அதோடு ஆதினியின் பொறுமை பறந்து போனது. “ஹல்லோ என்ன? என்ர அண்ணாக்கு நீங்க வாயா? எனக்குக் கத சொல்லுறத விட்டுட்டு, நானும் அண்ணாவும் கதைக்கேக்க நடுவுக்க வாற பழக்கத்தை நீங்க முதல் நிப்பாட்டுங்க! விளங்கினதா?” என்றாள் பட்டென்று.
அப்படித் தன்னிடம் சீறுவாள் என்று எதிர்பாராத சியாமளாவின் முகம் கறுத்துப் போனது. கண்களும் கலங்கிவிட அமைதியாகவே இருக்கும் அகரனைப் பார்த்தாள்.
ஆதினிக்கும் தமையனிடம் தனக்குள்ள உரிமையை நிலை நாட்டியே ஆக வேண்டும் என்கிற பிடிவாதம் வலுத்தது. அதில், “எழும்பு அண்ணா! எனக்கு இப்ப, ‘மேக்னம் டபிள் கரமல்’ வேணும். அது வீட்டில இல்ல. போய் வாங்கிக்கொண்டு வா!” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
அவன் அசையவில்லை. மாறாக, “ப்ச்! கைய விடு ஆதினி!” என்றான் முகத்தில் ஒருவிதச் சுளிப்புடன்.
ஆதினியின் உள்ளத்தில் பெரும் கலவரம். சியாமளாவிடம் தோற்று விடுவோமோ என்று பதறினாள். இல்லை! கூடாது! உடலும் உள்ளமும் கோபத்தில் நடுங்க, “இப்ப நீ கடைக்குப் போகப் போறியா இல்லையா? அவா வேண்டாம் எண்டு சொல்லுறா, நீயும் அசையாம இருக்கிறாய். இன்னும் கலியாணமே நடக்கேல்ல. அதுக்கிடைல அவவின்ர பேச்சுக்குத் தலையாட்ட வெளிக்கிட்டிட்டியோ?” என்று ஆங்காரமாக அவள் கேட்டு முடிக்க முதலே அவள் கன்னத்தில் பளார் என்று இறங்கியது, அகரனின் கரம்.
அப்படியே சுழன்று சோஃபாவில் விழுந்தாள் ஆதினி. கண்களில் பொறி பறந்தது. என்ன நடந்தது என்று புரிந்துகொள்வதற்கே அவளுக்குக் கொஞ்ச நேரம் எடுத்தது. அத்தனையும் இருட்டாகிவிட்ட உணர்வு. விழிகளை மூடி மூடித் திறந்தாள்.
அப்போதுதான் கன்னம் எரிவதே தெரிந்தது. அழக்கூட மறந்தவளாக, நம்ப முடியாத அதிர்ச்சியோடு தமையனைப் பார்த்தாள்.
“ஆரப் பாத்து என்ன கதைக்கிறாய்? அவள் உனக்கு அண்ணி. அப்பிடி அவளின்ர சொல்ல நான் கேட்டாத்தான் என்ன?” முகத்துக்கு நேரே வந்து சீறியவனின் சீற்றத்தில் ஆதினியின் தேகம் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது.
சொன்னதைச் செய்து விட்டாளே! அவன் அறைந்ததை விடவும் அதுதான் இன்னும் வலித்தது.
கண் முன்னே நிற்பவன் அவள் தமையன் அல்லன்! இவன் சியாமளாவின் வருங்காலக் கணவன். அவன் அறைந்ததை விடவும் அந்த உண்மைதான் அதிகமாகச் சுட்டது. தரையில் விழுந்து கிடந்தவளுக்கு எழுந்துகொள்ள வேண்டும் என்கிற உணர்வு கூட இல்லை.
இதை மருந்துக்கும் எதிர்பாராத சியாமளா ஓடி வந்து தடுப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது. ஹோட்டலில் வைத்து ஆதினியைப் பற்றி அவள் பேசியதிலிருந்து அவன் மனநிலை சரியில்லை என்று தெரியும்தான். ஆனால், அடிக்குமளவிற்குப் போவான் என்று நினைக்கவேயில்லை.
“என்ன அகரன் நீங்க?” என்றபடி ஆதினியைத் தூக்கிவிட ஓடிப்போனாள்.
அப்போது தான் நடந்ததையே உணர்ந்தான் அகரன். உணர்ந்த கணம் திகைத்துப்போனான். “டேய் ஆதிக்குட்டி, அது அண்ணா என்னவோ கோவத்தில…” வேகமாக அவளை நெருங்கியவனிடமிருந்து அவனை விடவும் வேகமாக விலகி நின்றாள் ஆதினி.
அறை விழுந்த வேகத்தில் சேர்ந்துவிட்ட கண்ணீர் கண்களிலிருந்து வழிந்தது. ஆனாலும் அவள் அழவில்லை. என்னவோ அனைத்துமே சிதறு தேங்காயாகச் சிதறிப் போனது போலொரு உணர்வு! கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டு எழுந்து நின்றாள்.
“உன்னட்டச் சொல்லி எனக்குப் பாடம் படிப்பிக்கிறன் எண்டு இவா இவவின்ர அண்ணாட்டச் சொன்னவா. நான் அதப் பெருசா எடுக்கவே இல்ல. அண்ணாட்டச் சொல்லுவியா, சொல்லிப்போட்டு நல்லா வாங்கிக்கட்டு எண்டுதான் நினைச்சனான். என்ர அண்ணா எங்கயும் என்னை விட்டுக் குடுக்க மாட்டான் எண்டு அவ்வளவு நம்பிக்கை. ஆனா நீ?” என்றவளின் முகத்தில் தன் நம்பிக்கை பரிதாபமாகத் தோற்றுப்போன வலியின் சாயல்.
“இல்ல. நீ என்ர அண்ணா இல்ல! நீ என்ர அண்ணாவே இல்ல!” என்றாள் விழிகளில் நீர் சேர!
துடித்துப்போனான் தமையன். இதெல்லாம் அவனுக்குத் தெரியாதே! அண்ணியின் இடத்துக்கு வரப்போகிறவள் தங்கையின் நல்லதற்குத்தான் சொல்கிறாள் என்று நம்பினானே! எல்லாமே அவளின் சதியா? பக்கத்தில் நின்றவளைத் திரும்பிப் பார்த்தவனின் விழிகள் வெறுப்பை உமிழ்ந்தன.
சியாமளாவுக்கு நெஞ்செல்லாம் நடுங்கியது. அவளும் தமையனும் கதைத்ததை ஆதினி கேட்டிருக்கிறாள் என்பதே பெரும் அதிர்ச்சி. சரியாக அந்த நேரம் பார்த்து இளந்திரையனும் வீட்டுக்குள் வர, அவளுக்குப் பதறியது.
வீட்டு நிலவரம் சரியில்லை என்பதை ஒற்றைப் பார்வையில் கண்டுகொண்டார் இளந்திரையன். அதுவும் மகளின் கோலம் என்னாயிற்றோ என்கிற பதட்டத்தை உண்டாக்க, “என்னம்மா? என்ன தம்பி பிரச்சினை?” என்றார் ஒன்றும் விளங்காமல்.
ஆதினியின் கோபம் அப்படியே அவர் புறம் திரும்பிற்று. “எல்லாமே உங்களாலதான் அப்பா!” என்றாள் ஆத்திரத்துடன்.
ஒன்றும் விளங்காமல் திகைத்து நின்றார் அவர்.
“ஏனப்பா, உங்களுக்கு நான் சுமையாப் போயிட்டனா? நான் அடங்காப்பிடாரியாம். அகங்காரம் பிடிச்சவளாம். என்னை எவனும் கட்டி வாழமாட்டானாம் எண்டு சொல்லுறா இவா. அப்பிடித்தான் நீங்களும் நினைக்கிறீங்களா? அதுதான் கழுத்தில கத்திய வைக்கிற மாதிரி அவரின்ர தங்கச்சின்ர வாழ்க்கையைக் காட்டி, என்னக் கட்டிக் குடுக்க நினைச்சனீங்களா? ஏனப்பா ஏன் இப்பிடிச் செய்தனீங்க? ஏன் என்னைக் கேவலப்படுத்தினனீங்க?”
தான் பெற்ற பெண்ணரசியின் கோபத்தைக் கண்டு அதிர்ந்துபோனார் இளந்திரையன். நடந்தவை தெரியாத போதும் ஊகிக்க முடிந்தது. மனம் கலங்க, “நான் எல்லாளனிட்ட கேட்டனான்மா. அவர் ஓம் எண்டு…” என்றவரைப் பேசவிடாமல், “என்னெண்டு கேட்டிங்க?” என்று வெடித்தாள் அவள்.
“என்ர மகளை உனக்குப் பிடிச்சிருக்கா எண்டு கேட்டீங்களா? இல்ல, என்ர மகளைக் கட்டினாத்தான் உன்ர தங்கச்சிய மருமகளா ஏற்பன் எண்டு சொல்லிக் கேட்டீங்களா? எப்பிடிக் கேட்டீங்க?”
மறைமுகமாக அவளை மணக்கும் நிலையில் அவனை அவர் நிறுத்தியது உண்மைதான். ஆனால், அதன் பின்னே மறைந்திருந்தது, நல்லவன் ஒருவனைத் தன் செல்லப் பெண்ணுக்குத் துணைவனாக்கிவிடும் வேகம் மட்டும்தானே!
“என்ன இருந்தாலும் இந்தச் சியாமளா குடுத்து வச்சவா. அவவின்ர சந்தோசத்துக்காகத் தன்ர வாழ்க்கையையே பலிக்கடாவாக்கிற அண்ணா, அவா ஒரு வார்த்த சொன்னதும் தங்கச்சியையே அடிக்கிற அளவுக்குப் பாசமான காதலன், மகள் மாதிரிப் பாக்கிற மாமா எண்டு அவாவச் சுத்தி இருக்கிறது முழுக்க அவாவத் தாங்கிற மனுசர். ஆனா நான்? இந்த வீட்டின்ர இளவரசி எண்டு சொல்லிச் சொல்லியே வேலைக்காரிய விட மோசமான நிலைல கொண்டுவந்து விட்டுட்டீங்க எல்லாரும். அம்மா இல்லாமப் போயிட்டா. அதுதானே எல்லாரும் என்னைப் போட்டு இந்தப் பாடு படுத்துறீங்க?” என்றவளின் பேச்சில் முற்றிலுமாக உடைந்துபோனார் இளந்திரையன்.
“என்ர பிள்ளைக்கு என்னடா செய்தனி?” தாங்க முடியாமல் மகனிடம் சீறினார்.
கலங்கிப்போன அகரன் மிடறு விழுங்கினான். “அப்பா… கோவத்தில அவசரப்பட்டு…” என்றவனைப் பேசவிடாமல் சியாமளாவின் முன்னே வந்து நின்றாள் ஆதினி.
“என்ன சொன்னனீங்க? என்னைக் கட்டி எவனும் வாழமாட்டானா? இப்ப நான் சொல்லுறன் உங்களுக்கு. அண்ணன் தங்கச்சிக்க சண்டையை மூட்டிவிட்டு, சந்தோசப்படுற உங்கள மாதிரிக் கேவலமான ஒருத்தின்ர அண்ணாவைக் கட்ட எனக்கு விருப்பம் இல்ல! நான் இந்த வீட்டின்ர இளவரசி. நீதிபதி இளந்திரையன்ர ஒரே மகள். என்னைக் கட்டுறதுக்கு உங்கட அண்ணாக்குத்தான் தகுதி இல்ல. நீங்க என்ன என்னை வேண்டாம் எண்டு சொல்லுறது? நான் சொல்லுறன், எனக்கு வேண்டாம் அவன். அவனுக்கு உங்கள மாதிரிக் குடும்பத்துக்க சண்டையை மூட்டி விடுற ஒருத்தியப் பாத்துக் கட்டி வைங்க. அதுதான் அவனுக்கும் பொருந்தும். உங்கட குடும்பத்துக்கும் பொருந்தும்!” என்றாள் ஆத்திரமும் ஆவேசமுமாக.
அவமானத்தில் முகம் கன்றிச் சிவந்துவிட, தலையை நிமிர்த்தும் தைரியமற்று நின்றிருந்தாள் சியாமளா.