நீ தந்த கனவு 11 – 1

வவுனியாவிலிருந்து வந்த களைப்புப் போகக் குளித்துவிட்டு வந்த அகரன், அப்போதுதான் கைப்பேசியைப் பார்த்தான், அகரன். புது இலக்கத்திலிருந்து வந்திருந்த ஆதினியின் குறுந்தகவலைக் கண்டுவிட்டு, “டேய்! நீ இன்னும் அவளின்ர ஃபோன குடுக்கேல்லையா?” என்றான் எல்லாளனிடம்.

“அவள் கேக்கேல்லை. அதால நானும் குடுக்கேல்லை.” என்றான் அவன்.

“அதுதான் போல, புது நம்பர்ல இருந்து மெசேஜ் அனுப்பி இருக்கிறாள். அவள் பிஸியாம். எங்களை மட்டும் போய் வாங்கட்டுமாம்.”

எல்லாளனின் புருவங்கள் சுருங்கிற்று. இது அவள் இல்லை! நேராக வந்து, அவனோடு சண்டை பிடித்து, ஃபோனை வாங்கிக்கொண்டு போயிருக்க வேண்டும். இல்லையோ, அவன் பறித்த அடுத்த நாளே புதுக் கைப்பேசி வாங்கியிருப்பாள். அதை விட்டுவிட்டு இப்போது ஏன்?

“இண்டைக்கு மோதிரம் வாங்கப் போறம் எண்டு அவளுக்கும் தெரியும்தானே? பிறகும் எங்க போனவளாம்? எங்க நிக்கிறாள் எண்டு எடுத்துக் கேள். அவளையும் கூட்டிக்கொண்டே போவம்.” என்றான்.

அகரனுக்கும் தங்கையை விட்டுவிட்டுப் போக மனமில்லை. அதில், அவளின் புது நம்பருக்கு அழைத்தான். மேலே மொட்டை மாடியில் தாங்கொணா பாரத்தை நெஞ்சில் சுமந்தபடி செய்வதறியாது தடுமாறி நின்றவளுக்குத் தமையனின் அழைப்பைக் கண்டதும் விழிகள் கலங்கிற்று.

அனைத்தையும் அவனிடம் சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. அப்படிச் சொல்லி, சியாமளாவிடம் அவன் கோபித்துக் கொண்டால் என்னாவது?

இதுவரையில் நினைத்ததைச் செய்து, எண்ணியதைப் பேசி, மனத்துக்குப் பிடித்தது போல் மட்டுமே வாழ்ந்து பழகியவன் அவள். அதில் இப்படிப் பெரும் துன்பம் ஒன்றை நெஞ்சுக்குள் பூட்டி வைப்பது இயலாததாக இருந்தது. இனி என்னாகும்? அவள் என்ன செய்ய வேண்டும்?

அப்பாவிடம் சொல்வதா? இல்லை, அண்ணாவிடம் பேசுவதா? அல்லது, அவள் மனத்துக்குள்ளேயே போட்டு மூடுவதா? அது, அவளால் முடியுமா? இந்த நிச்சயம் இனியும் வேண்டும்தானா?
இப்படி நிறைய யோசனைகளும் குழப்பங்களும் அவளுக்கு.

இதற்குள் மூன்று தடவைகள் விடாமல் அழைத்து ஓய்ந்திருந்தான் அகரன். “ஆள் உண்மையாவே பிஸி போல. நாங்க போவம்!” அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

கடைகளுக்குப் போவது என்றாலே முதல் ஆளாக நிற்கிறவளின் இன்றைய செய்கை எல்லாளனை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்திற்று. அகரனிடமிருந்து அவள் நம்பரை வாங்கி, அவர்கள் போகப்போகிற நகைக்கடையின் பெயரை எழுதி, ‘அங்கதான் நிப்பம். கட்டாயம் நீ வாறாய்! நீ வராம நான் மோதிரம் வாங்க மாட்டன்!’ என்று அனுப்பிவிட்டான்.

அவன் அனுப்பிய குறுந்தகவலைத் திறந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் கைப்பேசித் திரையிலேயே அது தெரிந்தது. பிடிக்காத திருமணம். அதற்கு ஒரு நிச்சய மோதிரம். இதில் அவள் வராமல் அவன் எடுக்க மாட்டானாம். அவள் உதட்டோரம் கசப்புடன் வளைந்தது.

அகரனும் சியாமளாவும் அவர்களுக்குப் பிடித்த மாதிரி மோதிரம் எடுத்து முடித்ததும், “நான் இன்னொரு நாளைக்கு அவளைக் கூட்டிக்கொண்டு வந்து எடுக்கிறனடா.” என்றுவிட்டான் எல்லாளன்.

அதைத் தங்கையின் மீதான அன்பாக எடுத்துக்கொண்ட அகரனுக்கும் அதில் முழுமையான உடன்பாடே! அதில், தன் அன்பளிப்பாக நண்பனுக்கும் தங்கைக்கும் ஒவ்வொரு மோதிரங்களை அவன் வாங்கிக்கொண்டான்.

மூவருமாக வெளியே வந்தபோது, எல்லாளனுக்கு அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசிவிட்டு, “வேற ஏதும் வாங்கோணுமா?” என்றான் தங்கையிடம்.

“இல்ல அண்ணா. ஏதும் சாப்பிடுறது எண்டாச் சாப்பிட்டுட்டு இனி வீட்டுக்குத்தான்.”

“சரி, அப்ப நீங்க வெளிக்கிடுங்க. ஐங்கரன் டியூஷன் செண்டர்ல என்னவோ பிரச்சினையாம். என்ன எண்டு பாத்துக்கொண்டு வாறன்!” என்றபடி பைக்கில் ஏறி அமர்ந்தவன், “டேய், எங்கயும் மினக்கெடுறேல்ல. நேரா வீட்டுக்குத்தான் போகோணும் சொல்லிட்டன். இனி எங்க வெளில சுத்துறது எண்டாலும் கலியாணத்துக்குப் பிறகுதான்!” என்றான் கண்டிப்புடன்.

“எங்களுக்கும் எல்லாம் தெரியும். போடா நீ!” என்று அவனைத் துரத்திவிட்டு, சியாமளாவோடு புறப்பட்டான் அகரன்.

இருவரும் உணவகம் ஒன்ருக்குப் போனார்கள். அவனுடன் தனிமையில் பேச வேண்டும் என்று காத்திருந்த சியாமளா, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டாள்.

*****

வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்த ஆதினி, என்னவோ யாருமற்று நிற்பது போன்று உணர்ந்தாள். முதன் முதலாக அன்னையின் இழப்புப் பெரிதாகத் தெரிந்தது. சோர்ந்துபோய்க் கட்டிலில் விழுந்தவள்அழுததாலோ என்னவோ உறங்கிப்போனாள்.

இருள் கவ்வ ஆரம்பிக்கும் பொழுதில்தான் எழுந்தாள். வெளியே மழை சோ என்று கொட்டிக்கொண்டிருந்தது. முகம் கழுவிக்கொண்டு கீழே வந்தாள்.

அங்கே, அகரனோடு சியாமளாவும் இருந்தாள். அவளைக் கண்டதும் அடங்கிக் கிடந்த ஆத்திரம் நூறு மடங்காக வீறுகொண்டு எழுந்தது. இங்கே உன்னால் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது என்று காட்ட நினைத்தாள்.

விறுவிறுவென்று தமையனின் முன்னே வந்து நின்று, “அண்ணா, எனக்கு ஐஸ்கிரீம் வேணும்!” என்றாள் பிடிவாதக் குரலில்.

“வெளில மழை பெய்யுது ஆதினி. இப்ப என்னத்துக்கு ஐஸ்கிரீம்? வவுனியாவில இருந்து வந்ததுக்கு அவர் இன்னும் ஆறி இருக்கவே இல்ல.” உண்மையிலேயே அவன் மீது அக்கறை கொண்டு சொன்னாள் சியாமளா.

இவ்வளவு நேரமாக வெளியில் சுற்றுகையில் வராத அக்கறை இப்போது வந்துவிட்டதா என்கிற கொதிப்புடன், “நான் ஒண்டும் அண்ணாவை ஐஸ்கிரீம் செய்யச் சொல்லேல்ல. வாங்கிக்கொண்டு வரத்தான் சொல்லுறன். மழை எண்டா கார்ல போகலாம்.” என்று வெடுக்கென்று பதிலிறுத்துவிட்டு, “அண்ணா! சொன்னது கேக்கேல்லையா? எனக்கு இப்ப ஐஸ்கிரீம் வேணும்!” என்றாள் மீண்டும் அடமாக.

அவள் பேசிய விதம் ஒருவிதமாக முகத்தைச் சிறுக்கச் செய்தாலும், “எப்பிடியும் வீட்டில ஏதாவது ஐஸ் இருக்கும்தானே? இண்டைக்கு அதைச் சாப்பிடு. நாளைக்கு வேணுமெண்டால் வாங்கலாம்.” என்றாள் சியாமளா.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock