று வேகமாக வந்து அவன் முன்னே நின்றது. உடல் அதுபாட்டுக்கு விறைத்து நிமிர, அதில் இருந்து இறங்கியவனின் முன்னே விரைந்து வந்து நின்று, சல்யூட் அடித்தான்.
சிறு தலையசைப்பால் அதை அங்கீகரித்தவனின் பார்வை கதிரவனின் பின்னே நகர்ந்தது.
யார் என்று நிமிர்ந்தவளும், வியப்பால் விழிகள் விரிய, “அட எள்ளுவய பூக்கலையா, என்ன இந்தப் பக்கம்?” என்று விசாரித்தாள்.
கதிரவனுக்கு விழிகள் வெளியே தெறித்துவிடும் நிலை என்றால் வந்தவனின் முகம் கடினப்பட்டது. பார்வை அவளின் ஸ்கூட்டியைத் தேட, “நீ இங்க என்ன செய்றாய்?” என்று அதட்டினான்.
“அது சேர்..” என்று கதிரவன் ஆரம்பிக்க முதலே, “ஹெல்மெட் இல்ல, லைசென்ஸ் இல்ல எண்டு கதிரவன் என்னைப் பிடிச்சு வச்சிட்டார். அதுதான், எடுத்துக்கொண்டு வர நாயகம் அங்கிளை அனுப்பி இருக்கிறன்.” என்று, உதட்டோரம் வழியும் சின்னச் சிரிப்புடன் கதிரவனை நோக்கியபடி சொன்னாள், அவள்.
“அதெல்லாம் கொண்டுவரவேணும் எண்டு உனக்குத் தெரியாதா? என்ன நினைப்பில வீட்டை விட்டு வெளிக்கிட்டனி?” குரலை உயர்த்தாமல் சீறினான் அவன்.
“விடுங்க, எள்ளுவய! விட்டுட்டு வந்ததால தானே கதிரவன் எனக்குப் பிரென்ட் ஆனவர். இல்லையா கதிரவன்?” சீண்டும் குரலில் அவள் கேள்வியாக இழுக்க, கதிரவன் உள்ளுக்குள் மீண்டும் பல்லை நறநறத்தான்.
எதிரில் நிற்பவன் யாழ் மாவட்டத்தின் ஏசிபி எல்லாளன். அவன் முன்னே இவனே நடுங்குவான். இவளானால், இருந்த இடத்திலிருந்து அசையாமல், காலை நீட்டிக்கொண்டு, கதை சொல்லிக்கொண்டு இருக்கிறாள்.